அமுதமொழி – குரோதி – கார்த்திகை – 17 (2024)


மருவி நின்ற தலமதுதான் விசுத்திவீடு
மகத்தான அறுகோணம் நன்றாய்ப்போட்டு
திருவிந்த அறுகோணஞ் சுத்திநல்ல
தீர்க்கமுடன் பதினாறு இதழ்தான் போட்டு
குருவிருந்த கோட்டை வெகு கருப்பாய் நிற்குங்
குணமான அக்கோட்டை நடுவிலேதான்
உருவறிந்து விந்திட்டு ஓங்காரஞ் சுத்தி
உத்தமனே வங் கிலி யங்கென்று போடே

அகத்தியர் சௌமிய சாகரம் – அகத்தியர்

கருத்து – விசுத்தி பற்றிக் கூறும் பாடல்.

பதவுரை

அறுகோணம் அல்லது ஷட்கோணத்தைக் கொண்ட இந்த விசுத்தி சக்கரத்தைச் சுற்றி பதினாறு இதழ்கள் போடவேண்டும். அதன் மத்தியில் பிந்துவும் அதைச் சுற்றி ஓம்காரமும் போடவேண்டும். அதனுடன் வங் கிலி யங் என்று எழுதவேண்டும்.  கரியநிறத்தில் இருக்கும்  இந்த சக்கரத்தை குருவின் கோட்டை  என்று  அழைக்கிறார்.  சிவனின் கரிய கழுத்து இதைத்தான் குறிக்கிறது.

விளக்கஉரை

  • ஆறு ஆதாரங்களில் ஒன்றான விசுத்தியை குறிப்பது.. இதன் வடிவம் அறுகோணம் பஞ்சாட்ஷரத்தில் “வ” என்ற எழுத்து.
  • சிவ சக்தி சொரூப ஐக்கியம். நடுவில் பிந்து. சிவன்(3), சக்தி(3). இரண்டும் சேர்ந்து ஷட்கோணம்(அறுகோணம்)
  • திருத்தணி, திருப்பதி, திருவாலங்காடு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சோளிங்கர் ஆகிய 6 கோவில்களுக்கு மத்தியில் இருப்பதால் அறுகோணம் (தற்போது அரக்கோணம்)
  • எல்லாப் பயனையும் தருவது எந்திரங்களில் தலைமையகிய புவனாபதிச் சக்கரத்தின் திருவடியாகும்.   அதனை அறிந்து, அவள் மந்திரத்தைக் குருவால் பெற்று அதனை உடம்பில் நிறுத்திப் பயிலவும், ஆன்மா உடலில் மந்திரத்தாத்துவாக நிலைக்க உறுப்புக்களைச் சிவனின் அங்கங்களாகக் கருதி பிறவி வேர் நீங்குமாறு செப்புத் தகட்டில் அறுகோணம் அமைக்க வேண்டும் என்று திருமூலர் கூறுகிறார்.

ஐயனின் முழுமையாக அக அனுபவம் சார்ந்து உரைக்கப்பட்டதாலும், பிழை கொண்ட மானுடம் சார்ந்து உரைப்பதாலும் பிழை இருக்கலாம். குறை எனில் மானுடம் சார்ந்தது, நிறை எனில் குருவருள்.

#அகத்தியர் #சித்தர் #சௌமிய_சாகரம் #விசுத்தி #அமுதமொழி, #சித்த(ர்)த்_துளிப்பு, #சித்தர்_பாடல்கள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – கார்த்திகை – 14 (2024)


பாடல் : 8

மூலம்

தேடுந் திரவியமும் சிற்றறிவும் பற்றுதலும்
கூடும்பொய் என்றருளிற் கூட்டினான் – நாடரிய
ஞானப்ர காசனுயர் நற்கமலை மானகர்வாழ்
வானப் பிறையணிந்த மன்

பதப்பிரிப்பு

தேடும் திரவியமும் சிற்றறிவும் பற்றுதலும்
கூடும்பொய் என்று அருளி கூட்டினான் – நாடு அறிய
ஞானப்ரகாசன் உயர் நற்கமலைமானகர் வாழ்
வானப் பிறையணிந்த மன்

சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

கருத்து – திரவியம், சிற்றறிவு, பற்றுதல் ஆகியவை பொய் என்றுகாட்டி அதை விலக்கி அருள்கூட்டுவித்த தன்மையைக் கூறும் பாடல்.

பதவுரை

பேரறிவாலும், மெய்யாலும் உயர்ந்ததும் நல்லதுமான கமலை எனும் திருவாரூர் மாநகரத்தில் வாழ்பவனும், வான் பிறை எனும் சந்திரனை அணிந்தவனுமாகிய ஞானப்பிரகாசன், வாழத் தேவைப்படும் திரவியம் எனப்படும் பொருளும், உலகியல் பற்றி நிற்கும் சிற்றறிவும், உலகம் மற்றும் அவற்றின் மீது கொண்ட பற்றுதலும் அவைகளைப் பற்றி ஒன்று சேர்வதும் பொய்யானது என்று அருள் செய்து தன்னை நாடிய அடியவர்களிடத்தில் மெய் அருளைக் கூட்டினான்.

விளக்கஉரை

  • தேடும் திரவியமும் – முன்செய்த ஜன்மங்களில் செய்தவினைக்கு ஈடாக செல்வம் ஈட்டுகிரோம் என்பதை உணராமல்தாமே செல்வத்தினை சேர்த்தோம் எனும் மயக்கநிலை.
  • சிற்றறிவு – பேரறிவினை சிந்தியாமல் நூல் பல கற்றுஅடைந்த அறிவு
  • பற்றுதல் – சிற்றறிவு கொண்டு பெறப்பட்டதாகிய அறிவினைக் கொண்டு அதைப்பற்றிக் கொள்ளுதல்
  • திரவியம் என்பது பொய் என்பதுவும், திருவருள்ஒன்றே மெய் எனவும் பெறப்படும். திருவருள் கூடியதால் திரவியம் முதலியவற்றை பிரிவித்தான் என்பது பொருள்.
  • வானப்பிறையணிந்தமன் – தக்கனது சாபம் தன்னைத் தொடராதவாறு தன்னைப் பற்றுக்கோடாக கொண்டதால் சந்திரனை வாழ்வித்த பெருமான் என்பது ஒத்து தன்னையும் வாழ்வித்தவன் எனும்பொருள் பற்றியது.

#அந்தக்கரணம்  #அமுதமொழி #குரு  #குருவின்_பெருமை #சிவபோகசாரம் #சைவம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – கார்த்திகை – 13 (2024)


மூலம்

ஒழியாத பேரின்பத் துள்ளாய் உலகில்
விழியா திருந்து விடவே – அழியாத
பூரணா செங்கமலப் பொற்பாதா தென்கமலை
ஆரணா நாயேற் கருள்

பதப்பிரிப்பு

ஒழியாத பேரின்பத்து உள்ளாய் உலகில்
விழியாது இருந்து விடவே – அழியாத
பூரணா செங்கமலப் பொற்பாதா தென்கமலை
ஆரணா நாயேற்கு அருள்

சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

கருத்து – ஆனந்தநிலையினைஅருளவேண்டும்என்பதைகூறும்பாடல்.

பதவுரை

அழியாத பூரணத்துவத்தை உடையவனும், செந்தாமறை போன்ற நிறம் உடைய பொற்பாதங்களை கொண்டு தென்கமலையில் வாழும் வேதம் போன்றவனும், அழியாமலும் குறைவுபடாமலும் என்றும் நிலைத்து இருக்கும் பேரின்பத்தில் இருப்பவனும் ஆகியவனே! உலகில் பிறவி எடுக்காது இருப்பதன் பொருட்டு நாய் போன்ற அடியவன் ஆகிய எனக்கு அருள் புரிவாயாக.

விளக்கஉரை

  • ஆரணம் – வேதம்
  • உலகில் விழியாது இருந்துவிடவே – ஞானஆசிரியன் வழிநிற்றலும், ஒருவேளை உலகியலில் இருந்து மீளவரும்படி நேருமாயின் அந்தமீட்சியும் ஆசிரியன் வழிநின்று உணர்தலால் நீங்கப்பெறும் அந்தநிலையை அடையும் பொருட்டு பிறப்பு எடுக்காது இருத்தல் என்பது பற்றியது.

#அந்தக்கரணம்  #அமுதமொழி #குரு  #குருவின்_பெருமை #சிவபோகசாரம் #சைவம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – ஆவணி – 15 (2024)


மூலம்

இருளுதய நீக்கும் இரவியைப்போல் என்னுள்
அருளுதய நன்றா யருளி – மருளுதய
மாற்றியவன் ஆரூரன் மாமறையும் ஆகமமுஞ்
சாற்றியஞா னப்பிரகா சன்

பதப்பிரிப்பு

இருள் உதய நீக்கும் இரவியைப்போல் என்னுள்
அருள் உதய நன்றாய் அருளி – மருள் உதயம்
மாற்றியவன் ஆரூரன் மாமறையும் ஆகமமும்
சாற்றிய ஞானப்பிரகாசன்

சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

கருத்து – ஆசானமூர்த்தியாய் நின்று எய்தும் பயன்களில் பாசநீக்கமும், அருள்விளக்கமும் பற்றி அருளிய பாடல்.

பதவுரை

ஆரூரில் உறைபவனும், பெரிய வேதங்களையும், ஆகமங்களையும் அறிவித்தவனாகிய ஞானப்பிரகாசனானவன், சூரிய ஒளியானது இருளைநீக்கும் தன்மையைப்போல் என்னுள்ளே அருள் தோற்றத்தினை தோன்றச்செய்து நன்றாய் அருளி அநாதிகாலம் தொட்டு தொடர்ந்து பெருகிவரும் பிறவியின் மயக்கம் மாற்றியவன்.

விளக்கஉரை

  • மருள் – மயக்கம், பேயாட்டம், பயம், திரி புணர்ச்சி.வியப்பு, உன்மத்தம், கள், குறிஞ்சியாழ்த்திறம் எட்டனுள் ஒன்று, எச்சம் எட்டனுள் பிறவிமுதல் அறிவின்றி மயங்கியிருக்கும் நிலை, பெருங்குரும்பை, புதல், பேய், ஆவேசம், புல்லுரு
  • இருள் உதயநீக்கு – அருள்தோற்றம் பற்றிய கணத்தில் மருள்நீக்கம் முற்றிலும் நீங்காதவாறு சிந்தித்தல் தெளிதல் போன்றவற்றை முற்றிலும் நீக்கி எனும் பொருள் பற்றி நின்றது.

#அந்தக்கரணம்  #அமுதமொழி #குரு  #குருவின்_பெருமை #சிவபோகசாரம் #சைவம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – ஆடி – 30 (2024)


பாடல் 6.

மூலம்

உள்ளிருந்தே யென்று முணர்ந்துகினும் கண்டிலரென்(று)
உள்ளும் புறம்புமா வோமென்று – மெள்ள
நரருருவாய் ஆரூரில் வந்தான் நமையாண்
டருள்புரிஞா னப்பிரகா சன்

பதப்பிரிப்பு

உள்ளிருந்தே என்றும் உணர்ந்துகினும் கண்டிலர் என்று
உள்ளும் புறம்பும் ஆவோம் என்று – மெள்ள
நரர் உருவாய் ஆரூரில் வந்தான் நமை ஆண்டு
அருள்புரி ஞானப்பிரகாசன்

சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

கருத்து – உள்நின்று உணர்த்தும் தன்மையும், அவனே ஆசிரியனாகி வந்த தன்மையும் உணர்த்தும் பாடல்.

பதவுரை

எல்லாவற்றையும் நிகழ்த்திக்காட்ட சாட்சிபாவமாக புறத்தில் நின்று உள்ளத்தில் இருந்து உணர்த்தி இயக்குபவனாக இருந்தாலும் தன்னை உணர்வில்லை என்று எண்ணம் கொண்டு அகத்திலும் புறத்திலும் வெளிநின்று உணர்த்தும் எண்ணம்கொண்டு அதைநிச்சயம் செய்துகொண்டு ஞானப்பிரகாசன் எனும் முனிவனாகி மானிடவடிவம் கொண்டு ஆருரில் வந்துநம்மை ஆண்டு அருள்புரிந்தான்.

விளக்கஉரை

  • நரன் – மாந்தன், அருச்சுனன், ஒருமுனிவன், ஓர்இயக்கன்
  • கண்டிலர்என்று – அநாதிகாலம் தொட்டு உயிர்களைக்காத்த போதும், மாயை பற்றி நிற்பதால் உயிர்கள் அதை உணரவில்லை என்பதை உணர்ந்து என்பது பற்றியது.
  • ஈசன் உயிர்களுக்கு விஞ்ஞானாகலர், பிரளயாகலர், சகலர் ஆகிய நிலைகளில் இருந்து அருள்செய்பவன் என்றாலும், அன்புநெறி கொண்டோருக்கே ஆசானமூர்த்தியாக அருளுவான் என்பது பெறப்படும்.

#அந்தக்கரணம் #அமுதமொழி #குரு #குருவின்_பெருமை #சிவபோகசாரம் #சைவம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – ஆடி – 29 (2024)


பாடல் 5.

மூலம்

கண்டேனிப் பாசங் கழிந்தேன் அமுதைமுகந்
துண்டேன் சுகானந்தத் துள்ளிருந்தேன் – வண்டிமிர்காத்
தேனைப் பொழிகமலைச் செங்கமலப் பொற்பாத
ஞானப்ர காசனையே நான்

பதப்பிரிப்பு

கண்டேன் இப் பாசம் கழிந்தேன் அமுதை முகந்து
உண்டேன் சுகானந்தத்து உள்ளிருந்தேன் – வண்டுமிகாத்
தேனைப் பொழி கமலைச் செங்கமலப் பொற்பாத
ஞானப்ரகாசனையே நான்

சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

கருத்து – அருட்குரவன் ஆகிய ஞான ஆசிரியரை அடைந்ததன் பயனை விளக்கிக் கூறும் பாடல்.

பதவுரை

வண்டுகள் தேனைப் பொழிகின்ற கமலையில் வாழும் ஞானப் பிரகாசனின்பொற்பாத திருவடிகளைப் பற்றி நான் மெய்யானதைக் கண்டேன், பற்றுதலை ஏற்படுத்துவதும், சைவ சித்தாந்தத்தால் விளக்கப்படுவதும் ஆகிய பாசம் நீங்கப் பெற்றேன்; அமுதத்தை உண்டேன்; அதனால் சுகானந்தத்தினுள் இருந்தேன்.

விளக்கஉரை

பாசம் – உலகமாய் தோன்றுதல்
வண்டுமிகாத்தேனைப்பொழிகமலை – தன்னைஅடைபவர்களை போற்றும் ஞானம்
பொற்பாதம் – அருமை, பெருமை மற்றும் தூய்மை பற்றி நின்றது.

#அந்தக்கரணம்  #அமுதமொழி #குரு  #குருவின்_பெருமை #சிவபோகசாரம் #சைவம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – ஆடி – 28 (2024)


பாடல் 4.

மூலம்

அரியயற்கு முன்னாள் அடிமுடியுங் காணாப்
பெரியவனே வந்து பிறந்து – துரியம்
பெருக்கின்றான் ஞானப் பிரகாச னாகி
இருக்கின்றா னாரூரில் இன்று

பதப்பிரிப்பு

அரி அயற்கு முன்னாள் அடிமுடியும் காணாப்
பெரியவனே வந்து பிறந்து – துரியம்
பெருக்கின்றான் ஞானப் பிரகாசனாகி
இருக்கின்றான் ஆரூரில் இன்று

சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

கருத்து – உள் நின்று உணர்த்திய முதல்வனே குருவடிவமாக வந்து பிறந்து தன்னை ஆட்கொண்டு அருளுகின்றான் என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

திருவாரூர் திருத்தலத்தில் தன்மயமாய் நிற்கும் உயர் நிலையில் இருப்பவனும், முன்னொருமுறை திருமாலும், பிரம்மாவும் முறையே தேடி காண முடியாத திருவடியினையும், திருமுடியினையும் கொண்டவனாகிய பிறவாத் தன்னை உடையவனாகிய பெரியவனும் ஆனவன் தன் நிலையில் இருந்து இறங்கி வந்து ஆருர் தலத்தில் ஞானப் பிரகாசனாகி பிறந்து பரந்து விரிந்து இருந்து ஞானத்தினை அருளிக் கொண்டு இருக்கின்றான்.

விளக்கஉரை

துரியம் – நான்காவது, நான்காம் அவத்தை, யோகியர் தன்மயமாய் நிற்கும் உயர்நிலை, பொதி எருது, சுமத்தல்

பெருக்குதல் – முதிர்வித்தல்

#சைவம் #சிவபோகசாரம்  #குரு  #குருவின்_பெருமை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – ஆனி – 29 (2024)


பாடல்

அங்கமே பூண்டாய்! அனல் ஆடி(ன்)னாய்!
     ஆதிரையாய்! ஆல் நிழலாய்! ஆன் ஏறு ஊர்ந்தாய்!
பங்கம் ஒன்று இல்லாத படர் சடையினாய்!
     பாம்பொடு திங்கள் பகை தீர்த்து ஆண்டாய்!
சங்கை ஒன்று இன்றியே தேவர் வேண்டச்
     சமுத்திரத்தின் நஞ்சு உண்டு, சாவா மூவாச்
சிங்கமே! உன் அடிக்கே போதுகின்றேன்-திருப்
     புகலூர் மேவிய தேவதேவே!

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்துதிருப்புகலூர் தலத்து இறைவனின் பெருமைகளை உரைத்து தனக்கு முக்தி பேறு வேண்டிய பாடல்.

பதவுரை

திருப்புகலூர் தலத்தில் உறையக்கூடியவனாகவும், தேவர்களுக்கு எல்லாம் மேலான தேவனாக இருப்பவனாகவும், பல சதுர் யுகங்கள் ஆண்ட பிரம்மனது எலும்புகளை அணிகலனாக‌ப் பூண்டவனாகவும், தீயின் வடிவமாக இருப்பவனும், திருவாதிரை நட்சத்திரத்தினை கொண்டவனும், கல்லால் மர நிழலில் அமர்ந்தவனும், காளையை வாகனமாகக் கொண்டவனும், குற்றம் இல்லாத கங்கையினை தனது பரந்த சடையில் கொண்டவனும், பாம்பிற்கும் திங்களுக்கும் ஆன பகையினை தீர்த்து ஆண்டவனும், தேவர்களால் வேண்டப்பட்ட பொழுதினில் எவ்விதமான சலனமும் இன்றி சமுத்திரத்தில் தோன்றிய நஞ்சினை உண்டபோதும்  சாதலும் மூப்பும் இல்லாத சிங்கம் போன்றவனே! உன் திருவடிக்கே வருகின்றேன், என்னை ஏற்றுக் கொண்டு அருள்வாயாக.

விளக்க உரை

  • அங்கம் – எலும்பு
  • ஆதிரையாய் – திருவாதிரை
  • பங்கம் – குறை
  • சங்கை – பிறிதோர் எண்ணம்.
  • மூவா – கெடாத

#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவம் #திருமுறை #ஆறாம்_திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #திருப்புகலூர்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – குரோதி – ஆனி – 22 (2024)

பாடல்

எரிப்பிறைக் கண்ணியி னானை யேந்திழை யாளொடும் பாடி
முரித்த விலயங்க ளிட்டு முகமலர்ந் தாடா வருவேன்
அரித்தொழு கும்வெள் ளருவி ஐயா றடைகின்ற போது
வரிக்குயில் பேடையொ டாடி வைகி வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்

தேவாரம் – நான்காம் திருமுறை – திரு நாவுக்கரசர்

கருத்துகாட்சிப் பொருளை சிவசக்தி ரூபமாகக் காணுதல் என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

ஒளிர்தல் கொண்ட‌ பிறை நிலவினை அணிந்தவனாகிய பெருமானைச் சிறந்த அணிகளை உடைய பார்வதி தேவியோடு இணைத்துப்பாடியும், அந்த பாடலுக்கு ஏற்றவாறு கூத்து தாளங்களை இட்டுக் கொண்டும், முகமலர்ச்சியோடு ஆடிக்கொண்டு வரும் அடியேன் மணலை அரித்துக் கொண்டு அருவிபோல ஓடிவருகின்ற காவிரியின் வடகரையில் இருக்கும் திருவையாற்றை அடையும் நேரத்தில் ஆண்குயில் பெண்குயிலோடு கலந்து காதல் கீதங்களைப் பாடியும் பின் இணைந்தும் வருவனவற்றைக் கண்டேன். அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் கண்டறியாத திருப்பாதங்களாக‌க் கண்டேன்.

விளக்க உரை

  • எரி – நிலவு
  • ஏந்து இழையாள் – அம்பிகை
  • இலயம் – கூத்துக்கு ஒத்த தாளலயம்

#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவம் #திருமுறை # நான்காம்_திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #திருவையாறு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சோபகிருது – பங்குனி – 2 (2024)

பாடல்

எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ
எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லால்
கண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன்
கழலடியே கைதொழுது காணின் அல்லால்
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்
ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன்
புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திரு நாவுக்கரசர்

கருத்து – முக்தி வேண்டி விண்ணப்பித்தல்.

பதவுரை

நிலைத்த பேரின்ப வடிவாக இருப்பவனே, அழகியதான‌ புகலூர் தலத்தில் மேவி இருக்கும் புண்ணியனே, நினையும் தன்மை உடையேனாகிய நான் எம்பெருமானாகிய நினது திருவடியை விரும்பி நினைப்பதை அல்லாது வேறு எதனை விரும்புவேன்? நினது கழலினை அணிந்த திருவடியை கைதொழுது காணும் காட்சி அல்லாது வேறு ஒன்றையும் விரும்ப மாட்டேன்; உன்னை விடுத்து வேறு எந்த பற்றுக்கோடும் இல்லாதவனாக இருக்கிறேன்; யான் வாழ்வதற்குப் பொருந்தி இருப்பதானதும் உறை போன்றதுமான இந்த உடம்பிலே ஒன்பது வாசல் வைத்தாய்; உடலின் தன்மையால் அவையாவும் ஒன்று சேர்ந்து அடைக்கப்படும் காலத்தில் உன்னையே நினைதலையும் காணுதலையும் செய்யமாட்டேன்; ஆதலின் அக்காலம் வாராதபடி இப்பொழுதே உன் திருவடிக்கே வருகின்றேன்; என்னை ஏற்றுக் கொண்டு அருள்வாயாக.

விளக்க உரை

  • திருநாமம் ‍-‍ சிவபிரான் பெயரைக் குறிக்கும் சொல்.
  • திறம் – இயல்பு
  • அளி அற்றார் – தலைவரால் அருளப் பெறும் அருளை இழந்தவர்
  • ஒருகாலும் -‍ கூறாத இடங்களிலும் கூட்டிக் கொள்ளலாம்.
#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவம் #திருமுறை #ஆறாம்_திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #திருப்புகலூர்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சோபகிருது – கார்த்திகை – 1 (2023)


வார்த்தை :  முப்பாழ்

பொருள்

  • வெட்டவெளி அல்லது ஆகாயம்
  • மாயைப் பாழ், போதப்பாழ், உபசாந்தப் பாழ்

பாடல்

மாயப் பாழ் சீவன் வியோமப்பாழ் மன்பரன்
சேய முப் பாழ் எனச் சிவசக்தி யில்சீவன்
ஆய வியாத்தம் எனும் முப்பாழ் ஆம் அந்தத்
தூய சொரூபத்தில் சொல்முடி வாகுமே

எட்டாம் தந்திரம், திருமூலர்

பதவுரை

மாயப் பாழ், சீவப் பாழ், வியோமப் பாழ் ஆகிய மூன்றும், `நிலைபெற்ற பரம் பொருளைப்போல மிக மேம்பட்ட நிலை` என்று சொல்லப்பட `சீவன் சிவனது திருவருளில் அடங்கி நிற்கும் முப்பாழ்` என்றும் சொல்லப்படும். மிகத் தூயதாகிய உண்மை நிலை, அப், `பாழ்` என்னும் பெயரும் அற்ற இடமாகும்.

  1. மாயைப் பாழ் – மாயை நீங்குதல் – மாயப்பாழைக் கடந்தபின் (கர்ம, ஞான இந்திரியங்கள், பூதங்கள், அவற்றின் தன்மைகள், மூன்று குணங்களான சத்துவம், ரஜஸ், தமஸ், புருஷன் பிரகிருதி என்று உலகில் காணப்படுபவைகளின் ஒடுக்கம் ) கிடைப்பது  வாத சித்தி – சாதாரண தேகத்தை ஒளி தேகமாக மாற்றுவது.
  2. போதப்பாழ் / சீவப்பாழ்/ ஒளிப்பாழ் (சிவன், சக்தி, இச்சா-நியதி, கிரியா-கலா, ஞான-வித்யா, ஆனந்த-ராகம் மற்றும் சித்-காலம் சக்திகள்) – ஆன்ம அறிவு நீங்குதல் – (போதப்பாழ் – இயற்கையைக் கட்டுப்படுத்தும் சக்திகளைப் பற்றிய அறிவு) கடக்கும்போது ஒருவர் அறுபத்து நான்கு சித்திகளையும் பெறுதல்.
  3. உபசாந்தப் பாழ் – வியோமாப்பாழ்(காரிய காரணங்களைக் கடந்தது நிற்றல்) – உபசாந்த நிலையில் பரவெளியில் நிற்பது – பிராணண் /உயிர்ச்சக்தி பற்றிய அறிவு.

சிவ தத்துவத்தை விளக்கும் 96 வகைத் தத்துவங்களில் ஆணவம், மாயை மற்றும் கண்மம் என்பதை மும்மலம் என்பதால் முப்பாழ் என்பதில் இருந்து விலக்கி பொருள் விளக்கப்பட்டுள்ளது.(சில இடங்களில் ஆணவம், மாயை மற்றும் கண்மம் ஆகிய  மூன்றும் முப்பாழ் என்றே விளக்கப்பட்டுள்ளது)

(இந்த சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதால் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சோபகிருது – ஐப்பசி – 24 (2023)


பாடல்

திருநாமம் அஞ்செழுத்துஞ் செப்பா ராகிற்
   தீவண்ணர் திறமொருகால் பேசா ராகில்
ஒருகாலுந் திருக்கோயில் சூழா ராகில்
   உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணா ராகில்
அருநோய்கள் கெடவெண்ணீ றணியா ராகில்
   அளியற்றார் பிறந்தவா றேதோ வென்னிற்
பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்துப்
   பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே

ஆறாம் திருமுறை -‍ தேவாரம் -‍ திருநாவுக்கரசர்

கருத்துபிறவி நீங்கப் பெறும் வகைகளை உரைக்கும்  பாடல்.

பதவுரை

எம்பெருமானின் திருநாமமாகிய அஞ்செழுத்தை ஒருகாலும் உரையாதவர்களாகவும், அன்னையின் வண்ணம் ஒத்து இருக்கும் தீவண்ணருடைய இயல்பை ஒருகாலும் பேசாதவர்களாகவும், இறைவன் உறைவிடம் ஆகிய திருக்கோயிலினை ஒருகாலம் வலம் வாராதவர்களாகவும், உணவு உண்பதற்குமுன் வண்ணமும் வாசனையும் உடைய பல மலர்களை அரும்பாய் உள்ள நிலையில் பறித்து அவற்றை இறைவனுக்கு இட்டுப்பின் உண்ணாதவர்களாகவும்,வினை பற்றி வரும் கொடுநோய்கள் கெடுவதன் பொருட்டு வெண்ணீற்றை அணியாதவர்களாகவும் இருப்பவர்கள் இறைவனது திருவருளை இழந்தவராவார். அவர்கள் தீராத கொடுநோய்களால் மிகத் துன்புறுத்தபட்டு பின் இறந்து மீளவும் பிறப்பதற்கு வழியில்லாமல் அதுவே தொழிலாகி இறக்கின்றார்கள்.

விளக்க உரை

  • திருநாமம் ‍-‍ சிவபிரான் பெயரைக் குறிக்கும் சொல்.
  • திறம் – இயல்பு
  • அளி அற்றார் – தலைவரால் அருளப் பெறும் அருளை இழந்தவர்
  • ஒருகாலும் -‍ கூறாத இடங்களிலும் கூட்டிக் கொள்ளலாம்.

#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவம் #திருமுறை #ஆறாம்_திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #பொதுப்பதிகம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சோபகிருது – புரட்டாசி – 4 (2023)


பாடல்

மூலமண்ட லத்திலே முச்சதுர மாதியாய்
நாலுவாசல் எம்பிரான் நடுவுதித்த மந்திரம்
கோலிஎட் டிதழுமாய் குளிர்ந்தலர்ந்த திட்டமாய்
மேலும்வேறு காண்கிலேன் விளைந்ததே சிவாயமே

அருளியச் சித்தர் : சிவவாக்கியர்

கருத்துஅனைத்துமாகி நிற்கும் சிவத்தை காணுதலை கூறும் பாடல்.

பதவுரை

மூலாதாரத்தின் அதிபதி கணபதி மற்றும் வாலை தாய். இது முட்டை வடிவமும்  அதனை சுற்றி நான்கு தாமரை இதழ் கொண்ட அமைப்பும் உடையது. அந்த இதழ்கள் ஒவ்வொன்றும் வல வரிசையாக மனம், புத்தி, சித்தம், அஹங்காரம் எனும் அந்தக்கரணத்தால்  குறிப்பிடப்படுகின்றன. இவைகளுக்கான அக்ஷரங்கள் ‘வ, ச, ஷ, ஸ.’ இதற்கு தலைவனாக விளங்கக்கூடியது ஓங்காரம். இவ்வாறு இருக்கும் ஓங்காரத்துடன் ‘ரீம் உம்’ ஆகிய அட்சரங்களை (குரு உபதேசம் செய்தபடி) கூட்டி தனது மனதினை சாட்சியாக வைத்து எட்டு இதழ்களிலும் வெவ்வேறு விதமாய் ஜபம் செய்ய குளிர்ச்சி உடையதும், நிலையானதுமான சோதிவடிவமாக சிவம் இருக்கின்றது என்பதை அறியலாம். இதை விடுத்து வேறு ஒன்றையும் காணவில்லை.

விளக்க உரை

  • எட்டு இதழ்கள் – எண் சாண் உடல் எனவும், நாலுவாசல் என்பதை அண்டஜம் (முட்டையில் இருந்து பிறப்பவை), ஜராயுதம் (கருப்பையில் பிறப்பவை), உத்பிஜம் (வித்து, வேர், கிழங்கு மூலம் பிறப்பவை), சுவேதஜம் (வேர்வையில் இருந்து கிருமிகள், பாக்டீரியாக்கள்) பிறப்பவை) எனக் கொண்டு அனைத்து பிறப்புகளுக்கும் தலைவனாக இருக்கிறான் என்றும் சில குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.
  • கணபதியும் சிவமும் வேறு வேறு அல்ல எனவும் கொள்ளலாம்.

சித்தர் பாடலுக்கு உண்டான விளக்கத்தினை மானிட சரீரம் கொண்டு எழுதப்பட்டதால் விளக்கங்களில் பிழை இருக்கலாம். பிழை எனில் சரீரம் சார்ந்தது. நிறை எனில் குருவருள்.

#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவம் #சித்த(ர்)த்_துளிப்பு, #சித்தர்_பாடல்கள் #சிவவாக்கியர்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சோபகிருது – ஆனி – 21 (2023)


பாடல்

எப்பிறப்பி லும்பிறந் திருந்தழிந்த ஏழைகாள்
இப்பிறப்பி லும்பிறந்து என்னநீறு பூசுறீர்
அப்புடன் மலமறுத்து ஆசைநீக்க வல்லிரேல்
செப்புநாத ஓசையில் தெளிந்துகாண லாகுமே

அருளியச் சித்தர் : சிவவாக்கியர்

கருத்துகுரு உபதேசம் கொண்டு மாயையினை  வென்று ஈசனை அடையலாம் எனக் கூறும் பாடல்.

பதவுரை

வினைகளை நீக்க வழி அறியாமல் மீண்டும் மீண்டும் இழிவான பிறப்பினை எடுத்து பிறந்து  ஈசனை துதியாமல் மெய்யறிவால் இழிந்த ஏழைகளாக இருந்த போதிலும் பிறந்து பிறவியின் நோக்கம் அறியாமல் வெந்தநீறு பூசுகிறீர்; கடல் அளவு இருக்கும் மாயா மலங்களை அறுத்து அதன் மீதான ஆசைகளை நீக்க இயலாதவராக இருக்கிறீர்கள். குருவால் உபதேசம் செய்யக் கூடிய மந்திரம் கொண்டு அதை செபித்து இவைகளை விலக்கி அதன் மூலம் ஈசனைக் காணலாம்.

#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவம் #சித்த(ர்)த்_துளிப்பு, #சித்தர்_பாடல்கள் #சிவவாக்கியர்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சோபகிருது – வைகாசி – 11 (2023)


பாடல் 2

உரிப்பொருள் : பிரபஞ்ச மாய சேற்றினை விலக்கி அருளிய திறம்

மூலம்

பேற்றைத் தவஞ்சற்று மில்லாத வென்னைப்ர பஞ்சமென்னும்
சேற்றைக் கழிய வழிவிட்ட வா! செஞ் சடாடவிமேல்
ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே

சொற் பிரிப்பு

பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னைப் பிரபஞ்சம் என்னும்
சேற்றைக் கழிய வழிவிட்டவா! செம் சடா அடவிமேல்
ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் கிருபாகரனே

பதவுரை

குமரப் பெருமானே! அடர்ந்ததும்,  செம்மை நிறம் உடையதுமான சடையின்மீது கங்கை நதியையும்,நாகத்தையும், கொன்றை மலரையும் தும்பை மலரையும் சந்திரனது பிறையையும் சூடிக் கொண்டுள்ள சிவபெருமானின் குமாரனாகிய தேவராகிய திருமுருகப்பெருமானாக மட்டுமன்றி, கருணைக்கு உறைவிடமான கிருபாகரனாகவும் விளங்குபவரே! முக்தியைப் பெறுவதற்குரிய தவப்பயன் சிறிதேனும் இல்லாத அடியேனை, பிரபஞ்சம் என்னும் மாயச் சேற்றினை விட்டு உய்யுமாறு உண்மையான வழியைக் காட்டியருளினீர்!

விளக்க உரை

  • பூர்வ ஜென்ம கர்மங்களில் அனுபவித்தது போக மீதம் இருப்பவை ஆகிய சஞ்சீதம் கர்மாவின் தொடர்ச்சியாகிய நற்பேறு. தவம் என்பது இந்தப் பிறவியில் செய்வது.
  • அடவி – காடு
  • ஆறு – கங்கை
  • பணி – பாம்பு
  • இதழி – கொன்றைப் பூ
  • தும்பை – தும்பைப் பூ
  • அம்புலியின் கீற்று – சந்திரனின் பிறை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சோபகிருது – வைகாசி – 9 (2023)


பாடல் 1

உரிப்பொருள் : கணபதி தம்பியான முருகனின் தரிசனம் கண்டது

மூலம்

அடலரு ணைத்திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு
வடவரு கிற்சென்று கண்டுகொண் டேன்வரு வார்தலையிற்
தடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே

சொற் பிரிப்பு

அடல் அருணைத் திருக்கோபுரத்தே அந்த வாயிலுக்கு
வட அருகில் சென்று கண்டுகொண்டேன் வருவார் தலையில்
தடபட எனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
கடதட கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே

பதவுரை

திருவிநாயகப் பெருமானை வழிபடுவதற்கு வருபவர்கள் “தட, பட” என்ற ஒலியுடன் தங்கள் தலையில்  குட்டிக் கொண்டும், அவர்கள் படைக்கும் சர்க்கரையால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை தம் துதிக்கையால் ஏற்றுக் கொள்பவரும், “இச்சை, கிரியை, ஞானம்” என்னும் மும்மதங்களையும் கும்பத்தலங்களாக கொண்டிருப்பவருமான யானை முகத்தினை உடையவரான திருவிநாயகப் பெருமானின் இளையோனும், களிறு போன்றவனும்  ஆகிய திருமுருகப் பெருமானின் தரிசனத்தை வலிமை உடைய அருணை என்று அழைக்கப்படும் திருவண்ணாமலை கோயிலின் கோபுர வாயிலுக்கு வடக்குப் பக்கத்தில் சென்று கண்டுகொண்டேன்.

விளக்க உரை

  • அடல்-வீரம்.
  • திரு-திருமகள் விலாசம்
  • கடம்-மதம்.
  • தடம்-மதம் பிறக்கும் இடம்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சோபகிருது – சித்திரை – 29 (2023)


பாடல்

சடையானே சடையிடையே தவழுந்தண் மதியானே
விடையானே விடையேறிப் புரமெரித்த வித்தகனே
உடையானே யுடைதலைகொண் டூரூருண் பலிக்குழலும்
அடையானே யையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து – இறைவன் திருமேனியினை விளக்கி தன்னைக் காக்க வேண்டும் என்று உரைக்கும் பாடல்

பதவுரை

திருமுடி ஆகிய சடையை உடையவனே! சடையில் தவழும் திங்களைப் பிறையையாகச் சூடியவனே! காளையினை ஊர்தியாகக் கொண்டவனே! காளை மீது ஏறி ஊர்வலமாக சென்று முப்புரங்களையும் எரியச்செய்தவனே! சகல சீவன்களுக்கும் முதல்வனாக இருப்பதால் அவர்களுக்கு அருள தலைவனாக இருந்து  ஆள்பவனே!  வைரவர் வடிவம் கொண்டு பிரம்மனது மண்டை ஓட்டை ஏந்தி ஊர்தோறும் சென்று பிச்சை ஏற்று உலக உயிர்களைக் காப்பவனே! ஐயாறு ஆகிய திருவையாறு தளத்தில் உறைபவனாகிய உனக்கு அடியேன் ஆளாகி உய்ந்தேன்.

விளக்க உரை:

  • விடையேறித் திரிபுரம் எரித்த ஞான சொரூபன்
  • அடையான் – எவ்வுயிர்க்கும் தானே காவலன்

#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவத்_திருத்தலங்கள் #சைவம் #திருமுறை #தேவாரம் #பாடல்_பெற்றத்_தலங்கள் #நான்காம்_திருமுறை  #தேவாரம்  #திருநாவுக்கரசர் #திருவையாறு #சோழநாடு #காவிரி_ வடகரை _தலங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சோபகிருது – சித்திரை – 20 (2023)


பாடல்

வெண்பொடி மேனியினான் கரு
நீல மணிமிடற்றான்
பெண்படி செஞ்சடையான் பிர
மன்சிரம் பீடழித்தான்
பண்புடை நான்மறையோர் பயின்
றேத்திப்பல் கால்வணங்கும்
நண்புடை நன்னிலத்துப் பெருங்
கோயில் நயந்தவனே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – ஈசன் திருமேனியின் அழகுகளை உரைத்து அவர் உறையும் தலம் இது என்று உரைக்கும் பாடல்

பதவுரை

நல்ல பண்பினையுடைய நான்கு வேதங்களை  ஓதி அதை உணர்ந்தவர்களும், பலவகையான மந்திரங்களையும் உரைத்த முறையில் நன்கு பயின்று, பன்முறை துதித்து வணங்கியும் இருப்பவர்களால் தொழப்படுபவனும், வெண்பொடி ஆகிய திருநீற்றை பூசிய மேனியை உடையவனும்,  நீல மணி போன்ற கரிய கண்டத்தை உடைவனும்,  பெண்ணாகிய கங்கையினை சிரத்தில் பொருந்தியுள்ள சடையை உடையவனும்,  பிரமதேவனது தலையை அவர் பெருமை கெட அறுத்தவனும் ஆகிய ஈசன் நல்ல தன்மையுடைய திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான் ஆவான்.

#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவத்_திருத்தலங்கள் #சைவம் #திருமுறை #தேவாரம் #பாடல்_பெற்றத்_தலங்கள் #ஏழாம்_திருமுறை  #தேவாரம்  #சுந்தரர் #திருநன்னிலத்துப்_பெருங்கோயில் #சோழநாடு #காவிரித்_தென்கரை_தலங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சுபகிருது – பங்குனி – 16 (2023)


பாடல்

பாரப்பா சீவன் விட்டுப் போகும் போது
பாழ்த்த பிணம் கிடக்குது என்பார் உயிர் போச்சு என்பார்
ஆரப்பா அறிந்தவர்கள் ஆரும் இல்லை
ஆகாய சிவத்துடனே சேரும் என்பார்
காரப்பா தீயுடல் தீச் சேரும் என்பார்
கருவறியா மானிடர்கள் கூட்டம் அப்பா
சீரப்பா காமிகள் தாம் ஒன்றாய்ச் சேர்ந்து
தீய வழிதனைத் தேடி போவார் மாடே

அருளியச் சித்தர் : அகத்தியர்

கருத்து – உயிரின் தன்மையை அறியாது பலவாறு பேசும் மனிதர்களைப் பற்றி உரைக்கும் பாடல்.

பதவுரை

உயிரின் தோற்றம் அறியா மானிடர்களின் கூட்டம் இந்த உடலைவிட்டு சீவன் நீங்கும் போது உயிர் நீங்கிவிட்டது, என்றும் அழியக்கூடியதான பிணம் மட்டும்  இங்கு இருக்கிறது,  இதை அறிந்தவர்கள் யாரும் இல்லை,  உலகை விட்டு நீங்கிய சீவன் ஆகாயத்தில் இருக்கும் சிவத்துடன் சேரும், உடலானது தீயினைச் சேரும் என்று  பலவாறு உரைப்பார்கள். புண்ணிய பாவங்களை அறிந்து அதனை செய்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தீய வழியினை மாட்டைப் போன்று தேடிப் போவார்கள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சுபகிருது – மாசி – 26 (2023)


பாடல்

நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா
கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே
ஆவதேது அழிவதேது அப்புறத்தில் அற்புதம்
ஈனதேது ராம ராம ராமா என்ற நாமமே

அருளியச் சித்தர் : சிவவாக்கியர்

கருத்து – அகம், புறம் அனைத்தும் மாயைக்கு உட்பட்டது எனவும், இதை கடந்து நிற்பது ராம எனும் நாமம் என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

செல்வத்தின் மீது பற்று வைத்து இருக்கும் குலாமரே! மும்மலங்களுக்கு உட்பட்டு பேதப்பட்டு நான் என்றும் நீ என்றும் நாம் பேசும் பொருட்கள் எல்லாம் எவை? புறப் பொருளுக்கும், அகப் பொருளுக்கும் நடுவில் நாம் இருவரும் அல்லாமல் இருப்பது எது? நான், நீ மற்றும் புறப்பொருள் ஆகியவற்றுக்கு கோனாகிய தலைவன் யார்? இவற்றை காக்கும் குரு யார்? எல்லாப் பொருள்களையும் தன்னில் கொண்டு அண்டத் தோற்றம், ஒடுக்கம் ஆகியவற்றுக்கு காரணமாக இருந்து இவற்றில் இருந்து விலகி இருப்பது யார்? எல்லாவற்றையும் கடந்து கடைசியில் நிற்பது எது எனில் அது இராம இராம என்னும் நாமமே என்பதை அறிவீர்களாக.

Loading

சமூக ஊடகங்கள்