அமுதமொழி – சோபகிருது – ஐப்பசி – 24 (2023)


பாடல்

திருநாமம் அஞ்செழுத்துஞ் செப்பா ராகிற்
   தீவண்ணர் திறமொருகால் பேசா ராகில்
ஒருகாலுந் திருக்கோயில் சூழா ராகில்
   உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணா ராகில்
அருநோய்கள் கெடவெண்ணீ றணியா ராகில்
   அளியற்றார் பிறந்தவா றேதோ வென்னிற்
பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்துப்
   பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே

ஆறாம் திருமுறை -‍ தேவாரம் -‍ திருநாவுக்கரசர்

கருத்துபிறவி நீங்கப் பெறும் வகைகளை உரைக்கும்  பாடல்.

பதவுரை

எம்பெருமானின் திருநாமமாகிய அஞ்செழுத்தை ஒருகாலும் உரையாதவர்களாகவும், அன்னையின் வண்ணம் ஒத்து இருக்கும் தீவண்ணருடைய இயல்பை ஒருகாலும் பேசாதவர்களாகவும், இறைவன் உறைவிடம் ஆகிய திருக்கோயிலினை ஒருகாலம் வலம் வாராதவர்களாகவும், உணவு உண்பதற்குமுன் வண்ணமும் வாசனையும் உடைய பல மலர்களை அரும்பாய் உள்ள நிலையில் பறித்து அவற்றை இறைவனுக்கு இட்டுப்பின் உண்ணாதவர்களாகவும்,வினை பற்றி வரும் கொடுநோய்கள் கெடுவதன் பொருட்டு வெண்ணீற்றை அணியாதவர்களாகவும் இருப்பவர்கள் இறைவனது திருவருளை இழந்தவராவார். அவர்கள் தீராத கொடுநோய்களால் மிகத் துன்புறுத்தபட்டு பின் இறந்து மீளவும் பிறப்பதற்கு வழியில்லாமல் அதுவே தொழிலாகி இறக்கின்றார்கள்.

விளக்க உரை

  • திருநாமம் ‍-‍ சிவபிரான் பெயரைக் குறிக்கும் சொல்.
  • திறம் – இயல்பு
  • அளி அற்றார் – தலைவரால் அருளப் பெறும் அருளை இழந்தவர்
  • ஒருகாலும் -‍ கூறாத இடங்களிலும் கூட்டிக் கொள்ளலாம்.

#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவம் #திருமுறை #ஆறாம்_திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #பொதுப்பதிகம்

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply