அமுதமொழி – சோபகிருது – புரட்டாசி – 4 (2023)


பாடல்

மூலமண்ட லத்திலே முச்சதுர மாதியாய்
நாலுவாசல் எம்பிரான் நடுவுதித்த மந்திரம்
கோலிஎட் டிதழுமாய் குளிர்ந்தலர்ந்த திட்டமாய்
மேலும்வேறு காண்கிலேன் விளைந்ததே சிவாயமே

அருளியச் சித்தர் : சிவவாக்கியர்

கருத்துஅனைத்துமாகி நிற்கும் சிவத்தை காணுதலை கூறும் பாடல்.

பதவுரை

மூலாதாரத்தின் அதிபதி கணபதி மற்றும் வாலை தாய். இது முட்டை வடிவமும்  அதனை சுற்றி நான்கு தாமரை இதழ் கொண்ட அமைப்பும் உடையது. அந்த இதழ்கள் ஒவ்வொன்றும் வல வரிசையாக மனம், புத்தி, சித்தம், அஹங்காரம் எனும் அந்தக்கரணத்தால்  குறிப்பிடப்படுகின்றன. இவைகளுக்கான அக்ஷரங்கள் ‘வ, ச, ஷ, ஸ.’ இதற்கு தலைவனாக விளங்கக்கூடியது ஓங்காரம். இவ்வாறு இருக்கும் ஓங்காரத்துடன் ‘ரீம் உம்’ ஆகிய அட்சரங்களை (குரு உபதேசம் செய்தபடி) கூட்டி தனது மனதினை சாட்சியாக வைத்து எட்டு இதழ்களிலும் வெவ்வேறு விதமாய் ஜபம் செய்ய குளிர்ச்சி உடையதும், நிலையானதுமான சோதிவடிவமாக சிவம் இருக்கின்றது என்பதை அறியலாம். இதை விடுத்து வேறு ஒன்றையும் காணவில்லை.

விளக்க உரை

  • எட்டு இதழ்கள் – எண் சாண் உடல் எனவும், நாலுவாசல் என்பதை அண்டஜம் (முட்டையில் இருந்து பிறப்பவை), ஜராயுதம் (கருப்பையில் பிறப்பவை), உத்பிஜம் (வித்து, வேர், கிழங்கு மூலம் பிறப்பவை), சுவேதஜம் (வேர்வையில் இருந்து கிருமிகள், பாக்டீரியாக்கள்) பிறப்பவை) எனக் கொண்டு அனைத்து பிறப்புகளுக்கும் தலைவனாக இருக்கிறான் என்றும் சில குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.
  • கணபதியும் சிவமும் வேறு வேறு அல்ல எனவும் கொள்ளலாம்.

சித்தர் பாடலுக்கு உண்டான விளக்கத்தினை மானிட சரீரம் கொண்டு எழுதப்பட்டதால் விளக்கங்களில் பிழை இருக்கலாம். பிழை எனில் சரீரம் சார்ந்தது. நிறை எனில் குருவருள்.

#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவம் #சித்த(ர்)த்_துளிப்பு, #சித்தர்_பாடல்கள் #சிவவாக்கியர்

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply