தவிரவைத் தான்வினை தன்னடி யார்கோள் தவிரவைத் தான்சிரத் தோடுதன் பாதம் தவிரவைத் தான்நமன் தூதுவர் கூட்டம் தவிரவைத் தான்பிற வித்துயர் தானே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – சற்குரு அருளால் முடிவாகிய வீடுபேறு மட்டுமின்றி, இடைநிலைப் பயனாகிய இம்மைப் பயன்களும் கிட்டும் என்பதைக் கூறும் பாடல்.
பதவுரை
சற்குருவானவர் தன்னுடைய அடியார்களின் வினை நீங்குமாறு செய்யவும், ஒன்பது கோள்களினால் ஏற்படும் தீமைகள் நீங்கவும், யம தூதர்களது கூட்டம் விலகி ஓடவும், பிறவித் துன்பம் நீங்கவும் தனது திருவடிகளை அவர்தம் தலையோடு பொருந்துமாறு வைத்து அருளினான்.
கருத்து – ஈசனின் செயற்கரிய செயல்களை உரைத்து தன்னையும் காக்க வேண்டும் என விண்ணப்பிக்கும் பாடல்.
பதவுரை
கங்கை நதியினை தாங்கிய நீண்ட சடையை உடையவனே, பூத கணங்களுக்குத் தலைவனே, காலன் ஆகிய எமனுக்கு காலனே, காமன் உடலினை நெருப்பாகி அதனை எரித்தவனே, அலை மிகுந்து தோன்றும் பெரிய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு அதை கண்டத்தில் உடையவனே, உயிர்களுக்கு முதல்வனாக இருப்பவனே, அற வடிவமாக இருப்பவனே, மாசு படாமல் எக்காலத்திலும் தூயோனாக இருப்பவனே, செம்மையான கண்களை உடைய திருமாலாகிய இடபத்தை ஊர்தியாக உடையவனே, தெளிந்த தேன் போன்றவனே, இறைவனே, தேவர்களிடத்தில் ஆண் சிங்கமாய் உள்ளவனே, திருவாவடுதுறையில் எழுந்து அருளியிருக்கின்ற கருணையாளனே, அடியேனுக்கு உன்னை அன்றி உறவாக யாவர் உளர்! என்னை ‘அஞ்சேல்’ என்று சொல்லித் தேற்றி எனக்கு அருள் செய்வாயாக.
விளக்கஉரை
‘அமரர்கட்குத் தலைவனே’ என அருளாது ‘அமரர்கள் ஏறே’ என , உருவகித்து அருளியது முதன்மையின் சிறப்பு பற்றியது
வருந்தி அழைத்தாலும் வாராத வாரா பொருந்துவன போமின் என்றால் போகா-இருந்து ஏங்கி நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைத்து துஞ்சுவதே மாந்தர் தொழில்
நல்வழி – ஔவையார்
கருத்து – மனிதர்கள் வினைபற்றி இருக்கும் போது அது குறித்து துயரப்பட்டு இறத்தலே தொழிலாக இருப்பதைக் குறிக்கும்பாடல்.
பதவுரை
வருத்தப்பட்டு எத்தனை முயன்று அழைத்தாலும் நமக்குச் சேராதவைகள் நம்மிடத்தில் வந்து சேர்வதில்லை. நம்மிடம் வந்து பொருத்தி நிற்பவைகள் நம்மை விட்டுப் போகவேண்டும் என்றால் அது எக்காலத்திலும் போவதும் இல்லை. இவ்வாறு வினைகள் பற்றி மனிதர்களின் வாழ்வு இருக்கும் போது ஒன்றை அடையவேண்டும் என்னும் ஏக்கம் கொண்டு நெஞ்செல்லாம் புண்ணாகும்படி வருந்தி நெடுந்தூரம் திட்டமிட்டுக் கொண்டிருந்து மரணிப்பதே மாந்தரின் தொழிலாகப் போய்விட்டது.
பித்ரு யாகம் பற்றியும், அது செய்யத்தக்க காலம் பற்றியும், அதை எவ்வாறு செய்வது என்பது பற்றியும் அதைச் சொல்லக்கடவீர்.
மகேஸ்வரர்
பித்ருக்கள் புண்ணியர்களாகவும், தேவர்களுக்கும் மேலானவர்களாகவும், அனைவரும் பூஜிக்கத் தக்கவர்களாகவும், எப்பொழுதும் பிரகாசம் உடையவர்களாகவும், தென் திசையைச் சார்ந்தவர்களாகவும் இருக்கின்றனர்.
புவியில் உள்ள உயிர்கள் மழையை எதிர்ப்பார்த்து காத்திருப்பது போல் பித்ருக்கள் உலகில் நடக்கும் சிராத்தத்தினை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். குரு ஷேத்திரம், கயை, கங்கை, சரஸ்வதி நதிக்கரைகள் சிராத்தத்திற்கு உரியவை. இங்கு செய்யும் சிராத்தம் பெரும் பயன் தரும். புண்ணியதிருத்தலங்களும், புண்ணிய நதிக்கரைகளும், மனிதர்கள் அற்ற வனங்களும், ஆற்று மணல் நிறைந்த இடங்களும் சிராத்தத்திற்கு உரித்தான இடங்களாகும். மாசி புரட்டாசி மாதங்கள், தேய்பிறை ஆகிய கிருஷ்ணபட்சம், அமாவாசை, திரயோதசி, நவமி ஆகிய திதிகளில் சிராத்தம் செய்யத்தக்க காலங்கள் ஆகும். முற்பகல், வளர்பிறை, இரவுப்பொழுது, ஜன்ம நட்சத்திரம், இரட்டித்த திதிகள் போன்றவற்றை சிராத்தம் செய்ய விலக்க வேண்டும்.
பித்ருயாகத்தின் குற்றங்கள் திலத்தினால் விலகும். பச்சைபயறு, உளுந்து போன்ற தானியங்களால் பித்ருக்குகள் திருப்தி அடைவர். பசுவின் நெய், பாயசத்தினால் ஒருவருடமும், எள்ளோடு சேந்த பாயசம், தேன் போன்றவற்றால் பன்னிரெண்டு வருட காலமும் திருப்தி அடைவார்கள். சிராத்தம் செய்யப்படும் இடத்தில் வெளிப்படையாகவும், ரகசியாகவும் பேசுதல் கூடாது.
புத்திரனை விரும்புவன் ‘பித்ருக்களே, தாமரை மாலை அணிந்த குமாரனை கர்பத்தில் அருளுங்கள்‘ என்று செபித்து நடு பிண்டத்தை மனைவியை உண்ணச் செய்ய வேண்டும்.
இவைகளை தினம், ஒவ்வொரு மாதம், வருடத்திற்கு நான்குமுறை, வருடத்திற்கு இருமுறை என்ற வகையில் தன் சக்திக்கு தகுந்த அளவில் செய்யலாம்.
இந்த பித்ரு யாகங்கள் பகைவர்களை கெடுத்து, குலத்தைப் பெருக்கும் என்பதால் மனிதர்கள் தீர்க்க ஆயுள் உள்ளவர்களாகவும், ஆரோக்கியம் உடையவவர்களாகவும், சந்ததி உடையவவர்களாகவும், தனதான்யம் உடையவவர்களாகவும் இருப்பார்கள்
செத்துப் பிறக்கின்ற தேவைத் துதிப்போர்க்கு முத்திதான் இல்லையடி குதம்பாய் முத்திதான் இல்லையடி எங்கு நிறைந்தே இருக்கின்ற சோதியை அங்கத்துள் பார்ப்பாயடி குதம்பாய் அங்கத்துள் பார்ப்பாயடி
அருளிய சித்தர் : குதம்பைச்சித்தர்
பதவுரை
காதுகளில் குதம்பையினை அணிந்த பெண்ணே, உயிர்வாழவும், நிலை இல்லா இன்பம் தருவதுமான இகலோக வாழ்வின் தேவை குறித்து நினைவு கொண்டு இருப்பவர்களுக்கு நிலைத்த இன்பம் தருவதும், பேரின்பமும் ஆன முக்தி இல்லை. அணுமுதல் அண்டம் வரை எங்கும் எவ்விடத்தும் எக்காலத்திலும் நிறைந்து இருக்கும் பரம்பொருள் எனப்படும் ப்ரமத்தினை சோதி வடிவாக அங்கத்துள் (உபதேசித்தப்படி) சூட்சமமாக பார்ப்பாயாக
பற்றற்ற வத்துவைப் பற்றறக் கண்டோர்க்குக் குற்றங்கள் இல்லையடி குதம்பாய் குற்றங்கள் இல்லையடி காட்சியாம் காட்சி கடந்த பிரமத்தைச் சூட்சியாய்ப் பார்ப்பாயடி குதம்பாய் சூட்சியாய்ப் பார்ப்பாயடி
அருளிய சித்தர் : குதம்பைச்சித்தர்
பதவுரை
எண் குணங்களில் ஒன்றான இயல்பாகவே பாசங்களினின்று நீங்கப் பெற்ற வஸ்துவை காரண காரியம் இல்லாமல் பற்றுதல் இல்லாமல் அந்த வஸ்துவைக் காண்போர்க்கு ஆணவம், மாயை, கண்மம் எனும் குற்றங்கள் இல்லாமல் நீங்கிவிடும்.
ஸ்தூலம், சூட்சுமம் ஆகியவற்றால் காணக்கூடிய காட்சிகளைக் கடந்து காட்சியாக (சாட்சி பாவம்) நிற்கக்கூடிய பிரம்மத்தினை சூட்சமமாக பார்ப்பாயாக.
சிவாய நம என்று சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை – உபாயம் இதுவே; மதியாகும்; அல்லாத எல்லாம் விதியே மதியாய் விடும்
அருளிய சித்தர் : ஔவையார்
பதவுரை
சிவாயநம என்னும் சிவ சிந்தனையில் ஆழ்ந்து இருப்போர்க்கு துன்பம் தரத்தக்கதான அபாயம் எந்த நாளும் இல்லை. இதை அன்றி துன்பத்தை நீக்குவதற்கு வேறு வழி இல்லை; இது நமது பெறப்பட்ட அறிவின் கண்ட சிந்தனையாக இருக்கவேண்டும்; இவை அல்லாதது மற்றவை எல்லாம் விதியின் வழியே பெறப்பட்ட சிந்தனையே ஆகும்.
அருளிய சித்தர் : கடேந்திர நாதர் என்ற விளையாட்டுச் சித்தர்
பதவுரை
இறை பற்றியும், மெய் ஞானம் பற்றிய ஞானம் சிறிதும் கொள்ளாமல் நாட்கள் கழிவது விளையாட்டே; இருப்பவர் இறந்து அதன்பின் சுடலை வரை சேர்க்கும் வரை அந்த உயிர் குறித்து அழுவது விளையாட்டே; மெய்ஞானம் பற்றி அறியாது இருந்த போதும் அதை முழுவது அறிந்தது போல் பேசுவதும் விளையாட்டே; அவரை எரித்தப்பின் வீடு வந்த உடன் அந்த நினைப்பை மறப்பதுவும் விளையாட்டே.
‘நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே’ எனும் திருமந்திரப் பாடலும் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
தானாக தன்னில் மூழ்கி, மூழ்கி மூலாதாரத்தில் இருந்து யோக மார்கத்தில் இருந்து கனல் எழுப்பி தித்திப்பினை தருவதான தேன் ஒத்தது போன்ற அறைக்கதவினை திறந்து(குரு மூலமாக அறிக), சூரிய கலை, சந்திர கலை மற்றும் சுழுமுனை ஆகிய மூன்று மண்டலங்களின் வழியே வாசியினை செலுத்தி, துவாத சாந்தத்தினை அடைந்தவர்கள் நல்ல யோகிகளாக இருப்பார்கள்.
சிவசக்தி ரூபத்தில் காலசம்ஹார மூர்த்தி ஆகி இடது காலை உயர்த்தி காலன் எனும் எமனை உதைத்தவளும், நீல கண்ட வடிவத்தில் இருந்து ஈசன் அருந்திய விஷத்தினை தாங்கியவளும், எண்ணில்லாத இந்த புவனங்களை எல்லாம் படைத்தவளும், மானிட வாழ்வு நீக்கம் பெறுவதன் பொருட்டு அவர்களுக்கு முக்தி அளிப்பவளுமாய் இருப்பவள் வாலை.
வாலைப் பூசை கொண்டோர் பிறவி அறுப்பர் என்பதால், காலனை உதைத்தவள் என்றும், யோக முறையில் கண்டத்திற்கு மேல் பூசை செய்து அன்னையை அடைபவர்களுக்கு விஷம் தீண்டாது என்றும் பொருள் உரைப்பாரும் உண்டு. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
கருத்து – இறைவன் துன்பத்தைப் போக்க வல்லவன் என்பதுவும், இறைவன் குருவாய் வந்து ஆட்கொண்ட போது உடன் செல்லாது இருந்தமையால், இங்கு வினைகளைச் செய்து வேதனைப் படுகிறேன் என்பதையும் கூறும் பாடல்.
பதவுரை
கொடிய நரகத்தில் வீழாது காத்தருள குருமணி எனும் குருவடிவாக இருப்பவனே ! வினை பற்றி நின்று செயல்படுவதால் கெடும் இயல்புடைய யான் கெடும் வழியில் சென்று கெடுகின்றேன்; இதனால் குற்றம் இல்லாதவனாகிய நீ பழியினை அடைந்தாய்; பட்டு அனுபவிற்பதற்கு உரிய துன்பங்களை எல்லாம் நான் அனுபவிப்பதால் நீ காட்டும் பயன் என்னை? நீ நடுவு நிலைமையில் நில்லாது ஒழிந்தால் அது உனக்கு அழகாகுமோ எம் தலைவனே?
விளக்கஉரை
கேடு இலதாய் – கேடில்லாதவனே
கெடுவேன் – கெடும் இயல்புடைய யான்
கெடுமா கெடுகின்றேன் – கெடும் வழியில் சென்று கெடுகின்றேன்;
குருமணியே – மேலான குரவனே
பழி கொண்டாய் – ஆட்கொண்ட பெருமான் முத்திப்பேறு அளிக்காமை பற்றியது
நடுவாய் நில்லாது – தம்மைப் பின் நிறுத்தி ஏனைய அடியார்களை உடன் அழைத்துச் சென்றமையை நினைவு கூர்ந்து அவ்வாறே தம்மையும் அழைத்துக் கொண்டருள வேண்டும் என்ற விருப்பம் தெரிவித்து அருளியது
பாரப்பா உதயத்தில் எழுந்து இருந்து பதறாமல் சுழுமுனையில் மனத்தை வைத்துக் காரப்பா பரிதிமதி இரண்டு மாறிக் கருவான சுழுமுனையில் உதிக்கும் போது தேரப்பா அண்ணாக்குள் நின்று கொண்டு தியங்காமல் சுழுமுனைக்குள் அடங்கும் பாரு சீரப்பா பதினாறில் எட்டும் நான்கும் சிதறாமல் மூன்றும் ஒன்றாய் சேர்ந்து போமே
அருளிய சித்தர் : அகத்தியர்
பதவுரை
பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் அதிகாலை நேரத்தில் எழுந்து, எண்ணங்களைச் சிதற விடாமல் செய்து சுழுமுனையில் மனத்தை இருக்கும்படி செய்து, சூரிய கலை எனப்படும் வலது நாசி வழியாகவும், சந்திர கலை எனப்படும் இடது நாசி வழியாகவும் செல்லும் வாசியினை அண்ணாக்குள் நிலை நிறுத்தும் போது அது இயக்கம் கொள்ளாமல் சுழுமுனையில் அடங்கிவிடும், வாசிபற்றி நின்று பூரகம், ரேசகம், கும்பகம் ஆகியவற்றை மேலே குறிப்பிட்ட எண்ணிக்கையில் செய்யும் போது அவைகள் சுழுமுனையில் ஒன்றாக சேர்ந்து இருக்கும்.
கருத்து – மயிலாடுதுறை தலத்தில் உறையும் சிவனின் பெருமைகளை உரைத்து அவர்தம் திருவடிகளைக் கொண்டவர்களுக்கு மானிட வாழ்வில் துயரம் இல்லை என்பதை உரைக்கும் பாடல்.
பதவுரை
உயிர்கள் பிறவி நீக்கம் பெறுவதன் பொருட்டு, கரை படிந்தது ஒத்த கண்டத்தை கொண்டதால் திருநீலகண்டன் என்னும் பெயர் பெற்றவனும், எட்டுத் தோள்களினை உடையவனும், வேதத்தின் வடிவமாகவும், அதன் பொருளாக இருக்க வல்லவனுமகிய மயிலாடுதுறை தலத்தில் உறையும் இறைவனின் நீண்ட கழல்களை ஏந்தி இருத்தலால் கொடுமை உடையதான மானுட வாழ்வினில் வருவதான குறைவு இல்லாதவர்களாக ஆவோம்.
விளக்கஉரை
கொடு – தீயது. மீண்டும் பிறவிக்து ஏதுவான வினை .
நீள் கழல் – அழிவில்லாத திருவடிகள்
எண்தோளினன் – எட்டுத் திக்குகளையும் ஆடையாக அணிந்தவன் என்றும், எண் குணங்களை முன்வைத்து எண் தோளினன் என்றும் கூறலாம்.
திருவடிகளை ஏத்தியிருக்கும் பிறவி வாய்க்குமானால் அந்த மானுட வாழ்க்கையில் வினைகள் என்பது இல்லை.
தாயை நிரந்தரமான உறவு என்றும், தந்தையை ஒப்பு செய்ய இயலாதவர் என்று பொய்யான தோற்றத்தினை ஏற்படுத்தி மாயையானது வந்து சேர்ந்ததால் எனது மதி மயக்கம் கொண்டது; இது மாயையின் காரியம் என்று உண்மையினை உணர்ந்து மதியின் மயக்கம் தீர்ந்தவுடன் தாய் நிரந்தரமான உறவாகவும், தந்தை ஒப்பில்லாதவராகவும் ஆகிவிடுவார்களா?
சித்தர்கள் தான் கண்ட உண்மையினை பிறருக்கு உரையாமல் மறைத்து வைத்தார் என்று கூறி எண்ண வேண்டாம்; சித்தர்களில் நூல்களை வாசிக்கத் தொடங்கிய போதே அதன் பொருளை விளக்க அனைத்து சித்தர்களும் ஒன்றாக சேர்ந்து வந்து அதன் பொருளை அருளுவார்கள்; சித்தர்களின் பால் வைத்த எண்ணங்களுக்காக அவர்கள் நாட்டம் கொண்டு அருளுவார்கள்; சித்தர் வழியில் அதன் பொருளைக் கண்டு நடக்கையில் அதன் உட்பொருளில் இருந்து மாறுபட்டு நடந்தால் அந்த இடத்தை விட்டு விலகிச் செல்வார்கள்; சித்தம் நிறைவு உள்ளவர்களுக்கே சித்திகள் எனப்படும் அட்டமா சித்திகள் தோன்றும்; அவ்வாறு சித்தம் நிலைபெறாமல் சித்தி கண்டவர்கள் என்று கூறி அவர்களால் செய்யப்படும் வித்தைகள் எல்லாம் சிரிப்பினைத் தான் தோற்றுவிக்கும்.
ஊனில் ஏற்படுவதாகிய உறக்கம் விடுத்து அதை நீக்கி யோக நிட்டை புரிந்தோம், உற்றவர்கள் என்று சொல்லப்படும் மனைவி, மக்கள், உறவுகள் அனைவரையும் விலகி அவர்கள் இடத்தில் பற்று கொள்ளாமல் இருந்து மலைக் குகைகளில் இருந்து (தவம் செய்து) வந்தோம்; புறக்கண்களால் காண இயலாததும், அகக் கண்களால் யோகம் பற்றி காணக்கூடியதான பரவெளியினைக் கண்டோம்; பசி, தாகம் மற்றும் இயற்கை உபாதைகள் தாக்காதிருக்க கற்ப மூலிகளைக் உட்கொண்டு உடலை வளர்த்துக் கொண்டோம்.
அட்ட கரு மம்தெரிய வேணும் அதற் காதார மானஆலை தெரிய வேணும் திட்டமாய் வாசிநிலை வேணும் இத தெரிந்துகொண் டாற்சித்தன் ஆகவே வேணும்
அருளிய சித்தர் : கல்லுளிச் சித்தர்
பதவுரை
மனப்பயிற்சியால் தன் வயப்படுத்தலாகிய வசியம், இயக்கச் செயல்களைக் கட்டுவதுவதாகிய தம்பனம், தீய சக்திகளை தன்னிடம் இட்டு விரட்டுதலாகிய உச்சாடனம், பிறறை தன் மீது மோகம் கொள்ளச் செய்தலாகிய மோகனம், பகை உண்டாக்கிப் பிரித்தலாகிய வித்வேடணம், துர்தேவதைகளை பணிய வைத்தலாகிய ஆகர்ஷணம், சுய நினைவற்று போகச் செய்தலாகிய பேதனம், உயிர்களுக்கு கேடு விளைப்பதுவாகிய மாரணம் ஆகிய அட்ட கருமங்களை தெரிந்து கொள்ள வேண்டும்; அந்த அட்ட கருமங்கள் எவ்வாறு தோற்றமும் ஒடுக்கமும் கொள்கின்றன என்பதன் மூலத்தினை அறிய வேண்டும்; எண்ணத்தில் மன உறுதி கொண்டு வாசி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்; இவ்வாறு அனைத்தையும் அறிந்து கொண்டு சித்தன் என்று ஆக வேண்டும்.