சித்த(ர்)த் துளிப்பு – 19-Jan-2021


பாடல்

ஊணுறக்கம் நீக்கியல்லோ யோகநிட்டை புரிந்தோம்
உற்றாரைப் பற்றறுத்து மலைக்குகையில் இருந்தோம்
காணுதற்கும் எட்டாத பரவெளியைக் கண்டோம்
கற்பமது சாப்பிட்டு உடல்வளர்த்துக் கொண்டோம்

அருளிய சித்தர் : வகுளிநாதரென்னும் மௌனச்சித்தர்

பதவுரை

ஊனில் ஏற்படுவதாகிய உறக்கம் விடுத்து அதை நீக்கி யோக நிட்டை புரிந்தோம், உற்றவர்கள் என்று சொல்லப்படும் மனைவி, மக்கள், உறவுகள் அனைவரையும் விலகி அவர்கள் இடத்தில் பற்று கொள்ளாமல் இருந்து மலைக் குகைகளில் இருந்து (தவம் செய்து) வந்தோம்; புறக்கண்களால் காண இயலாததும், அகக் கண்களால் யோகம் பற்றி காணக்கூடியதான பரவெளியினைக் கண்டோம்; பசி, தாகம் மற்றும் இயற்கை உபாதைகள் தாக்காதிருக்க கற்ப மூலிகளைக் உட்கொண்டு உடலை வளர்த்துக் கொண்டோம்.

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 26-Dec-2020


பாடல்

ஆதிபெருஞ் சோதிதனை அனுதினமும் நாடி
   ஐயர்பதந் தேடிக்கொண்டு அருள்பெறவே பாடிச்
சோதியெனும் மனோன்மணியாள் அருளதனைப் பெற்றுச்
   சுகருடைய பாதமதை மனந்தனிலே உற்று

அருளிய சித்தர் : வகுளிநாதரென்னும் மௌனச்சித்தர்

பதவுரை

அருளை பெறுவதற்காக குற்றமற்றவனாக இருக்கும் அவனது திருவடிகளை தேடிக்கொண்டு, காலத்தால் குறிப்பிட்டுக் கூற இயலாததாக இருப்பதும், அளவிட முடியதாகவும் இருக்கும் பெரியதான சோதியினை நித்தமும் விரும்பி அதை நாடி,  சோதி வடிவமாகவே இருக்கும் மனோன்மணியாள் அருளைப் பெற்று சுகத்தினை தருபவருமான பாதத்தினை மனத்தினாலே உற்று நோக்கு.

சுகர் –  சீவ முக்தி எனப்படும் துறவு நிலையை அடைந்தவரும், வியாச முனிவரின் புதல்வரான பரிட்சித்து மன்னன், தட்சகனால் கடிபட்டு இறக்கும் தறுவாயில் அவனுக்கு பாகவதத்தை உபதேசித்தார். எழுதிய சித்தர் பற்றி எக்குறிப்பும் காணப்படாமையால் சுகர் குருவாக இருந்திருக்கலாம்.

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – நயத்தல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  நயத்தல்

வார்த்தை : நயத்தல்

பொருள்

 • விரும்புதல்
 • பாராட்டுதல்
 • சிறப்பித்தல்
 • பிரியப்படுத்தல்
 • தட்டிக்கொடுத்தல்
 • கெஞ்சுதல்
 • அன்புசெய்தல்
 • பின்செல்லுதல்
 • மகிழ்தல்
 • இன்பமுறல்
 • இனிமையுறுதல்
 • இணங்கிப்போதல்
 • பயன்படுதல்
 • மலிதல்
 • மேம்படுதல்
 • ஈரம்ஏறுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

நானென்ற ஆணவத்தை நயந்தறுத்து விடுத்தேன்
   நன்மைபெற்றுக் குகைதனிலே வாழ்ந்திருக்க அடுத்தேன்
தானென்ற கருவமதைத் தணித்து விட்டு வந்தோம்
   தவமேதான் கதி என்று சரவழியில் உகந்தோம்.

வகுளிநாதரென்னும் மௌனச்சித்தர் பாடல்

கருத்து உரை

நான் எனும் செருக்கை அறுத்தேன். குகைக்குள்ளே நன்மை பெற்று வாழ்ந்தேன். தான் என்னும் கர்வத்தயும் குறைத்துவிட்டு தவமே உரிய வழி என சஞ்சார வழியில் மகிழ்ந்தோம்.

விளக்க உரை

 • இவருடைய இயற்பெயர் ‘வகுளிநாதர்’
 • இவருக்கு முன் இருந்த பல சித்தர்களைப்  பின்பற்றி 12  பாடல்களைப் பாடியிருப்பது மட்டும் தெரிகிறது.

துக்கடா

சொல் – ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும்.

சொல்லின் வகைகள்

 • பெயர்ச்சொல்
 • வினைச்சொல்
 • இடைச்சொல்
 • உரிச்சொல்

சமூக ஊடகங்கள்