சித்த(ர்)த் துளிப்பு – 23-Dec-2020


பாடல்

வேத விதிப்படி நில்லு – நல்லோர்

மேவும் வழியினை வேண்டியே செல்லு

சாத நிலைமையே சொல்லு – பொல்லாச்

சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு

அருளிய சித்தர் : கடுவெளிச் சித்தர்

பதவுரை

மறை ஆகிய வேதத்தில் உரைக்கப்பட்டவாறு அதன் வழியில் நிற்பாயாக; தர்மம் சார்ந்து அதன் வழியில் இருக்கும் நல்லவர்கள் செல்லும் வழியினை அவர்களிடத்தில் சொல்லக் கேட்டு அதன் வழியில் செல்வாயாக; வாக்கு, மனம்,காயம் ஆகிய்வற்றால் பிறருக்கு துன்பம் தரத்தக்க வார்த்தைகளைக் கூறாமல் அதுபற்றி நலம் தரத்தக்க வார்த்தைகளைக் கூறுவாயாக; பொல்லாததும் பேய்த் தன்மை உடையதுமான கோபத்தை வைராக்கியம் கொண்டு அதனை கொல்வாயாக.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – மார்கழி- 7 (2020)


பாடல்

தூநிழலார் தற்காருஞ் சொல்லார் தொகுமிதுபோல்
தான்அதுவாய் நிற்குந் தரம்

திருநெறி 8 – திருவருட்பயன் – உமாபதி சிவாச்சாரியார்

கருத்துஉயிர் பாசத்தோடு இருந்து வந்துப் பின் விலகி அசுத்தம் நீங்கப் பெற்றப்பின் தெளிவு பெறுதல் குறித்து விளக்கும்  பாடல்.

பதவுரை

சூரியன் வந்த காலத்தில் அதன் கடுமையால் துயர் உற்றவனுக்கு தூயதும், குளிர்ந்ததும் ஆன நிழல் எதிர்ப்பட்டால் அதில் சென்று தங்கி வெம்மையைப் போக்கிக் கொள்ளவேண்டும் என்று எவரும் சொல்வதில்லை; இந்த முறைமையைப் போல இருவினை ஒப்புக்குப்பின் ஆன்மாவிடத்தில் திருவருள் வந்து சேர்ந்தப்பின் உலகினை நோக்காது உயர்ந்ததான் திருவருளில் அடங்கி ஒற்றுமை கொண்டு நிற்கும்.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 22-Dec-2020


பாடல்

முக்கோண மூசுழிதற் கோண மாகி
முதலான மூலமணி வாலை தன்னில்
நாற்கோண நாலுவரை நயந்து காக்க
நாயகியாள் பரஞ்சோதி நாட்ட முற்றுத்
தீக்கோணத் திக்குதிசை யிருந்த மாயம்
தெரிந்திடவே யுரைத்திட்டேன் விவர மாக
தாக்கோண விட்டகுறை வந்த தென்றால்
தனியிருந்து பார்த்தவனே சித்த னாமே

அருளிய சித்தர் : இராமதேவர்

பதவுரை

அனைத்திற்கும் மூலமாக இருக்கக்கூடியவளும், பரஞ்சோதி,மனோன்மணி என்றும் அழைக்கப்படுபவளும், திசை என்பதே இல்லாமல் இருக்கும் தீ போன்றவளாகி வாலை முக்கோண வடிவிலே இருக்கக்கூடியதான மூலாதாரமும், நாற்கோண வடிவில் இருக்கும் சுவாதிட்டானம் அனைத்தையும் விரும்பிக் காப்பவள்; இதை நீ அறிவதன் பொருட்டு விபரமாக உரைத்துவிட்டேன்; இவ்வாறு உரைத்ததை பல்வேறு கோணங்களில் தனியே இருந்து அவளைப் பார்த்தவன் சித்தனாவான்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – மார்கழி- 6 (2020)


பாடல்

அக்கரை நின்றதோர் ஆல மரங்கண்டு
நக்கரை வாழ்த்தி நடுவே பயன்கொள்வர்
மிக்கவர் அஞ்சு துயரமும் கண்டுபோய்த்
தக்கவர் தாழ்ந்து கிடக்கின்ற வாறே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துஈசனை உணர்ந்தவர்கள் துன்ப வெள்ளத்தில் இருந்து வெளியேறுதலையும், உணராதவர்கள் துன்பங்களை அனுபவித்துக் கொண்டு இருப்பார்கள் என்பதையும் விளக்கும் பாடல்.

பதவுரை

தொந்த வினைகளின் தொடர்ச்சியாக சென்றுகொண்டிருக்கும் மக்கள் யாவரும் காலம் எனும் ஆற்று வெள்ளத்தில் போய்க்கொண்டிருப்பவர்களே ஆவார். இருப்பினும் அவர்களில் ஒரு சிலர் மட்டும் கடலில் சென்று விழுவதற்கு முன்னே கரைசேர்தல் பொருட்டு ஆற்றின் அக்கரையில் அமைந்துள்ள ஓர் ஆலமரத்தையும், அதன் கீழே திசைகளையே ஆடையாகக் கொண்டவன் எனும் விபாயக நிலையை உணர்த்தி அவரைக் கண்டு வாழ்த்தி பலன்களைப் பெறுகின்றார்கள். மற்றவர்கள் அவ்வாறு இல்லாமலும், கரை சேரமலும். ஐந்து வகையான துன்பங்களை அனுபவித்துக் கொண்டு வெள்ளத் திலே மிதந்து போய்க் கொண்டிருக்கின்றார்கள்.

விளக்கஉரை

  • அஞ்சு துயரம் – வெளிப்படைப் பொருளில், `பல துயரம்`;  உள்ளுறைப் பொருளில் ‘பஞ்சேந்திரியங்களின் துயரம்’
  • நக்கர் –  சிவபிரான்
  • ஆல மரம் – வேதம். விழுதுகள்- அதன் வழி நூல் சார்பு நூல்கள்.
  • மிக்கவர் – எஞ்சினோர்

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 21-Dec-2020


பாடல்

நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்ப்பதென்றோ
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலும்
காட்டானை மேலேறி என் கண்ணம்மா!
கண்குளிரக் காண்பேனோ!

அருளிய சித்தர் : அழுகணிச் சித்தர்

பதவுரை

கண்ணம்மா! நாகரிகமற்றவன், அயலான், காட்டான்  எனும் பொருளில் இயங்கிக் கொண்டிருக்கும் காற்றானது மூலாதாரத்தில் இருந்து இயங்கி யோக மார்க்கமாக ஆஞ்ஞை கடந்து சகஸ்ராரம் வரையில் கடைத்தெருவின் வழியே செல்வது போன்று  அனைத்து ஆதாரங்களையும் கடந்து செல்கின்றது. ஊர்சபைக்காரார் எனும் உடலோடு இருப்பவர்களும், அண்டத்தில் இருப்பவர்களாகிய எமனால் ஏவப்பட்டவர்களும் நமது யோக சித்தி நிறைவேறாமல் இருப்பதன் பொருட்டு இந்த முறைகள் குறித்து புன்னகை புரிந்து எள்ளி நகையாடுவார்கள்; அவ்வாறு நம்மை கட்டுப்படுத்துவர்களாகிய அந்த நாட்டார்கள் நம்மை  கண்டு எள்ளி நகையாடினாலும் காற்றினை மேலேற்றி உன்னுடைய திருநடனத்தினைக் காண்பேனோ!

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – மார்கழி- 5 (2020)


பாடல்

அருள் மிகுத்த ஆகமநூல் படித்து அறியார்!
   கேள்வியையும் அறியார்! முன்னே
இருவினையின் பயன் அறியார்! குருக்கள் என்றே
   உபதேசம் எவர்க்கும் செய்வார்!
வரம் மிகுத்த தண்டலைநீள் நெறியாரே!
   அவர் கிருபா மார்க்கம் எல்லாம்
குருடனுக்குக் குருடன்கோல் கொடுத்துவழி
   காட்டிவரும் கொள்கை தானே

தண்டலையார் சதகம் – படிக்காசுப் புலவர்

கருத்துஅஞ்ஞானி, இன்னொரு அஞ்ஞானிக்கு உபதேசம் புரிய முடியாததை பழமொழியுடன் இணைத்துக் கூறும்  பாடல்.

பதவுரை

கேட்டவற்றியில் மிக்க நன்மை தரக்கூடியதான திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் நீள்நெறி என்னும் திருக்கோயிலிலே எழுந்தருளிய சிவபெருமானே! சொல்லக் கேள்வி எனும் வகையில் வரும் அருள் நிறைந்தாக இருக்கும் ஆகம நூல்களைக் கற்று அறிய மாட்டாதவர்களாகவும், ஆத்ம விசாரம் எனும் சுய கேள்விகளை கேட்டு மெய்ப் பொருளை அறிய மாட்டாதவர்களாகவும், உலகியலில் ஏற்படும் இன்ப துன்பத்திற்கு காரணமான இருவினையின் வினைப் பயன்களையும் அறிய மாட்டாதவர்களாகவும், தன்னை குரு உபதேசம் செய்யத் தக்கவர்கள் என்று எண்ணி, அண்டியவர்களின் தேவைகளின் பொருட்டு உபதேசம் செய்யாமல் எதிர்ப்படும் அனைவருக்கும் உபதேசம் செய்வார்கள்; இவர்கள் அருளக்கூடிய மார்கம் எவ்வாறு எனில் குருடர் ஒருவர்க்கு மற்றொரு குருடர் கோல் கொடுத்து வழிகாட்டி வருவது போன்றதே.

விளக்கஉரை

  • ஞானி மெய் ஞானம் பெறுவதன் பொருட்டு அஞ்ஞானிக்கு அருள் உபதேசம் புரியலாம். ஆனால் அஞ்ஞானி, இன்னொரு அஞ்ஞானிக்கு உபதேசம் புரிந்தால், இருவருமே நரகம் புகுந்து, பிறவிக் குழியிலும் விழுவர்.
  • குருடனுக்குக் குருடன் கோல் கொடுத்தல் எனும் பழமொழியை விளக்கும் பாடல்

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 20-Dec-2020


பாடல்

முற்றுமே அவனொழிந்து முன்பின் ஒன்றும் காண்கிலேன்
பற்றில்லாத ஒன்று தன்னை பற்றி நிற்க வல்லது
கற்றதாலே ஈசர் பாதங் காணலா யிருக்குமோ
பெற்ற பேரை அன்புடன் பிரியமாகக் கேளுமே

அருளிய சித்தர் : சிவவாக்கியர்

பதவுரை

அனைத்திலும் அவனே வியாபித்து இருப்பதால் அனைத்திலும்  அவனைத் தவிர முன்னும் பின்னும் வேறு ஒன்றையும் காண்கிலேன்; எதையும் பற்றி நில்லாமலும் அநாதியாகவும் இருக்கக்கூடிய பரம்பொருளாகி நம்மை பற்றி நிற்கும் வல்லமை உடையவனாகிய அவனை அடைவது பற்றி கற்ற பின்னும் அவனுடைய திருவடிகளைக் காணாமல் இருக்கலாமோ? அவனையே முழுமையாக நினைந்து அவனுடைய திருவடிகளை அடைந்த குருவிற்கு அன்பும் பக்தியும் கொண்டு அவரிடத்தில் கேட்டால் குரு அதுபற்றி உணர்த்துவார்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 19-Dec-2020


பாடல்

நல்ல வழிதனை நாடுஎந்த

நாளும் பரமனை நத்தியே தேடு

வல்லவர் கூட்டத்திற் கூடுஅந்த

வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு

அருளிய சித்தர் : கடுவெளிச் சித்தர்

பதவுரை

உடலில் வாழ்வியல் முறைக்கு தர்மத்தில் விதிக்கப்பட்டவாறு நல்லவழிகளை நாடி இருப்பாயாக; எக்காலத்திலும் பரமனை விருப்பத்துடன் நாடி இருப்பாயாக; நல்ல செயல்களை நிகழ்த்தவல்ல மெய்ஞானம் பெற்ற வல்லவர் கூட்டத்தில் சேர்ந்து இருப்பாயாக; கேட்பனவற்றை எல்லாம் அருள வல்லவனாக வள்ளலை அருளியதன் பொருட்டு நெஞ்சத்தில் வைத்துக் கொண்டாடுவாயாக.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 18-Dec-2020


பாடல்

மூலா தாரமுண்டு கிளியே
   முக்கோண வட்டமுண்டு
வாலை கணேசனுண்டு
   வல்லபை சத்தியுண்டு கிளியே

அருளிய சித்தர் : ஆதிநாதர் என்ற வேதாந்தச் சித்தர்

பதவுரை

உடலில் இருக்கும் ஆதார சக்ரங்களில் ஒன்றானது மூலாதாரம்; அதில் முக்கோண வட்டம் உடையதாக இருக்கும்; தூய வடிவமாக இருக்கக்கூடிய கணேசனுக்கு அது ஆதார இடமாகும்; அங்கு வல்லபை எனும் சக்தியுடன் அவர் அங்கு இருக்கிறார்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – மார்கழி- 2 (2020)


பாடல்

மின்னே ரனைய பூங்கழல்க
   ளடைந்தார் கடந்தார் வியனுலகம்
பொன்னே ரனைய மலர்கொண்டு
   போற்றா நின்றார் அமரரெல்லாம்
கன்னே ரனைய மனக்கடையாய்க்
   கழிப்புண் டவலக் கடல்வீழ்ந்த
என்னே ரனையேன் இனியுன்னைக்
   கூடும் வண்ணம் இயம்பாயே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்து – உன்னைப் பற்றி எண்ணாமல் கல்மனம் உடையவனாகி துன்பக்கடலில் உழல்வோனாகிய தன்னைக் காப்பாற்ற வேண்டும் என ஈசனிடம் விண்ணபிக்கும் பாடல்.

பதவுரை

இறைவனே! மின்னலின் அழகை ஒத்த உன்னுடைய திருவடியை அடைந்தவர்கள் இந்த அகன்ற உலகைக் கடந்தார்கள்; தேவர்கள் எல்லாம் பொன் போன்ற நிறத்தினை உடைய மலர்களால் போற்றுதலுக்கு உரிய வகையில் அருச்சனை செய்து வணங்கி நின்றார்கள்; கல்லை ஒத்த மனத்தை உடையவனாய்க் உன்னுடைய திருவருள் கூடாமல் உன்னால் கழிக்கப்பட்டுத் துன்பக் கடலில் வீழ்ந்த யான், இனி உன்னை எவ்வாறு அடைய முடியும் எனும் வகையைச் சொல்வாயாக.

விளக்கஉரை

  • மின் ஏர் அனைய – மின்னலினது அழகை ஒத்த
  • பொன் ஏர் அனைய மலர் – பொன்னின் அழகையொத்த பூக்கள்; இவை கற்பகத் தரு போன்றவை
  • அடியார்கள் அடைந்த பெரும்பேற்றினை. `கடையேனாய்` என உயர்திணையாக
  • உரையாமல் சிறுமை கொண்டிருப்பதை வைத்து ‘கடையாய்’  என அஃறிணையாக உரைத்தார்,
  • என்நேர் அனையேன் – இழிவினால் எனக்கு ஒப்பார் பிறரின்றி, என்னையே ஒத்த யான்

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 17-Dec-2020


பாடல்

அன்னம் இட்ட பேரெலாம் அநேக கோடி வாழவே
சொன்னம் இட்ட பேரெலாம் துரைத்தனங்கள் பண்ணலாம்
விண்ணம் இட்ட பேரெலாம் வீழ்வார் வெந் நரகிலே
கன்னம் இட்ட பேரெலாம் கடந்து நின்ற திண்ணமே!

அருளிய சித்தர் : சிவவாக்கியர்

பதவுரை

பசித்து வந்தவர்களுக்கு அன்னதானம் செய்தவர்கள் காலம் கடந்து வாழ்வதை அறியாமல், அன்னதானம் செய்வதற்கு பொன், பொருள் ஈந்தவர்கள் பொருள் ஈதல்பற்றி கர்வம் கொண்டு அதிகாரம் செய்யலாம்; ஐம்புலக் கள்வர்களை விலக்காமல் அவைகளைக் கடந்து நின்ற பரம்பொருளை அறியாதவர்கள் இறைவன் அனைத்து உயிர்களிலும் கலந்து இருப்பதை அறியாமல் அன்னதானம் செய்வதை குறித்து எதிர்மறை கருத்துக்கள் பேசி, குற்றம் என்று கூறி துன்பம் தரத்தக்க பாழும் நரகக் குழியில் வீழ்ந்து துயறுருவார்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 16-Dec-2020


பாடல்

பொல்லாக் கொலையும் புலைஅவா விட்டு உன்றன்
   வல்லபதம் காண மயங்கித் திரிகிறண்டி
துன்பமெல்லாம் போக்கிச் சுகானந்த மானநின்தாள்
   இன்பம் அனுபவிக்க ஏங்கித் தவிக்கிறண்டி

அருளிய சித்தர் : சத்திய நாதர் என்ற ஞானச் சித்தர்

பதவுரை

மனோண்மணித் தாயே! உடலுக்கு கேட்டினை ஏற்படுத்துவதான கொலையினையும், உயிர்க் கொலையினை குறிப்பிடுவதுமான புலால் உண்ணும் விருப்பத்தினையும் விட்டு வலிமை உடையாதன உன்னுடைய பதத்தினைக் காண மயக்கம் கொண்டு திரிகின்றேனடி; வினைபற்றி ஏற்படுவதான துன்பம் நீங்குமாறு அதனை போக்கி, சுகானந்தத்தினை தருவதான உன்னுடைய திருத்தாள் பற்றி பேரின்பம் அனுபவிக்க ஏங்கித் தவிக்கின்றேன்.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 15-Dec-2020


பாடல்

செகம்ப டைத்ததும் அஞ்செழுத்தாம் பின்னும்
   சீவன் படைத்ததும் அஞ்செழுத்தாம்
உகமு டிந்தது மஞ்செழுத் தாம்பின்னும்
   உற்பன மானது மஞ்செழுத்தாம்

அருளிய சித்தர் : கொங்கணர்

பதவுரை

ஐந்தெழுத்தால் இந்த உலகம் படைக்கப்படது; அந்த ஐந்தெழுத்தில் இருந்தே சீவன்கள் படைக்கப்பட்டது; ஐந்தெழுத்து கொண்டே இந்த நாள் எனப்படுவதும் உகம் முடிவுக்கு வரும்; ஐந்தெழுத்து கொண்டே நாளின் தோற்றம் உறுதி செய்யப்படும்.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 12-Dec-2020


பாடல்

சூரியன் வாள்பட்ட துய்ய பனிகெடுந்
   தோற்றம்போல் வெவ்வினை தூள்படவே
நாரியிடப்பாகன் தான்நெஞ்சிற்போற்றியே
   நற்கதி சேர்ந்திடும் கோனாரே

அருளிய சித்தர் : இடைக்காடர்

பதவுரை

வாள் போன்று ஒளிவிடக்கூடியதான் சூரியன் பட்ட உடன் பனித்துளியின் தோற்றம் கெடும் அதுபோல பார்வதி தேவியினை இடப்பாகத்தில் கொண்டவனை நெஞ்சினில் வைத்து போற்றும் போது கொடிய வினைகள் தூள்பட அழிந்து நற்கதி சேர்ந்திடும்

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 05-Dec-2020


பாடல்

நன்னாரிற்பூட்டிய சூத்திரப்பாவைநன் னார்தப்பினால்

தன்னாலுமாடிச் சலித்திடுமோஅந்தத் தன்மையைப்போல்

உன்னா லியானுந் திரிவதல்லான் மற்றுனைப்பிரிந்தால்

என்னா லிங்காவதுண்டோ இறைவாகச்சி யேகம்பனே

 

அருளிய சித்தர் : பட்டினத்தார்

பதவுரை

இறைவனாகிய கச்சி ஏகம்பரனே! நல்ல கயிற்றினால் கட்டிய பொம்மை அந்த கயிற்றியில் இருந்து விடுபட்டால் அது தன்னால் ஆட இயலுமோ? அதுபோலவோ உன்னால் நான் இங்கு இயக்கப்படுகிறேன் என்பது தாண்டி உன்னைப் பிரிந்தால் என்னால் இங்கு ஏதாவது செய்யப்படுவதற்கு ஏதாவது உண்டோ?

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 03-Dec-2020


பாடல்

ஒன்றைப் பிடித்தோர்க்கே பசுவே
     உண்மை வசப்படுமே
நின்ற நிலைதனிலே பசுவே
     நேர்மை யறிவாயே

அருளிய சித்தர் : இடைக்காடர்

பதவுரை

பசு எனப்படும் மனமே, எக்காலத்திலும் நிலையானதும், அழியாதும் ஆன ஒன்றைப் பிடித்தவர்களுக்கே பதி பற்றிய உண்மை வசப்படும். (சுவாசமே அனைத்தையும் தீர்மானிக்கிறது என்பதால் சுவாசம் கைவரப் பெற்றவர்களுக்கே உண்மை கைவல்யமாகும் என்றும் பொருள் உரைப்பர்)*. ஞானமானது கைவரப் பெற்ற நிலைதனில் இதன் உண்மைப் பொருளினை அறிவாயாக.

* ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 02-Dec-2020


பாடல்

பருத்திநூல் முறுக்கியிட்டுப் பஞ்சியோது மாந்தரே
துருத்திநூல் முறுக்கியிட்டு துன்பநீங்க வல்லீரேல்
கருத்திநூல் கலைப்படுங் காலநூல் கழிந்திடும்
திருத்திநூல் கவலறும் சிவாயவஞ் செழுத்துமே

அருளிய சித்தர் : சிவவாக்கியர்

பதவுரை

மாந்தர்களே! பருத்தியை முறுக்கி திரிக்க பஞ்சு நூல் மாறி நூல்திரியாக வரும்; அதன் பின் பஞ்சு இருக்காது; அதுபோல,காற்று தங்கும் இடமான இந்த தோல்பை போன்ற உடலில் சூரிய கலை, சந்திரகலை ஆகியவற்றை கருத்தில் வைத்து முருக்கி மேலேற்றி அக்கினி கலையுடன் கலக்கச் செய்து சிவாய எனும் ஐந்தெழுத்தினை ஓதும் போது தொந்த வினைகளை நீக்கி  காலத்தினை கடந்துவிடலாம்.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 01-Dec-2020


பாடல்

மாடும் மனைகளும் மக்களும் சுற்றமும் வான்பொருளும்
வீடும் மணிகளும் வெண்பொன்னும் செம்பொன்னும் வெண்கலமும்
காடுங் கரைகளுங் கல்லாம் பணியும் கரிபரியும்,
தேடும் பலபண்டம் நில்லா சிவகதி சேர்மின்களே

அருளிய சித்தர் : இடைக்காட்டுச் சித்தர்

பதவுரை

செல்வத்தினை தருவதும் செல்வம் என்று அழைக்கபடுவதுமான மாடும், வசிக்கத் தகுந்த இடமான மனைகளும், தனக்கு உறவான தம்மக்களும், தன்னைச் சார்ந்த சுற்றமும், வானளவாக இருக்கக்கூடியதான் பொருளும், வீடும், மணிகளும், வெண் பொன் என்பதான வெள்ளியும், செம்மையான பொன் என்பதான் தங்கமும், வெண்கலமும், உணவு தரத்தக்கதான் வயல்வெளிகளும், அதனை சூழ்ந்த நிலப்பரப்பும் கொண்டிருத்தலால் ஐராவதம் போன்ற யானையால் வணங்கப்படும் இந்திரப் பதவி ஒத்ததான நிலையும், தேடும் பலவகையானப் பொருள்களும் நில்லாமல் செல்வதால் அவைகளை விலக்கி சிவகதியினை அடையுங்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – கார்த்திகை- 15 (2020)


பாடல்

காயம் அறுங்கால் கருதியமெய் யாவிவிட்டுப்
போயோர் தனுவிற் புகுகையால் – ஆயகலைய்
தந்திரமா யோசித்துத் தானியத்தால் ஆகுதியை
மந்திரத்தாற் செய்வன் மகிழ்ந்து

சிவாச்சிரமத் தெளிவு – அம்பலவாண தேசிகர் 

கருத்துஉடலில் மந்திரத்தால் ஆகுதி செய்தல் பற்றிய  பாடல்.

பதவுரை

உடலானது அறுபட்டு போகும் காலத்தில், மெய் என்று கருதிய உடலை விட்டு ஆவி பிரிந்து போய்  வேறொரு உடலில் புகும்; ஆகையால் கற்ற அனைத்து கலைகளிலும் இருக்கும் சிறப்புகளை யோசித்து தீர்மானமாக தானியம் கொண்டு ஆகுதியை வளர்ப்பது போல் குருவால் உபதேசிக்கப்பட்ட மந்திரத்தால் இந்த உடலில் ஆகுதி செய்து மகிழ்ந்து இருக்க வேண்டும்.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 30-Nov-2020


பாடல்

பாரப்பா வுலகுதனிற் பிறவி கோடி
   படைப்புகளோ பலவிதமாய்க் கோடா கோடி;
வீரப்பா அண்டத்திற் பிறவி கோடி
   வெளியிலே யாடுதப்பா வுற்றுப் பாரு;
ஆரப்பா அணுவெளியி லுள்ள நீதான்
   ஆச்சரியம் புழுக்கூடு வலைமோ தப்பா
கூரப்பா அண்டத்திற் பிண்ட மாகும்
   குணவியவா னானக்காற் சத்திய மாமே

அருளிய சித்தர் : அகத்தியர்

பதவுரை

இந்த உலகத்தில் பிறவிகள் கோடி ஆகும்(எண்ணிக்கை அற்றவை என்பதைக் குறிக்கும், 84 லட்சம் என்பது சைவ சித்தாந்த வரையறை); அந்த பிறவி சாந்து வரும் படைப்புகளோ கோடி கோடியாக நீட்சி கொள்ளும் ((எண்ணிக்கை அற்றவை என்பதைக் குறிக்கும்); புழுவானது அதன் கூட்டில் இருந்து தப்பாதவாறு வலைப்பின்னல்கள் இருப்பதைப் போன்று இந்த அண்டத்திலும் பிறவிகள் கோடி ஒத்து இருக்கின்றன; அதில் எண்ணற்ற வகையான மாற்றங்கள் தினந்தோறும் நடைபெற்று கொண்டு இருக்கிறன; இதை புறக் கண்களால் கொண்டு அதை உற்று கவனிப்பாயாக; அவ்வாறு கவனிக்கும் போது இந்த அண்டத்தில் இருப்பது பிண்டம் எனப்படும் உடலில் இருக்கின்றது என்பது புலப்படும்; அதனை குருவின் அருளினால் சத்தியமாக உணர வேண்டும்.

Loading

சமூக ஊடகங்கள்