
பாடல்
மாடும் மனைகளும் மக்களும் சுற்றமும் வான்பொருளும்
வீடும் மணிகளும் வெண்பொன்னும் செம்பொன்னும் வெண்கலமும்
காடுங் கரைகளுங் கல்லாம் பணியும் கரிபரியும்,
தேடும் பலபண்டம் நில்லா சிவகதி சேர்மின்களே
அருளிய சித்தர் : இடைக்காட்டுச் சித்தர்
பதவுரை
செல்வத்தினை தருவதும் செல்வம் என்று அழைக்கபடுவதுமான மாடும், வசிக்கத் தகுந்த இடமான மனைகளும், தனக்கு உறவான தம்மக்களும், தன்னைச் சார்ந்த சுற்றமும், வானளவாக இருக்கக்கூடியதான் பொருளும், வீடும், மணிகளும், வெண் பொன் என்பதான வெள்ளியும், செம்மையான பொன் என்பதான் தங்கமும், வெண்கலமும், உணவு தரத்தக்கதான் வயல்வெளிகளும், அதனை சூழ்ந்த நிலப்பரப்பும் கொண்டிருத்தலால் ஐராவதம் போன்ற யானையால் வணங்கப்படும் இந்திரப் பதவி ஒத்ததான நிலையும், தேடும் பலவகையானப் பொருள்களும் நில்லாமல் செல்வதால் அவைகளை விலக்கி சிவகதியினை அடையுங்கள்.