அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – அகனம்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – அகனம்

வார்த்தை :  அகனம்

பொருள்

  • வேங்கைமரம்
  • எடையற்று

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

 

பாடல்

வன குளிகை கொண்டு – அதனாலே
   ககன மார்க்கம் தனிலே அகனமாய் சென்று
தவமொருமா சித்தர்கள் வாழ்கின்ற
   சதுர கிரிக்குப் போய் குதூகளித்தேன்.

 

மச்சேந்திர நாதர் எனும் நொண்டிச் சித்தர்

 

கருத்து உரை

காடுகளில் இருக்கும் குளிகைகளைக் உட்கொண்டு அதனால் வான் மார்க்கமாக தனியாக எடையற்று சென்று, நித்தமும் தவம் உடைய சித்தர்கள் வாழும் சதுரகிரிக்குச் சென்று மகிழ்ந்து இருந்தேன்.

 

விளக்கம்

  • உதிரவேங்கை, உரோமவேங்கை போன்ற வேங்கை வகைகள் காலங்கிமுனிவர் வனத்தில் இருக்கிறது அதை குத்தி அதில் இருந்து பெறப்படும் பாலை எடுத்து முறைப்படி தங்கமாக்கி உட்கொள்ள காயசித்தி உண்டாகும்.
  • நொண்டிச் சித்தர் சக்தி உபாசகர். இவரின் உண்மைப் பெயர் /ஊர் / காலம் தெரியவில்லை.
  • கால் ஊனம் உற்றவர் என்பதால் காரணப் பெயராகவே நொண்டிச்  சித்தர் என்று அழைத்தார்கள் என்று குறிப்பிடப்படுகிறார். மனிதர்கள்  வினைக்கு உட்பட்டு ஆணவம், மாயை மற்றும் கண்மம் போன்றவற்றினால் சூழப்பட்டு தன் இயல்பில் குறைவுற்று இருப்பதாலும் அவர்களுக்கு வழிகாட்டுதல் பொருட்டு பாடல் எழுதியதால் நொண்டிச் சித்தர் என்றும் இருக்கலாம்.

 

துக்கடா

ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’. அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.

ய – தமிழ் எழுத்து எண்பதின் வடிவம்
யா – ஒரு வகை மரம், இல்லை, ‘யாவை’ என்ற பொருள்படும் கேள்விப்பெயர்
வ – நாலில் ஒரு பங்கு “கால்” என்பதன் தமிழ் வடிவம்
வா – வருக, ஏவல், ‘வா’ என்று அழைத்தல்.
வி – அறிவு, நிச்சயம், ஆகாயம், விசை.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – உள்ளுதல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  உள்ளுதல்

வார்த்தை :  உள்ளுதல்

பொருள்

  • நினைதல்
  • ஆராய்தல்
  • நன்கு மதித்தல்
  • மீண்டும் நினைத்தல்
  • இடைவிடாது நினைத்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

உரிதாம் பரம்பொருளை உள்ளு – மாயம்
உற்ற பிரபஞ்ச மயக்கத்தைத் தள்ளு
அரிதான சிவநாமம் விள்ளு – சிவன்
அடியார்கள் பணிவிடை அன்பாகக் கொள்ளு.

கஞ்சமலைச் சித்தர்

கருத்து உரை

ஆராதிக்கப்படும் பரம்பொருளை நினைத்து இடைவிடாது நினை. மாயையால் சூழப்பட்ட பிரபஞ்ச மயக்கத்தினை தள்ளு. அரிதான மாறுபாடு இல்லா சிவன் நாமத்தை சொல்லு; சிவன் அடியவர்களுக்கு அன்பாக பணிவிடை செய்வாயாக.

 

விளக்கம்

உரிதாம் – ஆராதிக்க உரிய

பஞ்சாட்ரம், சூட்சம பஞ்சாட்ரம் போன்றவை மாயையால் சூழப்பட்ட பிரபஞ்சத்தால் எல்லோருக்கும் வாய்ப்பதிலை.  அது குரு முகமாய் வாய்க்கப் பெறின் நன்று.

 

துக்கடா

ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’ . அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.

மீ – மேலே , உயர்ச்சி, உச்சி, மிகுதியானது.
மூ – மூப்பு, முதுமை, மூன்று.
மே – மேன்மை,மேல்
மை – கண்மை (கருமை), அஞ்சனம், இருள், மசி
மோ – மோதல், முகரதல் ,மொள்ளுதல்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பற்று

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  பற்று

வார்த்தை: பற்று

பொருள்

  • விருப்பம்
  • விரும்பு
  • கைப்பற்று
  • வருவாய்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பற்றை யறுப்பதோர் பற்றினைப் பற்றில்அப்
பற்றை யறுப்பரென் றுந்தீபற
பாவிக்கில் வாராதென் றுந்தீபற.

திருநெறி 5 – திருவுந்தியார்

கருத்து உரை

புற விஷயங்களிலே இருக்கிற பற்றை அறுப்பதாகிய ஒப்பற்ற திருவருளை பற்றினால் அந்தத் திருவருளாகிய கர்த்தா பற்றைக் அறுத்துத் தானாக்கிவிடுவன்; இந்தத் தன்மை உடைய  பாவனையால் பற்று வாராது.

 

விளக்கம்

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

எனும் திருக்குறள் யாண்டும் சிந்திக்கத் தக்கது.

 

துக்கடா

ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’ . அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.

பே – நுரை, அழகு, அச்சம்
பை – கைப்பை, பசுமை.
போ – செல், ஏவல்
ம – சந்திரன், எமன்
மா – பெரிய, சிறந்த, உயர்ந்த, மரம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – தகை

தமிழ் அன்னை

 

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  தகை

 

வார்த்தை : தகை

பொருள்

  • அழகு
  • அன்பு
  • அருள்
  • கவசம்
  • குணம்
  • தடை
  • தகுதி
  • பொருத்தம்
  • ஒப்பு
  • மேம்பாடு
  • பெருமை
  • நன்மை
  • இயல்பு
  • நிகழ்ச்சி
  • கட்டுகை
  • மாலை
  • தளர்ச்சி
  • தாகம்
  • மூச்சிழைப்பு.

 

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்
தானம் கொடுப்பான் தகை ஆண்மை முன் இனிதே;
மானம் பட வரின் வாழாமை முன் இனிதே;
ஊனம் கொண்டாடார், உறுதி உடையவை
கோள் முறையால் கோடல் இனிது.

 

இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்

 

கருத்து உரை

எதிரில் இருப்பவர்களின் துன்ப நிலை அறிந்து அவர்களுக்கு தானம் அளிப்பவர்களின் பெருமை மிக இனிது. மானம் இழந்தப்பின்  உயிர் வாழாமை இனிது. பிறருடைய குறை/குற்றம் கண்டும் அவரின் குற்றம் கூறாதவரின் உறுதி இனிது. நன்மையானவற்றை முறைப்படிப் பெறுதல் இனிது.

 

விளக்கம்

ஆண்மை – பெருமை

 

துக்கடா

ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’ . அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.

ப – நூறு
பா – பாட்டு, கவிதை, பாடல்.
பி – அழகு.
பீ – கழிவு.
பூ – மலர்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – தூடணம்

தமிழ் அன்னை

 

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  தூடணம்

வார்த்தை : தூடணம்

பொருள்

  • நிந்தை
  • நிந்தைச்சொல்
  • கண்டனம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

தூட‌ண மாகச்சொல் லாதே – தேடுஞ்
சொத்தக்க ளிலொரு தூசும்நில் லாதே
ஏடணை மூன்றும் பொல்லாதே – சிவத்
திச்சைவை த்தாலெம லோகம் பொல்லாதே.

கடுவெளிச்சித்தர்

கருத்து உரை

எதையும் / யாரையும் / எப்பொழுதும் பழித்துச் சொல்லாதே. தேடும் தனத்தில் ஒரு தூசு கூட நில்லாது போய்விடும். மூன்றுவிதமான ஏடணைகள் எனப்படும் ஆசைகளாகிய மண்ணாசை, பொன்னாசை, பொருளாசை பொல்லாதவையாகும். சிவத்தின்மேல் ஆர்வம் கொண்டால் எமலோகம் போகாதிருக்கலாம்.

 

விளக்கம்

தூசு – மிகக் குறைந்த அளவு
ஏடணை – ஆசை

 

துக்கடா

ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’. அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.

நை – நைதல்.,வருந்து
நொ – மென்மை.
நோ – துன்ப்பபடுதல், நோவு, வருத்தம்
நோ – வலி.
நௌ – மரக்கலம், கப்பல்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – உதித்தல்

தமிழ் அன்னை

 

ஒவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  உதித்தல்

 

வார்த்தை :  உதித்தல்

பொருள்

  • உதயமாதல்.
  • தோன்றுதல்
  • பிறத்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.

சித்தனாய் பிறப்பதுதான் ஆரேன்றாக்கால்
செகத்தில் கோடியில் ஒருவனுண்டு
உத்ததொரு விட்டகுறை என்பதென்ன
உதித்தகலை எந்நேரம் ஊணிப்பாரு
பெற்றபேர் எப்படித்தான் வந்ததானால்
பிராணன் அல்லோ பூரணத்திற் சேர்ந்தாலே
முத்தனாய் எடுத்த சடம் சித்தியாகும்
முன்னுமில்லை பின்னுமில்லை முறையைப்பாரே;

 

அகத்தியர் பூரண சூத்திரம்

 

கருத்து உரை

இந்த உலகில் கோடியில் ஒருவரே சித்தராக பிறக்கிறார்கள். இது அவர்களின் பூர்வ ஜென்மங்களில் விட்ட குறையாகும். அவர்களுக்கு இந்த பெயர் எப்படி தோன்றியது என்று ஆராய வேண்டும்.  அஃதாவது அவர்களது பிராணனை பூரணத்தில் சேர்த்ததால் முக்தனாக ஆவதற்காக எடுத்த உடல் சித்தி ஆகி இருக்கும். (உடலுக்கும் இறப்பில்லை – காயசித்தி). இதன் பிறகு அவர்களுக்கும் முன்னும் பின்னும் பிறவி என்பது இல்லை.

விளக்கம்

காரண தேகம் பற்றியே சித்தர்களின் பிறப்பு அவர்கள் பிறக்கும் முன்னரே தீர்மானிக்கப்படுகிறது.

 

துக்கடா

ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’ . அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.

நா – நான், நாக்கு
நி – இன்பம், அதிகம், விருப்பம்
நீ – முன்னிலை ஒருமைப் பெயர், நீக்குதல்
நூ – யானை, ஆபரணம், அணி, எள்.
நே – அன்பு, அருள், நேயம்

 

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – ஒல்லுதல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  ஒல்லுதல்

வார்த்தை:  ஒல்லுதல்

பொருள்

  • பொருந்துதல்
  • இயலுதல்
  • உடன்படுதல்
  • தகுதல்
  • ஆற்றுதல்
  • ஓலைப்பெட்டிபொத்துதல்
  • ஒலித்தல்
  • விரைதல்
  • கூடுதல்
  • பொறுத்தல்
  • நிகழ்தல்.

 

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.

வெல்வது வேண்டி வெகுளாதான் நோன்பு இனிதே;
ஒல்லும் துணையும் ஒன்று உய்ப்பான் பொறை இனிதே;
இல்லது காமுற்று, இரங்கி இடர்ப்படார்
செய்வது செய்தல் இனிது.

இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்

கருத்து உரை:

தன்னை வெற்றி அடைதலின் பொருட்டு விரும்பி கோபம் இல்லாமல் இருப்பவனின் தவம் இனியது. எடுத்துக் கொண்ட வேலையை முடிக்கும் ஆற்றல் உடையவனின் பொறுமை மிக இனிது. தம்மிடம் இல்லாத பொருளை நினைத்து துன்பப்படாமல் இருப்பது இனிது.

 

துக்கடா

ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’ . அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.

து – உண்
தூ – வெண்மை, தூய்மை
தே – கடவுள்
தை – தையல் எனப்படும் பெண், ‘தை’ என்று ஏவுதல்.தமிழ்மாதம், தைத்தல், பொருத்து
ந – சிறப்பு.

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருக்கோவிலூர்

274

தல வரலாறு(சுருக்கம்) /  சிறப்புகள் – திருக்கோவிலூர்

 

  • அட்ட வீரட்டத் தலங்களில் இரண்டாவது தலம். சிவனார் அந்தகாசூரனை சம்ஹாரம் செய்த வீரச்செயல் புரிந்த தலம்.
  • அந்தாகசூரன் எனும் அசுரனை அழிக்க ஈசனால் 64 பைரவர்கள் மற்றும் 64 பைரவிகள் தோற்றுவிக்கப்பட்ட தலம்
  • முருகர் தெய்வீகன் என்ற இளவரசனாக பச்சைக்குதிரையோடு குகமுனிவரின் யாகத்தீயில் தோன்றி காரண்டன் வல்லூரன் என்ற இரு அசுரர்களை சம்ஹரித்து மக்களின் துயர்போக்கி பாரியின் மகள்களான அங்கவை , சங்கவையை மணந்த தலம்
  • முருகர் அசுரனைக் கொன்ற பாவம் தீர சிவனாரை வழிபட்ட தலம்
  • சுக்கிரன் சாப விமோசனம் பெற்ற தலம்
  • வாஸ்து சாந்தி என்ற ஐதீகம் தோன்றிய தலம்
  • அம்பாள் திரிபுர பைரவி அவதாரத்தலம்
  • சப்தமாதர்கள் அவதாரத்தலம்
  • ஔவையார் விநாயகர் அகவல் பாடியருளிய தலம்
  • ஔவையாரை சுந்தரருக்கு முன்பு கயிலாயத்தில் சேர்ப்பித்த கணபதியான பெரியானைக்கணபதிக்கு உள்பிரகாரத்தில் சந்நிதி
  • பைரவர் வாகனம் இல்லாமல் திருக்காட்சி
  • கோயிலுக்கு அருகின் ஸ்ரீமத் ஞானியார் சுவாமி மடலாயம்
  • அருகினில் குகை நமச்சிவாயர் சமாதி, சுவாமி ஞானானந்தகிரி சுவாமிகளின் தபோவனம், ஸ்ரீ ரகோத்தமசுவாமி பிருந்தாவனம்
  • மெய்ப்பொருள் நாயனார் அரசாண்ட தலம். (ஆலய நுழைவுவாயில் உட்புற மண்டபத்தூணில் மெய்ப்பொருள்நாயனார் சிற்பம்)
  • கபிலர் பாரிவள்ளலின் மகள்களை திருமுடிக்காரிக்குத் திருமணம் செய்வித்து , பின் வடக்கிருந்து உயிர்நீத்த தலம். ஆற்றின் நடுவில் கபிலர் குகை.
  • ராஜராஜ சோழன் பிறந்த தலம்.
  • குந்தவை நாச்சியார் திருப்பணிகள் செய்துள்ள தலம்.
  • பாடல் பெற்ற தலமான அறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்) இங்கிருந்து சுமார் 3 கி.மி. தொலைவு.

 

தலம் திருக்கோவிலூர்
பிற பெயர்கள் அந்தகபுரம், மலையமான் நாடு , கீழையூர், கோவலூர் வீரட்டம், திருக்கோவலூர்
இறைவன் வீரட்டேஸ்வரர், அந்தகாந்தர்
இறைவி சிவானந்தவல்லி, பெரியநாயகி , பிருஹன்நாயகி
தல விருட்சம் வில்வமரம் , சரக்கொன்றை
தீர்த்தம் தென்பெண்ணையாறு, தட்சிண பிணாகினி மற்றும் ருத்ர , கபில , கண்ணுவ , ராம , பரசுராம , யம , பிதிர் , சப்தஇருடியர் , சூரிய , அக்னி  தீர்த்தங்கள்
விழாக்கள் சித்திரையில் வசந்தோற்சவம், ஆனித்திருமஞ்சனம்,ஆடி வெள்ளிக்கிழமைகள், ஐப்பசி அன்னாபிஷேகம் , கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்,சஷ்டியில் லட்சார்ச்சனை, ஆருத்ரா தரிசனம், மார்கழியில் மாணிக்கவாசகர் திருவிழா, நவராத்திரி, மகாசிவராத்திரி, சூரசம்ஹாரம்
மாவட்டம் விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரைஅருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோவில்
கீழையூர், திருக்கோவிலூர் அஞ்சல்
திருக்கோயிலூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம், PIN – 60575704153-253532 , +91-93448-79787 , +91-94862-80030 , +91-98426-23020 , +91-98423-10031 , +91-93456-60711
வழிபட்டவர்கள் விநாயகர், முருகர், ராமர், பரசுராமர், கிருஷ்ணன், காளி, ஏகாதச ருத்ரர், இந்திரன், யமன், காமதேனு, சூரியன், குரு, கண்வர், ரோமசமுனிவர், கபிலர், மிருகண்டு முனிவர், பதஞ்சலி, வியாக்ரபாதர், காமன், குபேரன், வாணாசூரன், சப்தரிஷிகள், ஆதிசேஷன்
பாடியவர்கள் திருஞானசம்பந்தர் 1 பதிகம், திருநாவுக்கரசர் 1 பதிகம் சுந்தரர் 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம் திருவண்ணாமலையில் இருந்து சுமார் 37 கிமீ, விழுப்புரத்தில் இருந்து சுமார் 37 கிமீ
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 201 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 11 வது தலம்.

அருள்மிகு பெரியநாயகி  உடனாகிய வீரட்டேஸ்வரர்

                                    வீரட்டேஸ்வரர்         பெரியநாயகி

புகைப்படங்கள் : தினமலர்

 

பாடியவர்             திருஞானசம்பந்தர்
திருமுறை          1
பதிக எண்            46
திருமுறை எண்  8

 

பாடல்

கல்லார் வரையரக்கன் றடந்தோள் கவின்வாட
ஒல்லை யடர்த்தவனுக் கருள்செய் ததிகையுள்
பல்லார் பகுவாய நகுவெண் டலைசூடி
வில்லா லெயிலெய்தா னாடும்வீரட் டானத்தே.

பொருள்

கயிலை மலையை பெயர்த்து எடுத்த இராவணனின் பெரிய தோள்களின் அழகு வாடுமாறும் அவனை வருந்துமாறும் செய்து பின் அவனுக்கு அருள் பல செய்தும், முப்புரங்களை வில்லால் எய்து அழித்தும், தனது பெருவீரத்தைப் புலப்படுத்திய பற்கள் பொருந்திய பிளந்தவாயை உடைய வெள்ளிய தலைமாலையைச் சூடிய இறைவன் இத்திருவதிகை வீரட்டானத்தே ஆடுவான்.

கருத்து

கல்லார் வரை – கயிலையை
கவின் – அழகு
ஒல்லை – விரைவாக
காலந் தாழ்க்க அடர்ப்பின் அவனிறந்தேபடுவான் என்னுங் கருணையால்.
பல் ஆர் பகுவாய – பற்கள் பொருந்திய பிளவுபட்ட வாயையுடைய.

 

பாடியவர்           சுந்தரர்
திருமுறை         7
பதிக எண்           17
திருமுறை எண்  10         

பாடல்

மிடுக்குண்டென் றோடியோர் வெற்பெடுத்
   தான்வலி யைநெரித்தார்
அடக்கங்கொண் டாவணங் காட்டிநல்
   வெண்ணெயூர் ஆளுங்கொண்டார்
தடுக்கஒண் ணாததோர் வேழத்
   தினையுரித் திட்டுமையை
நடுக்கங்கண் டார்க்கிடம் ஆவது
   நந்திரு நாவலூரே.

பொருள்

தனக்கு வலிமை உண்டு என்று செருக்கி கயிலை மலையைப் பெயர்த்தவனாகிய இராவணனது வலிமையை நெரித்து அவன் கர்வத்தை அழித்தவரும், மூல ஆவணத்தை மறைவாக வைத்திருந்து அதனை நடுவுநிலையாளர் உள்ள திருவெண்ணெய் நல்லூரில் மிகவும் அடக்கமாக  இருந்து அதை பிறரிடம் காட்டி என்னை அடிமையும் கொண்டவரும், தடுக்க இயலாத வலிமையுடைய யானை ஒன்றினை உரித்து உமையையும் நடுங்கச் செய்தவருமாகிய இறைவற்கு இடமாயிருப்பது நமது திருநாவலூரேயாகும்.

கருத்து

நடுக்கங் கண்டார் – அஞ்சுவித்தார்

(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

 

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – நாற்பத்துமுக்கோணம்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  நாற்பத்துமுக்கோணம்

 

வார்த்தை :  நாற்பத்துமுக்கோணம்

பொருள்

  • ஸ்ரீ சக்கரம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.

காணப்பா பூசைசெய்யும் முறையைக் கேளாய்;
கைம்முறையாய்ச் சுவடிவைத்துப் பூசை செய்வார்
பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்துப்
புகழாகப் பூசைசெய்வார் பெண்ணை வைத்தும்;
நாளப்பா சக்கரத்தைப் பூசை செய்வார்
நம்முடைய பூசையென்ன மேருப் போலே
ஓதப்பா நாற்பத்துமுக் கோணம் வைத்தே
உத்தமனே! பூசைசெய்வார் சித்தர் தானே.

 

சட்டை முனி ஞானம்

 

கருத்து உரை

பூசை செய்யும் முறைகளை உரைக்கிறேன் கேட்பாயாக. சிலர் புற வழிபாட்டு முறைகளில் ஒன்றான சுவடியை வைத்து பூசை செய்வார்கள். சிலர் மட்டும் புகழைத் தரும் தீபத்தை வைத்து பூசை செய்வார்கள். சிலர் பெண்களை தேவியாக பாவித்து பூசை செய்வார்கள். சிலர் தினமும் சக்கரங்களை வைத்தும் பூசை செய்வார்கள். நம்மைப் போன்ற சித்தர்கள் வழிபாட்டு முறை என்பது மேருவை பூசித்தல் போல நாற்பது முக்கோணம் உடைய ஸ்ரீ சக்கரத்தை பூசித்தல் ஆகும்.

 

துக்கடா

ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’. அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.

சை – அறுவறுப்பு ஒலி, கைப்பொருள்
சோ – மதில், அரண்
ஞா – பொருத்து, கட்டு
தா – கொடு, கேட்பது
தீ – நெருப்பு , தீமை

 

(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதால் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)

Loading

சமூக ஊடகங்கள்

2038 – 3 ஆட்டக்காரர் சதுரங்கம்



  • Three player chess is essentially normal chess with a third player added.
  • The board is shaped usually like a hexagon, but other shapes also exist.
  • There are three different “armies” in 3 player chess, each starting on their own side. Movements for the individual pieces are essentially the same.
  • The only difference is that the board squares aren’t actually square, so when you move a piece like a rook, it actually ends up taking a curvier path.
  • The first to checkmate is first, the first to be in checkmate is last, and the other player is second.

Source : http://interestingengineering.com/three-player-chess-just-crazy-sounds/

(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)

1.

3 பேர் விளையாடும் போது 6 பக்கம்னா 4 பேர் விளையாண்டா 8 பக்கம் வருமா?

இப்படிக்கு எல்லாவற்றையும் 2ஆல் பெருக்கி கணிதம் கற்போர் சங்கம்.

2..

மனைவி : நம்ம வூட்ல மூணு பேர் இருக்கோம். நீங்க, நான் நம்ம புள்ள. நீங்க உலக அளவுல விளையாடுற வீரரா இருக்கலாம். ஆனா நான் தான் எப்பவுமே முதல்ல ‘செக்’ வக்கணும், நீங்க தான அத வாங்கணும். அப்படி விளையாடுங்க.

3.

சார், இதுக்கு எவ்வளவு பீஸ் கட்டணும்?

நாங்க இத இலவசமாகத்தான் செய்யிரோம். இட வாடக, இத்யாதிகளுக்காக 2 பேர் ஆட்டத்துக்கு 8 தடவைக்கு ஜஸ்ட் 2000 தான் வாங்குறோம். அப்படீன்னா, 3 பேர் ஆட்டத்துக்கு எவ்வளவுன்னு நீங்களே கணக்கு பண்ணிங்க.

4.

நண்பன் 1 :என்னடா ரொம்ப நேரமா செஸ் போடையே பாத்துகிட்டு இருக்க.

நண்பன் 2 :இல்ல மச்சான். இந்த ராணி, மந்திரி, குதிரை, யானை எல்லாம் எப்படி நகரும் அப்படீன்னு யோசிச்சிகிட்டு இருக்கேன்.

நண்பன் 1 (எல்லா காயையும் கலைத்து விட்டு), இப்படித்தான். சரி வா. போய் ஒரு பெப்சி குடிக்கலாம்.

நண்பன் 2 :இதெல்லாம் குடிக்கக் கூடாது, தமிழனா இருந்தா ஷேர் பண்ணுங்கன்னு மெசேஸ் அனுப்பின.

நண்பன் 1 :மெசேஸ் அனுப்பினதோட வேல முடிஞ்சி போச்சுடா.

5.

என்னடா பரிட்சை எப்படி எழுதி இருக்க?

அட ஏண்டா, நீ வேற, 2 பேர் ஆட்டத்துக்குன்னா, மொத்தம் 5899 மூவ்ன்னு(maximum possible move) பிட்டு வச்சி இருந்தேன். அவங்க என்னடான்னா 3 பேர் ஆட்டத்துக்கு எத்தனை மூவ்ன்னு கேட்கிறான்?

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – சந்ததம்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  சந்ததம்

 

வார்த்தை :  சந்ததம்

பொருள்

  • எப்பொழுதும்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.

எந்த உயிர்க்கும் இரைதரும் ஈசனைச்
சந்ததம் வாழ்த்தடியோ குதம்பாய்
சந்ததம் வாழ்த்தடியோ.

 

குதம்பைச் சித்தர்

 

கருத்து உரை

(வினைகளுக்கு உட்பட்டு இருக்கும் அனைத்து) உயிர்களுக்கும் உணவு வழங்கும் ஈசனை எப்பொழுதும் வாழ்த்திப் பாடுவாயாக.

விளக்கம்

வினைகளுக்கு உட்பட்டே எல்லா உயிர்களுக்கும் இரை என்பது கிடைக்கும். உயிர்களின் வினைகளைகளை ஈசன் அறிந்திருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் உயிர்களுக்கு ஈசன் உணவை வழங்குவான் என்றவாறு.

 

துக்கடா

ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’ . அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.

கௌ – ‘கௌவு’ என்று ஏவுதல்.
சா – இறத்தல், சாக்காடு
சீ – லட்சுமி, இகழ்ச்சி, வெறுப்புச் சொல்
சு – விரட்டடுதல், சுகம், மங்கலம்
சே – காலை, சிவப்பு.

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 14

உமாமகேஸ்வரஸம்வாதம்

புகைப்படம் : இணையம்

உமை

சில மனிதர்கள் அரசர்களாலும், திருடர்களாலும் மற்றும் நீராலும் எல்லா பொருள்களும் அபகரிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனரே, அது ஏன்?

சிவன்

எவர்கள் பூர்வ ஜென்மத்தில் அசுரத் தன்மை அடைந்து பகையினாலும், ஆசையினாலும் பிறருடைய வருமானத்தை கெடுத்தும், அவரை  நோகச் செய்தும், கோட் சொல்லியும், களவினாலும் மற்றவகையினாலும் பிறர் பொருட்களை அபகரித்தும், கொடியவர்களாகவும், நாத்திகத்தில் பற்றுக் கொண்டும் பொய் சொல்கிறவர்களாகவும் பிறர் பொருளை அபகரித்தும் இருப்பவர்கள் நெடுநாள் நரகத்தில் இருந்து துன்பப்பட்டு மானிட ஜென்மம் அடையும் போது தீடிரென பொருள் நஷ்டம் அடைவது நிச்சயம்.

 

உமை

சில மனிதர்கள் பந்தங்களை விட்டு விலகுகின்றனர். சிலர் பந்தம் உடைய மனிதர்களால் ஆயுதத்தாலோ மற்ற கருவிகளாலோ தாக்கப்பட்டு உயிர் சேதம் அடைகின்றனர். அது ஏன்?

சிவன்

எந்த மனிதர்கள் பூர்வ ஜென்மத்தில் அசுரத் தன்மை அடைந்து, பொய் பேசுகிறவர்களாகவும், பிறர் பொருட்களை அபகரித்தும், பிற உயிர்கள் இடத்து அன்பு இல்லாமல் மிக்க விருப்பத்துடன் அவைகளை கொன்றும், புலால் உணவுகளைக் உண்டும்., நம்பினர்களை கெடுப்பவர்களாகவும், தூக்கத்தைக் கெடுப்பவர்களாகவும், பெரும்பாலும் பொய் சொல்கிறவர்களாகவும் இருந்தவர்கள் யமனால் தண்டிக்கப்பட்டு நரகத்தில் இருந்து அதை அனுபவித்து விலங்கு பிறவி அடைந்து துயருற்று மானிட பிறவி அடையும் போது கொலையையும் கட்டுப்படுத்தலையும் அடைவார்கள். செல்வமுள்ளவர்களும், ஏழைகளும் தம் வினைப்பயனை அனுபவிக்கின்றனர். தமது வினையின் காரணமாக தூக்கத்திலோ, மயக்கத்திலோ தாம் செய்த வினையின் காரணமாக சுற்றத்தாருடனோ, இன்ன பிற மனிதர்களாலோ கொலைக்கருவிகளால் தாக்கப்பட்டு அழிவுறுகின்றனர்.

 

உமை

சில மனிதர்கள் நீதி சாஸ்திரத்தில் தேர்ந்தவர்களால் தண்டிக்கப்படுகின்றனர், அது என்ன தோஷத்தினால்?

சிவன்

சில மனிதர்கள் பூர்வ ஜென்மத்தில் மனிதர்களையும், பிராணிகளையும் வதைப்பதையும் துன்பறுத்துவதையும் தினமும் செய்து கொன்டு இருப்பார்கள். சில அரசர்கள் கொடிய குணம் உள்ளவர்களாகி  கோபத்தினால் கொடுமையாக முறையில் பிறரை கொல்பவர்களாகவும், மாமிசம் உண்பவர்களாகவும், நாத்திகம் பேசுபவர்களாகவும், தண்டிக்க தகாதவர்களை தண்டித்தும், பெண்கள், கணவர்கள் , ஆசாரியர்கள் ஆகியவர்களை கொல்பவர்களாகவும் இருக்கின்றனர். இவர்கள் நரக தண்டனை பெற்று அதை அனுபவித்து யமனால் தண்டிக்கப்படுகின்றனர். முன் ஜென்மத்தில் செய்ததை இந்த பிறவியில் அனுபவிக்கின்றனர். இது மனிதர்களுக்கு மட்டும் பொருந்தும். தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் பொருந்தாது. அவர்கள் தவவலிமையாலும், மரணமின்மையாலும் ஒரு சரீரத்திலே கர்ம பலன் அனைத்தையும் அனுபவித்துவிடுகின்றனர். சாதாரண மனிதர்களுக்கு அவர்கள் இறந்தப்பின் அவர்களின் கர்மபலன் தெரியாமல் போய்விடும்.

 

உமை

புத்திரனை விரும்புவன் புத்திர காமேஷ்டி யாகம செய்து அந்த பிறவியிலே புத்திரனை பெறுகிறான். மனிதன் மானிட லோகத்தில் செய்த கர்ம பலனை மானிட தேகத்திலே அனுபவிக்கிறான். அது போல சில மனிதர்கள் கொலைக்காரன், திருடன் என்று அந்த மானிட தேகத்திலே தண்டிக்கப்படுகின்றனர். இது எதனால்?

சிவன்

குற்றத்தை நிமித்தமாக கொண்டு அரசன் பிரஜைகளை தண்டிப்பது அவரவர் முன் வினைப் பயனால் மட்டுமே. அன்று செய்த செய்கைகள் இன்று தண்டிப்பதற்கு காரணமாகிறது.

 

உமை

அரசர்களால் தண்டிக்கப்பட்ட மனிதர்களுக்கு அவர்களின் பாவம் போகுமா? போகாது, அதை விளக்க வேண்டும்.

தொடரும்..

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – சட்டுவம்

தமிழ் அன்னை

 

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  சட்டுவம்

வார்த்தை :  சட்டுவம்

பொருள்

  • அகப்பை
  • தோசைதிருப்பி

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.

நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ

சிவவாக்கியர்

கருத்து உரை

சுவை மிகுந்த உணவுப் பதார்த்தங்களைச் சமைத்த சட்டியானது. அந்த உணவின்  ருசியை  உணர்ந்து  கொள்ளாதது போலவே மனக்கோயிலினுள் இறைவன்  இருப்பதை அறியாமல் வெறும் கல்லை  நட்டு வைத்து தெய்வம் என்று  பெயரிட்டு  பூக்களாலும்  மந்திரங்களாலும்  வழிபாடு செய்வது அறியாமையே ஆகும்.

விளக்கம்

அக வழிபாடு முறையை முன்னிருத்துதல் குறித்தது இப்பாடல்

துக்கடா

ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’ . அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.

கு – குவளயம்
கூ – பூமி, கூவுதல், உலகம்
கை – உறுப்பு, கரம்
கோ – அரசன், தந்தை, இறைவன்
கௌ – கொள்ளு, தீங்கு

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – வெய்ய

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  வெய்ய

வார்த்தை : வெய்ய
பொருள்

  • கொடிய.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.

ஐயன் திருப்பாதம் பசுவே
அன்புற்றுநீ பணிந்தால்
வெய்ய வினைகளெல்லாம் பசுவே
விட்டொடுங் கண்டாயே.

 

இடைக்காட்டுச் சித்தர்

 

கருத்து உரை

பசுவே!, ஐயனிடம் பற்றுக் கொண்டு, அவரிடம் அன்பு கொண்டு அவரின் திருப்பாதம் பணிந்தால் கொடிய வினைகள் எல்லாம் விட்டு ஓடி விலகிவிடும். இதனைக் காண்.

விளக்கம்

உயிர்களைக் குறிக்கும் சொல்லாகவே ‘பசு’ என்று இங்கு பயன்பாடு கொள்ளப்படுகிறது. ‘பதி, பசு பாசம் எனப் பகர் மூன்றில்’ எனும் வரிகள் இங்கு சிந்திக்கத் தக்கவை.

 

துக்கடா

ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’ . அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.

ஓ – சென்று தங்குதல், மதகு
ஔ – பூமி, ஆனந்தம்
க – வியங்கோள் விகுதி, நெருப்பு.
கா – காத்தல், சோலை
கி – இரைச்சல் ஒலி

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – கண்டிகை

தமிழ் அன்னை

புகைப்படம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  கண்டிகை

வார்த்தை :  கண்டிகை

பொருள்

  • கழுத்தணி
  • உருத்திராக்க மாலை – உருத்திராட்சமாலை
  • பதக்கம்
  • நிலப்பிரிவு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.

கலையிலங் கும்மழு கட்டங்கங் கண்டிகை குண்டலம்
விலையிலங் கும்மணி மாடத்தர் வீழி மிழலையார்
தலையிலங் கும்பிறை தாழ்வடஞ் சூலந் தமருகம்
அலையிலங் கும்புன லேற்றவர்க் கும்மடி யார்க்குமே.

 

தேவாரம் – 3ம் திருமுறை – திருஞானசம்பந்தர்

 

மான், மழுப்படை, யோகதண்டம், உருத்திராக்கம், குண்டலம் முதலியன கொண்டு விலைமதிப்புடைய மணிகளால் அலங்கரிக்கப்பட்ட மாடங்களையுடைய திருவீழிமிழலையில் இறைவர் வீற்றிருந்ருது அருளுகின்றார். தலையிலே பிறைச் சந்திரன் திகழ, கழுத்திலே எலும்புமாலை விளங்க, கையில் சூலம், உடுக்கை கொண்டு அலையுடைய கங்கையை ஏற்று இடபக்கொடி கொண்டு விளங்குபவர். யோகநெறி நின்று தம்மைத் தொழும் அடியவர்களும்  தம்மைப் போன்ற உருவம்   (சாரூப பதவி) பெறச் செய்வார் . ஒத்த தோழர்கள் ஒன்று போல் அலங்கரித்துக் கொள்வது போல.

துக்கடா

ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’ . அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.

ஊ – இறைச்சி, உணவு, ஊன், தசை
எ – வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்
ஏ – அம்பு, உயர்ச்சிமிகுதி, ஏவுதல்
ஐ – அழகு, உயர்வு, உரிமை, தலைவன், இறைவன், தந்தை,நுட்பம்
ஒ – மதகு

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – விகிர்தன்

தமிழ் அன்னை

 

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  விகிர்தன்

வார்த்தை :  விகிர்தன்

பொருள்

  • வேறுபட்டவன்
  • விசித்திரமானவன்
  • ஒருபடித்தல்லாது வேறுபட்ட செயலினன்
  • உலகியல்பில் வேறுபட்டவன்
  • கடவுள்
  • இறைவன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.

கொதியி னால்வரு காளிதன் கோபங்குறைய ஆடிய கூத்துடை யானே
மதியி லேன்உடம் பில்லடு நோயான்மயங்கி னேன்மணி யேமண வாளா
விதியி னால்இமை யோர்தொழு தேத்தும்விகிர்த னேதிரு வாவடு துறையுள்
அதிப னேஎனை அஞ்சல்என் றருளாய்ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே

 

தேவாரம் – 7ம் திருமுறை – சுந்தரர்

 

சீற்றத்தொடு வந்த காளியினது கோபம் தணியும்படி அவளோடு எதிர்நின்று ஆடிய நடனத்தை உடையவனே, (ஒளிரும்) மணிகள் போன்றவனே, தலைவனே, (விதிவசத்தால் – அவர்களது வினை முன் நிறுத்தி) தேவர்களாலும் துதிக்கப்படும் ஈசனே, திருவாவடுதுறையில் எழுந்தருளி யிருக்கின்ற தலைவனே, அறிவில்லேனாகிய எனது உடம்பில் வந்து வருத்துகின்ற பிணியினால் செய்வது அறியாது மனம் கலங்குகின்றேன்! எனக்கு உன்னையன்றி உறவாவார் வேறு யாவர் உள்ளார்! என்னை `அஞ்சேல்` என்று சொல்லித் தேற்றி எனக்கு அருள் செய்வாயாக!

துக்கடா

ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’. அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.

அ – சுட்டெழுத்து, எட்டு, சிவன், விஷ்ணு, பிரம்மா
ஆ – பசு, ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம், அரசன்
இ – சுட்டெழுத்து, இரண்டில் ஒரு பங்கு அரை என்பதின் தமிழ் வடிவம்.
ஈ – பறக்கும் ஈ, தா, குகை, தேனீ,அழிவு.
உ – சிவன், ஆச்சரியம், சுட்டெழுத்து, இரண்டு என்பதின் தமிழ் வடிவம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – ஏதம்

தமிழ் அன்னை

 

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  ஏதம்

வார்த்தை :  ஏதம்

பொருள்

  • துன்பம்
  • குற்றம், கேடு
  • தீமை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.

வேதத் தானென்பர் வேள்வியு ளானென்பர்
பூதத்தா னென்பர் புண்ணியன் தன்னையே
கீதத் தான்கிள ருந்திரு மீயச்சூர்
ஏதந் தீர்க்கநின் றாரிளங் கோயிலே

தேவாரம் – 5ம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

உயிர்களுக்கு வினைகளை நீக்கி அருள் புரிபவனாகவும்(புண்ணியத்தின் வடிவாக) இருக்கும் இறைவனை வேத வடிவமாகவும் அதன் சாரமாகவும் இருப்பவன் என்றும், செய்யப்படும் வேள்வியின் பயன் அருளுபவன் என்றும், பஞ்ச பூதங்கங்களாகவும் இருப்பவன் என்றும் கூறுவர்; கீதமாக விளங்கும் திருமீயச்சூரில், இளங்கோயிலின்கண் அடியவர் துன்பம் தீர்க்க நின்ற இறைவரேயாவர்.

 

துக்கடா

பண்புப் பெயர் புணரும்போது ஏற்படும் மாற்றங்கள் – முன் நின்ற மெய் திரிதல் விதியின் படி (விகுதி போய் முன் நின்ற மெய் திரிந்தது)

செய்யன் = செம்மை+அன்
வெவ்வுயிர் = வெம்மை+உயிர்

 

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – துலங்குதல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  துலங்குதல்

வார்த்தை : துலங்குதல்
பொருள்

  • ஒளிர்தல்
  • விளங்குதல்
  • தெளிவாதல்
  • சிறத்தல்
  • கலங்குதல்
  • தொங்கியசைதல்
  • ஒப்பமிடப்படுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.

காணவே பரமசிவன் வானுன் டாக்கக்
கருணையுள்ள திருமாலைக் கண்ணால் மேலிப்
பூணவே சதாசிவத்தைப் பார்க்கும் போது
புத்தியுடன் பேரண்டம் படைத்து நின்றார்
ஊணவே மயேசுரனைப் பார்க்கவே தான்
உருமுயிடி வாய்வ தனைப் படைத்து நின்றார்
தோணவே ருத்திரனைக் கண்ணால் பார்க்க
துலங்குமின்னல் அங்கியும் படைத்தார் பாரே.

 

அகஸ்தியர் செளமிய சாகரம்

 

கருத்து உரை

பரம்பொருளாகிய சிவபெருமான் வானை உண்டாக்கிப் பின் கருணை உடைய திருமாலைப் பார்த்துவிட்டுச் சதாசிவனைப் பார்க்க அவர் ஒரு பெரிய அண்டத்தைப் படைத்தார். பின் மகேஸ்வரனைப் பார்க்க அவர் விண்வெளியில் முழங்குகின்ற இடியையும் வாயுவையும் படைத்தார். பின் ருத்திரனைப் பார்க்க அவர் மின்னலையும் நெருப்பையும் உண்டாக்கினார்.

விளக்கம்
1.
‘வெளியிலே வெளிபோய் விரவிய வாறும்’ எனும் திருமந்திரப் பாடல் இங்கு சிந்திக்கத் தக்கது. வெளியில் – ஆகாச வடிவாகிய சிவத்தில்
2.
ஆகாசத்தில் இருந்து எல்லா பொருள்களும் உண்டாகின்றன. முடியும் போதும் ஆகாசத்திலே முடிகின்றன.ஆகாசமே பெரியது. ஆகாசமே முடிவான உறைவிடம்’ எனும் சாந்தோக்கியம் ஆகாசம் சிவத்தினை உணர்த்தும்

 

துக்கடா

பண்புப் பெயர் புணரும்போது ஏற்படும் மாற்றங்கள் – தன் ஒற்று இரட்டல் விதியின் படி (விகுதி போய் இறுதி எழுத்தின் தன் ஒற்று இரட்டியது)

குற்றி = குறுமை+ஆறு
நட்டாறு = நடுமை+ஆறு

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருநெல்வெண்ணை

274

 

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருநெல்வெண்ணை

  • ஈசன் சுயம்பு மூர்த்தி
  • 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டத் தலம்
  • இறைவழிபாட்டை மறந்திருந்த மக்களை, ஈசன் மழையை பெய்வித்து, ஏரி குளம் ஆகியவற்றை உடைத்து நெல்லைப் பெற்றுக் கொண்டு மழையை நிறுத்தி அவர்களுக்கு பரிசாக தங்கம் நிரம்பிய குடங்களை பரிசாக அளித்தத் தலம்.
  • சிவன், நெல்லை அணையாக கட்டியத் தலம் ‘நெல் அணை’
  • திருஞான சம்பந்தர் திருத்தல யாத்திரை வரும் போது இருட்டியதால், ஈசன் அம்பாளிடம் சொல்லி அவருக்கு வழிகாட்டி அழைத்துவரப்பட்டத் தலம்.
  • அம்பாள் திருஞானசம்பந்தர் எதிரில் நின்று அழைத்ததால் ‘எதலவாடி’
  • சனகாதி முனிவர்கள் ( சனகர் , சனந்தனர் , சனாதனர் , சனற்குமாரர் ) வழிபட்ட தலம்
  • ஆண்டுதோறும் மகாசிவராத்திரியன்று அதிகாலையில் சிவனாருக்கு சூரியவழிபாடு நடைபெறும் தலம்.
  • ஞானசம்பந்தர் கையில் தாளமின்றி, கை கூப்பிய நிலையில் உள்ள வடிவம், சுந்தரர், நடன சுந்தரரான வடிவம், அப்பர் பெருமானும் கை கூப்பிய நிலையில் உள்ள வடிவம்
  • அதிகார நந்தி இரண்டு காலகளையும் இணைத்து கை கூப்பி வணங்குவது போன்ற அமைப்பு.

 

தலம் திருநெல்வெண்ணை
பிற பெயர்கள் நெல்வெண்ணெய், ‘நெல் அணை, எதலவாடி
இறைவன் சொர்ணகடேஸ்வரர், வெண்ணெயப்பர் , நெல்வெண்ணெய்நாதர்
இறைவி பிருஹன்நாயகி, நீலமலர்க்கண்ணி
தல விருட்சம் புன்னைமரம்
தீர்த்தம் பெண்ணையாறு
விழாக்கள் மகா சிவராத்திரி , சனிப்பெயர்ச்சி,கார்த்திகை தீபம், மாசிமகம், மார்கழி திருவாதிரை
மாவட்டம் விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைஅருள்மிகு சொர்ணகடேஸ்வரர் – நெல்வெணெயப்பர் திருக்கோயில்
நெய்வெயைகிராமம் – கூவாடு அஞ்சல்
(வழி) எறையூர் – உளுந்தூர்ப்பேட்டை வட்டம்
விழுப்புரம் மாவட்டம் – 607 20104149-209097, 04149-291786, 94862-82952
கிருஷ்ணமூர்த்தி குருக்கள் 9047785914
வழிபட்டவர்கள்
பாடியவர்கள் திருஞானசம்பந்தர் 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம் உளுந்தூர்பேட்டையில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவு
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 200 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 10 வது தலம்.

நீலமலர்க்கண்ணி உடனாகிய சொர்ணகடேஸ்வரர்

சொர்ணகடேஸ்வரர்       நீலமலர்க்கண்ணி

புகைப்படங்கள் : தினமலர்

 

பாடியவர்           திருஞானசம்பந்தர்
திருமுறை         3
பதிக எண்           96
திருமுறை எண் 6

பாடல்

நெற்றியோர் கண்ணுடை நெல்வெணெய் மேவிய
பெற்றிகொள் பிறைநுத லீரே
பெற்றிகொள் பிறைநுத லீருமைப் பேணுதல்
கற்றறி வோர்கள்தங் கடனே

பொருள்

நெற்றிக்கண்ணை உடையவரும், திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்பவரும், அடியவர்கட்கருளும் பண்புடைய பிறை போன்ற நெற்றியையுடைய உமாதேவியை உடைய வருமாகிய சிவபெருமானே! அவ்வாறு பிறைபோன்ற நெற்றியுடைய உமா தேவியை உடைய உம்மை வழிபடுதலே ஞான நூல்களைக் கற்றறிந்த அறிஞர்களின் கடமையாகும்.

 

பாடியவர்           திருஞானசம்பந்தர்
திருமுறை         3
பதிக எண்           96
திருமுறை எண் 8

 

பாடல்

நெருக்கிய பொழிலணி நெல்வெணெய் மேவியன்
றரக்கனை யசைவுசெய் தீர
அரக்கனை யசைவுசெய் தீருமை யன்புசெய்
திருக்கவல் லாரிட ரிலரே

பொருள்

நெருங்கிய சோலைகள் சூழ்ந்து அழகுடன் விளங்கும் திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்ருது அருள்பவரும், அரக்கனான இராவணனை வலிகுன்றச் செய்தவருமான சிவபெருமானே! அவ்வாறு அரக்கனை வலிகுன்றச் செய்தவரான உம்மை அன்புடன் வணங்குபவர்கள் துன்பமே இல்லாதவர்கள் ஆவர்.

(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 13

உமாமகேஸ்வரஸம்வாதம்

 

உமை

பூமியில் உள்ள மனிதர்களில் சிலர் சக்தி அற்றவர்களாகவும், ஆண்மை அற்றவர்களாகவும், பயன்பாடு அற்றவர்களாகவும், இழி தொழிலில் ஆசை உள்ளவர்களாகவும் கீழான எண்ணம் உடையவர்களோடு நட்பு உடையவர்களாகவும் காணப்படுகின்றனர். அது என்ன வகையான கர்மப் பலன்?

சிவன்

முன் ஜென்மங்களில் கொடும் தொழில்களை விரும்பி பசுக்களை அதன் தன்மை இழக்கச் செய்தும், அதில் வரும் வருமானத்தை வைத்து பிழைத்துக் கொண்டும், கோபத்தினால் மனிதர்களுக்கு ஆண்மையை கெடுத்து அதில் சந்தோஷப் பட்டுக்கொண்டும், பெண்களிடத்தில் முறை தவறி நடந்து கொண்டும், அவ்வாறு பெண்களிடத்தில் பகை கொண்டும் கோள் சொல்லியும் அவர்களுக்கு துன்பம் விளைவித்தும் மற்றும் இவ்வகை நடைஉடைய மனிதர்கள் பிறகு ஒரு பிறவியில் மானிட தேகம் எடுக்கும் போது திறமை அற்றவர்களாகவும், உதவி அற்றவர்களாகவும், இழி தொழில் செய்பவராகவும், வெட்கம் கெட்டவர்களாகவும், சுறுசுறுப்பு இல்லாதவர்களாகவும் ஆகின்றனர். தம் செய்கையினால் அதன் காரண காரியங்களை ஆராய்ந்து பிறர் துயரதை விலக்கினால் அவர்கள் அந்த துயரில் இருந்து விடுபடுவார்கள். பின் ஜென்மத்திலும் தவறுபவர்கள் நரகமே அடைவர். இது ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது.

உமை

மனிதர்களில் சிலர் அடிமையாகி எல்லா வேலைகளையும் செய்து கொண்டும், அடி பயமுறுத்தல் போன்றவைகளை சகித்துக் கொண்டும் இருப்பவர்களாக காணப்படுகின்றனர். அது ஏன்?

சிவன்

எந்த மனிதர்கள் பூர்வ ஜென்மங்களில் பிறர் பொருளை பறித்தும், வட்டிக்கு வாங்கிய கடன், பயிர், அடைக்கலமாக கொடுக்கப்பட்ட பொருள் ஆகியவற்றை மறைத்தும், பிறர் பொருகளை அபகரித்தும், பிறரை அடித்தும், கட்டியும் துன்புறுத்தியும் அடிமை படுத்தியும் வந்தனரோ அவர்கள் மரண தண்டனை அடைந்தப்பின் யம தண்டனைகள் பெற்று பின் தற்செயலாக மானிட பிறப்பு எடுக்கும் போது பிறந்தது முதல் எல்லா வகையிலும் அடிமைகளாகவே இருப்பர். அவர்கள் யாருடைய தனங்களை அபகரித்தார்களோ அவர்களுக்கு அடிமைத் தொழில் செய்து தம் பயம் தீரும் வரை வேலை செய்கிறார்கள். சிலர் பசுக்களாகப் பிறக்கின்றனர். அவர்கள் முன் ஜென்மத்தில் உண்டான பாவம் அவ்வாறுதான் கழியும். இதைத் தவிர கர்மங்களை அழிக்க தேவர்களாலும், அசுரர்களாலும் இயலாது. பொருளை பறி கொடுத்தவனை எல்லா வகையும் திருப்தி செய்விப்பதுதான் பாவத்தில் இருந்து விடுபடும் வகை. வினையை விடுவிக்க கருதுகிறவன் எல்லா வகையிலும் துன்பங்களை பொறுத்துக் கொண்டு முறைப்படி செய்து தன் எஜமானை திருப்தி படுத்த வேண்டும். எஜமானால் அன்புடன் விடை கொடுக்கப்படுபவன் தன் பாவத்தில் இருந்து விடுபடுகிறான். அப்படிப்பட்ட குணமுள்ள வேலைக்காரனை எஜமானும் சந்தோஷப்படுத்த வேண்டும். தகுந்த காரணம் பற்றி மட்டுமே தண்டிக்க வேண்டும். கிழவர்களையும், சிறுவர்களையும், இளைத்தவர்களையும் காப்பாற்றுபவன் புண்ணியம் அடைவான்.

உமை

சில மனிதர்கள் இழிதொழிலில் விருப்பம் உள்ளவர்களாகவும்,ஏழையாகவும், மிகுந்த சிரப்படுபவர்களாகவும், விகார ரூபம் உடையவர்களாகவும், கெட்ட எண்ணம் உடையவர்களாகவும் காணப்படுகின்றனரே, அது ஏன்?

சிவன்

பூர்வ ஜென்மத்தில் அதிக அகங்காரமும் தற்பெருமையும் உடையவர்களாக பெரியோர்களை வணங்காமல்  தம் தர்மத்திற்கு உரிய காரியங்களை செய்யாமல் பிறரை பலவந்தமாக கட்டாயப்படுத்தி தன்னை வணங்கும்படி செய்தும், செல்வத்தினால் எப்பொழுதும் பிறரை அவமதித்தும், குடித்தும், கடும் சொல் முதலியவற்றை கொண்டவராகவும் இருந்த மனிதர்கள், மரண தண்டனை அடைந்தப்பின் யம தண்டனைகள் பெற்று பின் தற்செயலாக மானிட பிறப்பு எடுக்கும் போது விருப்பம் உள்ளவர்களாகவும்,ஏழையாகவும், மிகுந்த சிரப்படுபவர்களாகவும், விகார ரூபம் உடையவர்களாகவும், கெட்ட எண்ணம் உடையவர்களாகவும் காணப்படுகின்றனர். அவ்வாறு இருக்கும் மனிதர்களை விவேகம் உள்ளவன் எக்காலத்திலும் இகழவும் கோபிக்கவும் கூடாது. ஏனெனில் அவர்கள் தம் வினைப்பயன்களை அனுபவிக்கின்றனர். துயரப்படும் அம்மனிதர்கள் அது குறித்து சிந்திக்கும் போதும் வருத்தம் கொள்ளும் போதும் அவர்கள் பரிசுத்தம் அடைவார்கள்.

உமை

சில மனிதர்கள் பிறர் வாயிலை அடைந்தும் உள்ளே செல்ல முடியாமல் தடுக்கப்பட்டு நிறுத்தப்படுகின்றனர், எத்தனை முயற்சி செய்தும் அவர்களை சந்திப்பதற்கும், தம் கருத்தை சொல்வதற்கும் இயலாதவர்களாக இருக்கின்றனரே. அது ஏன்?

சிவன்

முன் ஜென்மங்களில் செல்வம் மற்றும் அதிகாரம் ஆகியவைகளைப் பெற்று இருந்தும் மனதால் குறுகி பிறரிடம் பேசாமலும் செல்வம் பற்றிய கர்வத்தினால் மற்றவர்களை உள்ளே விடாமலும், பொருளாசை, பெண்ணாசை கொண்டு எவரையும் மதிக்காமலும், தன் நிலையை மட்டுமே கொண்டும், எல்லா போகங்கள் இருந்தும் எவருக்கும் கொடுக்காமலும், திறமை இருந்தும் பிறருக்கு உதவி செய்யாமலும், புண்ணிய கர்மங்களை செய்யாமலும் இருந்த மனிதர்கள் பின்னொரு பிறப்பில் பிறர் வாயிலை அடைந்தும் உள்ளே செல்ல முடியாமல் தடுக்கப்பட்டு நிறுத்தப்படுகின்றனர், எத்தனை முயற்சி செய்தும் அவர்களை சந்திப்பதற்கும், தம் கருத்தை சொல்வதற்கும் இயலாதவர்களாக இருக்கின்றனர்.

உமை

சில மனிதர்கள் அரசர்களாலும், திருடர்களாலும் மற்றும் நீராலும் எல்லா பொருள்களும் அபகரிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனரே, அது ஏன்?

தொடரும்..

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!