ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – நாற்பத்துமுக்கோணம்
வார்த்தை : நாற்பத்துமுக்கோணம்
பொருள்
- ஸ்ரீ சக்கரம்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
1.
காணப்பா பூசைசெய்யும் முறையைக் கேளாய்;
கைம்முறையாய்ச் சுவடிவைத்துப் பூசை செய்வார்
பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்துப்
புகழாகப் பூசைசெய்வார் பெண்ணை வைத்தும்;
நாளப்பா சக்கரத்தைப் பூசை செய்வார்
நம்முடைய பூசையென்ன மேருப் போலே
ஓதப்பா நாற்பத்துமுக் கோணம் வைத்தே
உத்தமனே! பூசைசெய்வார் சித்தர் தானே.
சட்டை முனி ஞானம்
கருத்து உரை
பூசை செய்யும் முறைகளை உரைக்கிறேன் கேட்பாயாக. சிலர் புற வழிபாட்டு முறைகளில் ஒன்றான சுவடியை வைத்து பூசை செய்வார்கள். சிலர் மட்டும் புகழைத் தரும் தீபத்தை வைத்து பூசை செய்வார்கள். சிலர் பெண்களை தேவியாக பாவித்து பூசை செய்வார்கள். சிலர் தினமும் சக்கரங்களை வைத்தும் பூசை செய்வார்கள். நம்மைப் போன்ற சித்தர்கள் வழிபாட்டு முறை என்பது மேருவை பூசித்தல் போல நாற்பது முக்கோணம் உடைய ஸ்ரீ சக்கரத்தை பூசித்தல் ஆகும்.
துக்கடா
ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’. அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.
சை – அறுவறுப்பு ஒலி, கைப்பொருள்
சோ – மதில், அரண்
ஞா – பொருத்து, கட்டு
தா – கொடு, கேட்பது
தீ – நெருப்பு , தீமை
(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதால் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)