புகைப்படம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – கண்டிகை
வார்த்தை : கண்டிகை
பொருள்
- கழுத்தணி
- உருத்திராக்க மாலை – உருத்திராட்சமாலை
- பதக்கம்
- நிலப்பிரிவு
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
1.
கலையிலங் கும்மழு கட்டங்கங் கண்டிகை குண்டலம்
விலையிலங் கும்மணி மாடத்தர் வீழி மிழலையார்
தலையிலங் கும்பிறை தாழ்வடஞ் சூலந் தமருகம்
அலையிலங் கும்புன லேற்றவர்க் கும்மடி யார்க்குமே.
தேவாரம் – 3ம் திருமுறை – திருஞானசம்பந்தர்
மான், மழுப்படை, யோகதண்டம், உருத்திராக்கம், குண்டலம் முதலியன கொண்டு விலைமதிப்புடைய மணிகளால் அலங்கரிக்கப்பட்ட மாடங்களையுடைய திருவீழிமிழலையில் இறைவர் வீற்றிருந்ருது அருளுகின்றார். தலையிலே பிறைச் சந்திரன் திகழ, கழுத்திலே எலும்புமாலை விளங்க, கையில் சூலம், உடுக்கை கொண்டு அலையுடைய கங்கையை ஏற்று இடபக்கொடி கொண்டு விளங்குபவர். யோகநெறி நின்று தம்மைத் தொழும் அடியவர்களும் தம்மைப் போன்ற உருவம் (சாரூப பதவி) பெறச் செய்வார் . ஒத்த தோழர்கள் ஒன்று போல் அலங்கரித்துக் கொள்வது போல.
துக்கடா
ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’ . அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.
ஊ – இறைச்சி, உணவு, ஊன், தசை
எ – வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்
ஏ – அம்பு, உயர்ச்சிமிகுதி, ஏவுதல்
ஐ – அழகு, உயர்வு, உரிமை, தலைவன், இறைவன், தந்தை,நுட்பம்
ஒ – மதகு