ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – தண்டிகை
வார்த்தை : தண்டிகை
பொருள்
- சிவிகை
- பல்லக்கு வகை
- பெரியவீடு
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
காசிபோய் வந்தாலும் என்ன? பெரிய
கனக தண்டிகையேறித் திரிந்தாலும் என்ன?
வாசியைத் தெரிந்தாலும் என்ன? நாளும்
மகராசன் என்றுபேர் பெற்றாலும் என்ன?
கல்லுளிச் சித்தர்
கருத்து உரை
முக்தி அடைவதன் பொருட்டு காசிக்கே சென்று வந்தால் என்ன பயன்? மிகப் பெரியதாக் இருக்கக் கூடிய தங்கத்தினால் ஆன வாகனத்தில் சுற்றி வந்தாலும் என்ன பயன்? வாசி பற்றிய ரகசியங்களை தெரிந்தாலும் என்ன? ஊருக்கு நல்லது செய்து மகராசன் என்று பெயர் பெற்றாலும் என்ன?
விளக்க உரை
பிரம்மத்தின் வடிவத்தை நாடவேண்டும். செய்த கர்மங்களாகிய வினைகளை முற்றிலும் அறுக்க செய்யும் உள் ஒளியே பிரம்ம சொரூபம். பிரமத்தை அறிய மேற்கண்டவைகள் உதவாது என்று பட்டியல் இடுகிறார்.
துக்கடா
ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’ . அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.
ய – தமிழ் எழுத்து என்பதின் வடிவம்
யா – ஒரு வகை மரம், இல்லை, ‘யாவை’ என்ற பொருள்படும் கேள்விப்பெயர்
வ – நாலில் ஒரு பங்கு “கால்” என்பதன் தமிழ் வடிவம்
வா – வருக, ஏவல், ‘வா’ என்று அழைத்தல்.
வி – அறிவு, நிச்சயம், ஆகாயம், விசை.