புகைப்படம் : இணையம்
உமை
சில மனிதர்கள் அரசர்களாலும், திருடர்களாலும் மற்றும் நீராலும் எல்லா பொருள்களும் அபகரிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனரே, அது ஏன்?
சிவன்
எவர்கள் பூர்வ ஜென்மத்தில் அசுரத் தன்மை அடைந்து பகையினாலும், ஆசையினாலும் பிறருடைய வருமானத்தை கெடுத்தும், அவரை நோகச் செய்தும், கோட் சொல்லியும், களவினாலும் மற்றவகையினாலும் பிறர் பொருட்களை அபகரித்தும், கொடியவர்களாகவும், நாத்திகத்தில் பற்றுக் கொண்டும் பொய் சொல்கிறவர்களாகவும் பிறர் பொருளை அபகரித்தும் இருப்பவர்கள் நெடுநாள் நரகத்தில் இருந்து துன்பப்பட்டு மானிட ஜென்மம் அடையும் போது தீடிரென பொருள் நஷ்டம் அடைவது நிச்சயம்.
உமை
சில மனிதர்கள் பந்தங்களை விட்டு விலகுகின்றனர். சிலர் பந்தம் உடைய மனிதர்களால் ஆயுதத்தாலோ மற்ற கருவிகளாலோ தாக்கப்பட்டு உயிர் சேதம் அடைகின்றனர். அது ஏன்?
சிவன்
எந்த மனிதர்கள் பூர்வ ஜென்மத்தில் அசுரத் தன்மை அடைந்து, பொய் பேசுகிறவர்களாகவும், பிறர் பொருட்களை அபகரித்தும், பிற உயிர்கள் இடத்து அன்பு இல்லாமல் மிக்க விருப்பத்துடன் அவைகளை கொன்றும், புலால் உணவுகளைக் உண்டும்., நம்பினர்களை கெடுப்பவர்களாகவும், தூக்கத்தைக் கெடுப்பவர்களாகவும், பெரும்பாலும் பொய் சொல்கிறவர்களாகவும் இருந்தவர்கள் யமனால் தண்டிக்கப்பட்டு நரகத்தில் இருந்து அதை அனுபவித்து விலங்கு பிறவி அடைந்து துயருற்று மானிட பிறவி அடையும் போது கொலையையும் கட்டுப்படுத்தலையும் அடைவார்கள். செல்வமுள்ளவர்களும், ஏழைகளும் தம் வினைப்பயனை அனுபவிக்கின்றனர். தமது வினையின் காரணமாக தூக்கத்திலோ, மயக்கத்திலோ தாம் செய்த வினையின் காரணமாக சுற்றத்தாருடனோ, இன்ன பிற மனிதர்களாலோ கொலைக்கருவிகளால் தாக்கப்பட்டு அழிவுறுகின்றனர்.
உமை
சில மனிதர்கள் நீதி சாஸ்திரத்தில் தேர்ந்தவர்களால் தண்டிக்கப்படுகின்றனர், அது என்ன தோஷத்தினால்?
சிவன்
சில மனிதர்கள் பூர்வ ஜென்மத்தில் மனிதர்களையும், பிராணிகளையும் வதைப்பதையும் துன்பறுத்துவதையும் தினமும் செய்து கொன்டு இருப்பார்கள். சில அரசர்கள் கொடிய குணம் உள்ளவர்களாகி கோபத்தினால் கொடுமையாக முறையில் பிறரை கொல்பவர்களாகவும், மாமிசம் உண்பவர்களாகவும், நாத்திகம் பேசுபவர்களாகவும், தண்டிக்க தகாதவர்களை தண்டித்தும், பெண்கள், கணவர்கள் , ஆசாரியர்கள் ஆகியவர்களை கொல்பவர்களாகவும் இருக்கின்றனர். இவர்கள் நரக தண்டனை பெற்று அதை அனுபவித்து யமனால் தண்டிக்கப்படுகின்றனர். முன் ஜென்மத்தில் செய்ததை இந்த பிறவியில் அனுபவிக்கின்றனர். இது மனிதர்களுக்கு மட்டும் பொருந்தும். தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் பொருந்தாது. அவர்கள் தவவலிமையாலும், மரணமின்மையாலும் ஒரு சரீரத்திலே கர்ம பலன் அனைத்தையும் அனுபவித்துவிடுகின்றனர். சாதாரண மனிதர்களுக்கு அவர்கள் இறந்தப்பின் அவர்களின் கர்மபலன் தெரியாமல் போய்விடும்.
உமை
புத்திரனை விரும்புவன் புத்திர காமேஷ்டி யாகம செய்து அந்த பிறவியிலே புத்திரனை பெறுகிறான். மனிதன் மானிட லோகத்தில் செய்த கர்ம பலனை மானிட தேகத்திலே அனுபவிக்கிறான். அது போல சில மனிதர்கள் கொலைக்காரன், திருடன் என்று அந்த மானிட தேகத்திலே தண்டிக்கப்படுகின்றனர். இது எதனால்?
சிவன்
குற்றத்தை நிமித்தமாக கொண்டு அரசன் பிரஜைகளை தண்டிப்பது அவரவர் முன் வினைப் பயனால் மட்டுமே. அன்று செய்த செய்கைகள் இன்று தண்டிப்பதற்கு காரணமாகிறது.
உமை
அரசர்களால் தண்டிக்கப்பட்ட மனிதர்களுக்கு அவர்களின் பாவம் போகுமா? போகாது, அதை விளக்க வேண்டும்.
தொடரும்..