ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – அகனம்
வார்த்தை : அகனம்
பொருள்
- வேங்கைமரம்
- எடையற்று
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
வன குளிகை கொண்டு – அதனாலே
ககன மார்க்கம் தனிலே அகனமாய் சென்று
தவமொருமா சித்தர்கள் வாழ்கின்ற
சதுர கிரிக்குப் போய் குதூகளித்தேன்.
மச்சேந்திர நாதர் எனும் நொண்டிச் சித்தர்
கருத்து உரை
காடுகளில் இருக்கும் குளிகைகளைக் உட்கொண்டு அதனால் வான் மார்க்கமாக தனியாக எடையற்று சென்று, நித்தமும் தவம் உடைய சித்தர்கள் வாழும் சதுரகிரிக்குச் சென்று மகிழ்ந்து இருந்தேன்.
விளக்கம்
- உதிரவேங்கை, உரோமவேங்கை போன்ற வேங்கை வகைகள் காலங்கிமுனிவர் வனத்தில் இருக்கிறது அதை குத்தி அதில் இருந்து பெறப்படும் பாலை எடுத்து முறைப்படி தங்கமாக்கி உட்கொள்ள காயசித்தி உண்டாகும்.
- நொண்டிச் சித்தர் சக்தி உபாசகர். இவரின் உண்மைப் பெயர் /ஊர் / காலம் தெரியவில்லை.
- கால் ஊனம் உற்றவர் என்பதால் காரணப் பெயராகவே நொண்டிச் சித்தர் என்று அழைத்தார்கள் என்று குறிப்பிடப்படுகிறார். மனிதர்கள் வினைக்கு உட்பட்டு ஆணவம், மாயை மற்றும் கண்மம் போன்றவற்றினால் சூழப்பட்டு தன் இயல்பில் குறைவுற்று இருப்பதாலும் அவர்களுக்கு வழிகாட்டுதல் பொருட்டு பாடல் எழுதியதால் நொண்டிச் சித்தர் என்றும் இருக்கலாம்.
துக்கடா
ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’. அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.
ய – தமிழ் எழுத்து எண்பதின் வடிவம்
யா – ஒரு வகை மரம், இல்லை, ‘யாவை’ என்ற பொருள்படும் கேள்விப்பெயர்
வ – நாலில் ஒரு பங்கு “கால்” என்பதன் தமிழ் வடிவம்
வா – வருக, ஏவல், ‘வா’ என்று அழைத்தல்.
வி – அறிவு, நிச்சயம், ஆகாயம், விசை.