ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – வழக்கழிவு
வார்த்தை : வழக்கழிவு
பொருள்
- நியாயவிரோதம்
- அடாதவழக்கு
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
செய்ந்நன்றி மறவாத பேர்களும், ஒருவர்செய்
தீமையை மறந்த பேரும்,
திரவியம் தரவரினும் ஒருவர்மனை யாட்டிமேற்
சித்தம்வை யாத பேரும்,
கைகண் டெடுத்தபொருள் கொண்டுபோய்ப் பொருளாளர்
கையிற்கொ டுத்த பேரும்,
காசினியில் ஒருவர்செய் தருமம்கெ டாதபடி
காத்தருள்செய் கின்ற பேரும்,
பொய்யொன்று நிதிகோடி வரினும் *வழக்கழிவு*
புகலாத நிலைகொள் பேரும்.
புவிமீது தலைபோகும் என்னினும் கனவிலும்
பொய்ம்மையுரை யாத பேரும்,
ஐயஇங் கிவரெலாம் சற்புருட ரென்றுலகர்
அகமகிழ்வர்! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
அறப்பள்ளீஸ்வர சதகம்
கருத்து உரை
தினமும் மனதில் நினைத்த மாத்திரத்தில் (எப்பொழுதும்) அதை தரும் சதுரகிரியில் உறையும் அறப்பளீ தேவனே! (ஒருவர்) செய்த உதவியை எக்காலத்திலும் மறவாதவரும், ஒருவர் செய்த கெடுதியை அதனை பொருட்படுத்தாமல் உடனே மறந்தவர்களும், பொருளைக் கொடுக்கவந்தாலும் பிறர் மனைவியின்பால் மனத்தைச் செலுத்தாதவர்களும், கையினாலே கண்டெடுத்த பொருளைப் பொருளுக்கு உரியவரிடம் கொண்டுபோய்க் கொடுத்தவர்களும், உலகில் ஒருவர் செய்த அறம் கெட்டு அழிதல் இல்லாதவாறு காப்பாற்றுகின்றவரும், நிலையற்ற செல்வத்தைக் கோடிக்கணக்காக ஒருவர் கொடுத்தாலும் அழிவழக்குக் கூறாத நிலையுடையவரும், உலகத்திலே தலைபோகும் என்றாலும் கனவிலேயும் பொய் புகலாதவரும், இவ் வுலகில் இத்தகையோர்கள் யாவரையும் அழகாகிய நன்மக்கள் என்று உலகமாந்தர் மனம் களிப்பார்கள். (எனவே) ஐயனே! என அறப்பளீசுர தேவனுக்கு ஆக்கினும் அமையும்.
விளக்க உரை
- பொய்யொன்று நிதி – செல்வம் நிலையற்றது (எனும் தன்மையால்)
- அறப்பளீசுர சதகம் என்பது சிவபெருமான்மீது நூறு செய்யுட்களால் ஆக்கப்பட்ட நூல் எனப் பொருள் தரும்.
- இந்நூலும் சதுரகிரி என்னும் திருப்பதியில் எழுந்தருளியிருக்கின்ற அறப்பள்ளி ஈசுரன்மீது வாழ்த்தாகப் பாடி இறுதியடிகளில் இறைவன் பெயரை ஒரே மகுடமாக அமைத்து மேல் அடிகளிலெல்லாம் அறனும் மறனும் பண்பும் பழக்கவழக்க ஒழுக்க முறைகளும் பொதுவில் அமைத்துப் பாடப்பெற்றுள்ளது..
- இது கொல்லிமலைச் சார்பிலுள்ள சதுரகிரியில் உள்ள திருக்கோயில். சதுரகிரிக்கே அறப்பள்ளியெனப் பெயருண்டென்றும் கூறுகின்றனர்.
துக்கடா
- யாப்பு – புலவர்களால் செய்யப்பெறும் செய்யுள் என்பது பொருள். செய்யுள் இயற்றுதற்குரிய இலக்கணம் யாப்பிலக்கணமாகும்.
- யாப்பு, பாட்டு, தூக்கு, தொடர்பு, செய்யுள் இவை யாவும் ஒரு பொருள் குறித்த பல சொற்களாகும்.