ஒவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – உதித்தல்
வார்த்தை : உதித்தல்
பொருள்
- உதயமாதல்.
- தோன்றுதல்
- பிறத்தல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
1.
சித்தனாய் பிறப்பதுதான் ஆரேன்றாக்கால்
செகத்தில் கோடியில் ஒருவனுண்டு
உத்ததொரு விட்டகுறை என்பதென்ன
உதித்தகலை எந்நேரம் ஊணிப்பாரு
பெற்றபேர் எப்படித்தான் வந்ததானால்
பிராணன் அல்லோ பூரணத்திற் சேர்ந்தாலே
முத்தனாய் எடுத்த சடம் சித்தியாகும்
முன்னுமில்லை பின்னுமில்லை முறையைப்பாரே;
அகத்தியர் பூரண சூத்திரம்
கருத்து உரை
இந்த உலகில் கோடியில் ஒருவரே சித்தராக பிறக்கிறார்கள். இது அவர்களின் பூர்வ ஜென்மங்களில் விட்ட குறையாகும். அவர்களுக்கு இந்த பெயர் எப்படி தோன்றியது என்று ஆராய வேண்டும். அஃதாவது அவர்களது பிராணனை பூரணத்தில் சேர்த்ததால் முக்தனாக ஆவதற்காக எடுத்த உடல் சித்தி ஆகி இருக்கும். (உடலுக்கும் இறப்பில்லை – காயசித்தி). இதன் பிறகு அவர்களுக்கும் முன்னும் பின்னும் பிறவி என்பது இல்லை.
விளக்கம்
காரண தேகம் பற்றியே சித்தர்களின் பிறப்பு அவர்கள் பிறக்கும் முன்னரே தீர்மானிக்கப்படுகிறது.
துக்கடா
ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’ . அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.
நா – நான், நாக்கு
நி – இன்பம், அதிகம், விருப்பம்
நீ – முன்னிலை ஒருமைப் பெயர், நீக்குதல்
நூ – யானை, ஆபரணம், அணி, எள்.
நே – அன்பு, அருள், நேயம்