அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – விகிர்தன்

தமிழ் அன்னை

 

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  விகிர்தன்

வார்த்தை :  விகிர்தன்

பொருள்

  • வேறுபட்டவன்
  • விசித்திரமானவன்
  • ஒருபடித்தல்லாது வேறுபட்ட செயலினன்
  • உலகியல்பில் வேறுபட்டவன்
  • கடவுள்
  • இறைவன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.

கொதியி னால்வரு காளிதன் கோபங்குறைய ஆடிய கூத்துடை யானே
மதியி லேன்உடம் பில்லடு நோயான்மயங்கி னேன்மணி யேமண வாளா
விதியி னால்இமை யோர்தொழு தேத்தும்விகிர்த னேதிரு வாவடு துறையுள்
அதிப னேஎனை அஞ்சல்என் றருளாய்ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே

 

தேவாரம் – 7ம் திருமுறை – சுந்தரர்

 

சீற்றத்தொடு வந்த காளியினது கோபம் தணியும்படி அவளோடு எதிர்நின்று ஆடிய நடனத்தை உடையவனே, (ஒளிரும்) மணிகள் போன்றவனே, தலைவனே, (விதிவசத்தால் – அவர்களது வினை முன் நிறுத்தி) தேவர்களாலும் துதிக்கப்படும் ஈசனே, திருவாவடுதுறையில் எழுந்தருளி யிருக்கின்ற தலைவனே, அறிவில்லேனாகிய எனது உடம்பில் வந்து வருத்துகின்ற பிணியினால் செய்வது அறியாது மனம் கலங்குகின்றேன்! எனக்கு உன்னையன்றி உறவாவார் வேறு யாவர் உள்ளார்! என்னை `அஞ்சேல்` என்று சொல்லித் தேற்றி எனக்கு அருள் செய்வாயாக!

துக்கடா

ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’. அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.

அ – சுட்டெழுத்து, எட்டு, சிவன், விஷ்ணு, பிரம்மா
ஆ – பசு, ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம், அரசன்
இ – சுட்டெழுத்து, இரண்டில் ஒரு பங்கு அரை என்பதின் தமிழ் வடிவம்.
ஈ – பறக்கும் ஈ, தா, குகை, தேனீ,அழிவு.
உ – சிவன், ஆச்சரியம், சுட்டெழுத்து, இரண்டு என்பதின் தமிழ் வடிவம்

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *