தாங்கள் தங்களுக்கு என்று விரும்பிச் செய்யும் சடங்குகளை குறைவாக மதிப்பிட்டு எள்ளி நகையாடாதே; உன்னை பலரும் புகழ்ந்தாலும் அந்த புகழ்ச்சியில் மகிழ்ந்து விடாதே; நிறைவான வாழ்வு வாழும் முன் வாழ்வை வாழ்ந்துவிட்டோம் என எண்ணாதே; மற்றவர்கள் தாழ்ந்த நிலையை அடையும் படி செய்யக்கூடிய செயலைச் செய்து நீ தாழ்ச்சியினை அடையாதே.
சிந்தை நிலைகெடுமாறு உருகி இன்னிசை பாடி, சிலம்புகள் ஒலிக்குமாறு கூத்துக்கள் நிகழ்த்தி, செழுமையான கங்கையினை சடையின்மேல் மறைத்து வைத்து வெண்ணீற்றினை திருமேனி முழுவதும் பூசி, கந்தை ஆடையினை கோவணமாகஅணிந்து, தோலினால் ஆன சிறுபையினையும், கபாலத்தினையும் யாசகத்திற்காக ஏந்தி திருக்கடையூர் எனும் தலத்தை பதியாக உடைய உயர்ந்தவனே, காலனை துன்பம் கொள்ளச் செய்தவனே! பிறப்பிற்கு காரணமான தந்தையையும், நிரந்தரம் என்று மாயைக்கு உட்பட்டு கருதக்கூடிய மனையையும், இடுப்பில் சுமந்தவளாகிய தாயையும், மழலை மொழி பேசும் குழந்தையும், வினைபற்றி வரும் செல்வத்தையும், இளமையையும், அழகிய வடிவம் கொண்ட பெண்ணையும் அந்தியிலும், பகலிலும் விருப்பமுடன் உடல் வருந்துமாறு சோம்பல் வரும் அளவில் சிந்தையில் கொண்டு ஆழ்கடலில் அலையும் துரும்பு போலாகி அலைக்கழிக்கபடுபவன் ஆகிய என்னை மெய்யறிவு விளங்குமாறு திருத்தி ஆட்கொள்ள நினைக்கவில்லையோ?
நகை அணிந்த காதுகளை உடைய பெண்ணே! பிறரை ஏமாற்றுவதான வஞ்சித்தலை விலக்கி தான் யார் எனக் கண்டவர்களுக்கு துன்பம் தரத்தக்கதான குழப்பங்கள் எப்படி வரும்? வினைகளை அறுத்து பிறவி அறுத்தலை செய்யக்கூடியதற்கு ஆதாரமாக இருக்கும் தலை முதல் திருவடிவரை கண்டவர்களுக்கு மற்றவர்களிடம் தர்க்கம் செய்தல் எதற்காக?
வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம் அனைத்தாய நூலகத்தும் இல்லை – நினைப்பதெனக் கண்ணுறுவ தல்லால் கவலைப் படேல் நெஞ்சே விண்ணுறுவார்க் கில்லை விதி
நல்வழி – ஔவையார்
கருத்து – வினைகளின் பயன்களை அனுபவியாமல் விலக்குவதற்கு வேதம் முதலாகிய அனைத்து நூல்களிலும் வழி முறைகள் சொல்லப்படவில்லை என்பதைக் கூறும்பாடல்.
பதவுரை
நெஞ்சே! தொந்த வினைகளின் பயன்களை அனுபவியாமல் விலக்குவதற்கு வேதம் முதலாகிய அனைத்து நூல்களிலும் வழி முறைகள் சொல்லப்படவில்லை. நீ வினை வலிமையை மனதினால் ஆராய்ந்து அதை வெல்ல நினைத்து அதுபற்றி கணித்துக் கவலைப்படலாம் அன்றி நற்செயல்கள் புரிந்து அதன் காரணமாக விண்ணுலகம் செல்பவர்களை அவர்களின் தலைவிதி தடுத்து நிறுத்தாது.
அருளை பெறுவதற்காக குற்றமற்றவனாக இருக்கும் அவனது திருவடிகளை தேடிக்கொண்டு, காலத்தால் குறிப்பிட்டுக் கூற இயலாததாக இருப்பதும், அளவிட முடியதாகவும் இருக்கும் பெரியதான சோதியினை நித்தமும் விரும்பி அதை நாடி, சோதி வடிவமாகவே இருக்கும் மனோன்மணியாள் அருளைப் பெற்று சுகத்தினை தருபவருமான பாதத்தினை மனத்தினாலே உற்று நோக்கு.
சுகர் – சீவ முக்தி எனப்படும் துறவு நிலையை அடைந்தவரும், வியாச முனிவரின் புதல்வரான பரிட்சித்து மன்னன், தட்சகனால் கடிபட்டு இறக்கும் தறுவாயில் அவனுக்கு பாகவதத்தை உபதேசித்தார். எழுதிய சித்தர் பற்றி எக்குறிப்பும் காணப்படாமையால் சுகர் குருவாக இருந்திருக்கலாம்.
கருத்து – போற்றுதல் தாண்டி தன்னால் எதுவும் செய்ய இயலாது என்பதை உரைக்கும் பாடல்.
பதவுரை
பராபரமே! வினைகளை அறுத்தல் என்பதை முக்தியினை முன்வைத்து பேரின்பத்தினை தருவதாகிய அருள்தல் எனும் நோன்பினை தராவிட்டால் கெடுவேன்; ஆயினும் என்னுடைய தேகம் விழுந்து விடும் எனில் என்ன செய்வேன்; எனது தந்தையைப் போன்றவனே என்னுடைய தளர்ச்சியினை கண்டும் இன்னும் ஆற்றுப்படுத்தவில்லை ஆயினும் போற்றுதலை வாய்விட்டு உரைத்தல் அன்றி வேறு என் செய்வேன்.
கருத்து – இறைவனின் பல்வேறு குணங்களயும், அதனை உணரும் தன்மை உடையவர்களையும் கூறும் பாடல்.
பதவுரை
உருவ வடிவம் தாங்கும் உடலாகவும், அதில் உறையும் உயிராகவும், அதன் உணர்வாகவும், மவுன நிலைக் கடந்த மெய்யடியார்களிடத்தில் தேன் போன்றவனாகவும், அதனுள் உள் மறைந்திருக்கும் சிற்பரமாக இருப்பவனை பரந்து விரிந்த வானமாகவும், அதை வெளிப்படுத்தும் ஒளியாகவும், காட்சியில் தென்படும் உருவமாகவும், காட்சியில் அன்றி தன்னை வெளிப்படுத்தும் ஒலியாகவும் உணராதவர்கள் எவ்வாறு தெளிவு உடையவர்கள் ஆவார்கள்.
மறை ஆகிய வேதத்தில் உரைக்கப்பட்டவாறு அதன் வழியில் நிற்பாயாக; தர்மம் சார்ந்து அதன் வழியில் இருக்கும் நல்லவர்கள் செல்லும் வழியினை அவர்களிடத்தில் சொல்லக் கேட்டு அதன் வழியில் செல்வாயாக; வாக்கு, மனம்,காயம் ஆகிய்வற்றால் பிறருக்கு துன்பம் தரத்தக்க வார்த்தைகளைக் கூறாமல் அதுபற்றி நலம் தரத்தக்க வார்த்தைகளைக் கூறுவாயாக; பொல்லாததும் பேய்த் தன்மை உடையதுமான கோபத்தை வைராக்கியம் கொண்டு அதனை கொல்வாயாக.
அனைத்திற்கும் மூலமாக இருக்கக்கூடியவளும், பரஞ்சோதி,மனோன்மணி என்றும் அழைக்கப்படுபவளும், திசை என்பதே இல்லாமல் இருக்கும் தீ போன்றவளாகி வாலை முக்கோண வடிவிலே இருக்கக்கூடியதான மூலாதாரமும், நாற்கோண வடிவில் இருக்கும் சுவாதிட்டானம் அனைத்தையும் விரும்பிக் காப்பவள்; இதை நீ அறிவதன் பொருட்டு விபரமாக உரைத்துவிட்டேன்; இவ்வாறு உரைத்ததை பல்வேறு கோணங்களில் தனியே இருந்து அவளைப் பார்த்தவன் சித்தனாவான்.
கருத்து – ஈசனை உணர்ந்தவர்கள் துன்ப வெள்ளத்தில் இருந்து வெளியேறுதலையும், உணராதவர்கள் துன்பங்களை அனுபவித்துக் கொண்டு இருப்பார்கள் என்பதையும் விளக்கும் பாடல்.
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்ப்பதென்றோ நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலும் காட்டானை மேலேறி என் கண்ணம்மா! கண்குளிரக் காண்பேனோ!
அருளிய சித்தர் : அழுகணிச் சித்தர்
பதவுரை
கண்ணம்மா! நாகரிகமற்றவன், அயலான், காட்டான் எனும் பொருளில் இயங்கிக் கொண்டிருக்கும் காற்றானது மூலாதாரத்தில் இருந்து இயங்கி யோக மார்க்கமாக ஆஞ்ஞை கடந்து சகஸ்ராரம் வரையில் கடைத்தெருவின் வழியே செல்வது போன்று அனைத்து ஆதாரங்களையும் கடந்து செல்கின்றது. ஊர்சபைக்காரார் எனும் உடலோடு இருப்பவர்களும், அண்டத்தில் இருப்பவர்களாகிய எமனால் ஏவப்பட்டவர்களும் நமது யோக சித்தி நிறைவேறாமல் இருப்பதன் பொருட்டு இந்த முறைகள் குறித்து புன்னகை புரிந்து எள்ளி நகையாடுவார்கள்; அவ்வாறு நம்மை கட்டுப்படுத்துவர்களாகிய அந்த நாட்டார்கள் நம்மை கண்டு எள்ளி நகையாடினாலும் காற்றினை மேலேற்றி உன்னுடைய திருநடனத்தினைக் காண்பேனோ!
அருள் மிகுத்த ஆகமநூல் படித்து அறியார்! கேள்வியையும் அறியார்! முன்னே இருவினையின் பயன் அறியார்! குருக்கள் என்றே உபதேசம் எவர்க்கும் செய்வார்! வரம் மிகுத்த தண்டலைநீள் நெறியாரே! அவர் கிருபா மார்க்கம் எல்லாம் குருடனுக்குக் குருடன்கோல் கொடுத்துவழி காட்டிவரும் கொள்கை தானே
தண்டலையார் சதகம் – படிக்காசுப் புலவர்
கருத்து – அஞ்ஞானி, இன்னொரு அஞ்ஞானிக்கு உபதேசம் புரிய முடியாததை பழமொழியுடன் இணைத்துக் கூறும் பாடல்.
பதவுரை
கேட்டவற்றியில் மிக்க நன்மை தரக்கூடியதான திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் நீள்நெறி என்னும் திருக்கோயிலிலே எழுந்தருளிய சிவபெருமானே! சொல்லக் கேள்வி எனும் வகையில் வரும் அருள் நிறைந்தாக இருக்கும் ஆகம நூல்களைக் கற்று அறிய மாட்டாதவர்களாகவும், ஆத்ம விசாரம் எனும் சுய கேள்விகளை கேட்டு மெய்ப் பொருளை அறிய மாட்டாதவர்களாகவும், உலகியலில் ஏற்படும் இன்ப துன்பத்திற்கு காரணமான இருவினையின் வினைப் பயன்களையும் அறிய மாட்டாதவர்களாகவும், தன்னை குரு உபதேசம் செய்யத் தக்கவர்கள் என்று எண்ணி, அண்டியவர்களின் தேவைகளின் பொருட்டு உபதேசம் செய்யாமல் எதிர்ப்படும் அனைவருக்கும் உபதேசம் செய்வார்கள்; இவர்கள் அருளக்கூடிய மார்கம் எவ்வாறு எனில் குருடர் ஒருவர்க்கு மற்றொரு குருடர் கோல் கொடுத்து வழிகாட்டி வருவது போன்றதே.
விளக்கஉரை
ஞானி மெய் ஞானம் பெறுவதன் பொருட்டு அஞ்ஞானிக்கு அருள் உபதேசம் புரியலாம். ஆனால் அஞ்ஞானி, இன்னொரு அஞ்ஞானிக்கு உபதேசம் புரிந்தால், இருவருமே நரகம் புகுந்து, பிறவிக் குழியிலும் விழுவர்.
குருடனுக்குக் குருடன் கோல் கொடுத்தல் எனும் பழமொழியை விளக்கும் பாடல்
முற்றுமே அவனொழிந்து முன்பின் ஒன்றும் காண்கிலேன் பற்றில்லாத ஒன்று தன்னை பற்றி நிற்க வல்லது கற்றதாலே ஈசர் பாதங் காணலா யிருக்குமோ பெற்ற பேரை அன்புடன் பிரியமாகக் கேளுமே
அருளிய சித்தர் : சிவவாக்கியர்
பதவுரை
அனைத்திலும் அவனே வியாபித்து இருப்பதால் அனைத்திலும் அவனைத் தவிர முன்னும் பின்னும் வேறு ஒன்றையும் காண்கிலேன்; எதையும் பற்றி நில்லாமலும் அநாதியாகவும் இருக்கக்கூடிய பரம்பொருளாகி நம்மை பற்றி நிற்கும் வல்லமை உடையவனாகிய அவனை அடைவது பற்றி கற்ற பின்னும் அவனுடைய திருவடிகளைக் காணாமல் இருக்கலாமோ? அவனையே முழுமையாக நினைந்து அவனுடைய திருவடிகளை அடைந்த குருவிற்கு அன்பும் பக்தியும் கொண்டு அவரிடத்தில் கேட்டால் குரு அதுபற்றி உணர்த்துவார்கள்.
உடலில்வாழ்வியல் முறைக்கு தர்மத்தில் விதிக்கப்பட்டவாறு நல்லவழிகளை நாடி இருப்பாயாக; எக்காலத்திலும் பரமனை விருப்பத்துடன் நாடி இருப்பாயாக; நல்ல செயல்களை நிகழ்த்தவல்ல மெய்ஞானம் பெற்ற வல்லவர் கூட்டத்தில் சேர்ந்து இருப்பாயாக; கேட்பனவற்றை எல்லாம் அருள வல்லவனாக வள்ளலை அருளியதன் பொருட்டு நெஞ்சத்தில் வைத்துக் கொண்டாடுவாயாக.
உடலில் இருக்கும் ஆதார சக்ரங்களில் ஒன்றானது மூலாதாரம்; அதில் முக்கோண வட்டம் உடையதாக இருக்கும்; தூய வடிவமாக இருக்கக்கூடிய கணேசனுக்கு அது ஆதார இடமாகும்; அங்கு வல்லபை எனும் சக்தியுடன் அவர் அங்கு இருக்கிறார்.
கருத்து – உன்னைப் பற்றி எண்ணாமல் கல்மனம் உடையவனாகி துன்பக்கடலில் உழல்வோனாகிய தன்னைக் காப்பாற்ற வேண்டும் என ஈசனிடம் விண்ணபிக்கும் பாடல்.
பதவுரை
இறைவனே! மின்னலின் அழகை ஒத்த உன்னுடைய திருவடியை அடைந்தவர்கள் இந்த அகன்ற உலகைக் கடந்தார்கள்; தேவர்கள் எல்லாம் பொன் போன்ற நிறத்தினை உடைய மலர்களால் போற்றுதலுக்கு உரிய வகையில் அருச்சனை செய்து வணங்கி நின்றார்கள்; கல்லை ஒத்த மனத்தை உடையவனாய்க் உன்னுடைய திருவருள் கூடாமல் உன்னால் கழிக்கப்பட்டுத் துன்பக் கடலில் வீழ்ந்த யான், இனி உன்னை எவ்வாறு அடைய முடியும் எனும் வகையைச் சொல்வாயாக.
விளக்கஉரை
மின் ஏர் அனைய – மின்னலினது அழகை ஒத்த
பொன் ஏர் அனைய மலர் – பொன்னின் அழகையொத்த பூக்கள்; இவை கற்பகத் தரு போன்றவை
அடியார்கள் அடைந்த பெரும்பேற்றினை. `கடையேனாய்` என உயர்திணையாக
உரையாமல் சிறுமை கொண்டிருப்பதை வைத்து ‘கடையாய்’ என அஃறிணையாக உரைத்தார்,
என்நேர் அனையேன் – இழிவினால் எனக்கு ஒப்பார் பிறரின்றி, என்னையே ஒத்த யான்
அன்னம் இட்ட பேரெலாம் அநேக கோடி வாழவே சொன்னம் இட்ட பேரெலாம் துரைத்தனங்கள் பண்ணலாம் விண்ணம் இட்ட பேரெலாம் வீழ்வார் வெந் நரகிலே கன்னம் இட்ட பேரெலாம் கடந்து நின்ற திண்ணமே!
அருளிய சித்தர் : சிவவாக்கியர்
பதவுரை
பசித்து வந்தவர்களுக்கு அன்னதானம் செய்தவர்கள் காலம் கடந்து வாழ்வதை அறியாமல், அன்னதானம் செய்வதற்கு பொன், பொருள் ஈந்தவர்கள் பொருள் ஈதல்பற்றி கர்வம் கொண்டு அதிகாரம் செய்யலாம்; ஐம்புலக் கள்வர்களை விலக்காமல் அவைகளைக் கடந்து நின்ற பரம்பொருளை அறியாதவர்கள் இறைவன் அனைத்து உயிர்களிலும் கலந்து இருப்பதை அறியாமல் அன்னதானம் செய்வதை குறித்து எதிர்மறை கருத்துக்கள் பேசி, குற்றம் என்று கூறி துன்பம் தரத்தக்க பாழும் நரகக் குழியில் வீழ்ந்து துயறுருவார்கள்.