முழந்தாள் அளவு நீண்ட கைகளை உடையவனாகவும், தாமரைப் பூப்போன்ற திருவடிகளை உடையவனாகவும், அல்லி போன்ற பூக்களை சூடியவனாகவும்*, வீணையைக் கைகளில் கொண்டவனாகவும், ஆடுவதால் ஒலிக்கின்ற கிண்கிணிகளை அணிந்த திருவடிகளை உடைய மேம்பட்டவனாய்த் தீயில் கூத்தாடும் பெருமானை அடியேன் தரிசித்த தலம் ஆரூராகும்.
விளக்கஉரை
*கோடலா வேடத்தன் – பிறரால் கொள்ள முடியாத வேடத்தினன் எனும் பொருளில் சில இடங்களில் விளக்கப் பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
தாட வுடுக்கையன் – முழந்தாள் அளவு நீண்ட கை அரசர்களுக்கு உரிய உத்தம இலக்கணம். ‘தாள்தொடு தடக்கை அத்தருமமே அனான்’ எனும் கம்பராமாயண பாடலுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
ஆரணியம் என்று அழைக்கப்படும் காட்டில் வாழும் அழகரே, யான் எல்லாப் பக்கங்களிலும் குயில்கள் பாடுகின்ற திருப்பைஞ்ஞீலியில் நிற்கும் பொழுது நீர், ‘தக்கை, தண்ணுமை, தாளம், வீணை, தகுணிச்சம், கிணை, சல்லரி, சங்கு, குடமுழா’ ஆகிய வாத்திய கருவிகளுடன், பல இசைகளைப் பாடிக் கொண்டு முன்வந்து நின்று ஆடினாலும், அதற்கேற்ப நல்ல அணிகளை அணியாது, எலும்பையும், ஆமையோட்டையும் அணிந்து கொண்டு ‘சிறிது பிச்சை இடுமின்’ என்று சொல்லி வந்து நிற்கின்றீர்.
இசைக்கருவிகள் அறிமுகம் : ஆகுளி (வேறு பெயர் – சிறுகணாகுளி)
ஓவியம் : shaivam.org
பாடல்
வெல் படைத் தறுகண் வெஞ்சொல் வேட்டுவர் கூட்டம் தோறும் கொல் எறி குத்து என்று ஆர்த்துக் குழுமிய ஓசை அன்றிச் சில்லரித் துடியும் கொம்பும் சிறு கண் ஆகுளியும் கூடி கல் எனும் ஒலியின் மேலும் கறங்கிசை அருவி எங்கும்
பன்னிரண்டாம் திருமுறை – பெரிய புராணம் – சேக்கிழார்
பதவுரை
வெல்லும் படையும், அஞ்சாமையாகிய வீரம் கொண்ட சொல்லும் உடைய வேட்டுவர் கூட்டங்களில் இருந்து எழும் கொல், எறி, குத்து என்றும் ஆரவாரத்துடன் கூடிய ஒலிகள் மட்டுமல்லாமல், சிலம்பின் பருக்கைக் கற்கள் கொண்டதாகிய சில்லரியின் ஓசையும், உடுக்கையும், ஊதுகொம்பும் சிறிய முகமுடைய சிறுபறையும் சேர்ந்து பெருகுகின்ற ஒலியினும் மிக உயரத்தினின்று பள்ளத்தாக்கில் மலையில் வீழும் அருவிகளாதலின் அவற்றின் வேகமும், கற்கள் மோதுதல் ஏற்படுவதால் தோன்றும் ஒலியும், வளைந்து வளைந்து செல்லுதலால் ஏற்படும் ஒலிகள் முதலியனவும் அங்கே எங்கும் உள்ளன.
இடைக்கருவிகள் அறிமுகம் : முழவம் (குடமுழா, குடபஞ்சமுகி எனும் பஞ்சமுக வாத்தியம் எனும் ஐம்முக முழவம் – தோலிசைக்கருவி)
புகைப்படம் : விக்கிப்பீடியா
பாடல்
துடிக ளோடு முழவம் விம்மவே பொடிகள் பூசிப் புறங்கா டரங்காகப் படிகொள் பாணி பாடல் பயின்றாடும் அடிகள் சோற்றுத் துறைசென் றடைவோமே
தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்
பதவுரை
பலவகையான உடுக்கைகள் ஒலிப்பு சப்தங்களோடு முழவங்களும் நிறைந்து ஒலிக்கத் தம் மேனி மீது திருநீற்றுப்பொடி பூசி, புறங்காடாகிய சுடுகாட்டை கூத்து மேடையாகக் கொண்டு, பொருத்தமான தாள கதிகளோடு பாடல்கள் பாடியும் ஆடியும் அடிகள் எழுந்தருளிய திருச்சோற்றுத்துறையைச் சென்று அடைவோம்.
உண்டு ஆடையின்றி ஊரில் இருப்பவர்கள் எல்லாம் சிரிக்குமாறு திரிபவர்களும், அவர்களைக் கண்டு தாமும் அவ்வாறு திரியாது ஆடையை உடலில் போர்த்து உழலுபவர்களும் கண்டு அறியாத இடமும், தண்டு, உடுக்கை, தாளம், தக்கை இவைகள் ஒன்றாக பொருந்துமாறு நடனம் புரிபவராகவும், அடியவர்களின் துன்பங்களைப் அனாதி காலம் முதல் தீர்த்து அருளிவரும் பரமனார் எழுந்தருளியதும் ஆனது பல்லவனீச்சரமாகும்.
விளக்கஉரை
உடுக்கை – முதலடியில் வரும் உடுக்கை என்பது ஆடை, மூன்றாமடியில் வரும் உடுக்கை என்பது வாத்தியம்.
ஆனை உரித்தபகை அடி யேனொடு மீளக்கொலோ ஊனை உயிர்வெருட்டி ஒள்ளி யானை நினைந்திருந்தேன் வானை மதித்தமரர் வலஞ் செய்தெனை யேறவைக்க ஆனை அருள்புரிந்தான் நொடித் தான்மலை உத்தமனே
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
பதவுரை
யான், புறக்கருவிகளாலும், அகக்கருவிகளாலும் பெற்ற இந்த உடலையும், அதன் வழி பற்றி நிற்குமுயிரையும் விரைவாக செலுத்தி தூய்மையான வெண்ணிறம் கொண்டவனை நினைத்திருத்தலை மட்டும் செய்திருந்தேன்; அவ்வாறு செய்த இந்த சிறு செயலுக்காக திருக்கயிலையில் வீற்றிருந்து அருளும் அம்முதல்வன், வான் உலகத்தையே பெரிதாக மதிக்கும் தேவர்கள் என்னை நாடி வரும்படியும், வந்து வலம் செய்து ஏற்றிச் செல்லுமாறும் செய்து, ஓர் யானை ஊர்தியை எனக்கு அளித்தருளினான்; எம் மேல் வைத்த பேரருள் என்பது அவன் முன்னொருமுறை யானையை உரித்து அதற்கு அருள் செய்யக் கருதியதற்கு ஒப்பானது.
விளக்கஉரை
வெருட்டுதல் – அச்சுறுத்துதல், திகைக்கச்செய்தல், விலங்கு முதலியவற்றை ஓட்டுதல், விரைவாகச் செல்லத் தூண்டுதல்
இழிந்த தன்மை உடைய நாய்க்கும் ஒரு ஆசனமிட்டு, அதற்குப் பெரிய பொன் முடியைப் அணிவித்தாய் என்று நின்னுடைய அன்பர்கள் தங்கள் வாய்க்கு வந்தவாறு பலவாறு பேசுமாறு, உன் அருளைக் கண்டும் உன்னை அறியாத தன்மையால் நன்ஞானம் இல்லாதவனாகி அறிவில்லாத என்னையும் பெரிய அருட் சத்தியாகிய தாய்க்குக் காட்டி, நல்ல குளிர்ந்த அமுதூட்டி ஒரு வெண்மையான மாடத்தில் பொன்னிற மண்டபத்தில் என்னை அமரச் செய்து சிறு குழந்தையை ஒத்து என் கையில் பொன்னாலாகிய கங்கணம் ஒன்றை ஒளி விளங்கக் கட்டி அருளினாய்; நின்னுடைய செய்கையை என்னென்பது.
விளக்கஉரை
‘மதியிலேன்’ – உன் அருளைக் கண்டும் உன்னை அறியாத தன்மையால் நன்ஞானம் இல்லாதவன் எனத் தம்மை குறிப்பிதல்.
உன் திருவடியை விடும் தன்மை இல்லாத அடியார்களது உடலாகிய வீட்டில் நிலைபெறுகின்ற திரு உத்தரகோசமங்கைக்குத் தலைவனே! மலரில் இருக்கும் பூந்தேனே! மாணிக்கமே! அமுதமே! என் மது வெள்ளமே! பூந்தேனே! மாணிக்கமே! அமுதமே! என் மதுப்பெருக்கே! உன் திருவடியை விடுதல் இல்லாத அடியாரது உடலாகிய வீட்டில் நிலைபெறுகின்ற, திரு உத்தரகோச மங்கைக்குத் தலைவனே! கடல் நீரில் நாய் நக்கிப் பருகினது போல உனது கருணைக் கடலினுள்ளே, உள்ளத்தை அழுந்திச் செல்ல விடாத என்னை விட்டு விடுவாயோ?
விளக்கஉரை
‘இறைவனது கருணை ஏகவுருவாய் எங்கும் பரந்து கிடப்பினும் உயிரினது தன்மைக்கேற்பவே அதைப் பெற முடியும்‘ என்பது பற்றியப் பாடல்
‘விடலரியேனை’ – முழுதும் மூழ்கும் படி விட்டுப் பருகாது, சிறிதே சுவைத்து ஒழிவேனை என்னும் உவமைக்கேற்ப உரைத்தல்
மடலின் மட்டு – பூவிதழில் துளிக்கின்ற தேன் (மிகச் சிறிய அளவு)
மதுவெள்ளம்- தேன் வெள்ளம்(பெருகிய மிக அதிக அளவு)
இறைவனுக்கு அடியாரது உடல் ஆலயமாதலின், ‘அடியார் உடல் இலமே மன்னும்’ என்ற அடிகள் கொண்டு அறியலாம்; ‘ஊனுடம்பு ஆலயம்’ என்ற திருமூலர் வாக்கையும் ஒப்பு நோக்கிக் காண்க.
விரும்பத்தக்க பெண் யானையைப் போலவும், இளமையும் அழகியதுமான அன்னம் போன்ற நடையினை உடையவளாகிய பார்வதி தேவியை தம்முடைய துணைவியாகக் கொண்டு மகிழ்பவரும், பூதகணங்கள் நின்று இசை பாட அதற்கேற்ப ஆடுபவரும், நீண்டதும், பரந்து விரிந்ததும் ஆன சடை மீது கங்கையை அணிந்தவரும் வேதங்களையும், ஏழிசைகளையும் பாடுபவரும் ஆகிய இறைவர் தம்முடைய இடமாக விளங்கும் திருத்தலம் எதுவெனில் ஆழ்ந்த கடலின் வெண்மையான அலைகள் ஆரவாரித்து நுரைகளோடு கரையில் யாழ் ஓசையை ஒத்து விளங்குமாறு இருப்பதும், அதன் அருகில் புன்னை மரங்களில் பூத்த மகரந்தம் பொருந்திய மலர்களில் வண்டுகள் ஒலிக்கவும், அழகிய சோலைகளில் குயில்கள் பாடவும் கொண்டு விளங்கக் கூடியதான திருத்தருமபுரம் என்னும் நகராகும்.
விளக்கஉரை
பண் : யாழ்முறி
மடப்பிடி – பெண் யானை
புன்னை – நெய்தல் சார்புடையதல் பற்றி
திருஞானசம்பந்தரின் பதிகங்களின்மேல் அளவிலாத பக்தியுடைய திருநீலகண்ட யாழ்ப்பாணர், அவற்றுக்கு மரியாதை செய்யும் விதமாகவே அந்தப் பதிகங்களைத் தம்முடைய யாழ் வாத்தியத்தின் மூலம் இசைத்துவந்தவர். திருஞானசம்பந்தர் இத் திருத்தலம் வந்த போது யாழ் வாத்தியத்தால் வாசிக்க முடியாத அளவுக்கு ஒரு பதிகத்தைப் பாட வேண்ட, திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் இது. பதிகத்தில் வரும் `எழில் பொழில் குயில் பயில் தருமபுரம்பதியே..’ எனும் வரிகளில் வாசிக்க இயலாமல் போனது.
எக்காலத்திலும் அறிவினால் தன்னை உணர்ந்து உரைப்பவர்களாகவும், அறியாதவர்களாள் உரைக்கப்படும் பொருள் அற்ற வார்த்தைகளை ஏற்காமலும் இருக்கும் ‘நாடவர்’ எனவும் ‘நாட்டார்’ எனவும் அழைக்கப்படுபவர்களாலும் உரைக்கப்படும் சொற்களைக் கேட்டு அறியாதவனும், தனக்கு எந்த வகையிலும் எந்த ஒரு கேடும் இல்லாதவனும், தனக்கென எந்த வகையிலும் உறவு இல்லாதவனும், கேட்டல் என்னும் தொழில் இல்லாமல் இயல்பாகவே எல்லாவற்றையும் கேட்பவனும் ஆகிய இறைவன், என்னுடைய சிறுமையை நோக்காது நாய்க்கு ஆசனம் அளித்து இருக்கையில் அமரச்செய்தது போல தன் அருகில் இருக்கச் செய்து, காட்டுவற்கு அரிதான தன் உண்மை நிலையைக் காட்டி, நான் எந்த காலத்திலும் கேட்காத சிவாகமங்களின் பொருள்களைக் கேட்பிக்கச் செய்து, மீண்டும் நான் பிறவாமல் என்னைத் தடுத்து ஆட்கொண்டான். இது எம்பெருமான் செய்த ஒரு வித்தை ஆகும்.
விளக்கஉரை
தவிசு – இருக்கை; ஆசனம்
‘ஆரும் கேட்டு அறியாதான்` – உலகல் உள்ளவர்களால் கேட்டறியப் படாமை
கேளாதே எல்லாம் கேட்டான் – பிறர் அறிவிக்க பின் அறிவது அல்லாமல், தானே எல்லாவற்றையும் நன்கு உணர்ந்தவன்.
‘நாயினுக்குத் தவிசிட்டு’ – உயர்ந்தவர்களுக்கு செய்யத் தக்கதை இழந்தோர்க்கு செய்ததை அறிவித்தல் பொருட்டு
காண இயலாப் பொருளைக் காணச் செய்தல், கேட்க இயலாப் பொருளை கேட்கச் செய்தல், வினைகளில் இந்து காத்து மீண்டும் பிறவாமல் செய்தல் ஆகியவை உயர்ந்தோர்க்கே செய்யக் கூடியவை; இவற்றையும் எனக்குச் செய்தான் என்பது கருத்து.
அச்சிறுபாக்கத்தை, தான் ஆட்சிபுரியும் இடமாகக் கொண்டுள்ள இறைவனான ஆட்சீஸ்வரர், தமது முறுக்கேறிய பொன் திரண்டதைப் போன்ற சடையையும், பெருங்கடலில் அலைகளில் தோன்றியதும், தீ வண்ணத்தை ஒத்ததுமான பவள கொடியையும் கொண்டு, குன்றுகள் போன்ற தரும் இரண்டு தோள்களில் வெண்மையான முப்புரி நூலோடு வளமையான திருநீற்றையும் அணிந்து, மின்னலைப் போன்ற நுண்ணிய இடையினையும், மென்மைத் தன்மையும் வாய்ந்த இளம் பெண்ணாகிய பார்வதி தேவியை ஒரு பாகமாக விரும்பி ஏற்று, ஓர் உருவில் இரண்டு உருவாய்த் தோன்றும் அடிகளாவார்.
விண்ணுலகில் தோன்றிய தேவர்களும், திருமால், பிரமன், இந்திரன் முதலானவர்களும், காட்டில் சென்று ஊண் உறக்கமின்றி, தம்மை மறந்து கடும் தவம் செய்தும் காண்பதற்கு அரியவனாகிய சிவபெருமான் தானே வலிய வந்து நாய் போன்றவனாகிய அடியேனைத் தாய்போலக் கருணை செய்து, உயிரினை உருகச் செய்து, என் ரோமங்கள் விதிர்விதிர்க்குமாறு செய்து, இனிமையான அமுதம் போல், தெளிவான ஒளிவடிவமான அவன் பெருமை பொருந்திய திருவடியைப் புகழ்ந்து அம்மானைப் பாட்டாக பாடுவோமாக.
விளக்கஉரை
‘தேவர்களும் நிலவுலகத்திற்கு வந்து தவம் புரிகின்றனர்` எனும் பொருளில். இந்திரன் சீகாழிப்பதியில் தங்கித் தவம் புரிந்தது – கந்த புராணம் உரைத்தது
‘கானின்று வற்றியும்’ – ஊண் உறக்கமின்றித் தவம் புரிதல்
திருநீற்றுப் பொடியை எடுத்து அணியச் சென்று, அந்தக் காரணத்தை மறந்து, பின் வெறும் மடியைத் தட்டிப் பார்த்து, இல்லாமையை உணர்ந்து அதற்காக இறங்கி, அவ்வாறு இல்லாமல் தன்னை அலங்கரித்துக் கொள்ளும் கடையனானவனும், சிலர் கையில் தடி எடுத்து வரக்கண்டு, அதனால் அச்சம் உண்டாகி , மனம் கலங்கி வேறிடம் நாடி விரைந்தோடுவோனும் ஆகிய முடிவெடுக்க இயலாத யான், இவ்வுலகில் நினது திரு அருள் துணை இல்லையாயின் முடிவெடுப்பதும் தலை நிமிர வல்லவனும் ஆவேனோ? முன் வைத்த காலைத் தான் எடுக்க வல்லவன் ஆவேனோ?? ஐயோ, சிறியவனாகிய என்னால் யாது செய்ய முடியும்?
விளக்கஉரை
திருவருளின்றி ஒரு செயலும் செய்ய இயலாது என்பதை தெரிவிக்கும் பாடல்
பொடி – திருநீற்று வெண் பொடி.
மடி – அரையில் உடுத்த ஆடையின் மடித்த கூறு.
‘பொடி எடுக்கப் போய் அதனை மறந்து மடி எடுத்து அரையிற் புனைவேன்’ – கொண்ட சிந்தையில் நிலைத்தன்மையும், மன வலிமையும், வினையும் உடையவன் அல்ல என்பதை உரைத்தல்.
‘உளம் கலங்கி யோடுவேன்’ – தம் வழியில் செல்லும் சிலர் கையில் தடி ஏந்தி செல்வது கண்டால் தம்மை அடிப்பரென அஞ்சி ஒதுக்கிடம் நாடி ஓடும் கீழ்மைப் பண்புடையவன்
திருத்தமான மாடங்கள் உடையதும், உயர்ந்து தோன்றுகின்றதும், பெரும் புகழ் கொண்டதும் ஆன திருவாஞ்சியத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனானவர், பகைவர் கவர்ந்து சென்ற தம் ஆநிரைகளை மீட்டுவருவதை குறிப்பிடுவதாகிய கரந்தைப் பூவினாலும், முக்கூறுகளைக் கொண்டதும், திரிசூலத்தின் குறியீடாகவும் உள்ளது கூவிள இலை என்பதான வில்வ இலையாலும், மணம் பொருந்திய கொன்றை மலராலும் ஆகிய மாலைகளைச் சூடிக்கொண்டு, மிகுந்த பூதகணங்கள் புடைசூழ பரமனாகி நம் இறைவனானவரும், அமுதம் போல்பவரும், தம் அடியாரை வலிய வினைகள் வந்து துன்புறுத்தாமல் காப்பவரும் ஆவர்.
விளக்கஉரை
மாயைக்கு உட்பட்ட பசுவாகிய உயிர்களை மீட்கும் பதி எனும் சைவ சித்தாந்த கருத்து ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
சிவன் மற்றும் அம்பாள் இருவரும் மேற்கு நோக்கி திருக்காட்சி. மூலவர் மற்றும் அம்பாள் பீடங்களின் கோமுகமும் வடக்கு நோக்கிய வித்தியாசமான அமைப்பு
சூரசம்ஹாரத்தால் உண்டான பாவங்கள் நீங்க முருகப்பெருமான் சிவனை பிரதிஷ்டை செய்து வழிபட்டத் தலம்
சண்முகநாதர் கையில் வேல் இல்லாமலும், வாகனமான மயிலும் இல்லாமலும் திருக்காட்சி
சேரமான் பெருமானின் சிறப்பு விருந்தினராக சென்று பொன்னும் பொருளுடன் திரும்பியபோது கூப்பிடு விநாயகர் கோவிலில் இரவைக் கழித்த சுந்தரரிடமிருந்த பரிசுப் பொருட்களைத் தன் பூதகணங்களை வேடுவர் வடிவில் அனுப்பிக் கொள்ளையடிக்கச் செய்ததால், உதவியை நாடிய சுந்தரரருக்கு சிவன் தான் குடிகொண்டிருந்த இடத்தைச் சுட்டிக் காட்டி உதவினார் விநாயகர்; சுந்தரரரும் அங்கு சென்று சிவனைத் திட்டிப் பாட அவரது பாடலில் மகிழ்ந்த சிவன் அவரது பொருட்களைத் திருப்பியளித்து ஆசி வழங்கிய தலம்.
சிவனார் இருக்குமிடத்தை சுந்தரருக்கு உணர்த்திய ‘கூப்பிடு விநாயகர்’ தனியாக பாறைமேல் திருக்காட்சி (அவிநாசியில் இருந்து சுமார் 1 கிமீ தொலைவு)
வில்கையில் ஏந்தியபடி வேட்டுவன் கோலத்தில் நிற்கும் சிவபெருமான் சிற்பமும், இதற்கு எதிரில் சுந்தரர் கவலையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கும் இரு சிற்பங்கள்; பரிசுப்பொருள்களை பறிகொடுத்த நிலை மற்ரும் பறிகொடுத்த பொருள்களை மீண்டும் பெற்றநிலை என இந்த இருநிலைகளைக் காட்டும் வகையில் சுந்தரரின் இந்த இரண்டு சிற்பங்கள்
இங்குள்ள தல விருட்டமான மாதவி மரம் எனும் குருக்கத்தி மரம் துர்வாசர் மேலுலகில் இருந்து எடுத்துவந்தது
பிரம்மதாண்டவம் என போற்றப்படும் நடராஜரின் தாண்டவ வடிவம்
பிரம்மஹத்தி தோஷத்தை போக்கவல்ல தலம்.
தலபுராணத்தின் படி பிரம்மஹத்தி தற்போது கோயிலின் வெளியே உள்ள வேம்படி முருகர் சந்நிதியின் அருகே உள்ள சதுரகல்லாக உள்ளது
கோயிலுக்கு வெளியே உள்ள பிள்ளையார் கோயிலின் எதிரில் உள்ள பாறையில் உள்ள சிறுகுழியில் 12 வருஷங்களுக்கு ஒருமுறை நீர் பொங்குவது சிறப்பு
மாலாதரன் எனும் வேடமன்னன் வழிபட்ட பைரவர் சந்நிதி
தலபுராணம் செட்டிப்பாளையம் வாசுதேவ முதலியார் பாடப்பட்டது
சண்முக தீர்த்தம் , பிரம்ம தீர்த்தம் மற்றும் ஞான தீர்த்தம்
விழாக்கள்
தை மாதத்தில் வேடுபரி உற்சவம், மாசி மாதத்தில் 13 நாட்கள் பிரம்மோற்சவம், மகா சிவராத்திரி , திருக்கார்த்திகை , மார்கழி ஆருத்ரா தரிசனம் , ஐப்பசி அன்னாபிஷேகம் , கந்தசஷ்டி , தைப்பூசம் , நவராத்திரி , வைகாசி விசாகம்
மாவட்டம்
திருப்பூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை ௦6:௦௦ முதல் 12:3௦ வரை
மாலை ௦4:௦௦ முதல் ௦8:௦௦ வரைஅருள்மிகு திருமுருகன்நாதசுவாமி திருக்கோயில்,
திருமுருகன்பூண்டி – 641652. திருப்பூர் மாவட்டம்.
04296-273507, 94434-59074
வழிபட்டவர்கள்
அகத்தியர், மார்க்கண்டேயர், துர்வாசர்
பாடியவர்கள்
சுந்தரர் 1 பதிகம், அருணகிரிநாதர் திருப்புகழ்
நிர்வாகம்
இருப்பிடம்
அவினாசியில் இருந்து சுமார் 5 கிமீ தொலைவு, திருப்பூரில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் வழியில் சுமார் 8 கிமீ தொலைவு, கோயம்புத்தூரில் இருந்து சுமார் 43 கிமீ தொலைவு
இதர குறிப்புகள்
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7
பதிக எண் 49
திருமுறை எண் 5
எம்பெருமான் நீரே! நீர் விளங்குகின்ற தோலை உடுத்தி, சாம வேதத்தைப் பாடிக்கொண்டு, அப்பாட்டினால் மயங்கி ஊரில் உள்ளவர்கள் இடுகின்ற பிச்சையை ஏற்று உண்பதற்கு வழி ஒன்றும் அறியவில்லையா? பல இடங்களுக்குச் செல்ல வலிமையும் உடையீர் என்றால், தழுவுகின்ற அணிகளை அணிந்த தனங்களையுடைய தேவியோடும் இம் முருகன்பூண்டி மாநகரிடத்து இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர்?
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7
பதிக எண் 49
திருமுறை எண் 6
எம்பெருமான் நீரே!, நீர் கொட்டிப் பாடுதற்கு உரிய தாள அறுதிக்கு ஏற்ப விட்டு விட்டு ஒலிக்கின்ற ‘கொக்கரை , கொடு கொட்டி , தத்தளகம் , துந்துமி , குடமுழா’ என்னும் வாத்திய கருவிகள் ஆகிய இவற்றை விரும்புவராய் உள்ளீர்; அதுமட்டும் அல்லாமல் ஊரில் இருப்பவர்கள் இட்ட பிச்சையை ஏற்று உண்பீர்; பலவகை அரும்புகள் அலர்ந்து மணம் கமழ்கின்ற இம் முருகன் பூண்டி மாநகரிடத்து இங்கு எதன்பொருட்டு இருக்கின்றீர்?
(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)
கான நாடு கலந்து திரியிலென் ஈன மின்றி யிரும்தவஞ் செய்யிலென் ஊனை யுண்ட லொழிந்துவான் நோக்கிலென் ஞான னென்பவர்க் கன்றிநன் கில்லையே
தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்
பதவுரை
இறைவன் ஞான வடிவினன் என்பதை அறிதவர்களுக்கு மட்டுமே நற்பயன் கிடைக்கும்; அவ்வாறு இல்லாமல் க்ஷேத்திராடனம் என்பதன் பொருட்டு காடு மற்றும் நாடு சார்ந்த பகுதிகளில் மாறிமாறி திரிந்தாலும், அங்கங்கள் ஊனம் ஆகும் அளவிற்கு பெருந்தவம் செய்தாலும், ஊனுண்டலை விடுத்து, தத்துவ ஆராய்ச்சி ஆகிய ஆத்ம விசாரத்தில் ஈடுபட்டாலும் என்ன பயன் கிடைக்கக் கூடும்?
வைத்த பொருளும் மருவுயிர்ப் பன்மையும் பத்து முகமும் பரையும் பாரபரச் சித்தக் கரணச் செயல்களும் செய்திடும் சத்தியும் வித்தைத் தலைவிய ளாமே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
அம்மையானவள், அருளால் தோற்றுவித்துள்ள உலகமும் மற்றும் உண்பொருள்களும் அந்த உண் பொருள்களுடன் இணைந்த அழிவில்லாத பலவுயிர்களும், எண் திசைகளுடன் கூடி மேல் மற்றும் கீழ் இணைந்த பத்துத்திசையிலும், நிறைந்து நின்று இயக்கும் தன்மையால் பத்து முகம் உடையவளாகவும், சிவசக்தி வடிவமாகவும், சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி முதலிய நால்வகை வாக்குகளும், மனம், சித்தம், புத்தி, அகங்காரம் ஆகிய அந்தக்கரணங்களது உயர்வும், தாழ்வுமாகிய எண்ண அலைவுகளும், அவ் எண்ணங்களின் வழி நிகழ்கின்ற செயலாகவும் நிற்பாள்.
விளக்கஉரை
திரிபுரை வழிபாட்டு முறைகளும், அவற்றின் பயன்களும் விளக்கப்பட்டுள்ளது
கொம்பு அனையாளை குவிமுலை மங்கையை வம்பு அவிழ் கோதையை வானவர் நாடியைச் செம் பவளத் திருமேனிச் சிறுமியை நம்பி என் உள்ளே நயந்து வைத்தேனே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
பூங்கொம்பு கொம்பு போன்ற துவளும் இடையினை உடையாளை, குவிந்த அழகிய தனங்களையுடைய மங்கையை, மணம் வீசுகின்ற மலர்சூடிய கூந்தலை உடையவளை, தேவர்களால் விரும்பிப் பூசிக்கப்படுபவளை, செம்மையான பவழம் போன்ற திருமேனியை உடைய ஆகிய திரிபுரையை பெருந்துணையென்று உறுதியாக நம்பி மிக விரும்பி என் உள்ளத்துள் வைத்தேன்.
விளக்கஉரை
திரிபுரையின் தியானச் சிறப்பு பற்றிக் கூறப்பட்டப் பாடல்
சிறுமி – கௌரி; எட்டு அல்லது பத்து ஆண்டுப் பருவப்பெண்.
வானவர் நாடியை – தேவ வாழ்வினை உடையவள் என்றும் சில இடங்களில் விளக்கப்பட்டுளது. தேவ வாழ்வினை கொண்டவள் ஆயினும் அவள் எப்பொழுதும் சிறுமியாக இருக்கிறாள்.
`மென்கடிக் குங்கும தோயம் என்ன’ எனும் அபிராமி அந்தாதி பாடலுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
போகம் செய் சத்தி , புரிகுழ லாளொடும் பாகம் செய்து ஆங்கே பராசத்தியாய் நிற்கும், ஆகம் செய்து ஆங்கே அடியவர் நாள்தோறும் பாகம் செய் ஞானம் படர்கின்ற கொம்பே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
திரிபுரை ஆனவள், உயிர்களுக்கு இன்பத்தைத் தருபவள் சக்தி; திரண்டு சுருண்ட நீண்ட கூந்தலை உடைய பராசக்தி ஆகி உயிர்களை பக்குவப்படுத்துவாள்; அடியார்கள் தினம்தோறும் தங்கள் உள்ளத்தில் அவளை தியானிக்க, அவர்களது உள்ளத்தைப் பக்குவப்படுத்தி, உண்மை ஞானமாகிய கொடி படருவதற்கு ஏற்ற கொழு கொம்பாய் நிற்கின்ற அருட்சத்தி ஆனவள்.
விளக்கஉரை
சிவபெருமானுடைய பஞ்ச சத்திகளுள் ஒன்றானதும், ஆன்மாக்களுக்கு உலக அனுபவங்களை தந்து உண்மையை மறைத்தல் செய்யும் சத்தி ஆகிய திரோதான சத்தியும், அருள் சத்தியும் வேறு வேறு அல்ல என்பதைக் கூறும் பாடல்.