தல வரலாறு(சுருக்கம்) / சிறப்புகள் – திருமுருகன்பூண்டி
- முருகநாதசுவாமி சுயம்பு மூர்த்தி
- சிவன் மற்றும் அம்பாள் இருவரும் மேற்கு நோக்கி திருக்காட்சி. மூலவர் மற்றும் அம்பாள் பீடங்களின் கோமுகமும் வடக்கு நோக்கிய வித்தியாசமான அமைப்பு
- சூரசம்ஹாரத்தால் உண்டான பாவங்கள் நீங்க முருகப்பெருமான் சிவனை பிரதிஷ்டை செய்து வழிபட்டத் தலம்
- சண்முகநாதர் கையில் வேல் இல்லாமலும், வாகனமான மயிலும் இல்லாமலும் திருக்காட்சி
- சேரமான் பெருமானின் சிறப்பு விருந்தினராக சென்று பொன்னும் பொருளுடன் திரும்பியபோது கூப்பிடு விநாயகர் கோவிலில் இரவைக் கழித்த சுந்தரரிடமிருந்த பரிசுப் பொருட்களைத் தன் பூதகணங்களை வேடுவர் வடிவில் அனுப்பிக் கொள்ளையடிக்கச் செய்ததால், உதவியை நாடிய சுந்தரரருக்கு சிவன் தான் குடிகொண்டிருந்த இடத்தைச் சுட்டிக் காட்டி உதவினார் விநாயகர்; சுந்தரரரும் அங்கு சென்று சிவனைத் திட்டிப் பாட அவரது பாடலில் மகிழ்ந்த சிவன் அவரது பொருட்களைத் திருப்பியளித்து ஆசி வழங்கிய தலம்.
- சிவனார் இருக்குமிடத்தை சுந்தரருக்கு உணர்த்திய ‘கூப்பிடு விநாயகர்’ தனியாக பாறைமேல் திருக்காட்சி (அவிநாசியில் இருந்து சுமார் 1 கிமீ தொலைவு)
- வில்கையில் ஏந்தியபடி வேட்டுவன் கோலத்தில் நிற்கும் சிவபெருமான் சிற்பமும், இதற்கு எதிரில் சுந்தரர் கவலையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கும் இரு சிற்பங்கள்; பரிசுப்பொருள்களை பறிகொடுத்த நிலை மற்ரும் பறிகொடுத்த பொருள்களை மீண்டும் பெற்றநிலை என இந்த இருநிலைகளைக் காட்டும் வகையில் சுந்தரரின் இந்த இரண்டு சிற்பங்கள்
- இங்குள்ள தல விருட்டமான மாதவி மரம் எனும் குருக்கத்தி மரம் துர்வாசர் மேலுலகில் இருந்து எடுத்துவந்தது
- பிரம்மதாண்டவம் என போற்றப்படும் நடராஜரின் தாண்டவ வடிவம்
- பிரம்மஹத்தி தோஷத்தை போக்கவல்ல தலம்.
- தலபுராணத்தின் படி பிரம்மஹத்தி தற்போது கோயிலின் வெளியே உள்ள வேம்படி முருகர் சந்நிதியின் அருகே உள்ள சதுரகல்லாக உள்ளது
- கோயிலுக்கு வெளியே உள்ள பிள்ளையார் கோயிலின் எதிரில் உள்ள பாறையில் உள்ள சிறுகுழியில் 12 வருஷங்களுக்கு ஒருமுறை நீர் பொங்குவது சிறப்பு
- மாலாதரன் எனும் வேடமன்னன் வழிபட்ட பைரவர் சந்நிதி
- தலபுராணம் செட்டிப்பாளையம் வாசுதேவ முதலியார் பாடப்பட்டது
ஓவியம் : Vishnu Ram
தலம் | திருமுருகப்பூண்டி |
பிற பெயர்கள் | மாதவிவனம் , முல்லைவனம் , கந்தமாபுரி |
இறைவன் | முருகநாதேஸ்வரர், முருகநாதசுவாமி |
இறைவி | முயங்குபூண் முலையம்மை, ஆலிங்கபூஷணஸ்தனாம்பிகை , ஆவுடை நாயகி , மங்களாம்பிகை |
தல விருட்சம் | குருக்கத்தி மரம் , வில்வமரம் |
தீர்த்தம் | சண்முக தீர்த்தம் , பிரம்ம தீர்த்தம் மற்றும் ஞான தீர்த்தம் |
விழாக்கள் | தை மாதத்தில் வேடுபரி உற்சவம், மாசி மாதத்தில் 13 நாட்கள் பிரம்மோற்சவம், மகா சிவராத்திரி , திருக்கார்த்திகை , மார்கழி ஆருத்ரா தரிசனம் , ஐப்பசி அன்னாபிஷேகம் , கந்தசஷ்டி , தைப்பூசம் , நவராத்திரி , வைகாசி விசாகம் |
மாவட்டம் | திருப்பூர் |
திறந்திருக்கும் நேரம் / முகவரி | காலை ௦6:௦௦ முதல் 12:3௦ வரை மாலை ௦4:௦௦ முதல் ௦8:௦௦ வரைஅருள்மிகு திருமுருகன்நாதசுவாமி திருக்கோயில், திருமுருகன்பூண்டி – 641652. திருப்பூர் மாவட்டம். 04296-273507, 94434-59074 |
வழிபட்டவர்கள் | அகத்தியர், மார்க்கண்டேயர், துர்வாசர் |
பாடியவர்கள் | சுந்தரர் 1 பதிகம், அருணகிரிநாதர் திருப்புகழ் |
நிர்வாகம் | |
இருப்பிடம் | அவினாசியில் இருந்து சுமார் 5 கிமீ தொலைவு, திருப்பூரில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் வழியில் சுமார் 8 கிமீ தொலைவு, கோயம்புத்தூரில் இருந்து சுமார் 43 கிமீ தொலைவு |
இதர குறிப்புகள் |
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7
பதிக எண் 49
திருமுறை எண் 5
பாடல்
தயங்கு தோலை உடுத்துச் சங்கர
சாம வேதமோதி
மயங்கி ஊரிடு பிச்சை கொண்டுணும்
மார்க்க மொன்றறியீர்
முயங்கு பூண்முலை மங்கை யாளொடு
முருகன்பூண்டி மாநகர்வாய்
இயங்க வும்மிடுக் குடைய ராய்விடில்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே
பொருள்
எம்பெருமான் நீரே! நீர் விளங்குகின்ற தோலை உடுத்தி, சாம வேதத்தைப் பாடிக்கொண்டு, அப்பாட்டினால் மயங்கி ஊரில் உள்ளவர்கள் இடுகின்ற பிச்சையை ஏற்று உண்பதற்கு வழி ஒன்றும் அறியவில்லையா? பல இடங்களுக்குச் செல்ல வலிமையும் உடையீர் என்றால், தழுவுகின்ற அணிகளை அணிந்த தனங்களையுடைய தேவியோடும் இம் முருகன்பூண்டி மாநகரிடத்து இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர்?
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7
பதிக எண் 49
திருமுறை எண் 6
பாடல்
விட்டி சைப்பன கொக்க ரைகொடு
கொட்டி தத்தளகம்
கொட்டிப் பாடுமித் துந்து மியொடு
குடமுழா நீர்மகிழ்வீர்
மொட்ட லர்ந்து மணங் கமழ்முரு
கன்பூண்டி மாநகர்வாய்
இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே
பொருள்
எம்பெருமான் நீரே!, நீர் கொட்டிப் பாடுதற்கு உரிய தாள அறுதிக்கு ஏற்ப விட்டு விட்டு ஒலிக்கின்ற ‘கொக்கரை , கொடு கொட்டி , தத்தளகம் , துந்துமி , குடமுழா’ என்னும் வாத்திய கருவிகள் ஆகிய இவற்றை விரும்புவராய் உள்ளீர்; அதுமட்டும் அல்லாமல் ஊரில் இருப்பவர்கள் இட்ட பிச்சையை ஏற்று உண்பீர்; பலவகை அரும்புகள் அலர்ந்து மணம் கமழ்கின்ற இம் முருகன் பூண்டி மாநகரிடத்து இங்கு எதன்பொருட்டு இருக்கின்றீர்?
(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)