அமுதமொழி – சார்வரி – மாசி – 19 (2021)


பாடல்

ஓங்கார மேநல் திருவாசி உற்றதனில்
நீங்கா எழுத்தே நிறைசுடராம் – ஆங்காரம்
அற்றார் அறிவர்அணி அம்பலத்தான் ஆடலிது
பெற்றார் பிறப்பற்றார் பின்

திருநெறி 4 – உண்மை விளக்கம் – மனவாசகங்கடந்தார்

கருத்து – ஓங்காரத்தினை நல்ல திருவாசியாக அமையப்பெற்று திருவம்பலத்தான் திருநடனம் காண்பவர்கள் சனனம், மரணம் அற்றவர்கள் என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

பிரணவம் ஆகிய ஓங்காரத்தினை நல்ல திருவாசியாக அமையப்பெற்று, அதில் பொருந்தி, அந்த பிரணவத்தை விட்டு என்றும் நீங்காமல் அதில் பொருந்தி இருக்கும் பஞ்சாக்கரத்தினை நிறைந்த உள்ளொளியாக அமையப் பெற்று, யான் எனது என்னும் மும்மலங்களின் ஒன்றான அகங்காரம் அற்றவர்கள் அறிவார்கள்; இவ்வாறான அழகிய திருவம்பலத்தான் செய்யும் திருநடனத்தினை தரிசித்தவர்களே சனன மரண மற்றவர்கள் ஆவார்கள்.

விளக்கஉரை

  • நடராஜர் திருமேனி வடிவங்களில் காணப்படும் திருவாசியே ஓங்காரமாக உணரப்படும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – மாசி – 18 (2021)


பாடல்

கழுதை குங்குமந் தான்சுமந் தெய்த்தாற்
   கைப்பர் பாழ்புக மற்றது போலப்
பழுது நானுழன் றுள்தடு மாறிப்
   படுசு ழித்தலைப் பட்டனன் எந்தாய்
அழுது நீயிருந் தென்செய்தி மனனே
   அங்க ணாஅர னேயென மாட்டா
இழுதை யேனுக்கொர் உய்வகை யருளாய்
   இடைம ருதுறை எந்தைபி ரானே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – மெய்யறிவு இல்லாமல் உலகில் உழலும் தனக்கு மனம் இரங்கி உய்யும் வகையினை அருள வேண்டும் என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

திருவிடைமருதூரில் எழுந்து அருளுகின்ற எம் குலதேவனேகழுதையானது குங்குமத்தினை பொதி போல் சுமந்து வருந்தினால் சிறப்பு எதுவும் இல்லை எனக் கருதி, அனைவரும் நகைப்பர்; அதுபோல  அடியேன் உனக்கான தொண்டினை மேற்கொண்டு, அதன் உண்மையானப் பயனைப் பெறாமல் மனம் தடுமாறி, வெள்ளத்தில் உண்டாகும் சுழியிடை அகப்பட்டவன் போல  இந்த உலக வாழ்க்கையில் வருத்தம் கொண்டவன் ஆயினேன்; (அவ்வாறே மற்றவர்கள் எள்ளி நகைப்பர் என்பது மறை பொருள்) ‘மனமே, நீ நம் இறைவனுக்கு உண்மையானத் தொண்டினை செய்யாது (புறப்பொருள்கள் குறித்து) கவலை கொண்டிருந்து என்ன பெறப் போகின்றாய்என்று நெஞ்சிற்கு அறிவுறுக்கவும்,  ‘அழகிய கண்களை உடைய சிவனேஎங்களைக் காப்பவனேஎன்று உன்னை அன்பினால் துதிக்கவும் மாட்டாத அறிவில்லாதவனாகிய எனக்கு, நீ  மனம் இரங்கி, உய்யும் நெறி ஒன்றை வழங்கி அருளாய்.

விளக்கஉரை

  • நகைப்பர் -> கைப்பர்
  • அங்கணன் – கண்ணழகு உடையவன், கருணையான நோக்குடையவன், கடவுள்; சிவன்; திருமால்; அருகன்
  • இழுதை – பேய், அறிவின்மை, அறிவிலி, பொய்

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 24-Feb-2021


பாடல்

பற்றற்ற வத்துவைப் பற்றறக் கண்டோர்க்குக்
   குற்றங்கள் இல்லையடி குதம்பாய்
   குற்றங்கள் இல்லையடி
காட்சியாம் காட்சி கடந்த பிரமத்தைச்
   சூட்சியாய்ப் பார்ப்பாயடி குதம்பாய்
   சூட்சியாய்ப் பார்ப்பாயடி

அருளிய சித்தர் : குதம்பைச்சித்தர்

பதவுரை

எண் குணங்களில் ஒன்றான இயல்பாகவே பாசங்களினின்று நீங்கப் பெற்ற வஸ்துவை காரண காரியம் இல்லாமல் பற்றுதல் இல்லாமல் அந்த வஸ்துவைக் காண்போர்க்கு ஆணவம், மாயை, கண்மம் எனும் குற்றங்கள் இல்லாமல் நீங்கிவிடும்.

ஸ்தூலம், சூட்சுமம் ஆகியவற்றால் காணக்கூடிய காட்சிகளைக் கடந்து காட்சியாக (சாட்சி பாவம்) நிற்கக்கூடிய பிரம்மத்தினை சூட்சமமாக பார்ப்பாயாக.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 16-Feb-2021


பாடல்

சிவாய நம என்று சிந்தித்து இருப்போர்க்கு
அபாயம் ஒரு நாளும் இல்லை – உபாயம்
இதுவே; மதியாகும்; அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்

அருளிய சித்தர் : ஔவையார்

பதவுரை

சிவாயநம என்னும் சிவ சிந்தனையில் ஆழ்ந்து இருப்போர்க்கு துன்பம் தரத்தக்கதான அபாயம் எந்த நாளும் இல்லை. இதை அன்றி துன்பத்தை நீக்குவதற்கு வேறு வழி இல்லை; இது நமது பெறப்பட்ட அறிவின் கண்ட சிந்தனையாக இருக்கவேண்டும்; இவை அல்லாதது மற்றவை எல்லாம் விதியின் வழியே பெறப்பட்ட சிந்தனையே ஆகும்.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 11-Feb-2021


பாடல்

அஞ்செழுத்தாய் எட்டெழுத்தாய் ஐம்பத்தோ அட்சரமாய்ப்
பிஞ்செழுத்தாய் எங்கும் பிரணவமாய்க் கொஞ்சப்
பொருளாய் மருளாய்ப் புரையாய் உரையாய்
அருளாய்ந் தனியிருந்த ஆனந்தன்

அருளிய சித்தர் : திரிகோணச் சித்தர்

பதவுரை

உரைத்து குருவருளால் அருளப்படும் ஐந்தெழுத்தாகவும், எட்டு எழுத்தாகவும், ஐம்பத்தி ஒர் எழுத்தாகவும், பஞ்சாக்கரத்தில் சக்தியைக் குறிக்கும்எழுத்தாகிய பிஞ்செழுத்தாகவும், அழைக்கப்படும் பொருளாகவும், மாயையாகி மாயை வடிவமாகவும், பழமை, பெருமை, உயர்வு ஆகியவனாகவும், சொல்லப்படும் சொற்களுக்கு பொருள் தருபவனாகவும், அனைத்தையும் அருளுபவனாகவும், தனியனாகவும் இருந்து அருளக்கூடிய ஆனந்த நிலையில் இருப்பவன் சிவன்.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 09-Feb-2021


பாடல்

வீணாட் கழிவதுவும் விளையாட்டே – சுடலை
சேரும்வரை அழுவதும் விளையாட்டே
மெத்தஞானம் பேசுவதும் விளையாட்டே – குளித்து
வீடுவந்து மறப்பதுவும் விளையாட்டே

அருளிய சித்தர் : கடேந்திர நாதர் என்ற விளையாட்டுச் சித்தர்

பதவுரை

இறை பற்றியும், மெய் ஞானம் பற்றிய ஞானம் சிறிதும் கொள்ளாமல் நாட்கள் கழிவது விளையாட்டே; இருப்பவர் இறந்து அதன்பின் சுடலை  வரை சேர்க்கும் வரை அந்த உயிர் குறித்து அழுவது விளையாட்டே; மெய்ஞானம் பற்றி அறியாது இருந்த போதும் அதை முழுவது அறிந்தது போல் பேசுவதும் விளையாட்டே;  அவரை எரித்தப்பின் வீடு வந்த உடன் அந்த நினைப்பை மறப்பதுவும் விளையாட்டே.

‘நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே’ எனும் திருமந்திரப் பாடலும் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 07-Feb-2021


பாடல்

தானிருந்து மூலஅங்கி தணல்எழுப்பி வாயுவால்
தேனிருந்து அறைதிறந்து தித்திஒன்று ஒத்ததே
வானிருந்து மதியமூன்று தண்டலம் புகுந்தபின்
ஊனிருந்து அளவுகொண்ட யோகிநல்ல யோகியே!

அருளிய சித்தர் : சிவவாக்கியர்

பதவுரை

தானாக தன்னில் மூழ்கி, மூழ்கி  மூலாதாரத்தில் இருந்து யோக மார்கத்தில் இருந்து கனல் எழுப்பி தித்திப்பினை தருவதான தேன் ஒத்தது போன்ற அறைக்கதவினை திறந்து(குரு மூலமாக அறிக), சூரிய கலை, சந்திர கலை மற்றும் சுழுமுனை ஆகிய மூன்று மண்டலங்களின் வழியே வாசியினை செலுத்தி, துவாத சாந்தத்தினை அடைந்தவர்கள் நல்ல யோகிகளாக இருப்பார்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 29-Jan-2021


பாடல்

காலனைக் காலா லுதைத்த வளாம்வாலை
ஆலகா லவிட முண்டவளாம்;
மாளாச் செகத்தைப் படைத்தவ ளாமிந்த
மானுடன் கோட்டை இடித்தவளாம்

அருளிய சித்தர் : கொங்கணர்

பதவுரை

சிவசக்தி ரூபத்தில் காலசம்ஹார மூர்த்தி ஆகி இடது காலை உயர்த்தி காலன் எனும் எமனை உதைத்தவளும், நீல கண்ட வடிவத்தில் இருந்து ஈசன் அருந்திய விஷத்தினை தாங்கியவளும், எண்ணில்லாத இந்த புவனங்களை எல்லாம் படைத்தவளும், மானிட வாழ்வு நீக்கம் பெறுவதன் பொருட்டு அவர்களுக்கு முக்தி அளிப்பவளுமாய் இருப்பவள் வாலை.

வாலைப் பூசை கொண்டோர் பிறவி அறுப்பர் என்பதால், காலனை உதைத்தவள் என்றும், யோக முறையில் கண்டத்திற்கு மேல் பூசை செய்து அன்னையை அடைபவர்களுக்கு விஷம் தீண்டாது என்றும் பொருள் உரைப்பாரும் உண்டு. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – தை – 15 (2021)


பாடல்

கெடுவேன் கெடுமா கெடுகின்றேன்
   கேடி லாதாய் பழிகொண்டாய்
படுவேன் படுவ தெல்லாம்நான்
   பட்டாற் பின்னைப் பயனென்னே
கொடுமா நரகத் தழுந்தாமே
   காத்தாட் கொள்ளுங் குருமணியே
நடுவாய் நில்லா தொழிந்தக்கால்
   நன்றோ எங்கள் நாயகமே

திருவாசகம் – எட்டாம் திருமுறை – மாணிக்கவாசகர்

கருத்து – இறைவன் துன்பத்தைப் போக்க வல்லவன் என்பதுவும், இறைவன் குருவாய் வந்து ஆட்கொண்ட போது உடன் செல்லாது இருந்தமையால்,  இங்கு வினைகளைச் செய்து வேதனைப் படுகிறேன் என்பதையும் கூறும் பாடல்.

பதவுரை

கொடிய நரகத்தில் வீழாது காத்தருள குருமணி எனும் குருவடிவாக இருப்பவனே !  வினை பற்றி நின்று செயல்படுவதால் கெடும் இயல்புடைய யான் கெடும் வழியில் சென்று கெடுகின்றேன்;  இதனால் குற்றம் இல்லாதவனாகிய நீ பழியினை அடைந்தாய்; பட்டு அனுபவிற்பதற்கு உரிய துன்பங்களை எல்லாம் நான் அனுபவிப்பதால் நீ காட்டும் பயன் என்னை?  நீ நடுவு நிலைமையில் நில்லாது ஒழிந்தால் அது உனக்கு அழகாகுமோ எம் தலைவனே?

விளக்கஉரை

  • கேடு இலதாய் – கேடில்லாதவனே
  • கெடுவேன் – கெடும் இயல்புடைய யான்
  • கெடுமா கெடுகின்றேன் – கெடும் வழியில் சென்று கெடுகின்றேன்;
  • குருமணியே – மேலான குரவனே
  • பழி கொண்டாய் – ஆட்கொண்ட பெருமான் முத்திப்பேறு அளிக்காமை பற்றியது
  • நடுவாய் நில்லாது – தம்மைப் பின் நிறுத்தி ஏனைய அடியார்களை உடன் அழைத்துச் சென்றமையை நினைவு கூர்ந்து அவ்வாறே தம்மையும் அழைத்துக் கொண்டருள வேண்டும் என்ற விருப்பம் தெரிவித்து அருளியது

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 28-Jan-2021


பாடல்

பாரப்பா உதயத்தில் எழுந்து இருந்து
பதறாமல் சுழுமுனையில் மனத்தை வைத்துக்
காரப்பா பரிதிமதி இரண்டு மாறிக்
கருவான சுழுமுனையில் உதிக்கும் போது
தேரப்பா அண்ணாக்குள் நின்று கொண்டு
தியங்காமல் சுழுமுனைக்குள் அடங்கும் பாரு
சீரப்பா பதினாறில் எட்டும் நான்கும்
சிதறாமல் மூன்றும் ஒன்றாய் சேர்ந்து போமே

அருளிய சித்தர் : அகத்தியர்

பதவுரை

பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் அதிகாலை நேரத்தில் எழுந்து, எண்ணங்களைச் சிதற விடாமல் செய்து சுழுமுனையில் மனத்தை இருக்கும்படி செய்து, சூரிய கலை எனப்படும் வலது நாசி வழியாகவும், சந்திர கலை எனப்படும் இடது நாசி வழியாகவும் செல்லும் வாசியினை அண்ணாக்குள்  நிலை நிறுத்தும் போது அது இயக்கம் கொள்ளாமல் சுழுமுனையில் அடங்கிவிடும், வாசிபற்றி நின்று பூரகம், ரேசகம், கும்பகம் ஆகியவற்றை மேலே குறிப்பிட்ட எண்ணிக்கையில் செய்யும் போது அவைகள் சுழுமுனையில் ஒன்றாக சேர்ந்து இருக்கும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – தை – 14 (2021)


பாடல்

குறைவிலோம் கொடு மானுட வாழ்க்கையால்
கறைநிலாவிய கண்டன் எண்தோளினன்
மறைவலான் மயிலாடுதுறை யுறை
இறைவன் நீள்கழல் ஏத்தியிருக்கிலே

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து – மயிலாடுதுறை தலத்தில் உறையும் சிவனின் பெருமைகளை உரைத்து அவர்தம் திருவடிகளைக் கொண்டவர்களுக்கு மானிட வாழ்வில் துயரம் இல்லை என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

உயிர்கள் பிறவி நீக்கம் பெறுவதன் பொருட்டு, கரை படிந்தது ஒத்த கண்டத்தை கொண்டதால் திருநீலகண்டன் என்னும் பெயர் பெற்றவனும், எட்டுத் தோள்களினை உடையவனும், வேதத்தின் வடிவமாகவும், அதன் பொருளாக இருக்க வல்லவனுமகிய மயிலாடுதுறை தலத்தில் உறையும் இறைவனின் நீண்ட கழல்களை ஏந்தி இருத்தலால் கொடுமை உடையதான மானுட வாழ்வினில் வருவதான குறைவு இல்லாதவர்களாக ஆவோம்.

விளக்கஉரை

  • கொடு – தீயது. மீண்டும் பிறவிக்து ஏதுவான வினை .
  • நீள் கழல் – அழிவில்லாத திருவடிகள்
  • எண்தோளினன் – எட்டுத் திக்குகளையும் ஆடையாக அணிந்தவன் என்றும், எண் குணங்களை முன்வைத்து எண் தோளினன் என்றும் கூறலாம்.
  • திருவடிகளை ஏத்தியிருக்கும் பிறவி வாய்க்குமானால் அந்த மானுட வாழ்க்கையில் வினைகள் என்பது இல்லை.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 21-Jan-2021


பாடல்

தாயைச் சதமென்றே தந்தையரை ஒப்பென்றே
மாயக் கலவிவந்து மதிமயக்க மானேனடி
மாயக் கலவிவிட்டு மதிமயக்கம் தீர்ந்தக்கால்
தாயுஞ் சதமாமோ என் கண்னம்மா
தந்தையரு மொப்பாமோ?

அருளிய சித்தர் : அழுகணிச் சித்தர்

பதவுரை

தாயை நிரந்தரமான உறவு என்றும், தந்தையை ஒப்பு செய்ய இயலாதவர் என்று பொய்யான தோற்றத்தினை ஏற்படுத்தி மாயையானது வந்து சேர்ந்ததால் எனது மதி மயக்கம் கொண்டது; இது மாயையின் காரியம் என்று உண்மையினை உணர்ந்து மதியின் மயக்கம் தீர்ந்தவுடன் தாய் நிரந்தரமான உறவாகவும், தந்தை ஒப்பில்லாதவராகவும் ஆகிவிடுவார்களா?

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 20-Jan-2021


பாடல்

சித்தரெலாம் உண்மைதனை மறைத்தா ரென்றே
செப்பிமனப் பால்குடிக்க வேண்டாம் சொன்னேன்
சித்தர்மொழி நூலதனைத் தொட்டபோதே
சித்தரெலா மொற்றரெனச் சேர்ந்து நிற்பார்
சித்தமுறுங் குணநிறைவில் நாட்டம் கொள்வார்
சிறிதழுக்கைக் கண்டாலும் விலகிப் போவார்
சித்தநிறை வுள்ளவர்க்கே சித்தி தோன்றும்
சித்தமிலார் வித்தையெலாம் சிரிப்பே கண்டீர்

அருளிய சித்தர் : காரைச் சித்தர்

பதவுரை

சித்தர்கள் தான் கண்ட உண்மையினை பிறருக்கு உரையாமல் மறைத்து வைத்தார் என்று கூறி எண்ண வேண்டாம்; சித்தர்களில் நூல்களை வாசிக்கத் தொடங்கிய போதே அதன் பொருளை விளக்க அனைத்து சித்தர்களும் ஒன்றாக சேர்ந்து வந்து அதன் பொருளை அருளுவார்கள்; சித்தர்களின் பால் வைத்த எண்ணங்களுக்காக அவர்கள் நாட்டம் கொண்டு அருளுவார்கள்; சித்தர் வழியில் அதன் பொருளைக் கண்டு நடக்கையில் அதன் உட்பொருளில் இருந்து மாறுபட்டு நடந்தால் அந்த இடத்தை விட்டு விலகிச் செல்வார்கள்; சித்தம் நிறைவு உள்ளவர்களுக்கே சித்திகள் எனப்படும் அட்டமா சித்திகள் தோன்றும்; அவ்வாறு சித்தம் நிலைபெறாமல் சித்தி கண்டவர்கள் என்று கூறி அவர்களால் செய்யப்படும் வித்தைகள் எல்லாம் சிரிப்பினைத் தான் தோற்றுவிக்கும்.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 19-Jan-2021


பாடல்

ஊணுறக்கம் நீக்கியல்லோ யோகநிட்டை புரிந்தோம்
உற்றாரைப் பற்றறுத்து மலைக்குகையில் இருந்தோம்
காணுதற்கும் எட்டாத பரவெளியைக் கண்டோம்
கற்பமது சாப்பிட்டு உடல்வளர்த்துக் கொண்டோம்

அருளிய சித்தர் : வகுளிநாதரென்னும் மௌனச்சித்தர்

பதவுரை

ஊனில் ஏற்படுவதாகிய உறக்கம் விடுத்து அதை நீக்கி யோக நிட்டை புரிந்தோம், உற்றவர்கள் என்று சொல்லப்படும் மனைவி, மக்கள், உறவுகள் அனைவரையும் விலகி அவர்கள் இடத்தில் பற்று கொள்ளாமல் இருந்து மலைக் குகைகளில் இருந்து (தவம் செய்து) வந்தோம்; புறக்கண்களால் காண இயலாததும், அகக் கண்களால் யோகம் பற்றி காணக்கூடியதான பரவெளியினைக் கண்டோம்; பசி, தாகம் மற்றும் இயற்கை உபாதைகள் தாக்காதிருக்க கற்ப மூலிகளைக் உட்கொண்டு உடலை வளர்த்துக் கொண்டோம்.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 14-Jan-2021


பாடல்

அட்ட கரு மம்தெரிய வேணும் அதற்
காதார மானஆலை தெரிய வேணும்
திட்டமாய் வாசிநிலை வேணும் இத
தெரிந்துகொண் டாற்சித்தன் ஆகவே வேணும்

அருளிய சித்தர் : கல்லுளிச் சித்தர்

பதவுரை

மனப்பயிற்சியால் தன் வயப்படுத்தலாகிய  வசியம், இயக்கச் செயல்களைக் கட்டுவதுவதாகிய  தம்பனம், தீய சக்திகளை தன்னிடம் இட்டு விரட்டுதலாகிய  உச்சாடனம், பிறறை தன் மீது  மோகம் கொள்ளச் செய்தலாகிய மோகனம், பகை உண்டாக்கிப் பிரித்தலாகிய  வித்வேடணம், துர்தேவதைகளை பணிய வைத்தலாகிய ஆகர்ஷணம், சுய நினைவற்று போகச் செய்தலாகிய பேதனம், உயிர்களுக்கு கேடு விளைப்பதுவாகிய மாரணம் ஆகிய அட்ட கருமங்களை தெரிந்து கொள்ள வேண்டும்; அந்த அட்ட கருமங்கள் எவ்வாறு தோற்றமும் ஒடுக்கமும் கொள்கின்றன என்பதன் மூலத்தினை அறிய வேண்டும்; எண்ணத்தில் மன உறுதி கொண்டு வாசி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்; இவ்வாறு அனைத்தையும் அறிந்து கொண்டு சித்தன் என்று ஆக வேண்டும்.

Loading

சமூக ஊடகங்கள்

குருவும் தற்போதமும் – 3


புகைப்படம் : திரைப்பட இயக்குநர் திரு.ஐயப்ப மாதவன் அவர்கள்

மாவட்ட அளவில் பெரிய அதிகாரியாக இருப்பவர் குரு நாதர். அவர் மாவட்ட அளவில் இருக்கும் இன்னொரு பெரிய அதிகாரியிடம் (சிவம் என்று கொள்வோம்) கீழ் இருந்து வேலை பார்ப்பவர்.

சிவத்திடம் இருவர் வேலை பார்த்து வந்தார்கள். ஒருவர் வெள்ளையன், மற்றொருவர் கருப்பன். தூய மனம் உடையவர் என்பதால் வெள்ளையன், லஞ்சம் பெற்று வாழ்வினைக் கொண்டதால் கருப்பன்.

குரு நாதர் : என்னப்பா, எப்டி இருக்க?
கருப்பன் : நல்லா இருக்கேன் சார்.
குரு நாதர் : நல்லா தூங்குகிறாயா?
கருப்பன் : நல்லா தூங்குகிறேன் சார்.

இரண்டு வாரம் கழித்து கருப்பன் வேலைக்கு வரவில்லை, விசாரித்த போது தனது மகளுக்கு புற்று நோய் எனவும், அதனால் வரவில்லை எனவும் உரைக்கப்பட்டது.

நீண்ட நாள் சுழற்சிக்குப் பிறகு எங்கேங்கோ சென்றும் பதில் / விடை கிடைக்காமல் கருப்பன் மீண்டும் குரு நாதர் இடத்திலே வந்தார்.

கருப்பன் : சார், நீங்க அன்னைக்கு கேட்டப்ப புரியல சார், இப்ப புரியுது, என் குழந்தையக் காப்பாத்துங்க சார்.
குரு நாதர் : நான் என்னப்பா செய்யமுடியும், நான் என்ன மந்திரவாதியா இல்லை வைத்தியரா?
கருப்பன் : இல்லை சார், நீங்கள் நினைத்தால் முடியும்
குரு நாதர் : ….

சில வாரங்கள் சென்றப்பின் கருப்பன் மீண்டும் பழங்களுடன் வந்து குரு நாதரை சந்தித்து ‘என் மகளைக் காக்க வேண்டும்’ என்று முறையிட்டார்.

குரு நாதர் : நான் சொல்வதைக் கேட்பாயா?
கருப்பன் : நிச்சயமாக செய்கிறேன்.
குரு நாதர் : நாள் ஒன்று சொல்லி அன்றைக்கு என்னை வந்து பார்

அவர் சென்ற பிறகு பழங்களை பசுவிற்கு கொடுத்து விட்டார்.

குறிப்பிட்ட நாள் :
குரு நாதர் : நல்லா கேட்டுக்கோ,… இந்த பரிகாரங்களை குறைந்தது ஒருவடத்திற்கு செய்து வா, சிவம் உன் மேல் கருணை வைத்தால் இது விலகும்.
கருப்பன் : சரி, சார்.

மீண்டும் 3 மாதம் கழித்து வந்தார்

கருப்பன் : சார், எனது மகளுக்கு நேற்று சோதனை செய்து பார்த்தோம், 70% வரை சரியாகி விட்டதாக டாக்டர் எல்லாம் கூறி இருக்கிறார்கள். உங்களுக்குத் தான் நன்றி சார்
குரு நாதர் : நான் என்னப்பா செஞ்சேன், எல்லாம் ஈசன் செயல்.

கடைசி தகவலின் படி முறையற்ற முறையில் ஈட்டிய பணம் என்பதால் பல லகரங்களை மிகப் பெரிய பழமையான ஆஸ்ரமத்திற்கும், மற்றொரு மிகப்பெரிய லகரங்களை கண்கள் அற்ற அனாதை ஆஸ்ரமத்திற்கும் கொடுத்து விட்டதாகவும், தற்போது நிம்மதியாக இருப்பதாகவும் உரைத்து இருக்கிறார்.

சத்தியத்தின் வழி நிற்கும் குரு நாதருக்கும், அவர் பகிர்ந்த கருத்துகளுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 13-Jan-2021


பாடல்

அறிந்து கொள்ளு பூரகமே சரியை மார்க்கம்
அடங்குகின்ற கும்பகமே கிரியை மார்க்கம்;
பிரிந்துவரும் ரேசகமே யோக மார்க்கம்;
பிசகாமல் நின்றதுவே ஞான மார்க்கம்;
மறிந்துடலில் புகுகின்ற பிராண வாயு
மகத்தான சிவசத்தி அடங்கும் வீடு;
சிறந்துமனத் தெளிவாகிச் சேர்ந்தோன் சித்தன்
சிவசிவா அவனவனென் றுரைக்க லாமே

அருளிய சித்தர் : வால்மீகர்

பதவுரை

மூச்சை உள்ளிழுத்தல் ஆகிய பூரகம் என்பதே சரியை மார்க்கமாகும்; மூச்சை அடக்கி செய்தல் ஆகிய கும்பகம்  என்பதே கிரியை மார்க்கமாகும்; மூச்சினை இடம் வலம் எனப்பிரித்து மேலேற்றும் ரேசகமே யோக மார்க்கமாகும்; அவ்வாறு காற்றினை உள்ளும் புறமும் செலுத்தாமல் நிறுத்தி வைத்தலே ஞான மார்க்கமாகும்; மகத்தான சிவசக்தி அடங்கும் வீடு ஆகிய  இந்த உடலில் மரணிக்கச் செய்யாமல் இருக்க பிராண வாயு உடலில் புகுந்து செல்லும். சிவசிவா  என்று அவனைப் பற்றி உரைக்கலாம்; இதனை மனத்துள் உள்வாங்கி தெளிவடைந்து சேர்ந்தவன் சித்தன் ஆவான்.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 11-Jan-2021


பாடல்

எங்கு நிறைந்தே இருக்கின்ற சோதியை
அங்கத்துள் பார்ப்பாயடி குதம்பாய்
அங்கத்துள் பார்ப்பாயடி
அண்டத்துக் கப்பால் அகன்ற சுடரினைப்
பிண்டத்துள் பார்ப்பாயடி குதம்பாய்
பிண்டத்துள் பார்ப்பாயடி

அருளிய சித்தர் : குதம்பைச்சித்தர்

பதவுரை

குதம்பாய்! அண்டம் அனைத்திலும் தன் நிலை மாறாது நீக்கமற நிறைந்து சோதி வடிவாக இருப்பதை அங்கம் எனப்படும் உடலுக்குள் பார்ப்பாயாக. (குறிப்பாக ஆறு ஆதாரங்களிலும்)
கால எல்லைக்களைக் கடந்து அண்டங்களுக்கு அப்பாலும் இருக்கும் சுடர்வடிவினை பிண்டம் எனப்படும் உடலுக்குள் பார்ப்பாயாக (உடல் முழுவதும் சுடராகவே)

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 8-Jan-2021


பாடல்

ஆறாத புண்ணி லழுந்திக் கிடவாமற்
தேறாத சிந்தைதனைத் தேற்றுவது மெக்காலம்
தந்தைதாய் மக்கள் சகோதரரும் பொய்யெனவே
சிந்தைதனிற் கண்டு திருக்கறுப் தெக்காலம்

அருளிய சித்தர் : பத்ரகிரியார்

பதவுரை

உலக வாழ்வில் ஆறாத புண் போன்று அழுந்திக் கிடப்பது போல் அல்லாமல்,  நன்மையும் வளமையும் தராத சிந்தனைக் கொண்டு அதில் இருந்து விலகி தேற்றிவருவது எக்காலம்?

பெற்றோர்களாகிய தந்தை, தாயார், தான் பெற்ற மக்கள், தன்னுடன் உடன் பிறந்த சகோதரர்கள் ஆகிய உறவுகள் அனைத்தும் பொய்யான வாழ்வு எனக் கண்டு, அதனால் சிந்தையினில் தெளிவு பெற்று  இருப்பது எக்காலம்?

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – மார்கழி- 23 (2021)


பாடல்

பாரப்பா மவுனமுடன் நின்று வாழ
பரைஞான கேசரியாள் பாதம் போற்றி
சாரப்பா அவள்பதமே கெதியென்றெண்ணி
சங்கையுடன் மவுனரசந்தானே கொண்டால்
பேரப்பா பெற்றதொரு தவப்பேராலே
பேரண்டஞ் சுற்றிவர கெதியுண்டாகும்
ஆரப்பா அறிவார்கள் மவுனப் போக்கை
அறிந்துகொண்டு பூரணத்தை அடுத்து வாழே

அகத்தியர் சௌமிய சாகரம்

கருத்து – அமிர்த ரசத்தை தவத்தின் மூலம் பருகினால் ஒரு யோகி ஆழமான மவுன நிலையை அடைவார் என்பதைக் குறிக்கும் அகத்தியரின் பாடல்.

பதவுரை

மௌனத்துடன் மனம் ஒன்றி அது பற்றி வாழ மெய்யறிவாக இருக்கும் கேசரியாள் பாதம் போற்றி! அவள் பதத்தினை வாழ்விற்கான கதி என்று எண்ணி, சங்கு எனப்படும் தொண்டைக்குழிப் பகுதியின் வழியாக வரும் நாதம் என்று அழைக்கப்படும் பேச்சினை நிறுத்தி, மௌனம் கொண்டால் அதன் விளைவாக தவ ஆற்றல் கிட்டும்; அந்த தவ ஆற்றலின் காரணமாக பேரண்டம் எனக் கூறப்படும் 1008 அண்டங்களையும் கெவுன சித்தி எனப்படும் வானத்தில் சூட்சும நிலையில் பயணிக்கக்கூடியத் தகுதி பெற்று அண்டங்களைச் சுற்றி வரும் வாய்ப்பு உண்டாகும். மற்றவர்களால் அறிய இயலா இந்த மவுனத்தின் போக்கை அறிந்து கொண்டு மெய்யறிவு எனப்படும் பூரணத்தினைக் கண்டு வாழ்வாயாக. 

விளக்கஉரை

  • மௌன நிலையின் சிறப்புகள்
  • பேரண்டம் – 1008 அண்டங்கள்
  • பரஞானம் – இறையறிவு

Loading

சமூக ஊடகங்கள்