
பாடல்
அறிந்து கொள்ளு பூரகமே சரியை மார்க்கம்
அடங்குகின்ற கும்பகமே கிரியை மார்க்கம்;
பிரிந்துவரும் ரேசகமே யோக மார்க்கம்;
பிசகாமல் நின்றதுவே ஞான மார்க்கம்;
மறிந்துடலில் புகுகின்ற பிராண வாயு
மகத்தான சிவசத்தி அடங்கும் வீடு;
சிறந்துமனத் தெளிவாகிச் சேர்ந்தோன் சித்தன்
சிவசிவா அவனவனென் றுரைக்க லாமே
அருளிய சித்தர் : வால்மீகர்
பதவுரை
மூச்சை உள்ளிழுத்தல் ஆகிய பூரகம் என்பதே சரியை மார்க்கமாகும்; மூச்சை அடக்கி செய்தல் ஆகிய கும்பகம் என்பதே கிரியை மார்க்கமாகும்; மூச்சினை இடம் வலம் எனப்பிரித்து மேலேற்றும் ரேசகமே யோக மார்க்கமாகும்; அவ்வாறு காற்றினை உள்ளும் புறமும் செலுத்தாமல் நிறுத்தி வைத்தலே ஞான மார்க்கமாகும்; மகத்தான சிவசக்தி அடங்கும் வீடு ஆகிய இந்த உடலில் மரணிக்கச் செய்யாமல் இருக்க பிராண வாயு உடலில் புகுந்து செல்லும். சிவசிவா என்று அவனைப் பற்றி உரைக்கலாம்; இதனை மனத்துள் உள்வாங்கி தெளிவடைந்து சேர்ந்தவன் சித்தன் ஆவான்.