
பாடல்
அட்ட கரு மம்தெரிய வேணும் அதற்
காதார மானஆலை தெரிய வேணும்
திட்டமாய் வாசிநிலை வேணும் இத
தெரிந்துகொண் டாற்சித்தன் ஆகவே வேணும்
அருளிய சித்தர் : கல்லுளிச் சித்தர்
பதவுரை
மனப்பயிற்சியால் தன் வயப்படுத்தலாகிய வசியம், இயக்கச் செயல்களைக் கட்டுவதுவதாகிய தம்பனம், தீய சக்திகளை தன்னிடம் இட்டு விரட்டுதலாகிய உச்சாடனம், பிறறை தன் மீது மோகம் கொள்ளச் செய்தலாகிய மோகனம், பகை உண்டாக்கிப் பிரித்தலாகிய வித்வேடணம், துர்தேவதைகளை பணிய வைத்தலாகிய ஆகர்ஷணம், சுய நினைவற்று போகச் செய்தலாகிய பேதனம், உயிர்களுக்கு கேடு விளைப்பதுவாகிய மாரணம் ஆகிய அட்ட கருமங்களை தெரிந்து கொள்ள வேண்டும்; அந்த அட்ட கருமங்கள் எவ்வாறு தோற்றமும் ஒடுக்கமும் கொள்கின்றன என்பதன் மூலத்தினை அறிய வேண்டும்; எண்ணத்தில் மன உறுதி கொண்டு வாசி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்; இவ்வாறு அனைத்தையும் அறிந்து கொண்டு சித்தன் என்று ஆக வேண்டும்.