கணவனுக்கு ஏற்ற மனைவியாயின் எந்த நிலையிலும் அவளுடன் கூடி வாழலாம். அவ்வாறு இல்லாமல் மனைவி ஏறுமாறாக நடந்தால் கணவன் எவரிடத்தும் எதுவும் கூறாமல் துறவி ஆகுவதே கொள்ளத் தக்கநெறி.
ஆண் தன்மை பொருந்திய பனை மரத்தைப் பெண் பனையாக்கியும், ஒரு நொடியில் எலும்பைக் கண்ணால் நோக்கி, அழகு திகழும் பெண்ணாக உருவமாக்கியும் செய்த பெரியோனாகிய திருஞானசம்பந்தரைப் போன்றவர்கள் ஆயினும், பிறப்பிறப்புக்கு இரக்கமின்றி உயிர் தாங்கி நின்ற உடம்புகளைக் கொன்று தின்கின்ற கருத்துடையனாயின், அவனை ஞானி என்று சொல்லலாகாது; இது எமது குரு ஆணை; சிவத்தின் மேல் ஆணை என அறிக.
விளக்க உரை
திருஞானசம்பந்தர் செய்த அரும் பெரும் செயல்கள் சில
திருவோத்தூரில் ஆண் பனையைப் பெண் பனையாக்கியது
திருமயிலாப்பூரில் இறந்து போன பூம்பாவையின் என்புகளைக் கண்ணால் சிறிது நேரம் நோக்கிப் பெண்ணுரு திகழ எழுப்பியது
திருமருகலில் பாம்பு கடித்து இறந்துபட்ட வணிகனை உயிர் பெற்று எழச் செய்த அற்புதத்தை செய்தது
கருவாணையுறுதல் – பிறப்பிறப்புக்கு உள்ளாதல்.
புலால் உண்பவன் எத்துணை ஞானமும் உடையனாயினும், ஞானி எனப்படல் பொருந்தாது என வற்புறுத்தவாறு.
விரதத்தை மேற்கொண்ட சான்றோர்களுக்குத் திருநீறு சிறந்த அணிகலன் ஆகும். நான்கு வேதங்களையும், சிட்சை, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தோபிசிதம், சோதிடம் ஆகிய ஆறு அங்கங்களை அறிந்த அந்தணர்களுக்கு ஓதுதல் சிறந்த அணிகலன்; சிவபெருமானுக்கு பிறை உடைய அழகிய சடை சிறந்த அணிகலன். எம்மைப் போன்ற அடியார்களுக்குச் சிறந்த அணிகலன் திருவைந்தெழுத்தேயாகும்.
மூன்று நிலைகளை உடைய கோபுரம். கொடிமரம் அற்று 2 பலிபீடம் மற்றும் நந்தி
ஈசனுக்கும் அன்னைக்கும் நடுவில் கணபதி குழந்தை வடிவில். மேல் இரு கைகளில் லட்டும் பலாச்சுளையும். கீழ் இரு கைகளில் அபய முத்திரையும் கரும்பும்
முருகர் ‘கலியுகராமப் பிள்ளையார்’ என்று போற்றப்படுகிறார்.
அகத்தியர் வழிபட்ட லிங்கம் அகத்தீஸ்வரர். அகத்தியருக்கு தனி சிலையும் இங்குள்ளது.
கயிலையில் சிவபெருமான் உமாதேவியாருக்கு சிவ ரகசியத்தை உபதேசிக்கும் போது அதை சுகப்பிரம்ம முனிவர் ஒட்டு கேட்டதால் அவரை பூமியில் பிறக்கும் படி சபித்தார். சாப விமோசனம் நீங்க அந்த சாப விமோசனம் நீங்க வேதவியாசருக்கு மகனாகப்பிறந்து பெண்ணை நதியின் தென்பகுதியில் அமைந்துள்ள இத்தலத்தில் இறைவனை பூஜித்து பூலோக வாழ்வு நீங்கப் பெற்றார்.
சுகப்பிரம்ம மகரிஷி வழிபட்டதால் இத்தலத்தில் எப்போதும் கிளிகள் பறந்து கொண்டே இருக்கின்றன.
சுந்தரர் பாடியுள்ள 39 வைப்புத் தலங்களுக்கு நிகரானது என்று அவரது பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தானச்சாரியர்களில் ஒருவரான மறைஞானசம்பந்தர் அவதாரத் தலம். இவருக்கு அருள் செய்த விநாயகர் இருப்பிடம் வயல்வெளியில் தனிக்கோயிலில்
மாசி மாதம் 15,16 தேதிகளில் மாலை 5 மணி முதல் 5.15 வரை சூரியக்கதிர்கள் சுவாமியின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது.
காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை,
மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைஅருள்மிகு மருதீஸ்வரர் திருக்கோவில்,
மருதீஸ்வரர் தேவஸ்தானம்
டி.எடையார் அஞ்சல், திருக்கோவிலூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம், PIN – 607203
94424-23919, 98847-77078, 04146-216045, 04146-206515
வழிபட்டவர்கள்
சுகமுனிவர் , பிரம்மன் , அகத்தியர் , சுந்தரர் , மறைஞான சம்பந்தர்
பாடியவர்கள்
சுந்தரர் 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம்
திருக்கோயிலூரில் இருந்து சுமார் 13 கிமீ தொலைவில் அமைந்துள்ள சித்தலிங்க மடத்தை அடுத்து அமைந்துள்ளது இத்தலம் .
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 203 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 13 வது தலம்.
ஞானாம்பிகை உடனாகிய மருதீஸ்வரர்
புகைப்படங்கள் : தினமலர்
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7
பதிக எண் 31
திருமுறை எண் 8
வாக்கு, மனம் என்னும் இரண்டாலும் மௌனமாக இருத்தலே `மௌனம்` என்பதற்குப் பொருளாகும். `அவ்வாறு இல்லாமல் மனம் எவ்வாறு செயற்பட்டாலும் வாக்கு மட்டும் செயற்படாது இருத்தல்தான் மௌனம் எனக் கூறினால் உலகில் ஊமைகளாய் உள்ளார் யாவரும் மௌன நோன்பு மேற்கொண்டவர்களாக ஆகி விடுவர். வாக்கு, மனம் என்னும் இரண்டும் அடங்கிய தூய நிலையே `சுத்த நிலை` எனப் படுகின்ற வீடுபேற்றைத் தரும். அந்த உண்மையை அறிகின்றவர் யாவர்?
விரும்பி மேகங்கள் தங்குதல் பொருந்திய பெண்ணாகடத்திலுள்ள திருக்கோயிலாகிய தூங்கு ஆனை மாடத்தில் ஒளிப் பிழம்பாய் இருக்கும் பெருமானே! உன்னுடைய பொன்போன்ற திருவடிகளில் அடியேன் செய்யும் விண்ணப்பமாகிய வேண்டுகோள் ஒன்று உளது. அஃதாவது அடியேனுடைய உயிரைப் பாதுகாக்கும் விருப்பம் உனக்கு உண்டானால், யான் சமண சமயத்தில் வாழ்க்கையின் பெரும் பகுதியை வீணாக்கினவன் என்று மக்கள் கூறும் பழிச் சொற்கள் நீங்குமாறு, உன்னுடைய அடிமையாக அடியேனை எழுதிக் கொண்டாய் என்பது புலப்பட ஒளிவீசும் முத்தலைச் சூலப் பொறியை அடியேன் உடம்பில் பொறித்து வைப்பாயாக.
கையிலை மலையை இகழ்ந்து பேசி அதை எடுத்து அப்புறப்படுத்தலின் பொருட்டு முயன்ற இராவணனை அடக்கிய திருவடியை உடையவனும், திருவடியை உண்மை பொருளாக உடைய அன்பர்கள் தேடி வருந்தும் அவர்கள் உள்ளத்தில் திகழ்பவனும் ஆகிய சிவபெருமான் உறையும் தலம் திருவல்லமாகும்.
இன்றுதான் நீயென்னைக் கண்டிருந்துங் கண்டாயோ அன்றித்தான் நானுன்னைக் கண்டேனோ என்றால் அருமாயை ஈன்றவள்தன் பங்கனையார் காண்பார் பெருமாயைச் சூழல் பிழைத்து
சிவஞான போதம் – மெய்கண்டார்
கருத்துஉரை
மாணவனே, இன்று நீ என்னை உன் ஊனக் கண்ணால் கண்டும் என் ஆன்மாவின் தன்னியல்பைக் கண்டாயோ? காணவில்லை. அன்றி நான்தான் உன் பருவுடம்பைக் கண்டிருந்தும் உன்னுடைய உயிர் இயல்பைக் கண்டேனோ? காணவில்லை. மாந்தராகிய நாம் ஒருவரை ஒருவர் கண்ணால் கண்டும் முற்றிலும் காணவில்லை. எனில், நுண்ணிய மாயையிலிருந்து இவ்வுலகங்களை எல்லாம் தோற்றுவித்து அருளும் சிவ சத்தியைத் தன்னுடைய ஒரு பாகத்திலே கொண்ட உமையொரு பாகனை மாயைக்கு உட்பட்ட யார்தான் காண இயலும்? ஒருவராலும் காண இயலாது.
இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டான் முடிஞ்ச தறியார் முழங்குவர் மூடர் விடிஞ்சிரு ளாவ தறியா உலகம் படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே.
திருமந்திரம் – முதல் தந்திரம் – திருமூலர்
கருத்துஉரை
அகல் இருப்பினும் சுடரை அணைத்து விட்டால், அந்த அகலுக்கு உள்ள வாழ்நாள் முடிந்துவிடும். அது போல்வதே உடம்பின் வாழ்நாளும், இதனை அறியாமல் உடம்பையே பொருளாகக் கருதி அறிவில்லாதவர்கள் ஆரவாரம் செய்வார்கள். விடியல் கண்ட பிறகும் இருளில் கிடப்பதை ஒத்து வழியறியாது தடுமாறும் குருடரைப் போல, உடம்பின் நிலையாமை இயல்பு கண்கூடாக விளங்கி நிற்கவும் உலகம் அதனை அறியாது உடம்பைப் பற்றி அதில் அழுந்திக் கிடந்து, அதன் மேல் நிலைக்கு வராமல் துயருறுதல் இரங்கத்தக்கது.
இச் சக்கரத்தில் மொத்தம் 96 இதழ்கள் இருந்தாலும், ஒரு யந்திரமாக வரையும்போது இரண்டு இதழ்கள் கொண்டதாகவே வரையப்படும்.
வலப்புறம் ஒன்று, இடப்புறம் ஒன்று என வரையப்படும் இந்த இதழ்கள் முறையே “ஹம், “ஷாம்’என்று அழைக்கப்படுகின்றன. அக்ஷ்ரங்கள் முறையே (‘ஹ’,’க்ஷ’). அதன் தேவதைகளான ஹம்ஸவதீ, க்ஷமாவதீ தேவியரே, ஹாகினீ தேவியின் பரிவார தேவதைகளாக போற்றப்படுகின்றனர்.
இடகலை, பிங்கலை நாடிகள் வழியாக ஆக்ஞை சக்கரம் முழு உடலின்மீதும் ஆளுமை செலுத்துகிறது.
சதாசிவனாரும், மனோன்மணி ஆகிய ஞானத் தாயும் கூடி மகிழும் ஆக்ஞை புருவ மத்தி அல்லது புருவ நடு ஸ்தானமே “ஆக்ஞை” என்ற தலமாகும்.
இதன் சக்ர கமலத்தில் சந்திரனுடைய 64 கலைகள் உள்ளன.
தெய்வம் – மனோன்மணி, தர்மசக்தி இவர்களுடன் கூடிய ஸதாசிவன்.
வண்ணம் – இண்டிகோ
பீஜா மந்திரம் – “அம்’ (ஆன்ம்)
வாகனம் – நாதம். இந்த நாதமே “அம்’ எனும் பீஜா மந்திரத்தை சுமந்து செல்லும்.
அதிதேவதை – ஹாகினி தேவி
குணம்- சாத்விகம்.
லோகம்- தபலோகம்.
கோசம்- விஞ்ஞானமய கோசம்
தெய்வம் – சிவன். இந்த சக்கரத்தில் அவர் அர்த்தநாரீஸ்வரர் வடிவில் உள்ளார். பேதங்கள் மறைந்த பரிபூரண நிலை
புலன் (தன்மந்திரம்), புலனுறுப்பு (ஞானேந்திரியம்), செயலுறுப்பு (கர்மேந்திரியம்) ஆகிய அனைத்துமே “மனம்’
நெற்றியில் இரு புருவங்களுக்கு மத்தியிலுள்ள பகுதியில் இந்தச் சக்கரம் அமைந்துள்ளது. “நெற்றிக் கண்’, “மூன்றாவது கண்’, “ஞானக் கண்’, ‘ஆளுமைச் சக்கரம்’,’ ப்ரம்ஹக்ரந்தி ‘ என பல பெயர்களால் இந்தச் சக்கரம் அழைக்கப்படுகிறது.
இந்த ஆக்ஞா சக்கரத்தில் பரமசிவமும் சித் சக்தியும் இணைந்திருப்பதை தியானிக்கும் பக்தர்கள் சூரியன், சந்திரன், அக்னி போன்ற ஒளிகளுக்கு அப்பாற்பட்ட பரஞ்ஜோதி வடிவான தேவியின் திருவருளைப் பெறுவர். இங்குதான் ஜீவன்-இறைவன் சந்திப்பு ஏற்படுகிறது
ஆக்ஞை சக்கரத்தைக் குண்டலினி அடையும்போது, “திரிகால ஞானம் அல்லது திரிகால ஞானி’ எனும் கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகிய மூன்று காலங்களையும் உணர்ந்த நிலை ஏற்படும்.
ப்ரம்ஹக்ரந்தி எனும் இவ்விடத்திலேயே சாக்த யோகிகள் ஹாகினீ தேவியை தியானிப்பர்.
இச்சக்கரத்தில் மகாகாலன் எனும் சித்தன், ஹாகினீ தேவியோடு திருவருள்பாலிக்கிறார்கள். இந்த சக்கரத்தில் விளங்கும் ஒளியை முக்தியைக் கொடுக்கவல்ல “துரீயலிங்கம்” என உபாசகர்கள் அழைப்பர்.
உன்மனீ பாவம் ஏற்பட அருள்வதால் தேவிக்கு மனோன்மணி என்று பெயர். (உன்மனீ பாவம் -சகல விஷயங்களிலும் பற்றுதலை விட்டு இதய கமலத்திலிருக்கும் பரப்பிரம்மத்தை தியானம் செய்யும் நிலை. கண்கள் மூடாமலும் திறக்காமலும், பிராணவாயு, ரேசகம், பூரகம் இல்லாமலும் மனம், சங்கல்பம் விகல்பம் இல்லாமலும் இருந்து அம்பிகையை தியானிப்பது உன்மனீ பாவம்).
புருவமத்தியில் இரண்டு இதழ் தாமரையில் இருக்கும் ஆறு முகங்களுடன் கூடிய ஹாகினீ தேவி, வெண்மை நிறமுடையவள். மஞ்சள் நிறமுடைய எலுமிச்சை அன்னத்தின்மீது பிரியம் கொண்ட இத்தேவி ஞான முத்திரை, அக்ஷமாலை, டமருகம் மற்றும் கபாலத்தை ஏந்தியிருப்பவள். மூன்று கண்களை உடையவள். ஹம்ஸகதி முதலியவர்களுடன் கூடியவள். சகல தேவ தேவியர்களாலும் துதிக்கப்படுபவள். எலும்பிலுள்ள தாது மஜ்ஜையின் அபிமான தேவதையாக திருவருள் புரிபவள்.
ஆதிசங்கரர்
இந்த சக்கரத்தில் தியானிப்பவர்களுக்கு கட்டாயம் சாயுஜ்ய பதவி கிட்டும். இச்சக்கரத்தில் தேவதேவியர் பரசம்புநாதர், சித்பராம்பளாக அருள்கின்றனர். இங்கு தேவி ஸாதா எனும் கலையாக பிரகாசிக்கிறாள்.
காளிதாஸன் – லகுஸ்தவம்
நெற்றியின் நடுவில் வானவில் போன்ற பல வர்ணங்கள் கொண்ட ஒளி, சிரசில் சந்திரனுடைய வெண்மையான ஒளி, இதயத்தில் சூரிய ஒளி கொண்ட தேவி என் பாவங்களை நாசம் செய்யட்டும்.
(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதாலும், யோக மார்கத்துடன் சம்மந்தப்பட்டது என்பதாலும் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)
கட்டு மயக்கம் அறுத்தவர் கை தொழுது ஏத்தும் இடம்; கதிரோன் ஒளியால் விட்ட இடம்; விடை ஊர்தி இடம்; குயில் பேடை தன் சேவலொடு ஆடும் இடம்; மட்டு மயங்கி அவிழ்ந்த மலர் ஒரு மாதவியோடு மணம் புணரும் அட்ட புயங்கப்பிரானது இடம் கலிக் கச்சி அனேகதங்காவதமே
1. கதிரவன் தனது ஒளி குன்றிய இடம். இறைவன் தன் பேரொளிக்கு முன் கதிரவன் ஒளி மங்கும் என்பது ஒரு கருத்து. அடர்ந்த காடுகளால் சூழப்பட்டிருப்பதால் கதிரவன் ஒளி உட்புக முடியாமல் உள்ளது என்பது மற்றொரு பொருள்.
பாருரு வாய பிறப்பற வேண்டும் பத்திமை யும்பெற வேண்டும் சீருரு வாய சிவபெரு மானே செங்கம லம்மலர்போல் ஆருரு வாயஎன் ஆரமு தேஉன் அடியவர் தொகைநடுவே ஓருரு வாயநின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண் டருளே.
தேவாரம் – 8ம் திருமுறை – மாணிக்கவாசகர்
கருத்துஉரை
சிறப்பையே வடிவாக உடைய சிவபிரானே! செந்தாமரை மலர்போன்ற அரிய உருவத்தையுடைய எனது அரிய அமுதமானவனே! பூவுலகில் தோன்றுகின்ற உடம்புகளாகிய பிறவிகள் வாராது ஒழிய வேண்டும். அதற்கு உன்னிடத்தில் வைக்கின்ற அன்பையும் நான் அடைய வேண்டும். அது நிலைக்க உன்னடியார் கூட்டத்தின் நடுவில் ஒப்பற்ற வடிவமாகிய உன்னுடைய திருவருளைக் காட்டி அடியேனையும் உய்தி பெறும்படி சேர்த்துக் கொண்டு அருள்வாயாக.
அடுதலையே புரிந்தான், நவை; அந்தர மூஎயிலும் கெடுதலையே புரிந்தான்; கிளரும் சிலை நாணியில் கோல் நடுதலையே புரிந்தான்; நரி கான்றிட்ட எச்சில் வெள்ளைப்- படுதலையே புரிந்தான்-பழமண்ணிப் படிக் கரையே .
தேவாரம் – 7ம் திருமுறை – சுந்தரர்
கருத்துஉரை
உலகத் தொகுதியின் வினைகள் அழித்தலை விரும்பினவனும், வானில் இருந்த மூன்று மதில்கள் கெட்டு அழிதலை விரும்பி வில் நாணில் அம்பைப் பூட்டுதலை விரும்பினவனும், நரி உமிழ்ந்த எச்சிலாகிய வெண்மையான அழிந்த தலையை விரும்பியவனும் ஆகிய இறைவன் எழுந்தருளியிருக்கும் இடம், ‘திருப்பழமண்ணிப் படிக்கரை’ என்னும் தலமே.
புகைப்படம் : திரு. ஐயப்ப மாதவன், திரைப்பட இயக்குனர்
நாளொன்றின் இறுதியில்
வானம் பார்த்திருக்கையில்
தனித்தனி பறவை இனங்கள்
தனித்தனி மரங்கள் அடைந்தன.
அடைந்தப்பின் பறவைகள் மறைந்து
மரங்கள் தனித்து இருந்தன.
கரைந்த காலங்களில்
மாறாது இருந்தது இந்நிகழ்வு.
சந்தி இரவொன்றில்
அறிந்திரா புதிய மரமொன்று எதிர்ப்பட்டது
‘மௌன மரம்’ என்று தன்னிலை விளக்கம் சொன்னது.
தேகம் இளைத்தவர்கள், யாசிப்பவர்கள்
பெரும் பயண வழி அற்றவர்கள்,
மனிதர்களால் கைவிடப்பட்டவர்கள் எங்களில் இலக்கு;
அவர்களை யாம் சென்றடைவோம் என்றது.
இன்னும் பல பகுப்புகள் உண்டு.
இருந்தாலும் இதை மட்டும் உரைத்தோம்
என்றும் உரைத்தது.
பிறிதொரு நாளில் என்னில்
சுடர் எனக்கரைந்திருந்தது
மௌன மரமும்.
ஆறு சூடும் அணிமறைக் காடரோ கூறு மாதுமைக் கீந்த குழகரோ ஏற தேறிய எம்பெரு மானிந்த மாறி லாக்கத வம்வலி நீக்குமே.
தேவாரம் – 5ம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்துஉரை
கங்கை ஆற்றைச் சடையில் சூடி மறைக் காட்டில் உறையும் பெருமானே! உடலின் ஒரு கூறை பெண்ணாகிய உமையம்மைக்கு ஈந்த அழகரே! விடையேறிய எம்பெருமானே! இந்த ஒப்பில்லாத கதவின் வலியினை நீக்கித் திறந்தருள்வீராக.
மனிதர்கள் தீர்க்க ஆயுள் உள்ளவர்களாகவும், ஆற்ப ஆயுள் உள்ளவர்களாகவும் இருப்பது எதனால்?
சிவன்
உயிர்களைக் கொல்லாமை, பொய்யாமை, வெகுளாமை , பொறுமை, உண்மை கொண்டு இருத்தல், குருவின் இடத்தில் எப்பொழுதும் பணிவுடன் இருத்தல், பெரியோர்களை பூஜித்தல், சுத்தமாக இருத்தல், செய்யத்தகாத தீய செயல்களை விடுதல், எப்பொழுதும் பத்தியமான ஆகாரங்களை உண்ணுதல் ஆகியவை நல்லொழுக்கங்கள் ஆகும். இந்த நல்லொழுக்கங்களால் மனிதர்கள் வெகுகாலம் நீண்ட ஆயுளுடன் இருப்பார்கள். தவம், இந்திரியங்களை வெற்றி கொள்ளுதல், தேக ஆரோக்கியம் தரும் மருந்துகளை உட்கொள்ளுதல், எப்பொழுதும் மகிழ்வுடன் இருத்தல் போன்றவற்றாலும் மனிதர்கள் நீண்ட ஆயுள் பெறுகிறார்கள். மற்றவர்கள் பாவங்களைச் செய்தும், பிறரை ஹிம்சை செய்தும், பொய் சொல்லியும், பெரியோர் இடத்தில் பகைகொண்டும், பிறரை இழிவாக பேசியும், நற்கருமங்களையும், சுத்தத்தினை விட்டவர்களாகவும், நாஸ்திகர்களாகவும், மது மாமிசங்களை கொண்டும் கொடிய செய்கை உடையவர்களாகவும் இருக்கின்றனர். போகக்கூடாத இடங்களுக்குச் சென்றும், ஆச்சாரியர்களை பகைத்தும், கோபம் கொண்டும், கலகம் கொண்டும் இருக்கும் இவர்கள் நரகத்தில் வெகு காலம் இருந்து மானிட ஜென்ம அடையும் போது குறைந்த ஆயுளுடன் பிறக்கின்றனர். இவையே ஆயுள் குறைவின் விஷயமாகும்.
உமை
ஆத்மா, ஆண் தன்மை உடையதா? பெண் தன்மை உடையதா? இதில் எவ்வாறு ஆண் பெண் தன்மைகள் வந்தன? ஆண் உயிரும், பெண் உயிரும் ஒன்றா? வெவ்வேறானவைகளா? இவைகளை எனக்கு விளக்கிக் கூறுங்கள்.
சிவன்
உயிர் ஆணும் அன்று, பெண்ணும் அன்று. ஆத்மா விகாரம் அற்றது. உயிர் போன்றே ஆத்மாவும் ஆணும் அன்று, பெண்ணும் அன்று. கர்மங்கள் செய்வதால் அந்தந்த கர்மங்களுக்கு ஏற்றவாறு ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் பிறக்கிறார்கள்.
உமை
ஆத்மா தனக்கு விதிக்கப்பட்ட கர்மங்களை செய்யாவிடில் தேக கர்மங்களை செய்வது யார்?
சிவன்
ஆத்மா கர்மங்களைச் செய்வதில்லை. அது பிருகிருதியோடு கூடி எப்பொழுதும் கர்மங்களை செய்கிறது. சத்வம், ரஜோ மற்றும் ரஜோ குணங்களால் தேகம் எப்பொழுதும் மூடப்பட்டிருக்கிறது. சத்வகுணம் – பிரகாச ரூபம், ரஜோ குணம் – துக்க ரூபம் , தமோ குணம் – அறிவின்மையான ரூபம். இக்குணங்களால் உலகின் செயல்கள் நடைபெறுகின்றன.
பொறுமை, அடக்கம், நன்மையில் விருப்பம் முதலியவை சத்வ குணத்தால் உண்டாகின்றன.
வேலைத்திறமை, சோம்பல் இல்லாமை, பொருள் ஆசை, விதியினை நம்பாமை, மனைவி மேல் பற்று, செல்வத்தின் மேல் பற்று முதலியவை ரஜோ குணத்தால் உண்டாகின்றன.
பொய், கடுமை, பிடிவாதம், அதிக பகை, நாஸ்திகத்தனம், தூக்கம், சோம்பல் முதலியன தாமஸ குணத்தினால் உண்டாகின்றன.
ஆகையால் நல்லவைகள், கெட்டவைகள் குணங்களால் உண்டாகின்றன. எனவே ஆசை அற்றவன் விகாரங்கள் அற்றவன் என்று அறிந்து கொள். சத்வ குணம் உடையவர்கள் புண்ய லோகங்களிலும், ரஜோ குணம் உடையவர்கள் மனிதர்களாகவும், தமோ குணம் உடையவர்கள் நரகத்திலும் இருப்பார்கள்.
ஜென்மம் எடுத்தப்பிறகு பிராணிகளுக்கு எவ்வையிலாவது துன்பம் நேரும். ஆத்மாவானது அந்த சரீரம் அழியும் போது கர்மத்தை அனுசரித்து அதை விட்டுப் போகிறது. தேகத்தில் நோய் ஏற்பட்டாலும் அவை ஆத்மாவை தீண்டுவதே இல்லை. கர்ம பலன் உள்ளவரையில் ஆத்மா இருக்கும். அது முடிந்த உடன் ஆத்மா போய்விடும். ஆதிகாலத்தில் இருந்து இவ்வாறு நடைபெறுகிறது.
உமை
மனிதர்களின் கர்ம பலன்களை அறிந்து கொண்டேன். மற்றவர்களுக்கு துன்பம் செய்பவன் நன்மை அடையும் வகை எது? அது ஒரு ஜென்மத்தில் உண்டாகுமா அல்லது பல ஜென்மாக்களில் உண்டாகுமா?
ஏதனை, ஏதம் இலா இமையோர் தொழும் வேதனை, வெண்குழை தோடு விளங்கிய காதனை, கடிபொழில் கோழம்பம் மேவிய நாதனை, ஏத்துமின், நும் வினை நையவே!
தேவாரம் – 2ம் திருமுறை – திருஞானசம்பந்தர்
கருத்துஉரை
மூலக்காரணனனாகவும், ஆதிகாரணனனாகவும், முதல்வனனாகவும் இருப்பவன்; குற்றம் அற்று இமையாது இருக்கும் யோகியர்களால் வழிபடப் பெறும் வேதவடிவினன்; வெண்குழையும் தோடும் அணிந்த செவிகளை உடையவன்; மிகுந்த சோலைகள் சூழ்ந்த கோழம்பம் எனும் ஊரில் மேவிய தலைவன். அவனை உம் வினைகள் அறுந்து கெடுமாறு ஏத்துமின்.
விளக்கஉரை
ஏதன் – குற்றமுடையவன் எனும் பொருளில் ‘நாம் செய்யும் குற்றங்கட்குக் காரணமானவன்’ எனும் விளக்கம் பட இடங்களில் தென்படுகிறது. ‘ நமது குற்றங்களுக்கு ஈசன் என்றும் காரணமாகான்’ எனவே இவ்விளக்கம் இதில் இடம் பெறவில்லை. ஆன்றோரும் பொருள் அறிந்தோரும் உரைத்தால் பொருள் அறியும் வாய்ப்பு எமக்குக் கிட்டும்.