புகைப்படம் : இணையம்
உமை
மனிதர்கள் தீர்க்க ஆயுள் உள்ளவர்களாகவும், ஆற்ப ஆயுள் உள்ளவர்களாகவும் இருப்பது எதனால்?
சிவன்
உயிர்களைக் கொல்லாமை, பொய்யாமை, வெகுளாமை , பொறுமை, உண்மை கொண்டு இருத்தல், குருவின் இடத்தில் எப்பொழுதும் பணிவுடன் இருத்தல், பெரியோர்களை பூஜித்தல், சுத்தமாக இருத்தல், செய்யத்தகாத தீய செயல்களை விடுதல், எப்பொழுதும் பத்தியமான ஆகாரங்களை உண்ணுதல் ஆகியவை நல்லொழுக்கங்கள் ஆகும். இந்த நல்லொழுக்கங்களால் மனிதர்கள் வெகுகாலம் நீண்ட ஆயுளுடன் இருப்பார்கள். தவம், இந்திரியங்களை வெற்றி கொள்ளுதல், தேக ஆரோக்கியம் தரும் மருந்துகளை உட்கொள்ளுதல், எப்பொழுதும் மகிழ்வுடன் இருத்தல் போன்றவற்றாலும் மனிதர்கள் நீண்ட ஆயுள் பெறுகிறார்கள். மற்றவர்கள் பாவங்களைச் செய்தும், பிறரை ஹிம்சை செய்தும், பொய் சொல்லியும், பெரியோர் இடத்தில் பகைகொண்டும், பிறரை இழிவாக பேசியும், நற்கருமங்களையும், சுத்தத்தினை விட்டவர்களாகவும், நாஸ்திகர்களாகவும், மது மாமிசங்களை கொண்டும் கொடிய செய்கை உடையவர்களாகவும் இருக்கின்றனர். போகக்கூடாத இடங்களுக்குச் சென்றும், ஆச்சாரியர்களை பகைத்தும், கோபம் கொண்டும், கலகம் கொண்டும் இருக்கும் இவர்கள் நரகத்தில் வெகு காலம் இருந்து மானிட ஜென்ம அடையும் போது குறைந்த ஆயுளுடன் பிறக்கின்றனர். இவையே ஆயுள் குறைவின் விஷயமாகும்.
உமை
ஆத்மா, ஆண் தன்மை உடையதா? பெண் தன்மை உடையதா? இதில் எவ்வாறு ஆண் பெண் தன்மைகள் வந்தன? ஆண் உயிரும், பெண் உயிரும் ஒன்றா? வெவ்வேறானவைகளா? இவைகளை எனக்கு விளக்கிக் கூறுங்கள்.
சிவன்
உயிர் ஆணும் அன்று, பெண்ணும் அன்று. ஆத்மா விகாரம் அற்றது. உயிர் போன்றே ஆத்மாவும் ஆணும் அன்று, பெண்ணும் அன்று. கர்மங்கள் செய்வதால் அந்தந்த கர்மங்களுக்கு ஏற்றவாறு ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் பிறக்கிறார்கள்.
உமை
ஆத்மா தனக்கு விதிக்கப்பட்ட கர்மங்களை செய்யாவிடில் தேக கர்மங்களை செய்வது யார்?
சிவன்
ஆத்மா கர்மங்களைச் செய்வதில்லை. அது பிருகிருதியோடு கூடி எப்பொழுதும் கர்மங்களை செய்கிறது. சத்வம், ரஜோ மற்றும் ரஜோ குணங்களால் தேகம் எப்பொழுதும் மூடப்பட்டிருக்கிறது. சத்வகுணம் – பிரகாச ரூபம், ரஜோ குணம் – துக்க ரூபம் , தமோ குணம் – அறிவின்மையான ரூபம். இக்குணங்களால் உலகின் செயல்கள் நடைபெறுகின்றன.
- பொறுமை, அடக்கம், நன்மையில் விருப்பம் முதலியவை சத்வ குணத்தால் உண்டாகின்றன.
- வேலைத்திறமை, சோம்பல் இல்லாமை, பொருள் ஆசை, விதியினை நம்பாமை, மனைவி மேல் பற்று, செல்வத்தின் மேல் பற்று முதலியவை ரஜோ குணத்தால் உண்டாகின்றன.
- பொய், கடுமை, பிடிவாதம், அதிக பகை, நாஸ்திகத்தனம், தூக்கம், சோம்பல் முதலியன தாமஸ குணத்தினால் உண்டாகின்றன.
ஆகையால் நல்லவைகள், கெட்டவைகள் குணங்களால் உண்டாகின்றன. எனவே ஆசை அற்றவன் விகாரங்கள் அற்றவன் என்று அறிந்து கொள். சத்வ குணம் உடையவர்கள் புண்ய லோகங்களிலும், ரஜோ குணம் உடையவர்கள் மனிதர்களாகவும், தமோ குணம் உடையவர்கள் நரகத்திலும் இருப்பார்கள்.
ஜென்மம் எடுத்தப்பிறகு பிராணிகளுக்கு எவ்வையிலாவது துன்பம் நேரும். ஆத்மாவானது அந்த சரீரம் அழியும் போது கர்மத்தை அனுசரித்து அதை விட்டுப் போகிறது. தேகத்தில் நோய் ஏற்பட்டாலும் அவை ஆத்மாவை தீண்டுவதே இல்லை. கர்ம பலன் உள்ளவரையில் ஆத்மா இருக்கும். அது முடிந்த உடன் ஆத்மா போய்விடும். ஆதிகாலத்தில் இருந்து இவ்வாறு நடைபெறுகிறது.
உமை
மனிதர்களின் கர்ம பலன்களை அறிந்து கொண்டேன். மற்றவர்களுக்கு துன்பம் செய்பவன் நன்மை அடையும் வகை எது? அது ஒரு ஜென்மத்தில் உண்டாகுமா அல்லது பல ஜென்மாக்களில் உண்டாகுமா?
தொடரும்..