ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – தன்மம்
பொருள்
- தருமம்
- சலாசனவகை
- நீதி
- நன்மை
- அறம்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
தன்னை அறியாது தாம்நலர் என்னாதிங்
கின்மை யறியா திளையரென் றோராது
வன்மையில் வந்திடும் கூற்றம் வருமுன்னம்
தன்மமும் நல்ல தவஞ்செய்யும் நீரே.
திருமந்திரம் – முதல் தந்திரம் – திருமூலர்
கருத்து உரை
கூற்றுவனாகிய எமன், தன்னைப் பிறர் காணாதவாறும், தன்னால் பற்றப்படுவர் நல்ல பண்பினை உடையர் என்றும், தம்மை அன்றித் தம் சுற்றத்தார்களை காணாதவர்கள் என்று எண்ணாமலும், இளையர் என்று எண்ணாமலும், பிறரால் தடுத்தற்கரிய ஆற்றலோடு வருவான். அவ்வாறு வரும் முன்னே நீங்கள் அறத்தையும், தவத்தையும் செய்து கொள்ளுங்கள்.
விளக்க உரை
- உடல் நிலைத்திருக்கும் போதே அறம் செய்ய வலியுறுத்தல் வேண்டி இப்பாடல்
- அறம் செய்தல் (அது பற்றி வாழ்தலும்) தவம் செய்தலுடன் தொடர்புடையன. எனவே இவை உம்மைத் தொகையால் தொகுக்கப்பட்டிருக்கின்றன.