ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – உய்வு
பொருள்
- உய்தி
- உயிர்தப்புகை
- பிழைப்பு
- ஈடேற்றம்
- இடுக்கண்களினின்றும்நீங்கும்வாயில்
- உய்தல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
பாருரு வாய பிறப்பற வேண்டும்
பத்திமை யும்பெற வேண்டும்
சீருரு வாய சிவபெரு மானே
செங்கம லம்மலர்போல்
ஆருரு வாயஎன் ஆரமு தேஉன்
அடியவர் தொகைநடுவே
ஓருரு வாயநின் திருவருள் காட்டி
என்னையும் உய்யக்கொண் டருளே.
தேவாரம் – 8ம் திருமுறை – மாணிக்கவாசகர்
கருத்து உரை
சிறப்பையே வடிவாக உடைய சிவபிரானே! செந்தாமரை மலர்போன்ற அரிய உருவத்தையுடைய எனது அரிய அமுதமானவனே! பூவுலகில் தோன்றுகின்ற உடம்புகளாகிய பிறவிகள் வாராது ஒழிய வேண்டும். அதற்கு உன்னிடத்தில் வைக்கின்ற அன்பையும் நான் அடைய வேண்டும். அது நிலைக்க உன்னடியார் கூட்டத்தின் நடுவில் ஒப்பற்ற வடிவமாகிய உன்னுடைய திருவருளைக் காட்டி அடியேனையும் உய்தி பெறும்படி சேர்த்துக் கொண்டு அருள்வாயாக.