ஈசனே, நீ இருக்க எனக்கு வேறு யாரிடம் பயம்? எனக்கு நீ ஊக்கத்துடன் கொடுத்த கூடிய வலிமை எது எனில் என்னுடைய சிரம் தாழ்த்தி சிரசின் மேல் கரம் குவித்து பஞ்சாட்சரத்தை எனது கண்ணில் நீர் பெருக நெஞ்சுருக உன்னை நினைத்து வழிபடுவது ஒன்று தான்.
திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! நான் உன் திருவருளின் பெருமையை அறிந்து கொள்ளாது அதனை வேண்டாவென்று மறுத்தேன்; என் கண்மணியே, நீ அதற்காக அடியேனை வெறுத்து விட்டு விடுவாயோ?(விடமாட்டாய் – மறைபொருள்) மேன்மை நிலையில் உள்ளவர், (வினையின் காரணமாக) சிறு நாய் கொண்டிருக்கும் குற்றத்தை மன்னிப்பார்கள் அல்லரோ? (அதுபோல்) நீ என்னுடைய வினை அனைத்தையும் அழித்து, என்னை ஆண்டு கொண்டு அருள வேண்டும்.
அடியேனை அடிமையாகக் கொண்டு ஆண்டவனாய், திருமாலும் பிரமனும் அடியையும் முடியையும் அறியா வண்ணம் நீண்டவனாய், நெடுங்களக் கோயிலில் உறைவானாய், சக்கரப்படையால் பேராற்றலுடைய சலந்தரனுடைய மார்பினைப் பிளந்தவனாய், கேதாரத்தில் உறைவோனாய், ஒரு காலத்தும் அழிதல் இல்லாதவனாய், மேல் எழும் பாம்போடு எலும்பினை அணிகலனாகப் பூண்டவனாகிய புள்ளிருக்கு வேளூர்ப் பெருமானைத் துதிக்காமல் பல நாள்களை வீணாகக் கழித்து விட்டேனே.
கருத்துஉரை இதுவரையில் அனாகத சக்ரத்தினை ஆட்படுத்தும் முறையினை சொன்னோம். இப்பொழுது விசுக்தியைப் பற்றிக் கேளு. மேல் குறிப்பிட்ட சக்கரத்திற்கு பன்னிரண்டு அங்குலம் மேலும், பதினாறு இதழ் தாமரை வடிவமும் கொண்டது இச்சக்கரம். பாலகனே, இதற்கான அட்சரம் பஞ்சாட்சரத்தில் ஒன்றான ‘வ’காரம். அதன் நடுவில் சதாசிவனும் சாகினியும் வீற்று இருப்பார்கள்.
விளக்கஉரை
மூலக்கூறு : ஆகாயம்
பீஜமந்திரம் : ஹம்
ஐம்பது எழுத்துக்களில் விசுக்தி 16 எழுத்துக்களால் குறிக்கப்பெறும். (எழுத்துக்கள் அவரவர் குரு உபதேச முறைக்கு தக்கவாறு மாறி இருக்கின்றன. சரியான எழுத்தும் பொருளும் குரு முகமாக அறியவும்).
அறு கோணவடிவம். அதை சுற்றிலும் பதினாறு தாமரை இதழ்கள் கொண்ட வடிவமும், அவற்றின் அசைவுகளால் ஏற்படும் சப்தங்களை லுரூ, ருஊ, வஈ, இஆ, அஅ, அம்ஔ, ஓஐ, ஏலூ என்ற எழுத்துக்களால் குறிக்கப்பட்டும் உள்ளே அடர் நீல நிறத்தையுடையதும் ஆன சக்கரமாகும்.
இது, பஞ்சாட்சர எழுத்துகளில் ஒன்றான “வ” என்னும் எழுத்தையும், அதன் தத்துவத்தையும் சக்கரம் ஆகும்.
யோக மரபுகளில் விசுக்தியும் அதற்கு மேல் அனைத்து சக்கரங்களும் ஞான சக்கரங்களாக உணர்த்தப்படும். அதன் பொருட்டே ஈசன் ஆலகால நஞ்சு உண்ட போது அவர்தம் நிலை மாறாது இருக்க அன்னை பராசக்தி ஈசனின் கண்டத்தில் விஷத்தை தடுத்தி நிறுத்திய வரலாறு உணர்த்தும்
ஆண் தெய்வம் : பஞ்சாட்சர சிவன்
மேனி : நீல நிற மேனி
ஆடை : புலித் தோல்
கரங்கள்: நான்கு கைகள். . திரிசூலம், உடுக்கை, ஜப மாலை, அபய முத்திரை ஆகியவற்றினை கைகளில் தாங்கிய வடிவம்
பெண் தெய்வம் : மகா குண்டலினி சக்தியானது இதில் பாயும் போது இதன் பெயர் சாகிணி எனும் பெயர் தாங்கி சிகப்பு நிற தாமரையில் அமர்ந்த கோலம்.
மேனி : இளம் ரோஜா நிறம்
ஆடை : நீல நிற புடவை
கரங்கள்: நான்கு கைகள், மண்டையோடு, அங்குசம், புனித வேதம், ஜப மாலை ஆகியவற்றினை கைகளில் தாங்கிய வடிவம்
(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதாலும், யோக மார்கத்துடன் சம்மந்தப்பட்டது என்பதாலும் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)
ஓங்கல் இடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி ஏங்கு ஒலி நீர் ஞாலத்து இருள் அகற்றும்- ஆங்கம் அவற்றுள் மின் ஏர் தனியாழி வெங்கதிர் ஒன்றே அனையது தன் ஏர் இலாத தமிழ்
தண்டியலங்காரம்
கருத்துஉரை
மலையில் தோன்றி, உயர்ந்தவர் தொழுமாறு விளங்கி, இந்த உலகத்து இருளையெல்லாம் அகற்றுபவை இரண்டு. அவற்றுள் ஒன்று மின்னுகின்ற எதுவும் கலவாத தனித்தன்மையான கதிரவன் என்னும் ஞாயிறு. மற்றொன்று தன்னிகரற்ற தமிழ் மொழி என்றவாறு.
நிழல் செறிந்த சோலைகளில் நீல நிறம் பொருந்திய வண்டு இனங்கள் குழல் ஒலிப்பது போல இசை வழங்கும் திருக்கோலக்காவில் விளங்கும் சிவபிரானுடைய வீரக்கழல் செறிந்த திருவடிகளை நோக்கி கைகூப்பித் தொழுபவர் பக்கம் துயரம் வாராது.
*சலவரைச்* சாரா விடுதல் இனிதே; புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே; மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க்கு எல்லாம் தகுதியால் வாழ்தல் இனிது.
இனியவை நாற்பது – பூதஞ் சேந்தனார்
கருத்து உரை
வஞ்சகர்களை சாராமல் அவரை விட்டு நீக்குதல் இனியது. அறிவுடையாருடைய வாய்மொழிச் சொற்களைப் போற்றுதல் இனியது. பூமியில் வாழ்கின்ற உயிர்கள் உரிமையுடன் வாழ்தல் இனிது
திரு நடனம் புரிபவனே! மலம் இல்லாதவனே! வெண்ணீற்றை உடையவனே! நெற்றிக்கண்ணை உடையவனே! தேவர் பிரானே! ஒப்பற்றவனே! முறையிட்டு அரற்றி உலகம் முழுதும் தேடியும் உன்னை நான் பார்க்கவில்லை. தீர்த்தமாகிய பொய்கையை உடைய திருப்பெருந்துறையில் வளப்பமான மலர்களை உடைய குருந்தமர நிழலில் பொருந்திய சிறப்புடைய செல்வனே! தொண்டனாகிய நான் அன்புடன் அழைத்தால், அஞ்சாதே என்று சொல்லி அருள் புரிவாயாக!
சூரியனைக் கண்ட சூரியகாந்தக்கல் நெருப்பு வடிவம் பெறும்; சந்திரனைக் கண்ட சந்திரகாந்தக்கல் முத்துப்போன்று நீர் வடிவாய் நீரை உமிழும்; கண்ணுக்கு உதவியாக அணியப்படும் ஆடி ஆகிய `உபநேத்திரம்` பார்வை வழியை நன்கு தெரிவிக்கும்; (அது போல) சிவனை உள்ளத்தில் ஏற்றுக் கொண்ட உயிர்கள் அந்தச் சிவன் வடிவம் பெறும்.
மனிதர்கள், உலகின் நன்மை தீமைகள் அனைத்தும் நவகிரகங்களால் செய்யப்பட்டவை என்று நினைத்து அந்த கிரகங்களையும், நட்சத்திரங்களையும் பூசை செய்கின்றனர். இதில் எனக்கு சந்தேகம் உள்ளது. இதை தீர்க்க கடவீர்
சிவன்
நட்சத்திரங்களும் கிரங்கங்களும் தாமே காரியங்களை செய்வதில்லை. மனிதர்களின் நன்மைக்காக அவைகள் நல்லவைகளாகவும், கெட்டவைகளாகவும் தெரிகின்றன. நல்ல கர்மங்கள் சுப கிரங்கங்களாலும், கெட்ட கர்மங்கள் பாப கிரங்களாலும் தெரிவிக்கப்படுகின்றன. ஆதலினால் பாப கிரங்கங்கள் இருக்கும் போது ஜனங்கள் கெடுதலைச் செய்கிறார்கள். சுப கிரங்கங்கள் இருக்கும் போது தாமே சரியாக செய்வதாக நினைத்து நல்ல காரியங்களைச் செய்கிறார்கள். எப்பொழுதும் கிரக, நட்சத்திரங்கள் நன்மை தீமை செய்வதில்லை. எல்லா வினைகளும் அந்தந்த உயிர்களால் செய்யப்பட்டவை. கிரகங்கள் வேறு, செய்பவன் வேறு. வினைகளை செய்தவன் கிரங்கங்களால் தூண்டப்பட்டு தன் பலன்களை அனுபவிக்கிறான்.
உமை
நல்ல வினைகள், தீய வினைகள் ஆகியவற்றை செய்த மனிதர்கள் அடுத்து வரும் பிறப்புகளில் எதை முதலில் அனுபவிக்கிறார்கள்?
சிவன்
சிலர் நல்லவினைகள் முன்பு அனுபவிக்கின்றனர் என்றும், சிலர் தீய வினைகளை பின்னர் அனுபவிக்கின்றனர் என்றும் கூறுகிறார்கள். இது தவறு. முன் ஜென்மங்களில் எவ்வாறு இரு வினைகளும் செய்யப்பட்டனவோ அவ்வாறே அதற்குத் தக்க பலன்களை அனுபவிக்கின்றனர். இந்த பூமியில் மனிதர்கள் செல்வம், வறுமை, இன்பம், துன்பம்,அச்சமின்மை, பயம் போன்றவற்றை வரிசையாக அனுபவிக்கின்றனர். செல்வம் உடையவர்கள் துயரப்படுகிறார்கள். வறியவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள். இது மானிட வர்கங்களுக்கு பொருந்தும். சுவர்க்க, நரகத்தில் அவ்வாறு இல்லை. இடையறாத சுகம் சுவர்கத்திலும், இடையறாத துன்பம் நரகத்திலும் இருக்கும். மிகப் பெரியதான வினைகளை முதலில் அனுபவித்து மிகச் சிறிய வினைகளை பின்னர் அனுபவிக்கின்றனர்.
உமை
உலகில் உயிர்கள் பிறந்து பிறந்து நில்லாமல் உயிர் விடுத்து இறப்பது எதனால்?
சிவன்
தேகமும் ஆத்மாவும் இணைந்திருப்பதை பிராணிகள்/உயிர்கள் என்று சொல்லப்படுகிறது. இதில் ஆத்மா நித்தியம், உடம் அநித்தியம், இவ்வாறு தேகத்துடன் சேரும் ஆத்மா நாளடைவில் தேகத்தின் வலிமை குன்றிய பிறகு அதை விட்டு விடுகிறது. இதை உலகில் உள்ளவர்கள் மரணம் என்கிறனர். இது தேவர், அசுரர், மனிதர் ஆகிய எல்லாருக்கும் பொருந்தும். உயிரற்ற பொருள்களை எப்படி ஆகாயம் தன்னிடத்தில் கொள்வது இல்லையோ அது போலவே காலமும். இவ்வாறு உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறப்பு எடுத்து தேகம் அடைகின்றன.
உமை
சில உயிர்கள் இளமையிலே இறக்கின்றன. சில உயிர்கள் வயது முதிர்ந்து உயிரோடு இருக்கின்றன. இதனால் காலத்தினால் மரணம் நிச்சயமாகவில்லை. இந்த சந்தேகத்தை தெளிவியுங்கள்.
சிவன்
காலமானது தேக தளர்ச்சியை மட்டும் செய்கிறது. அது தேகம் விழ்ந்து போகச் செய்வதில்லை. கர்மம் முடிந்தால் தேகம் தானாகவே விழும். முந்தைய கர்மத்தின் படியே இருப்பதும் இறப்பதும். முன் செய்த கர்மம் இருக்கும் வரையில் மனிதன் உயிரோடு இருக்கிறான். அந்த கர்மத்தின் அடிப்படையில் தான் அவன் வெகு காலம் உயிரோடு இருப்பதும்.
உமை
மனிதர்கள் தீர்க்க ஆயுள் உள்ளவர்களாகவும், ஆற்ப ஆயுள் உள்ளவர்களாகவும் இருப்பது எதனால்?
பெண் பொருந்திய பாகத்தனும், வேதம் சொன்ன மொழியையுடையவனும், உயர்ந்த இதயமலரில் வீற்றிருக்கும் ஒளிப்பிழம்பானவனும், குற்றமற்ற மேலான கருணையாளனும், அடியார்கள் கொண்டாடுகின்ற நீதியினையே, குணமாக அவர்களுக்கு அருள்புரியும், அரும்புகள் மலர்கின்ற, சோலை சூழ்ந்த, திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும், எமது புண்ணியப்பொருளானவனும் ஆகிய இறைவன், மணணுலகத்தில் வந்து இறங்கி, எல்லாவற்றுக்கும் முதலாயுள்ள பெரும் பொருளாகிய தனது தன்மையை வெளிப்படுத்திய, அருளின் அருமையை அறிய வல்லர்கள், எம்பிரான் ஆவார்கள்.
நில்லடா நிலை அறிந்து சுகத்தைக்காண நிசமான ருத்திரனார் பதியைக்கேளு சொல்லடா சொல்லறிந்து சுகத்தைப் பார்க்க சுகமான முக்கோணம் நன்றாய்க்கீறி அல்லடா முக்கோணத் ததிலேநீதான் அப்பனே பன்னிரண்டி தழ்தான்போடு விள்ளடா செம்புனிற மான கோட்டை விசையான கோட்டைநடு விந்துபோடே
அகத்தியர் சௌமிய சாகரம்
கருத்துஉரை
அடுத்தது “சி”கார ” எழுத்தாகவும், சிகாரத்தின் நடுவில் பார்வதியுடன் அமர்ந்திருக்கும் ருத்திரனாரை தலைமையாக கொண்ட அனாதகத்தை, முக்கோணச் சக்கரம் சுற்றிலும் (இரு முக்கோணங்கள் ஒன்று மேல்நோக்கியும் ஒன்று கீழ் நோக்கி) பன்னிரண்டு இதழ்களை வரைந்து, செம்பின் நிறம்போன்ற சிவந்த கோட்டை அதன் நடுவில் புள்ளியாகவும், சக்திதத்துவம் உடையதாகவும் சிறியதாகவும் உள்ள பிந்துவினை இட்டு குரு உபதேசித்த படி ஜபிக்க வேண்டும்.
மூலாதாரம் முதல் அனாகதம் வரை உணர்ச்சி மையம். அனாகதம் முதல் துரியம் துரியாதீதம் வரை அறிவு மையம்.எனவே அனாகதம் அறிவும் உணர்ச்சியும் சந்திக்கின்ற மையப்புள்ளி. இது பற்றியே மனிதர்கள் கீழ் நிலை அடைவதும், மேல் நிலை அடைவதும்.
54 சூரிய கலைகளைக்கொண்டு ஜோதி வடிவானது.
நெருப்பின் பஞ்ச பூத தத்துவமாகவும், எல்லாவற்றிலும் மேலாக எப்போதும் அனாதியாய் ஓங்கார சப்தத்தையும் (உடல் முழுதும் சிரசு வரை) மின்னலின் கண் தோன்றும் இடி சப்தத்தையும் எழுப்பிக்கொண்டே இருப்பதோடு ஒவ்வொரு அணுவிலும் அதன் அதிர்வுகளை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது.
ஒன்றின் மூலத்திலிருந்து வந்தது.
‘ஹ்ருதயஸ்தா, ரவிப்ரக்யா – ‘ஹ்ருதயத்தில் வசிக்கையில் சூர்யன் போன்று பிரகாசிப்பது’ என்று லலிதா சகஸ்ரநாமத்தில் வரும் நாமாவளி இதைக் குறிக்கிறது. ஹ்ருதயத்தில் சியாமா/தருணியாகவும் இருப்பதை குறிக்கிறது. அவளே அனாகதத்தை தாண்டி விஷ்ணுக்ரந்தியைக் கடக்கையில் சூரியனது ஒளியை விஞ்சுவதாக ருத்ர சியாமளம் கூறுகிறது.
(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதாலும், யோக மார்கத்துடன் சம்மந்தப்பட்டது என்பதாலும் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)
தீமை தரக்கூடிய பொய்யை ஒழியாமல் இருக்கிறாய்; புலால் உணவை விடாமல் இருக்கிறாய்; திருக்காளத்தியில் உறையும் காளத்தி நாதரை எண்ணாமல் இருக்கிறாய்; நல்வழிக்கு அழைத்துச் செல்லும் அறங்களைச் செய்யாமல் இருக்கிறாய்; தீமையானதும் கொடுமையானதுமான சினத்தை விடாமல் இருக்கிறாய்; திரு ஐந்தெழுத்தினை ஓதாமல் இருக்கிறாய்; மனமே இவை எல்லாம் இல்லாமல் உனக்கு என்ன சிறப்பு?
தேவர்களில் உங்கள் தேவர், எங்கள் தேவர் என்று இரண்டு தேவர்கள் இருக்கிறார்களா? இங்கும் அங்கும் இரண்டு தேவர்கள் இருக்கிறார்களா? அங்கும் இங்குமாய் நின்ற ஆதி மூர்த்தி ஒருவரே. இவ்வாறு பகைகொண்டு மாறுபாடான கருத்துக்களை சொல்லுபவர்கள் மிக மோசமான நிலை அடைந்து இறப்பார்கள்.
விளக்கஉரை
அகச் சமயம் ஆறும் (வைரவம், வாமம், காளாமுகம், மாவிரதம், பாசுபதம், பிங்கலம்.), புறச் சமயங்களான சைவம், வைணவம், சாக்தம், செளரம், காணாபத்யம், கெளமாரம் ஆகிய நிலைகளில் இருந்து அருள்பவன்.
மனம் நிலையில்லாமல் ஒடுகிறது என்பதை குறிக்கவே இரண்டாம் வரிகளில் இங்கும் அங்குமாகி என்றும், மனம் நிலை பெற்றப்பின் புறத்தில் இருக்கும் மூர்த்தியே அகத்தில் இருக்கிறார் என்பதை குறிக்கவே மூன்றாம் வரிகளில் அங்கும் இங்கும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.(இது என் சிற்றறிவுக்கு எட்டியது – வேறு விளக்கங்கள் தெரிவித்தால் அறிந்து கொள்வேன்).
என் தாயே, அபிராமியே, மனிதராய்ப் பிறந்த எவராலும் அறிய இயலாத வேதத்தின் பொருளை உனது பேரருளால் அறிந்து கொண்டேன். அதை அறிந்து கொண்டு உனது திருவடிகளே சரணமென்று சரணடைந்தேன். உனது அருள் பெற்ற அடியார்களின் பெருமைகளை அறியாமல், உன்னைத் தொழாமல், தீய செயல்கள் புரிந்து நரகத்தில் மந்தையாக விழக் காத்திருக்கும் இம்மனிதர்க் கூட்டங்களை கண்டு அஞ்சி அவர்களிடம் இருந்து விலகி விட்டேன்.
வாராதிருந்தால் இனி நான் உன் வடிவேல் விழிக்கு மை எழுதேன் மதிவாள் நுதற்குத் திலகம் இடேன் மணியால் இழைத்த பணிபுனையேன் பேராதரத்தினொடு பழக்கம் பேசேன் சிறிதும் முகம் பாரேன் பிறங்கு முலைப்பால் இனிதூட்டேன் பிரியமுடன் ஒக்கலை வைத்துத் தேரார் வீதி வளங்காட்டேன் செய்ய கனிவாய் முத்தமிடேன் திகழும் மணித் தொட்டிலில் திருக்கண் வளரச் சீராட்டேன் தாரார் இமவான் தடமார்பில் தவழும் குழந்தாய் வருகவே சாலிப் பதிவாழ் காந்திமதித் தாயே வருக வருகவே!
நெல்லை காந்திமதி பிள்ளைத் தமிழ்
கருத்துஉரை
நீ வராது இருந்தால் உன் வேல் போன்ற விழிகளில் மை இட்டு எழுத மாட்டேன்; கூர்மையான வாள் போன்று இருக்கும் நெற்றியில் திலகம் இட மாட்டேன்; மணியால் கோர்க்கப்பட்டவைகளை கொண்டு அவைகளை உன் கழுத்தில் இட்டு அழகு பார்க்கும் பணிகளை செய்ய மாட்டேன். தானாக முந்திச் சென்று காணும் உன்னிடம் பேச மாட்டேன்; முகத்தினையும் காணமாட்டேன். தாய்மைக்கு உரித்தான தனங்களில் இருந்து பால் ஊட்ட மாட்டேன்; தேர் ஊர்ந்து செல்லும் வீதிகளைக் காட்ட மாட்டேன்; மன மகிழ்வோடு முத்தமிட மாட்டேன்; மணிகள் கட்டப்பட்டிருக்கும் தொட்டிலில் இட்டு சீராட்ட மாட்டேன்; இமவானின் மார்பில் தவழும் குழந்தையும், நெற்கதிர்களால் சூழப்பட்டிருக்கும் தலைவன் வாழும் இடத்தில் வாழும் காந்திமதித் தாயே வருக வருக.
விளக்கஉரை
பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் இலக்கியத்தில் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று. புலவர்கள் தாம் விரும்பிய தெய்வங்கள், ஆச்சாரியர்கள், புலவர் பெருமக்கள், ஆதீனகர்த்தர், அரசர், உபகாரிகள், அவர் அவர்கட்கு உகந்தவர்கள், ஆகியோரைக் குழந்தையாக உருவகித்து, கற்பனை பல அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழாகும். குழந்தையாகக் கொண்டதும் பாவனையே ஆகும்.
நெல்லை காந்திமதி அன்னையை குழந்தையாக பாவித்து எழுதப்பட்ட பாடல்.
தூய கடல் நீர் அடிசில் உண்டு, அது துரந்தான்; ஆய அதனால் அமரும் மெய் உடையன் அன்னான்; மாய-வினை வாள் அவுணன் வாதவிதன் வன்மைக் காயம் இனிது உண்டு, உலகின் ஆர் இடர்களைந்தான்.
கம்பராமாயணம்
கருத்துஉரை
அகத்தியர், தூய்மையான கடல்களின் நீர் முழுவதையும் உணவாக உண்டு அதனை மீண்டும் உமிழ்ந்த முனிவரும்; அப்படிப்பட்ட செயலால் குறுகியது எனினும் விரும்பத்தக்க உடலை உடைய குறுமுனி என அத்தகையோரும்; வஞ்சகச் செயல்களையுடைய வாட்படையுடைய அரக்கனாம் வாதாபி என்பவனின் வலிய உடலை மகிழ்ந்து உண்டு; உலகமக்களின் கொடிய துன்பத்தைப் போக்கியவரும் ஆவார்.
உலக உயிர்கள் எவற்றுக்கும் பாவம் செய்யாது அறநெறியில் வாழ்தல், அவ்வாழ்விற்குத் தேவையான பொருட்செல்வத்தை எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாமலும் குற்றமற்ற வழியிலும் ஈட்டுதல், அவ்வாறு ஈட்டிய பொருளைத் தாமும் பிறரும் அனுபவித்து மகிழ்தல், அச்செய்கையின் விளைவாக உலக இருப்புக்களின்பால் இருக்கும் தீராத பற்றை விடுதல் ஆகிய இந்நான்கு வகை வாழ்க்கை ஒழுகலாறுகளும் இவ்வாறு இல்லாமல் மானுட உடல் தாங்கி இவ்வுலகில் பிறந்து வாழ்வதால் உண்டாகும் உண்மைப் பயன் என்ன?
மலை அளவு பொற்குவியல் வைத்திருந்தாலும் எமன் வருகையில் அதை அள்ளிச் செல்வாரோ? (முடியாது என்பது துணிபு) . இவ்வாறு இல்லாமல் மனதினை தந்தையாகிய இறைவன் பால் வைத்தவர்கள் அழியாதவர்கள் என்று துணிந்து ஆடு பாம்பே (என்கிறார்)