ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – இடிஞ்சில்
பொருள்
- அகல்
பாடல்
இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டான்
முடிஞ்ச தறியார் முழங்குவர் மூடர்
விடிஞ்சிரு ளாவ தறியா உலகம்
படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே.
திருமந்திரம் – முதல் தந்திரம் – திருமூலர்
கருத்து உரை
அகல் இருப்பினும் சுடரை அணைத்து விட்டால், அந்த அகலுக்கு உள்ள வாழ்நாள் முடிந்துவிடும். அது போல்வதே உடம்பின் வாழ்நாளும், இதனை அறியாமல் உடம்பையே பொருளாகக் கருதி அறிவில்லாதவர்கள் ஆரவாரம் செய்வார்கள். விடியல் கண்ட பிறகும் இருளில் கிடப்பதை ஒத்து வழியறியாது தடுமாறும் குருடரைப் போல, உடம்பின் நிலையாமை இயல்பு கண்கூடாக விளங்கி நிற்கவும் உலகம் அதனை அறியாது உடம்பைப் பற்றி அதில் அழுந்திக் கிடந்து, அதன் மேல் நிலைக்கு வராமல் துயருறுதல் இரங்கத்தக்கது.