ஓவியங்கள் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – ஆக்ஞை
பொருள்
- ஆக்ஞை’ என்ற சொல்லானது “ஆக்கினை’ என்ற சொல்லின் மருவு. “கட்டளை’ அல்லது “ஆணை’.
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி
உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம்
பற்றுக்குப் பற்றாற்ப் பரமன் இருந்திடம்
சிற்றம் பலமென்று சேர்ந்துகொண் டேனே.
திருமந்திரம்
கருத்து உரை
நெற்றியின்கண் நேர்நடுவில் புருவமத்தியில் காணப்படும் இடைவெளி தில்லைத் திருச்சிற்றம்பலமாகும். இதைக் கண்டு உற்று உற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம் ‘சிவசிவ‘ என்னும் செந்தமிழ்த் திருமறையாகும். எல்லா பற்றறுகளையும் விட்ட பற்றவர்களாகிய பற்றுக்குப் பற்றாய் நிற்பவன் சிவபெருமான். அவனே பரமன். அவன் உடனாக இருக்கும் இருப்பிடம் மேலே கூறப்பட்ட புருவநடுவாகிய தில்லைத் திருச்சிற்றம்பலமென்று திருவருளால் தேர்ந்து தெளிந்து கொண்டேன்.
விளக்க உரை
- வடிவம் வட்டம். இதழ்கள் 96
- இச் சக்கரத்தில் மொத்தம் 96 இதழ்கள் இருந்தாலும், ஒரு யந்திரமாக வரையும்போது இரண்டு இதழ்கள் கொண்டதாகவே வரையப்படும்.
- வலப்புறம் ஒன்று, இடப்புறம் ஒன்று என வரையப்படும் இந்த இதழ்கள் முறையே “ஹம், “ஷாம்’என்று அழைக்கப்படுகின்றன. அக்ஷ்ரங்கள் முறையே (‘ஹ’,’க்ஷ’). அதன் தேவதைகளான ஹம்ஸவதீ, க்ஷமாவதீ தேவியரே, ஹாகினீ தேவியின் பரிவார தேவதைகளாக போற்றப்படுகின்றனர்.
- இடகலை, பிங்கலை நாடிகள் வழியாக ஆக்ஞை சக்கரம் முழு உடலின்மீதும் ஆளுமை செலுத்துகிறது.
- ஆக்ஞை சக்கரம் பஞ்சபூதங்களின் ஆளுமைக்கு அப்பாற்பட்டது.
- சதாசிவனாரும், மனோன்மணி ஆகிய ஞானத் தாயும் கூடி மகிழும் ஆக்ஞை புருவ மத்தி அல்லது புருவ நடு ஸ்தானமே “ஆக்ஞை” என்ற தலமாகும்.
- இதன் சக்ர கமலத்தில் சந்திரனுடைய 64 கலைகள் உள்ளன.
- தெய்வம் – மனோன்மணி, தர்மசக்தி இவர்களுடன் கூடிய ஸதாசிவன்.
- வண்ணம் – இண்டிகோ
- பீஜா மந்திரம் – “அம்’ (ஆன்ம்)
- வாகனம் – நாதம். இந்த நாதமே “அம்’ எனும் பீஜா மந்திரத்தை சுமந்து செல்லும்.
- அதிதேவதை – ஹாகினி தேவி
- குணம்- சாத்விகம்.
- லோகம்- தபலோகம்.
- கோசம்- விஞ்ஞானமய கோசம்
- தெய்வம் – சிவன். இந்த சக்கரத்தில் அவர் அர்த்தநாரீஸ்வரர் வடிவில் உள்ளார். பேதங்கள் மறைந்த பரிபூரண நிலை
- புலன் (தன்மந்திரம்), புலனுறுப்பு (ஞானேந்திரியம்), செயலுறுப்பு (கர்மேந்திரியம்) ஆகிய அனைத்துமே “மனம்’
- நெற்றியில் இரு புருவங்களுக்கு மத்தியிலுள்ள பகுதியில் இந்தச் சக்கரம் அமைந்துள்ளது. “நெற்றிக் கண்’, “மூன்றாவது கண்’, “ஞானக் கண்’, ‘ஆளுமைச் சக்கரம்’,’ ப்ரம்ஹக்ரந்தி ‘ என பல பெயர்களால் இந்தச் சக்கரம் அழைக்கப்படுகிறது.
- இந்த ஆக்ஞா சக்கரத்தில் பரமசிவமும் சித் சக்தியும் இணைந்திருப்பதை தியானிக்கும் பக்தர்கள் சூரியன், சந்திரன், அக்னி போன்ற ஒளிகளுக்கு அப்பாற்பட்ட பரஞ்ஜோதி வடிவான தேவியின் திருவருளைப் பெறுவர். இங்குதான் ஜீவன்-இறைவன் சந்திப்பு ஏற்படுகிறது
- ஆக்ஞை சக்கரத்தைக் குண்டலினி அடையும்போது, “திரிகால ஞானம் அல்லது திரிகால ஞானி’ எனும் கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகிய மூன்று காலங்களையும் உணர்ந்த நிலை ஏற்படும்.
- ப்ரம்ஹக்ரந்தி எனும் இவ்விடத்திலேயே சாக்த யோகிகள் ஹாகினீ தேவியை தியானிப்பர்.
- இச்சக்கரத்தில் மகாகாலன் எனும் சித்தன், ஹாகினீ தேவியோடு திருவருள்பாலிக்கிறார்கள். இந்த சக்கரத்தில் விளங்கும் ஒளியை முக்தியைக் கொடுக்கவல்ல “துரீயலிங்கம்” என உபாசகர்கள் அழைப்பர்.
- உன்மனீ பாவம் ஏற்பட அருள்வதால் தேவிக்கு மனோன்மணி என்று பெயர். (உன்மனீ பாவம் -சகல விஷயங்களிலும் பற்றுதலை விட்டு இதய கமலத்திலிருக்கும் பரப்பிரம்மத்தை தியானம் செய்யும் நிலை. கண்கள் மூடாமலும் திறக்காமலும், பிராணவாயு, ரேசகம், பூரகம் இல்லாமலும் மனம், சங்கல்பம் விகல்பம் இல்லாமலும் இருந்து அம்பிகையை தியானிப்பது உன்மனீ பாவம்).
பல்வேறு நூல்களில் குறிப்புகள்
லலிதா ஸஹஸ்ரநாமம் – ஹாகினீ தேவி (ஆக்ஞை)
ஆக்ஞா-சக்ராப்ஜ-நிலயா-சுக்லவர்ணா-ஷடானனா!
மஜ்ஜா-ஸம்ஸ்தா ஹம்ஸவதீ-முக்ய-சக்தி-ஸமன்விதா
ஹரித்ரான்னைக-ரஸிகா ஹாகினீ –ரூப-தாரிணீ
புருவமத்தியில் இரண்டு இதழ் தாமரையில் இருக்கும் ஆறு முகங்களுடன் கூடிய ஹாகினீ தேவி, வெண்மை நிறமுடையவள். மஞ்சள் நிறமுடைய எலுமிச்சை அன்னத்தின்மீது பிரியம் கொண்ட இத்தேவி ஞான முத்திரை, அக்ஷமாலை, டமருகம் மற்றும் கபாலத்தை ஏந்தியிருப்பவள். மூன்று கண்களை உடையவள். ஹம்ஸகதி முதலியவர்களுடன் கூடியவள். சகல தேவ தேவியர்களாலும் துதிக்கப்படுபவள். எலும்பிலுள்ள தாது மஜ்ஜையின் அபிமான தேவதையாக திருவருள் புரிபவள்.
ஆதிசங்கரர்
இந்த சக்கரத்தில் தியானிப்பவர்களுக்கு கட்டாயம் சாயுஜ்ய பதவி கிட்டும். இச்சக்கரத்தில் தேவதேவியர் பரசம்புநாதர், சித்பராம்பளாக அருள்கின்றனர். இங்கு தேவி ஸாதா எனும் கலையாக பிரகாசிக்கிறாள்.
காளிதாஸன் – லகுஸ்தவம்
நெற்றியின் நடுவில் வானவில் போன்ற பல வர்ணங்கள் கொண்ட ஒளி, சிரசில் சந்திரனுடைய வெண்மையான ஒளி, இதயத்தில் சூரிய ஒளி கொண்ட தேவி என் பாவங்களை நாசம் செய்யட்டும்.
(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதாலும், யோக மார்கத்துடன் சம்மந்தப்பட்டது என்பதாலும் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)