கருத்து – திருவாலங்காட்டில் எழுந்தருளும் பெருமானின் வடிவழகை உரைத்து தன்னை அடியாருக்கு அடியாராக ஏற்றுக் கொள்ள வேண்டி விண்ணப்பிக்கும் பாடல்.
பதவுரை
பிறர் தூண்டிய பின் ஒளிரும் விளக்கைப் போல் அல்லாமல் தானே ஒளிரும் விளக்குப் போலச் சிறந்த ஒளிவடிவினனே, உம்மை வணங்குபவர்களின் துன்பத்தை முழுமையாக நீக்குபவனே, பிரம்மாக்களின் தலையினை அணிகலனாய் பூண்டவனே, முப்புரங்களையும் சாம்பலாகுமாறு அழித்து அறவடிவாக இருப்பவனே, முன்பு செய்யப்பட்ட பழைய வினைகள் முற்றிலும் நீங்குமாறு நீக்கியருளுகின்ற கடவுளே, பழையனூரை விரும்புகின்ற தலைவனே, திருவாலங்காட்டில் எழுந்தருளி இருப்பவனே! அடியேன் உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன்.
விளக்கஉரை
இறைவன் பிறர் அறிவிக்க வேண்டாது தானே அறியும் அறிவினன் என்பதால் ‘தூண்டா விளக்கின் நற்சோதீ’.
தன்வயத்தனாதல் – வேறு எவர் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் இருத்தல்; வரம்பில்லாத ஆற்றல் உடைமை – பரந்து விரிந்த பிரபஞ்சத்தினை ஆட்டுவிக்கும் தலைவன் வரம்பில்லா ஆற்றல் கொண்டு இருத்தல் இவை எண் குணங்களில் முக்கிய குணங்கள் ஆகும். அவன் நெருப்பு வடிவமாகவும் இருக்கிறான்; இதைக் குறிக்கவே ‘தூண்டா விளக்கின் நற்சோதீ’ எனவும் கொள்ளலாம்.
கருத்து – திரு நீறு அணிதலின் பெருமையை உணர்த்தும் பாடல்.
பதவுரை
திருப்பாதிரிப்புலியூரில் உறையும் பெருமானே! தாயின் கருவிலே கிடந்தபோதும் உன்னுடைய திருவடிகளையே எண்ணி தியானிக்கும் கருத்து உடையேனாய் இருந்தேன்; கருவில் இருந்து நீங்கி வெளிப்பட்டு உருவம் கிட்டிய பிறகும் உன்னுடைய அருளினால் இப்பொழுது ஆராய்ந்து உன் திருநாமங்களைப் பலகாலும் சொல்லிக் கொண்டு இருக்கப் பழகியுள்ளேன்; மேன்மை உடையதும், வளமை உடையதும், பொலிமை தரத் தக்கதுமான திருவைந்தெழுத்தை வாயால் ஓதித் திருநீறு அணியப் பெற்றேன்; ஆதலினால் அடியேனுக்கு நற்பயனைத் தரும் உன்னுடைய மார்க்கத்தைத் தருவாயாக.
விளக்கஉரை
கருவிலே இருந்த போதே உன்னை நினைக்கும் எண்ணம் பெற்றேன். ‘முன்னமே முனியாகி எனை அடையத் தவம் முயன்றான் அன்னவனை இனிச் சூலை மடுத்து ஆள்வாம்’ எனும் பெரிய புராண வரிகள் இங்கு சிந்திக்கத் தக்கது.
கருவுற்ற நாள் முதலாக உன் பாதமே காண்பதற்கு உருகிற்றே என் உள்ளமும் நானும் கிடந்து அலந்தெய்த்து ஒழிந்தேன் திரு ஒற்றியூரா திரு ஆலவாயா, திரு ஆரூரா ஒரு பற்றிலாமையும் கண்டு இரங்காய் கச்சி ஏகம்பனே
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து – எனக்கு உன்னையன்றி வேறு ஒரு பற்றும் இல்லாமையையும் அறிந்து எனக்கு இரங்கி அருள் புரிவாயாக என விண்ணப்பிக்கும் பாடல்.
‘தாயாரினுடைய கருவிலே பொருந்திய நாள்முதலாக’ எனும் விளக்கங்கள் சில இடங்களில் காணப்படுகின்றது. முதன் முதலில் கருவினை அடைந்த காலம் என்பதே பொருத்தமாக இருக்கும்.
கிடந்து அலைந்து அலந்தெய்த்து ஒழிந்தேன் - உன்னை நினையாது ஒருபோதும் இருந்தறியேன் என்பது வெளிப்படை.
கருத்து – எம்பெருமானின் வடிவங்களையும் குணத்தையும் உரைத்து அவனைப் பற்றி பேசதா நாள் எல்லாம் வீண் என்று உரைக்கும் பாடல்.
பதவுரை
பால் போன்ற வெள்ளை நிறமுடைய பிறைமதியைச் சூடியவனாகவும், மூன்று உலகினுக்கும் எவர் தூண்டுதலும் இல்லாமல் தானே தலைவனாகவும் இருக்கும் முதல்வனாகவும், செருக்கு கொண்ட பகைவருடைய மும்மதிலையும் அழித்தவனாகவும், விளங்கக்கூடிய ஒளி வடிவமாக இருப்பவனாகவும், அன்னையினை இடப்பாகம் கொண்டதால் மரகத மணி போன்ற நிறமுடையவனாகவும், தேனும் பாலும் துய்க்கப் பெறும் போது தரும் இன்பம் போன்றவனாகவும், குற்றாலம் என்ற திருத்தலத்தில் விரும்பி அருளும் இளையவனாகவும், கூத்தாடுதலில் வல்லவனாகவும், யாவருக்கும் தலைவனாகவும், சிவஞானியர் ஞானத்தால் அறியப்படுபவனாகவும் ஆகிய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
விளக்கஉரை
பிரகிருதி மாயா உலகம்: மண் முதல் மூலப்பிரகிருதிவரை உள்ள 24 தத்துவங்கள்; 2 அசுத்த மாயா உலகம்: காலம் முதல் மாயை வரை உள்ள 7 தத்துவங்கள்; 3 சுத்த மாயா உலகம்: சுத்தவித்தை, மாகேசுரம், சாதாக்கியம், பிந்து, நாதம் எனும் 5 தத்துவங்கள் – 36 தத்துவங்களை கடந்து தலைவனாகவும் இருப்பவன் (சைவ சித்தாந்த கருத்துப்படி)
செற்றார்கள் – பகைத்தவர்கள்
செற்றான் – அழித்தான்
மரகதம் – மரகதம்போல்பவன்
குற்றாலம் – பாண்டி நாட்டுத் தலங்களுள் ஒன்று
கூத்தாட வல்லானை – எல்லா வகை ஆடலும் அறிந்தவன் (காளியொடு ஆடியதை கருத்தில் கொள்க)
கருத்து – பொருட்களை அளிப்பவர்களின் உயர்ச்சியினை உரைக்கும் பாடல்.
பதவுரை
இருள் போன்ற கருமையா நிறம் உடையதும், மணமிக்கதும், நீண்ட கூந்தலைம் உடைய உமையம்மையாரை இடப்பாகத்தில் உடையவனே, தனி முதல்வனே, தலைமையிற் சிறந்தவனே, எமது தேவனே! பிறரிடம் இருந்து எதையும் பெறாமல் தன்மடடில் சீவனம் செய்பவன் சாமர்த்தியம் உடைய புருடன் ஆவான்; பிறரை நாடாமல் தன்வரையில் வாழ்க்கை நடத்துவோன் திறமை உடைய ஆடவன் ஆவான்; எப்பொழுதும் பதின்மர் எனப்படும் பத்து பேரை காப்பாற்றுவோன் பெருமை உடைய தரணியில் தேவன் என்றும் அமரன் என்றும் அழைக்கபடுவான்; அளவின்றிப் பொருளைக் கொடுத்து நூறுபேரைக் காப்பாற்றுவோன் ஒப்பற்ற இந்திரன் ஆவான்; உலகில் ஆயிரம் பேர் வரை ஆதரிக்கும் அறத்தின் வழியில் நிற்கும் தலைவனே நான்முகன் ஆவான்; நன்னெறி வழியில் செல்லும் பதினாயிரம்பேரைக் காப்பாற்றி அருளுவோன் செந்தாமரைக் கண்ணானான திருமால் ஆவான். எல்லா நாட்களிலும் அவனைவிட மிகுதியாக அளவற்றவற்கு கொடுக்கும் மனிதனே மகாதேவன் ஆவான்.
தன்னில் தானாகவே பூரணம் பெற்றவளாகிய வாலையின் ரூபத்தை காண எவருக்கேனும் திறமை இருக்கின்றதா? தன்னை ஆணென்று கர்வத்தினால் உரைப்பவர்களும் அறிவார்களோ? பால் போன்ற வெண்மை நிறம் கொண்டவளும் இடது பாகம் இருப்பவளும் ஆகிய பராபரையானவள் நினைத்த மாத்திரத்தில் பல கோடி வடிவம் எடுக்கக் கூடியவள்; தேன் போன்ற இனிய மொழியினை உடையவள்; சித்தர் பெருமக்களால் வணங்கப் பெறும் பத்து வயது கொண்ட சிறு பெண் பிள்ளை போன்றவள்; உத்தமியான அவள் இந்த உடலில் நடு நாயகமாக வீற்றிருப்பது என்பதே உண்மை.
கருத்து – எம்பெருமானுக்கும், எம் பெருமானின் அடியவர்களுக்கும் கட்டுப்பட்டவர் அன்றி புவியினில் வாழும் அரசர்களுக்கும் மனிதர்களுக்கும் இல்லை என்று உரைக்கும் பாடல்.
பதவுரை
‘அயன், அரி, அரன்’ என்னும் மூன்று உருவிற்கும் முதல் உருவாயவனே ! அட்டமூர்த்தியே ! 12 ஆதித்தியர்கள், 8 வசுக்கள், 11 ருத்திரர்கள், இந்திரன் மற்றும் பிரஜாபதி ஆகிய முப்பத்து மூவர் தேவர்களாலும், அவர்களின் மிக்க முனிவர்களாலும் எக்காலத்தும் மகிழ்ச்சி மிக்கு வாழ்த்தும் ‘செம்பவளம் போன்ற சிவந்தத் திருமேனியுடைய சிவனே’ என்று போற்றும் நாவுடையாரே நம்மை அடிமை கொண்டு ஆள உடையாராவார் . அதனால் அழித்தல் ஆகிய செயலை விலக்கியும் களவும் அற்றவர்களாக இருக்கின்ற யாம் நாவலந் தீவு முழுவதற்கும் தலைவரான அரசரே எம்மை அழைத்து வருமாறு தம் ஏவலரை ஏவி விடுத்தாலும் அவர் ஆணை வழி நிற்கும் கடப்பாட்டிற்கு உரியவர் ஆனவர் இல்லை.
கருத்து : சிவனின் போற்றுதலுக்கு உரிய திருப்பெயரின் பெருமைகளை உரைக்கும் பாடல்
பதவுரை
இருபத்தைந்து அறைகளிலும் நடுவாகத் தோன்றும் எழுத்தாகவும், சிறப்பென்னும் செம்பொருளாகியும் நிற்கும் சிவனுக்கு உரிய எழுத்து ‘சி’காரமாகும். மற்றைய ‘வ, ய, ந, ம’ என்னும் நான்கெழுத்துக்களும் சேர்ந்து சிவனின் போற்றுதலுக்கு உரிய புகழ்சேர்க்கும் திருப்பெயராகும். நான்கு பெருந்திசைகளிலும் சிவம் பொருந்தி உள்ள நாற்கோணம் திருவைந்தெழுத்தாகும். எங்கும் இருக்கும் பரசிவம் ஒரு மனையிலே ஒன்றி இருக்கும். இந்த நான்கு எழுத்திலும் சிகரம் எப்பொழுதும் உடனாய் நிற்கும்.
கருத்து – மயக்கம் உடையவர் எவர்கள் என்பதை உரைக்கும் பாடல்.
பதவுரை
பல்வேறு வழியில் பொருள் ஈட்டி அதனால் செல்வ செறுக்கு கொண்டு ஆழ்ந்த கீழ் நிலையில் இருபவர்களும், அறியாமையானது இருள் போல் மறைக்கும் காலத்தில் மின்னல் போல் தான் பெற்ற சிறு அறிவை பெற்றவர்களும், மருட்சி உடைய அழகிய பெண்ணைக் கண்டு அவர்களின் மோகத்தில் மயங்கி இருப்பவர்களும் தாம் செய்வது இன்னது என்று அறியாமல் இருப்பார்கள். இவர்களின் மயக்கம் கொண்ட சிந்தனையை மாற்ற இயலாது.
கருத்து – ஊன் எடுத்து அது விலக்க வழி தேடாமல் மாயும் வீணர்களுக்கு அறிவுறுத்தும் பாடல்.
பதவுரை
எம்பெருமான் சிவனின் திருவடிகளை தொழுதல் செய்து தங்களது கைகளால் பூக்கள் தூவி அவர் தம் பெருமையை போற்றி வழிபாடு செய்யாதவர்களும், எல்லா வகையிலும் பெருமை உடைய அவரது திரு நாமத்தை தங்களது நாவினால் சொல்லாதவர்களும், உடல் வளர்ப்பதற்காக வருந்தி உணவினைத் தேடி வீணே அலைபவர்களுமான வீணர்கள் தங்களது உடலை காக்கைக்கு உணவாக அளிப்பதைத் தவிர பயனான காரியம் ஏதும் செய்யாமல் கழிக்கின்றனர். (அந்தோ பரிதாபம் மறை பொருள்)
விளக்கஉரை
பொன்னடி – பொன்னைப் போலப் போற்றுதலுக்கு உரிய திருவடி
கருத்து – பிறவி நீக்கம் வேண்டி திருவொற்றியூர் பெருமானிடன் விண்ணப்பம் செய்யும் பாடல்.
பதவுரை
திருவொற்றியூரில் விரும்பி உறைந்து உலகினை தன்னுடையதாகக் கொண்டவனே, அச்சத்தினை உண்டாக்கும் மலஇருள் இன்னும் என்னை விட்டு நீங்கவில்லை; ஆதலால் வினையை உடையனாகிய எனது உள்ளம் மயக்கம் கண்டுள்ளது; அதனால் செய்வது அறியாது உள்ளேன்; உன்னை அடைவதற்கு ஒரு வழியும் இவ்விடத்தில் எனக்குத் தெரியவில்லை; தெளிவினை தரும் நின்னுடைய அருளொளி எனக்கு கிடைத்தால் அருள் பெறுவேன்; அவ்வாறு உன்னுடை அருள் கிடைக்கா விட்டால் உருண்டோடும் சக்கரம் போன்ற பிறவிச் சூழலில் பட்டு நான் சுழல்வது உண்மை.
கருத்து – திரவியம், சிற்றறிவு, பற்றுதல் ஆகியவை பொய் என்றுகாட்டி அதை விலக்கி அருள்கூட்டுவித்த தன்மையைக் கூறும் பாடல்.
பதவுரை
பேரறிவாலும், மெய்யாலும் உயர்ந்ததும் நல்லதுமான கமலை எனும் திருவாரூர் மாநகரத்தில் வாழ்பவனும், வான் பிறை எனும் சந்திரனை அணிந்தவனுமாகிய ஞானப்பிரகாசன், வாழத் தேவைப்படும் திரவியம் எனப்படும் பொருளும், உலகியல் பற்றி நிற்கும் சிற்றறிவும், உலகம் மற்றும் அவற்றின் மீது கொண்ட பற்றுதலும் அவைகளைப் பற்றி ஒன்று சேர்வதும் பொய்யானது என்று அருள் செய்து தன்னை நாடிய அடியவர்களிடத்தில் மெய் அருளைக் கூட்டினான்.
விளக்கஉரை
தேடும் திரவியமும் – முன்செய்த ஜன்மங்களில் செய்தவினைக்கு ஈடாக செல்வம் ஈட்டுகிரோம் என்பதை உணராமல்தாமே செல்வத்தினை சேர்த்தோம் எனும் மயக்கநிலை.
திருவிநாயகப் பெருமானை வழிபடுவதற்கு வருபவர்கள் “தட, பட” என்ற ஒலியுடன் தங்கள் தலையில் குட்டிக் கொண்டு, அவர்கள் படைக்கும் சர்க்கரையால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை தம் துதிக்கையால் ஏற்றுக் கொள்பவரும், “இச்சை, கிரியை, ஞானம்” என்னும் மும்மதங்களையும் கும்பத் தலங்களாக கொண்டிருப்பவருமான யானை முகத்தினை உடையவரான திருவிநாயகப் பெருமானின் இளையோனும், களிறு போன்றவனும் ஆகிய திருமுருகப் பெருமானின் தரிசனத்தை வலிமை உடைய அருணை என்று அழைக்கப்படும் திருவண்ணாமலை கோயிலின் கோபுர வாயிலுக்கு வடக்குப் பக்கத்தில் சென்று கண்டுகொண்டேன்.
கருத்து – உடல் தன்மைகள் குறித்தும், அதில் இறைவன் உறைவதை குறித்தும் கூறும் பாடல்.
பதவுரை
இந்த உடலானது எட்டு சாண் உயரம் கொண்டது; காற்று சென்று வர ஏதுவாக 9 (ஏழு+இரண்டு) வாயில்களைக் கொண்டது; கட்டுப்படுத்த ஐவர் (பஞ்ச பூதங்கள்) உள்ளார்கள்; அதில் சிவசக்தி ரூபமாக இறைவன் இருக்கின்றான். இதை அறியாமல் பேசுகின்றாய் (மனமே!). இறைவனின் கட்டளைக்கு பயந்து அவர் என்ன உரைப்பாரோ என்று பயந்து நெஞ்சமே நிலை கொள்ளாமல் வாடி தவிக்கின்றேன்.
விளக்கஉரை
பட்டணமுந் தானிரண்டு – கற்றவர்கள் உறையும் இடம் என்பதை முன் காலங்களில் குறிக்க பட்டணம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. இருமை குறித்ததாலும், சித்தர்கள் அம்மை வழிபாடு கொண்டவர்கள் என்பதாலும் சிவசக்தி என்று விளக்கம் உரைக்கப்பட்டுள்ளது.
மூ உருவில் முதல் உருவாய், இரு-நான்கு ஆன மூர்த்தியே!” என்று முப்பத்து மூவர் “தேவர்களும் மிக்கோரும் சிறந்து வாழ்த்தும் செம்பவளத் திருமேனிச் சிவனே!” என்னும் நா உடையார் நமை ஆள உடையார் அன்றே; நாவல் அம் தீவு அகத்தினுக்கு நாதர் ஆன காவலரே ஏவி விடுத்தாரேனும், கடவம் அலோம்; கடுமையொடு களவு அற்றோமே
தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து – பெருமானின் பெருமைகளை உரைத்து எம்பெருமானை வழிபாடு செய்வதால் யாம் யாவர்க்கும் பணிந்தவர்கள் அல்லர் என்பதை உரைக்கும் பாடல்.
பதவுரை
“அயன், ஹரி, ஹரன் என்னும் மூன்று உருவிற்கும் முதல் உருவாய் ஆனவனே! எண் குணங்கள் உடைய அட்டமூர்த்தியே” என்று முப்பத்து மூவர் கோடி தேவர்களும் அவர்களில் சிறந்தவர்களாகிய முனிகளும் எக்காலத்தும் பெரு மகிழ்வு கொண்டு வாழ்த்தும் செம்பவளத் திருமேனி உடைய சிவனே! எம்பெருமானை என்று போற்றும் நாவினை உடையாரே நம்மை அடிமை கொண்டு ஆள உடையார் ஆவார்கள். அதனால் கடிதான் செயலும் களவும் அற்றவர்களாகிய யாம் நாவலந் தீவு முழுவதற்கும் தலைவரான அரசரே எம்மை அழைத்து வருமாறு தம் ஏவலரை ஏவி விடுத்தாராயினும் அவர் ஆணை வழி நிற்கும் கட்டுப்பாட்டினை கொண்டவர் அல்லோம்.
விளக்கஉரை
மூவுருவின் முதல் உரு – மூவுருவினுள் முதலாய உரு, மூவுருவிற்கும் முதலாய உரு என இருவகையாகவும் பொருள் கொண்டு பிரிக்க இயலும்.
இருநான்கான மூர்த்தி – எட்டுருவாய இறைவன் என்றும், எண் திசைகளிலும் நிறைந்தவன் என்று பொருளில் சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. எண் குணத்தான் என்பது எம்பெருமானுக்கும் உரித்தானது என்பதால் இப்பொருளில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கருத்து – இறைவன் பரிபாகம் உடைய உயிர்களுக்கு ஞானத்தை உணர்த்தி ஆசான் மூர்த்தியாக வந்து அருளுதலும், ஏனையோருக்கு அவ்வாறு அருளாமையும் கூறும்பாடல்.
பதவுரை
வினைகள்நீங்கப்பெற்ற பிறகு அந்த மனதில் வேறு எவ்விதமான சிந்தனைகளும் இல்லாமல் அனைத்தும் ஈசன் அருளினால் நிகழ்த்தப்படும் கூத்து எனும் அருமையான உணர்வு வெளிப்படும்; அவ்வாறு அறியா உயிர்களிடத்தில் உயர்ந்தநிலை, மேன்மை, கீர்த்தி போன்றவைகள் இல்லாமல் அது குறித்து பெருமை, வெறுப்பு கொண்டு தீங்கு செய்தல், செருக்கு கொண்டு இருத்தல், சினம் கொள்ளுதல், அன்பு பாசம் கொண்டு அபிமானத்துடன் இருத்தல், ஆசை போன்ற வினைகள் நீங்கம் பெறுதல் போன்றவை விலகாமல் இருக்கும் போது முதல்வன் திருவருள் கைகூடுதல் என்பது அரிதானது.