
பாடல்
மூவுருவின் முதலுருவாய் இருநான் கான
மூர்த்தியே யென்றுமுப் பத்து மூவர்
தேவர்களும் மிக்கோருஞ் சிறந்து வாழ்த்தும்
செம்பவளத் திருமேனிச் சிவனே யென்னும்
நாவுடையார் நமையாள வுடையா ரன்றே
நாவலந்தீ வகத்தினுக்கு நாத ரான
காவலரே யேவி விடுத்தா ரேனுங்
கடவமல்லோம் கடுமையொடு களவற் றோமே
தேவாரம் - ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து – எம்பெருமானுக்கும், எம் பெருமானின் அடியவர்களுக்கும் கட்டுப்பட்டவர் அன்றி புவியினில் வாழும் அரசர்களுக்கும் மனிதர்களுக்கும் இல்லை என்று உரைக்கும் பாடல்.
பதவுரை
‘அயன், அரி, அரன்’ என்னும் மூன்று உருவிற்கும் முதல் உருவாயவனே ! அட்டமூர்த்தியே ! 12 ஆதித்தியர்கள், 8 வசுக்கள், 11 ருத்திரர்கள், இந்திரன் மற்றும் பிரஜாபதி ஆகிய முப்பத்து மூவர் தேவர்களாலும், அவர்களின் மிக்க முனிவர்களாலும் எக்காலத்தும் மகிழ்ச்சி மிக்கு வாழ்த்தும் ‘செம்பவளம் போன்ற சிவந்தத் திருமேனியுடைய சிவனே’ என்று போற்றும் நாவுடையாரே நம்மை அடிமை கொண்டு ஆள உடையாராவார் . அதனால் அழித்தல் ஆகிய செயலை விலக்கியும் களவும் அற்றவர்களாக இருக்கின்ற யாம் நாவலந் தீவு முழுவதற்கும் தலைவரான அரசரே எம்மை அழைத்து வருமாறு தம் ஏவலரை ஏவி விடுத்தாலும் அவர் ஆணை வழி நிற்கும் கடப்பாட்டிற்கு உரியவர் ஆனவர் இல்லை.
விளக்கஉரை
- கடிதல் – விலக்குதல், ஓட்டுதல், அழித்தல், கண்டித்தல், அரிதல், அடக்குதல்
- ‘மூவுருவின் முதல் உரு’ – ‘மூவுருவினுள் முதலாய உரு’ என்றும் ‘மூவுருவிற்கும் முதலாய உரு’ என இருவகையாகவும் பொருள் கொள்ளலாம்.
- இருநான்கான மூர்த்தி – எட்டுருவாய இறைவன் (எட்டு திசைகளிலும் இருப்பவன் என்றும் பொருள் கொள்ளலாம்)
#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவம் #திருமுறை #ஆறாம்_திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர்