அமுதமொழி – குரோதி – தை – 15 (2025)


பாடல்

வெருட்சி யேதரும் மலஇரா இன்னும்
   விடியக் கண்டிலேன் வினையினேன் உள்ளம்
மருட்சி மேவிய தென்செய்கேன் உன்பால்
   வருவ தற்கொரு வழியும்இங் கறியேன்
தெருட்சி யேதரும் நின்அருள் ஒளிதான்
   சேரில் உய்குவேன் சேர்ந்தில தானால்
உருட்சி ஆழிஒத் துழல்வது மெய்காண்
   ஒற்றி மேவிய உலகுடை யோனே

திரு அருட்பா –  இரண்டாம் திருமுறை – வள்ளலார்

கருத்து – பிறவி நீக்கம் வேண்டி திருவொற்றியூர் பெருமானிடன் விண்ணப்பம் செய்யும்  பாடல்.

பதவுரை

திருவொற்றியூரில் விரும்பி உறைந்து உலகினை தன்னுடையதாகக் கொண்டவனே, அச்சத்தினை உண்டாக்கும் மலஇருள் இன்னும் என்னை விட்டு நீங்கவில்லை; ஆதலால் வினையை உடையனாகிய எனது உள்ளம் மயக்கம் க‌ண்டுள்ளது; அதனால் செய்வது அறியாது உள்ளேன்; உன்னை அடைவதற்கு ஒரு வழியும் இவ்விடத்தில் எனக்குத் தெரியவில்லை; தெளிவினை தரும்  நின்னுடைய அருளொளி எனக்கு கிடைத்தால் அருள் பெறுவேன்; அவ்வாறு உன்னுடை அருள் கிடைக்கா விட்டால் உருண்டோடும் சக்கரம் போன்ற பிறவிச் சூழலில் பட்டு நான் சுழல்வது உண்மை.

விளக்க உரை

  • தெருட்சி – அறிவு, தெளிவு, கன்னி ருது
  • மேவுதல் – அடைதல், விரும்புதல், நேசித்தல், ஓதுதல், உண்ணுதல், நிரவிச் சமமாக்குதல், மேலிட்டுக் கொள்ளுதல், வேய்தல், அமர்தல், பொருந்துதல்
  • வெருட்சி – மருட்சி, மருளுகை, அச்சம்

#அந்தக்கரணம்  #அமுதமொழி  #இரங்கல்_விண்ணப்பம்  #திருஅருட்பா  #இரண்டாம்_திருமுறை  #வள்ளலார் #திருவொற்றியூர் #மயக்கம்  #பிறவி

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

error: Content is protected !!