அமுதமொழி – பிலவ – ஐப்பசி – 22 (2021)


பாடல்

படங்கொள் நாகஞ் சென்னி சேர்த்திப்
     பாய்பு லித்தோல் அரையில் வீக்கி
அடங்க லார்ஊர் எரியச் சீறி
    அன்று மூவர்க் கருள்பு ரிந்தீர்
மடங்க லானைச் செற்று கந்தீர்
     மனைகள் தோறுந் தலைகை யேந்தி
விடங்க ராகித் திரிவ தென்னே
     வேலை சூழ்வெண் காட னீரே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – செயற்கரிய செயல்களை செய்து முடித்தவராகிய சிவபெருமானை கபாலத்தில் யாசிப்பது ஏன் என வினவும் பாடல்

பதவுரை

கடல் சூழ்ந்த திருவெண்காட்டை தலமாக உடைய இறைவரே! படம் எடுத்து ஆடும் பாம்பைத் தலையிலே வைத்தும், பாய்கின்ற புலியினது தோலை இடுப்பில் கட்டியும்,  கோபம் கொண்டு பகைவரது திரிபுரங்களை எரியுமாறு செய்து அதை அழித்தும், அதன் பின் அந்த மூவர்களுக்கும் அருள் செய்தும், கூற்றுவனை கொன்று, பின்னர் உயிர்ப்பித்து அவனை மகிழ்ந்து ஏற்றுக்கொண்டும்  ஆன பெருமைகளை உடைய நீர் பிரம்மனது தலை ஓட்டினைக் கையில் ஏந்திக்கொண்டு, பேரழகுடைய உருவத்துடன் மனைகள் தோறும் பிச்சைக்குத் திரிவது என்?

விளக்க உரை

  • மூவர்க் கருள்பு ரிந்தீர் – திரிபுரத்து ஓர் மூவர் ஆகிய சுதன்மன், சுசீலன், சுமாலி ஆகிய திரிபுரத்து அசுரர்கள்,  சிவபத்தியைக் கைவிட்ட பொழுதும், அதில் இருந்து  மாறாமல் இருந்ததால் அவர்களை உய்விப்பதன் பொருட்டு ஒருவனைக் குடமுழா முழக்குபவனாகவும் , இருவரை வாயில் காவலராகவும் கொண்ட அருள் செய்த முறையை ஒப்பு நோக்க தக்கது.
  • மடங்கல் – கூற்றுவன் – எல்லா உயிர்களும் மடங்குதற்கு இடமானவன்
  • பழிப்பது போல் புகழ்வதால் இது வஞ்சப்புகழ்ச்சி ஆகும்  

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.