பாடல்
நிலைகெட விண்ணதிர நிலம்
எங்கும் அதிர்ந்தசைய
மலையிடை யானைஏறி வழி
யேவரு வேனெதிரே
அலைகட லால்அரையன் அலர்
கொண்டுமுன் வந்திறைஞ்ச
உலையணை யாதவண்ணம் நொடித்
தான்மலை உத்தமனே
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
கருத்து – உத்தமனாகிய ஈசன் அருளுவதன் பொருட்டு தானே கைலாச மலையில் இருந்து இறங்கிவந்து அருள் புரிந்த திறத்தை வியந்து உரைக்கும் பாடல்.
பதவுரை
திருக்கயிலைமலையில் வீற்றிருந்து அருளும் முதல்வனான உத்தமன், விண்ணுலகம் தனது இயல்பு நிலையில் இருந்து கெட்டு அதிரும்படியாகவும், நிலவுலகம் முழுதும் அதிரும்படியாகவும் மலையில் திரியும் யானை மீது ஏறி வந்து, தனது மலையாகிய கைலாச மலையை அடையும் வழியே வருகின்ற என் எதிரே வந்து, அலைகின்ற கடலுக்கு அரசனாகிய வருணனை பூக்களைக் கொண்டு எல்லொருக்கும் முன்னரே வந்து வணங்குமாறு செய்து, உடல் அழியாது உயர்ந்து நிற்கின்ற ஒரு நிலையை எனக்கு அளித்தருளினான்; அவனது திருவருள் என்னே!