
பாடல்
வைத்தனன் தனக்கே தலையும்என் நாவும்
நெஞ்சமும் வஞ்சமொன் றின்றி
உய்த்தனன் தனக்கே திருவடிக் கடிமை
உரைத்தக்கால் உவமனே யொக்கும்
பைத்தபாம் பார்த்தோர் கோவணத் தோடு
பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பித்தரே யொத்தோர் நச்சில ராகில்
இவரலா தில்லையோ பிரானார்
ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்
கருத்து – திருவடித் தொண்டினை வஞ்சனை எதுவும் இல்லாமல் செய்ததன் பொருட்டு அருள வேண்டும் என விண்ணப்பிக்கும் பாடல்.
பதவுரை
படம் எடுத்து ஆடும் பாம்பினைக் கட்டிக்கொண்டும், கோவணத்தை ஆடையாகக் கொண்டும், பித்த நிலையில் இருப்பவரை ஒத்தும் , பரமர் எனப்படும் முழு முதற் தெய்வமாகியும் இருக்கும் இவர் அருளுதல் பொருட்டு சிறிதும் திருவுளம் இரங்குவார் எனில் எம்மைக் காக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை; எனது தலையையும், நாவையும், நெஞ்சத்தையும் எந்த விதமான மாறுபாடும் இன்றி திருப்பாச்சிலாச்சிராமத்தில் உள்ள எம்பெருமானுக்கே உரியனவாக ஆக்கினேன்; அவருடைய திருவடித் தொண்டினை வஞ்சனை எதுவும் இல்லாமல் செய்தேன்; இவ்வாறு யானே உரைத்தல் என்பது பொய்யினை உரைப்பது போல் ஆகும்; இருப்பினும் என் செய்வேன்?
விளக்க உரை
- தலையும்என் நாவும் நெஞ்சமும் – மனம், மொழி, வாக்கு
- நச்சு – விருப்பம்
- இல்லையோ – இரக்கப் பொருளதாய் முறையீடு உணர்த்தியது