பாடல்
இந்திரன் மால்பிரமன் னெழி
லார்மிகு தேவரெல்லாம்
வந்தெதிர் கொள்ளஎன்னை மத்த
யானை யருள்புரிந்து
மந்திர மாமுனிவர் இவன்
ஆர்என எம்பெருமான்
நந்தமர் ஊரனென்றான் நொடித்
தான்மலை உத்தமனே
ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்
கருத்து – சுந்தரர், இறைவனார் தம்மை ‘நம் தோழர்’ என்றும் ‘ ஆரூரன்’ என்றும் அழைத்ததை தம் திருவாக்கால் உரைத்தப் பாடல்.
பதவுரை
திருக்கயிலையில் வீற்றிருந்து அருளும் முதல்வனாகிய எம்பெருமான், இந்திரன், திருமால், பிரமன், ஊக்கத்துடன் பாடுபவர்களாகிய தேவர்கள் ஆகிய எல்லாரும் வந்து என்னை எதிர் கொள்ளுமாறு செய்து, எனக்கு பெரிய யானையை ஊர்தியாக அளித்து அருளச் செய்தான். அங்கு இருக்கும் மந்திரங்களை ஓதுகின்ற முனிவர்கள் `இவன் யார்` என்று கேட்டபோது, `இவன் நம் தோழன்’ என்றும் ‘ஆரூரன்’ என்னும் பெயரினை உடையவன் என்றும் திருவாய் மலர்ந்து அருளினான். என்னே அவன் திருவருள்.
விளக்க உரை
- மத்தம் – பெரியது