கருத்து – அன்னையினை பாகம் கொண்டு எழுந்து அருளும் திருஆமாத்தூர் திருத்தலம் பற்றி உரைக்கும்பாடல்.
பதவுரை
பாடுதலையும் கூத்தாடுதலையும் விரும்பிய பல பூதங்களை உடைய ஆமாத்தூரில் உறையும் ஈசனானவர், படம் எடுக்கும் பாம்பைக் கச்சையாக உடுத்தியும், தீப்போன்ற சிவந்த மேனி கொண்டும், இமைக்காத முக்கண்களை உடையவராகவும், நான்கு வேதங்களையும் ஓதுபவராகவும், திருநீற்றை நீரில் குழைத்து அணிந்தவராகவும், தம் உடம்பின் ஒரு பாகத்தில் உமாதேவியை நீங்காத கோலம் கொண்டவராகவும், தெளிவான கங்கையை திருமுடியில் தாங்குபவராகவும், தீ ஏந்திய கையினை உடையவராகவும் அழகி கோலம் கொண்டவராகவும் காட்சி வழங்குகின்றார்.
கருத்து – அன்னையினை பாகம் கொண்டு எழுந்து அருளும் திருமணஞ்சேரி திருத்தலம் பற்றி உரைக்கும் பாடல்.
பதவுரை
கூர்மையாக முப்புரங்களையும் அழித்தும், குயில் போலும் இனிய மென்மையான மொழிபேசும் உமை அம்மையை தன்னுடைய ஒரு பாகத்தில் உடையவனாகியும், மயில்கள் வாழும் நிறைந்த சோலைகள் சூழ்ந்ததும் ஆன திருமணஞ்சேரியில் எழுந்து அருளும் இறைவனைப் பற்றி நின்றவர்களுக்கு பாவம் இல்லை.
கருத்து – சிவபெருமான் திருவடி அடைப்பெறுவதால் மனிதர்கள் பெறும் இயல்புகளைக் கூறும் பாடல்.
பதவுரை
இறந்த பிரமனுடைய தலைகளை மாலையாகக் கோத்து அணிந்த தலையையுடைய சிறந்த புண்ணியனை உள்ளத்தில் கொண்டு இருப்பதால் எவரிடத்தில் இருந்தும் யாம் என்றும் பின்வாங்க மாட்டோம்; சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றதால் (அனைத்து உயிர்களும் சமமானதால்) இந்த பரந்துபட்ட பூமியிலும் விண்ணுலகத்திலும் எமக்கு எதிராவார் யாரும் இல்லை. யாம் தேடிச்சென்று சிறு தெய்வங்களைச் சேர்ந்து தொழ மாட்டோம்; யாம் எந்த ஒன்றினாலும் குறை உடையவர்களாக ஆகமாட்டோம். பிறவியின் காரணமாக வருவதாகிய உறுபிணிகள் எம்மைத் துன்புறுத்தாமல் விட்டு ஓடிப் போயின.
தானவ னாகிச் சொரூபத் துவந்திட்டு ஆன சொரூபங்கள் நான்கும் அகற்றின ஏனைய முத்திரை யீந்தாண்ட நன்னந்தி தானடி முற்சூட்டித் தாபித்த துண்மையே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – திருவடியினை அடையாது உயிர்கள் ஏனைய பயன்களை அடையாது என்பதைக் கூறும் பாடல்.
பதவுரை
திருவருளால் ஆருயிரானது சிவமாகிச் சிவனின் உண்மை பேரறிவின் நிலையினில் நிற்கும். அந்தநிலையில் மலம் மாயை கன்மம் மாயேயம் என்னும் ஆகிய இயல்புகளும் நீங்கி நிலைத் தன்னமையினை அடையப் பெறும். சிவன் திருவடிக்கு அடிமையாம் அடையாளப் பொறியினை நல்கி, தானே குருவாகிவந்து தனது திருவடியைச் சூட்டி, அங்ஙனம் சூட்டப்பட்ட உள்ளத்திலே நிலைபெறச் செய்து, நீக்கல், நிலைப்பித்தல், நுகர்வித்தல், அமைதியாக்கல், அப்பாலாக்கல் எனும் சொரூப நிலையில் சின்முத்திரை நிலையைத் தந்து ஆட்கொண்டான் என்பது உண்மையே.
தானெனை முன்படைத்தான் அதுஅறிந்து தன் பொன்அடிக்கே நான் எனப் பாடல் அந்தோ நாயினேனைப் பொருட்படுத்து வான்எனை வந்து எதிர்கொள்ள மத்தயானை அருள்புரிந்து ஊன்உயிர் வேறு செய்தான் நொடித்தான்மலை உத்தமனே
ஏழாம் திருமுறை -தேவாரம் – சுந்தரர்
கருத்து – குற்றம் உடைய தன்னையும் பொருட்டாக மதித்து உடலையும், உயிரையும் மதித்த தன்மையை வியந்து கூறும் பாடல்.
பதவுரை
திருக்கயிலையில் வீற்றிருந்து அளும் முதல்வன் ஆகியவனும் உத்தமன் ஆகியவனும் ஆன ஈசன், தானே முன்பு என்னை இந்த பூமியில் தோன்றச் செய்து அருளினான்; தோற்றுவித்ததன் காரணத்தை உணர்ந்து அவனது பொன்போன்ற திருவடிகளுக்கு என்னளவில் (தோத்திரம்) பாடல்கள் செய்தேன்; படைப்பின் நோக்கம் உணர்ந்தும் அதிகம் பாடல்கள் பாடாமல் நாய் போன்ற குற்றம் உடைய என்னைப் பொருட்படுத்தாமல் என்னை அடியவர்களுள் ஒருவனாக வைத்து, வானவர்களும் வந்து எதிர்கொள்ளுமாறு , பெரியதான யானை ஊர்தியை எனக்கு அளித்து, எனது உடலோடு உயிரை உயர்வு பெறச் செய்தான்; என்னே அவனது திருவருள்!
விளக்கஉரை
அறிந்து – தோற்றுவித்தது என்பது பாடுதல் பொருட்டு என்று பெறப்படும்
நொடித்தல் – அழித்தல். நொடித்தான் மலை – (உயிர்களின் வினைகளை) அழிக்கும் கடவுளது மலை
உரமன் உயர்கோட்டு உலறுகூகை அலறும் மயானத்தில் இரவில் பூதம் பாடஆடி, எழிலார் அலர்மேலைப் பிரமன் தலையில் நறவம் ஏற்ற பெம்மான், எமை ஆளும் பரமன் பகவன் பரமேச்சுவரன் பழன நகராரே
முதலாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்
கருத்து – திருப்பழனம் திருத்தலத்தில் உறையும் இறைவனின் பெருமைகளையும் தோற்றத்தையும் உரைக்கும் பாடல்.
பதவுரை
எம்மை ஆளும் பரமர் ஆனவரும், பகவன் ஆனவரும், பரமேச்சுவரன் எனும் பெயரினை உடையவரும், திருப்பழன நகரின் உறைபவரான இறைவன் நள்ளிருளில் பூதங்கள் பாடியும் ஆடியும் இருப்பதும், வலிமை பொருந்திய உயரமான வற்றிய மரக்கிளைகளில் அமர்ந்து ஒலி செய்யும் கூகை எனப்படும் ஆந்தைகள் அலறும் மயானத்தில் அழகிய தாமரை மலர்மேல் உறையும் பிரமனது தலையோட்டில் பலியேற்றும் திருவிளையாடல் புரியும் பெருமான் ஆவார்.
விளக்கஉரை
உரம் – வலிமை.
உலறு கோட்டு – வற்றிய கிளை
கூகை – கோட்டான்
அலர் மேலைப் பிரமன் – தாமரை மலர்மேல் உள்ள பிரமன். நறவம் – கள். தேன்;
கருத்து – திருவீழிமிழலை இறைவனின் தோற்ற சிறப்புகளை உரைத்து, அவரின் குணங்களையும் உரைக்கும் பாடல்.
பதவுரை
மான், ஒளிரும் தன்மை உடைய மழுப்படை, யோகதண்டம், உருத்திராக்கம், குண்டலம் முதலியவற்றைக் கொண்டு விலைமதிப்பு கூற இயலாத மணிகளால் அலங்கரிக்கப்பட்ட மாடங்களையுடைய திருவீழிமிழலையில் வீற்றிருந்து அருளும் இறைவனானவர் தலையிலே பிறைச் சந்திரனைச் சூடி, கழுத்திலே எலும்புமாலை விளங்குமாறு, கையில் சூலம், உடுக்கை ஆகியவற்றைக் கொண்டு அலையினை உடைய கங்கையை ஏற்று, இடபக்கொடி கொண்டு இருப்பவர்; யோகநெறி நின்று தம்மைத் தொழும் அடியவர்களும் தம்மைப் போன்றே சாரூப பதவி பெறச் செய்பவர்.
கருத்து – திருப்புகலூர் திருத்தலத்தில் உறையும் ஈசனின் பெருமைகளை உரைக்கும் பாடல்.
பதவுரை
திருப்புகலூர் திருத்தலத்தில் உறையும் ஈசனானவர் உருத்திராக்கம் நிறைந்த மாலையைப் பூண்ட மார்பினை உரையவர்; கழுத்தில் பாம்பினை உடையவர்; ஒளி வீசும் பிறையை முடிமாலையாகச் சூடியவர்; நாள்தோறும் இறந்தவர் மண்டையோட்டினை ஏந்திப் பிச்சை உணவு வாங்க ஊர் தோறும் செல்பவர் ஆவர்.
கருத்து – திருவையாறு தலத்தில் உறையும் ஈசனின் பெருமைகளை உரைத்து வீடுபேற்றினை அருள வேண்டும் என உரைக்கும் பாடல்.
பதவுரை
திருவையாறு எனும் திருத்தலத்தில் அகலாத செம்பொன் போன்ற சோதீ வடிவாக இருப்பவனே! நீ எல்லா உலகங்களுக்கும் ஆனவனாகவும், பேரருள் காரணமாக எளிமையாக வந்து அருளுபவனாகவும், நல்லவர்களுக்கு அவர்களின் நன்மையை அறிந்து அவருக்கு அருள் செய்பவனாகவும், ஞான ஒளி வீசும் மெய் விளக்காக இருப்பவனாகவும், கொடிய வினைகளைப் போக்குபவனாகவும், புகழ்ச்சி மிக்க சேவடி என் மேல் வைத்தவனாகவும் செல்வங்களுள் மேம்பட்டதான வீடுபேற்றுச் செல்வத்தை அருளுபவனாய் உள்ளாய்.
விளக்கஉரை
எல்லா உலகமும் ஆனாய் – இறைவனது பெருநிலை – சர்வ வியாபக நிலை
ஏகம்பம் மேவி இருந்தாய் – அவன் தனது பேரருள் காரணமாக எளிவந்து நிற்கும் நிலையினை விளக்கும் நிலை. திருவேகம்பத்தில் அருளுதல்
சுடர் – ஒளி – ஞானமாகிய ஒளியையுடைய விளக்கு
செல்வமாய – செல்வாய- உண்மைச் செல்வம், அழியாச் செல்வம், வீடுபேறு ஆகிய செல்வத்தைத் தருபவன் நீ ஒருவனே எனும் பொருள் பற்றியது
கருத்து – திருவோணகாந்தன்தளி தலத்தில் இருக்கும் ஈசனின் பெருமைகளை உரைத்து தம்மை ஆட்கொள்ள வேண்டும் என உரைக்கும் பாடல்.
பதவுரை
நித்தமும் பல் நீங்கியதும், இறந்தவர்களின் தலை ஆனதுமான மண்டை ஓட்டில் பிச்சை ஏற்கத் திரிந்து திருவோணகாந்தன்தளி என்னும் திருத்தலத்தில் வாழும் பெருமானே! யாம் வல்லமை மிக்கதாகிய பல கருத்துக்கள் சொல்லி உம்மை வாழ்த்திய போதும், நீர் திருவாய் திறந்து, எமக்கு தரத்தக்கதான யாதேனும் ஒருபொருளை, ‘இல்லை’ என்றும் சொல்லாதவராக இருக்கின்றிர்; அன்றியும் ‘உண்டு’ என்றும் சொல்லாதவராக இருக்கின்றிர்; உயிர்ப்பில்லா வாழ்வினை விட்டொழிய மாட்டாதவராக இருப்பவராகிய எம்மை நீர் பணிகொள்ள இருத்தல் எவ்வாறு?
விளக்கஉரை
உமக்கு அடியவர்களாகிய நாங்கள் எங்ஙனம் வாழ்வோம் என்பது குறிப்பு
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – உயிர் நிலையாமை – திருமூலர்
கருத்து – ஈசனை அறியாமையால் உணர்வினை தரும் உயிர் நிலையாமையையும் அறியார்கள் என்பதைக் கூறும் பாடல்.
பதவுரை
உடல் வேகின்ற காட்டில் (சுடுகாட்டில்) ஆடும் கடவுளானவரும், வேதத்தின் முடிவாகிய வேதாந்த வடிவமாக இருந்து கூத்து நிகழ்த்துபவனாகவும் இருப்பவனை, வெந்து ஒழிவது இந்த உடல் என்று அறியாமலும், வெந்து ஒழிவதாகிய நம் உடம்பினுள்ளே உறைந்து விளையாடும் நந்தியாகவும் இருப்பதை உபாயத்தால் அறியாதவர் தம் உயிரைத் தாங்கி நிற்கின்ற அரிய உயிரையும் அறியாதவரே ஆவர்.
விளக்கஉரை
வேம் கட நாதன் – வேகின்ற காட்டில் (சுடுகாட்டில்) ஆடும் கடவுள்.
வேம் கடத்துள்ளே – வெந்தொழிவதாகிய நம் உடம்பினுள்
வேம் கடம் என்று – வெந்தொழியும் உடம்பு
விரகு – உபாயம்
தாங்க வல்லதாகிய ஆருயிர் – உயிரை அதற்கு உயிராய் நின்று எப்பொழுதும் காக்கும் இறைவன்; சிவன் உயிர்க்குயிராய் நின்று உணர்த்தாவிடில், உயிருக்கு உணர்வு நிகழாது
கருத்து – திருவாழ்கொளி புத்தூரில் உறையும் ஈசனின் பெருமைகளை உறைத்து அவனை விடுத்து வேறு எதையும் நினைக்கமாட்டேன் எனக் கூறும் பாடல்.
பதவுரை
படைகளில் முதன்மையான சூலத்தை தனது படையாகக் கொண்டவனும், தன்னை நினைப்பவர்களது உள்ளத்தில் பரவி அந்த சிந்தனைகளை அதிகப்படுத்துவனும், ஊர்தோறும் சென்று பிச்சையை விரும்பிச் செய்பவனும், அழகிய வடிவம் கொண்ட காமனது உடலை அழியச் செய்தவனும், பெருக்கெடுத்து செல்லும் கங்கையைச் சடையில் தங்கும்படி செய்தவனும், நீர்வளம் உடைய மண்ணி ஆற்றின் கரையில் இருப்பவனும், எண்குணங்கள் அமையப் பெற்றவனும், நீர் மடைகளில் நீலோற்பல மலர் மலர்ந்து இருக்கின்ற திருவாழ்கொளி புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போன்றவனுமாகிய பெருமானை மறந்து யான் வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினைக்கமாட்டேன்.
விளக்க உரை
படைக்கண் – உள் என்னும் பொருளதாய் வந்தது. ஏனைய படைகளிலும் சிறந்தது சூலம் எனும் பொருள் பற்றியது.
கருத்து – தன்னைப் போலவே உள்ளம் உருகி அன்பு செய்தால் சிவபெருமான் வெளிப்படுவான் என்பதைக் குறிப்பிடும் பாடல்.
பதவுரை
உலகில் இருப்போர்களே, நீங்களும் என்னைப் போலவே போற்றப்படுவதாகிய அன்பினைப் பெருகச் செய்து இறைவனை துதியுங்கள்; பழைய வினைகள் கெடுமாறு அன்பு கொண்டு முதல்வனாகிய சிவபெருமானை நாடுங்கள்; அவ்வாறு ஊழினை முன்வைத்து வருவதாகிய வினைகள் கெடுமாறு அன்பு செய்தால் வள்ளல் என்று போற்றப்படுபவனும், நந்தி என்று பெயர் பெற்றவனுமான சிவபெருமான் குருவாகி உங்கள் உள்ளத்தில் அன்பு பெருகுமாறு தானே வெளிப்பட்டு தனது அருள் எனக்குக் கைவந்தது போல உங்களுக்கும் கிடைக்குமாறு செய்வான்.
விளக்கஉரை
அன்பு – சகல உயிர்களிலும் ஈசன் உறைகின்றான் என்பதை உணர்ந்து உலகத்திடமும், உலக உயிர்களிடத்திலும் அன்பு செய்தல்.
கருத்து – குறைகள் அற்றவனாகிய சிவனிடத்தில் குறையுடைய தன்னை பொறுத்து அருள வேண்டும் என விண்ணப்பிக்கும் பாடல்.
பதவுரை
‘குறை` எனப்படுவது ஒன்றும் இல்லாது எக்காலத்திலும் நிறைவுடையவனே, எண்குணங்கள் அனைத்தும் பெற்று மலை போன்று உயர்ந்து நிற்பவனே, கூத்துகளை நிகழ்த்துபவனே, குழையணிந்த காதினை உடையவனே, ஒலி எழுப்பும் வண்டுகள் வெளியே செல்லாமல் சிறைபோன்று சோலைகள் சூழ்ந்த திருவாரூரில் செம்பொன் போன்ற திருமேனியினை உடையவனே! திருவாவடுதுறை திருத்தலத்தில் எழுந்து அருளுகின்ற அறவடிவினனே, அடியேனுக்கு உன்னையன்றி எனக்கு எவரும் உறவினராக இல்லை ஆதலினால் யான் செய்த ஒரு குற்றத்தை நீ பொறுத்துக்கொண்டால் , நீ தாழ்வினை அடைவாயா, என்னை ,`அஞ்சேல்` என்று சொல்லித் தேற்றி, எனக்கு அருள் செய்வாயாக.
விளக்கஉரை
குறைவிலா நிறைவே – எல்லாவற்றினும் மேலான பொருளாகிய இறைவன் ஒருவனையன்றி, குறை சிறிதும் இல்லாத நிறைவுடைய பொருள் வேறொன்றும் இல்லாமையை எதிர்மறையால் உணர்த்தியது
உறவிலேன், உறவு யார் – தமக்குத் துணைசெய்ய வல்லவர்கள் ஈசனற்றி பிறர் இல்லை என்பதை வலியுறுத்தியது
ஒரு பிழை – பிறப்பெடுத்தது
ஒரு பிழை பொறுத்தால் இழிவுண்டே – இறைவரோடு உண்டான உரிமையில் உரைத்தது
கருத்து – இறைவன் எல்லாவற்றையும் ஒடுக்கும் ஆற்றலுடையவன் என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
‘தோழியே! சுடுகாட்டை வழிபாட்டுக்கு உரிய இடமாகிய கோயிலாகவும், புலித்தோலை நல்ல ஆடையாக கொண்டவனாகவும், அவனுக்குத் தாய் தந்தை என்று யாரும் இல்லாதவனாக தனியனாகவும் இருக்கிறான், இந்தத் தன்மை உடையவனோ உங்கள் கடவுள்? இது பெருமை ஆகுமா?’ என்ற தோழியின் கேள்விக்கு ‘எங்கள் கடவுளுக்குத் தாய் தந்தையர் இல்லாவிடினும், தனித்தே அவன் இருந்தாலும் அவன் சினம் கொண்டால் உலகம் முழுவதும் கற்பொடியாய் விடும்’ என்று ஊமையாக இருந்து மாணிக்கவாசகரால் பேசும் திறமைப் பெற்றப் பெண் விடை சொன்னாள்.
விளக்கஉரை
சாழல் என்பது மகளிர் விளையாடல்களுள் ஒன்று; இரண்டு கட்சியாய்ப் பிரிந்து விளையாடுவது. இந்த விளையாட்டில் ஒருவரின் பாடலுக்கு மற்றொருவர் அவர்கள் அக்கேள்விக்கு விடை சொல்வதுமாய் அமையும்
கோயில் – அரண்மனை
நல்லாடை – உயர்ந்த உடை
தாயும் இலி தந்தையும் இலி தான் தனியன் – எவரும் இல்லாத துணையில்லாத தனிமையன் எனும் இகழ்ச்சி
காயில் – வெகுண்டால்
அவன் சினந்து எழுந்தால் அதற்கு முன் நிற்பது ஒன்றுமில்லை என்பதால், அவனுக்குத் துணை வேண்டுவது எதற்கு என்பது விடை
செய்யநின் கமல பாதஞ் சேருமா தேவர் தேவே மையணி கண்டத் தானே மான்மறி மழுவொன் றேந்தும் சைவனே சால ஞானங் கற்றறி விலாத நாயேன் ஐயனே யால வாயில் அப்பனே யருள்செ யாயே
நான்காம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்
கருத்து – ஈசனின் திருமேனிப் பெருமைகளை உரைத்து அவனின் தாமரை போன்ற பாதங்களை அருளவேண்டும் என விண்ணப்பிக்கும் பாடல்.
பதவுரை
தேவர்கள் அனைவருக்கும் மேலான தேவனே! நஞ்சு உண்டதால் கண்டத்தில் நீல நிறம் பெற்று நீலகண்டவன் ஆனவனே! மான் கன்றினையும், மழுப்படையையும் ஏந்தி உள்ளவனாகிய சைவ சமயக்கடவுளே! ஞானத்தை முறையாகக் கற்றறியும் வாய்ப்பு இல்லாத அடியேனுடைய தலைவனே! ஆலவாயில் தலத்தில்உறையும் அப்பனே! உன்னுடைய சிவந்த தாமரை போன்ற பாதங்களை அடியேன் சேரும்படி மிகவும் அருள் செய்வாயாக.
கள்ளிக் கவட்டிடைக் காலை நீட்டிக் கடைக்கொள்ளி வாங்கி மசித்து மையை விள்ள எழுதி வெடுவெ டென்ன நக்கு வெருண்டு விலங்கு பார்த்துத் துள்ளிச் சுடலைச் சுடுபி ணத்தீச் சுட்டிய முற்றும் சுளிந்து பூழ்தி அள்ளி அவிக்கநின் றாடும் எங்கள் அப்ப னிடம்திரு ஆலங்காடே
பதினொன்றாம் திருமுறை – காரைக்காலம்மையார் – மூத்த திருப்பதிகம்
கருத்து – பேய்களின் செயல்களைக் கூறி அவ்வாறான இடத்தில் ஈசன் உறைகிறான் என்று கூறும் பாடல்.
பதவுரை
கள்ளி மரத்தின் கிளைகளுக்கு இடையில் காலை நீட்டி, எரிந்து முடிந்த கொள்ளிக் கட்டையை வாங்கி மசிய அரைத்து குழையாக்கி, அதை மசியாக கண்களில் எழுதி, மசியானது கண்களில் இருந்து வேறுபடுமாறு தோற்றம் கொண்டு பிறர் நடுநடுங்குமாறு சிரித்து, மருட்சி அடைந்து, நேரே பாராமல் வலமாகவும், இடமாகவும் திரும்பித் திரும்பிப் பார்த்து குறுக்கே நோக்கி, கோபம் கொண்டு குதித்து,சுடலை எனப்படும் சுடலையில் எரிந்து கொண்டிருக்கும் பிணத்தின் தீயானது சுடவும், சினக் குறிப்புக் கொண்டு மணலை அள்ளி அவிக்க, பேய்கள் நின்று ஆடுகின்ற எங்கள் அப்பன் தங்கியிருக்கும் இடம் திரு ஆலங்காடாகும்.
விளக்கஉரை
இறையின் மீது நாட்டம் அன்றி புவியின் மீது மனிதர்கள் ஆணவம் கொண்டு ஆடுதலை குறிக்கும் என்றும் கொள்ளலாம்.
கள்ளிக் கவடு – கள்ளி மரத்தின் கிளைகள்.
கடைக்கொள்ளி – எரிந்து முடிந்த கொள்ளிக் கட்டை.
மசித்தல் – மசிய அரைத்தல்.
விள்ள – கண்ணினின்றும் வேறு தோன்ற.
`வெடு, வெடு` – சினக் குறிப்பு. நகுதல் கோபச் சிரிப்பாயிற்று.
கருத்து – நெல்லிக்கா எனும் திருத்தலத்தில் எழுந்தருளிய இறைவனின் சிறப்புகளையும், திருமேனியில் இடம் பெறும் பொருள்களின் சிறப்புகளையும் கூறும் பாடல்.
பதவுரை
நெல்லிக்கா எனும் திருத்தலத்தில் எழுந்தருளிய இறைவன் இடுகாட்டை வாழும் இடமாகவும், கொன்றைமலரைத் தான் விரும்பும் மாலையாகவும் கொண்டவனாகவும், சந்திரனை சூடிய வீரனாக இருப்பவனாகவும், விதியாகவும் வினையாகவும் மேன்மையளிக்கும் நிதியாகவும் விளங்குபவன் ஆவான்.
விளக்கஉரை
தொங்கல் – (மாலை) கொன்றை
மதி – பிறை
மைந்தன் – வலியன். வீரன். விதியும் வினையும் நிதியும் எல்லாம் அவனன்றி வேறில்லை எனும் பொருள் பற்றியது
விழுப்பம் – மேன்மை.
விழுப்பம் பயக்கும் நெதி – திருவருளே தனக்கு மேலே ஒன்றில்லாச் செல்வம் என்பது பற்றியது