அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 23 (2021)



பாடல்

பசைந்தபல பூதத்தர் பாட லாடல்
     படநாகக் கச்சையர் பிச்சைக் கென்றங்
கிசைந்ததோ ரியல்பினர் எரியின் மேனி
     இமையாமுக் கண்ணினர் நால்வே தத்தர்
பிசைந்ததிரு நீற்றினர் பெண்ணோர் பாகம்
     பிரிவறியாப் பிஞ்ஞகனார் தெண்ணீர்க் கங்கை
அசைந்த திருமுடியர் அங்கைத் தீயர்
     அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே

ஆறாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்துஅன்னையினை பாகம் கொண்டு எழுந்து அருளும் திருஆமாத்தூர் திருத்தலம் பற்றி உரைக்கும்  பாடல்.

பதவுரை

பாடுதலையும் கூத்தாடுதலையும் விரும்பிய பல பூதங்களை உடைய ஆமாத்தூரில்  உறையும் ஈசனானவர், படம் எடுக்கும் பாம்பைக் கச்சையாக உடுத்தியும், தீப்போன்ற சிவந்த மேனி கொண்டும், இமைக்காத முக்கண்களை உடையவராகவும், நான்கு வேதங்களையும் ஓதுபவராகவும், திருநீற்றை நீரில் குழைத்து அணிந்தவராகவும், தம் உடம்பின் ஒரு பாகத்தில் உமாதேவியை நீங்காத கோலம் கொண்டவராகவும், தெளிவான கங்கையை திருமுடியில் தாங்குபவராகவும், தீ ஏந்திய கையினை உடையவராகவும்  அழகி கோலம் கொண்டவராகவும்  காட்சி வழங்குகின்றார்.

விளக்க உரை

  • பசைந்த – விரும்பிய
  • பிசைந்த – வடித்த
  • அசைந்த – தங்கிய

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.