அடுத்து வந்த இலங்கையர் மன்னனை எடுத்த தோள்க ளிறநெரித் தானையார் கடுத்த காலனைக் காய்ந்ததொ ரானையார் கடுக்கை யானைகண் டீர்கட வூரரே
ஐந்தாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்
கருத்து – தன்னைச் சினந்தவர்களின் செருக்கினை அடக்கி அவர்களுக்கு அருள் புரிந்த திறத்தினைக் கூறும் பாடல்.
பதவுரை
சினம் கொண்டு கயிலை மலையை பெயர்த்து எடுப்பேன் என்று வந்த இலங்கை வேந்தன் ஆகிய இராவணனின் இருபது தோள்களும் இறும் வண்ணம் நெரித்த ஆனை போன்ற பலம் உடையவர்; சினந்த காலனை வருத்தம் கொள்ளுமாறு செய்து அவனை அழித்த ஆனை போன்ற பலம் உடையவர்; கடவூர்த் திருத்தலத்து இறைவர்; கொன்றை பூக்களை அணிந்த ஆனை போன்ற பலம் உடையவர் என்பதைக் காண்பீர்களாக.
கோயில் மலையடிவாரத்தில் சங்கு வடிவில் அமையப் பெற்ற திருத்தலம்
திருமால் வடிவில் இருந்த மூல மூர்த்தியை அகத்தியர் சிவலிங்கத் திருமேனியராக மாற்றி வழிபட்டத் தலம் (கந்தபுராணம் திருக்குற்றாலப் படலம்)
அகத்தியரின் ஐந்து கைவிரல்கள் பதிந்த அடையாளங்களுடன் மிகச்சிறிய மூலவர் திருமேனி; கிழக்கு நோக்கி திருக்காட்சி
அகத்தியரால் திருமால் திருமேனியை சிவலிங்கத் திருமேனியாகவும் , ஸ்ரீதேவி திருவடிவை குழல்வாய் மொழியம்மையாகவும் , பூதேவியை பராசக்தியாகவும் மாற்றி அமைக்கப்பட்ட வடிவங்கள்
அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதும், அம்பாளுக்கான சக்திபீடங்களில் ஒன்றானதும் ஆன இத்தலம் பராசக்தி பீடம். (அம்பாள் திருவடிவம் ஏதும் இல்லாமல் மகாமேரு வடிவம் மட்டும்)
ஒன்பது சக்திகளின் அம்சமாக உள்ளதும், பூமாதேவியை அம்பிகையாக மாற்றியதால் தரணிபீடம் என்றும் போற்றப்படும் பராசக்தி பீடம்; இந்த அம்மை உக்கிரமாக இருப்பதால் இவருக்கு எதிரே காமகோடீஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கப்பிரதிஷ்டை செய்யப்பட்ட அமைப்பு
அகத்தியர் சிவபார்வதி திருமணக் காட்சி கண்ட திருத்தலம்
மலை உச்சியில் செண்பக அருவி , செண்பகதேவி கோயில் ஆகியன அமையப் பெற்றது
அருகில் தேனருவி, புலியருவி, பழைய அருவி, ஐந்தருவி முதலான பல அருவிகள் அமையப் பெற்றத் திருத்தலம்
நுழைவுவாயிலின் ஒரு புறத்தில் அம்பல விநாயகர்
உட்பிரகாரத்தில் அதிகாரநந்தி, சூரியன், கும்பமுனி, அருட்சத்தியர்கள், விநாயகர் முதலான தெய்வங்களுக்கு தனித்தனி சந்நிதிகள்
முருகர் கையில் வில்லேந்திய கோலத்தில் திருக்காட்சி; அருகிலுள்ள வள்ளி தெய்வயானை இருவரும் ஒருவரை பார்த்தபடியான காட்சி அமைப்பு
பழைய ஆதி குறும்பலா மரத்தின் கட்டைகள்(தலமரம்) பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள திருத்தலம்
தொலைந்த பொருள்கள் கிடைக்க தனிச்சன்னதியில் அர்ஜுனன் பூஜித்த சிவலிங்கத்திருமேனி. இந்த சந்நிதிக்கு அருகிலிருந்து இந்த சிவலிங்கத்திருமேனி , விநாயகர் , குற்றாலநாதர் விமானம், திரிகூடமலை, குற்றால அருவி ஆகிய ஐந்தையும் ஒருங்கே தரிசிக்கும் படியான அமைப்பு
பிரகாரத்தில் சிவனார் அம்மையை மணந்து கொண்ட கோலத்தில் திருக்காட்சி. (மணக்கோலநாதர் சந்நிதி )
குற்றால அருவி விழும் பாறையில் செதுக்கப்பட்டுள்ள பல சிவலிங்க வடிவங்கள் கொண்ட அமைப்பு
அகத்தியர் சந்நிதி எதிரில் அவரது சீடரான சிவாலய முனிவருக்கு தனி சந்நிதி
சித்திரசபா மண்டபத்தில் குறவஞ்சி சிலைகள் கொண்ட அமைப்பு
சபாமண்டபம் கீழே கல்பீடமாகவும், மேலே முன்மண்டபம் மரத்தாலும் அமைக்கப்பட்டு, விமானம் செப்புத்தகடுகளால் வேயப்பட்டும் ஆன அமைப்பு
முன்மண்டபத்தின் உட்புற கூரையில் தனிச்சிறப்பானதும், அழகானதும் ஆன கொடுங்கைகள்
சித்திரசபையின் உள்ளே சிவகாமியம்மையுடனான நடராஜர் திருஉருவம் சுற்றிலும் தேவர்கள் தொழுதவாறு இருக்கும் வண்ணம் அற்புத ஓவியம்; உட்சுவற்றில் துர்கையம்மனின் பல்வேறு வடிவங்கள், வீரபத்ரர், கஜேந்திர மோட்சம், திருவிளையாடல் புராண வரலாறுகள், குற்றாலநாதர் அகத்தியருக்கு திருக்காட்சி, அறுபத்து மூவர் உருவங்கள், பத்மநாபரின் கிடந்த கோலம், இரணிய சம்ஹாரம், பைரவரின் பல்வேறு வடிவங்கள், சனைச்சரன் முதலானோரின் வண்ண ஓவியங்கள்
பங்குனியில் பிரம்மோற்சவத்தின் போது முதல்நாள் பிரம்மாவாகவும், இரண்டாம்நாள் திருமாலாகவும், மூன்றாம் நாள் ருத்ரமூர்த்தியாகவும், நான்காம்நாள் ஈஸ்வரராகவும், ஐந்தாம்நாள் சதாசிவமூர்த்தியாகவும், ஆறாம்நாள் வெள்ளிமயில் வாகனாரூடராகவும் திருக்கோலம் கொண்டு பவனி வருவது சிறப்பான நிகழ்வு
தாண்டவ வடிவத்தில் காட்டப்படும் தீபாராதனை(மார்கழி திருவாதிரை)
லிங்க வடிவில் இருக்கும் பலாச்சுளைகள் (தலமரம்)
நான்கு வேதங்கள் நான்கு வாயிலாகவும் மற்றும் சிவனாரின் நடனம் காண பிலவேந்தன் வந்த வழி ஒரு வாயிலாகவும் என ஐந்து வாயில்கள் கொண்டு விளங்கும் தலம்
தினமும் அர்த்தஜாம பூஜையின்போது சிவனாருக்கு சுக்கு, மிளகு, கடுக்காய் முதலானவை சேர்த்து தயாரித்து படைக்கப்படும் குடுனி நைவேத்தியம் எனப்படும் கஷாய நைவத்தியம்
ஆகமம் – மகுடாகம முறைப்படிப் பூஜைகள்
குறு ஆல் எனப்படும் ஒருவகை ஆலமரமரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி என்பதால், குற்றாலம் (பலாமரத்தில் ஒருவகையான மரம் குறும்பலா மரம்)
தலம்
திருக்குற்றாலம்
பிற பெயர்கள்
திரிகூடாசலம் , திரிகூடமலை, பிதுர் கண்டம் தீர்த்த புரம், சிவத்துரோகம் தீர்த்த புரம், மதுவுண்டான் உயிர் மீட்ட புரம், பவர்க்க மீட்ட புரம், வசந்தப் பேரூர், முதுகங்கை வந்த புரம், செண்பகாரணிய புரம், முக்தி வேலி, நதிமுன்றில் மாநகரம், திருநகரம், நன்னகரம், ஞானப்பாக்கம், வேடன் வலஞ்செய்த புரம், யானை பூசித்த புரம், வேத சக்தி பீட புரம், சிவ முகுந்த பிரம புரம், முனிக்கு உருகும் பேரூர், தேவகூட புரம், திரிகூடபுரம், புடார்ச்சுனபுரம், குறும்பலா விசேட புரம், வம்பார்குன்றம்
தைமகம் – தெப்போற்சவம், மார்கழித் திருவாதிரை, சித்திரை விஷு உற்சவங்கள், பங்குனியில் பிரம்மோற்சவம் (எட்டாம் நாள் நடராஜர் கோயிலில் இருந்து இச்சபைக்கு பச்சை சார்த்தி எழுந்தருளி அருள்பாலிக்கும் சிறப்பான நிகழ்வு), ஆடி அமாவாசையில் லட்சதீப உற்சவம் (பத்ரதீப திருவிழா), நவராத்திரி, ஐப்பசி பூரம் – திருக்கல்யாண உற்சவம்
மாவட்டம்
திருநெல்வேலி
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை
நம்மவர்களே! செல்வம் நிறைந்ததும், செண்பகம் வேங்கை ஆகிய மரங்களில் தாவிப் படர்ந்து முல்லைக் கொடி அரும்புகளை ஈனுவதுமாகியதும், வில்லின் நாண் அசைய அதில் இருந்து தொடுத்த கணையை விடுத்து மும்மதில்களையும் எய்து அழித்துத் தன்னை வழிபடும் அன்பர்களின் வினையால் தோன்றிய குற்றங்கள் தீர அருள் புரியும் சிவபிரான் எழுந்தருளியுள்ளதும் ஆன திருத்தலம் நன்னகர் எனும் குற்றாலம் ஆகும்.
பாடியவர் திருநாவுக்கரசர் திருமுறை 4 பதிக எண் 009 திருமுறை எண் 3
பாடல்
உற்றா ராருளரோ – உயிர் கொண்டு போம் போழுது குற்றாலத்துறை கூத்தனல் லானமக் குற்றா ராருளரோ
பொருள்
கூற்றுவன் எனும் எமன் நம் உயிரைக் பற்றிக்கொண்டு போகும் பொழுது, குற்றாலத்தில் விரும்பித் தங்கியிருக்கும் கூத்தப் பிரானைத் தவிர நமக்கு வேண்டியவர் என்று யாவர் உளர்?
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
கருத்து – துன்பம் கொண்டு பேசியும், ஊனை பாதுகாத்தும், வினைகளைப் பெருக்குதலும் சுற்றம் துணை என்று இருத்தலும் நீங்கி திருவாரூர் தலைவனின் திருவடித்துணை ஓங்க இருத்தல் பற்றிய பாடல்.
கருத்து – திருக்கழுமலம் எனும் திருத்தலத்தின் இயற்கை வருணனைகளையும் அதில் உறையும் ஈசனின் சிறப்புகளையும் உரைக்கும் பாடல்.
பதவுரை
தடாகம் எனும் நீர்நிலைகளில் இருக்கும் தாமரை மலர்கள் மகளிர்தம் முகங்களையும், செம்மை நிறமுடைய குமுத மலர்கள் வாய்களையும், காவி மலர்கள், கருங்குவளை மலர்கள், கரிய நெய்தல் மலர்கள் ஆகியன கண்களையும் போலத் தோன்றி மலரும் திருத்தலமான திருக்கழுமலம் எனும் திருத்தலமானது விடை எனும் காளை வடிவம் பொறிக்கப்பட்டதானதும் உயர்ந்த வலிமையானதும் ஆன கொடியை உடைய சிவபிரானின் திருவடிகளே நமக்குச் சரண் என்று செங்காந்தல் மலர் போன்ற மங்கை ஆகிய கலைமகளோடு நான்முகனாகிய பிரம்மன் சிறந்த அன்போடு வழிபட்ட அழகிய கோயில் ஆகும்.
விளக்கஉரை
நாவியம் – காந்தள்மலர்
வாவி – தடாகம்; நீர்நிலை, நடைக்கிணறு, ஆற்றிலோடை
சே – இடபம்
நா இயலும் மங்கை – சரஸ்வதி
திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள் – அல்லி
புகைப்படம் / செய்திகள் - விக்கிபீடியா
ஆழமற்ற ஏரிகள் மற்றும் குளங்களில் வளரும்
பூக்காம்பின் நடுவில் இருக்கும் ஐந்து பெருந்துளைகள் காற்றை நிரப்பி வைத்துக்கொண்டு இலையையும் பூவையும் நீர்ப்பரப்பிற்கு மேலே கொண்டு வந்து மிதக்கத் துணை செய்கின்றன.
தமிழ் நாட்டில் வெண்ணிற மலரையுடைய வெள்ளாம்பலும், நீலநிற மலரையுடைய நீல ஆம்பலும், செந்நிற மலரையுடைய அரக்காம்பலும் (செவ்வல்லி) காணக் கிடைக்கின்றன
அல்லிக் கிழங்கு குளிர்ச்சி தரும். பூ குருதிக்கசிவைத் தடுக்கும். புண்களை ஆற்றும்; சிறுநீர் சம்மந்தப்பட்ட வியாதிகளை நீக்கும்.
கருத்து – திருக்கொடுங்குன்றம் எனும் திருத்தலத்தினையும் அதில் உறையும் ஈசனின் சிறப்புகளையும் உரைக்கும் பாடல்.
பதவுரை
பாம்பு, வெள்ளிக்கம்பி போன்று மின்னக்கூடியதான இளம்பிறை, மணம் பரப்பக்கூடியதான கொன்றை மலர் ஆகியவற்றை சமமாக தன் முடிமேல் அணிந்துள்ள சிவபிரானது நெடுநகரம் எதுவெனில் கடம்பு, குருக்கத்தி, பிரிந்தும் நீண்டும் இருக்கக் கூடியதுமான மரமல்லிகை ஆகியவற்றின் அரும்புகளும், குரவமலர்களும் மணம் பொருந்தி வானம் வரை நீண்டு இருக்கக் கூடியதானதும், குளிர்ச்சியும் அருளும் நிரம்பியதுமானதும், சோலைகள் சூழ்ந்ததுமானது திருக்கொடுங்குன்றம் எனும் திருத்தலம் ஆகும்.
விளக்கஉரை
விண்டுதல் = பிளத்தல், பிரித்தல்
மரவம் – கடம்பு. மாதவி – குருக்கத்தி.
நிரவ – நிரம்ப
திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள் – அடும்பு
புகைப்படம் : இணையம் செய்தி : விக்கிப்பீடியா
தற்போதைய பெயர் மவ்வல், மரமல்லி, மரமல்லிகை, பன்னீர்ப் பூ
குறிஞ்சி நில மகளிர் பயன்படுத்தியது.
இரவில் பூக்கும் இதன் மலர்கள் மிகுந்த வாசனையைக் கொண்டவை.
வீட்டில் நட்டு வளர்க்கும் மௌவலையின் வேறு பெயர் ‘மனைநொச்சி’
கருத்து – திருக்கோகரணம் எனும் திருத்தலத்தில் உறையும் சிவனின் பெருமைகளைக் கூறும் பாடல்.
பதவுரை
அலைகளை உடைய புனித நதியில் குடைந்து மூழ்கி வணங்கத் தக்கவரான சிவபெருமான் அழிக்கப்பட்டதான தலைமாலை அணிந்தவர்; திருச்சடையில் கொன்றை, எருக்கு, அலரி, வன்னிப்பத்திரங்கள் ஆகியவற்றால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்தவர்; அவர் வீற்றிருந்து அருளுகின்ற இடமானது வெற்றி பொருந்திய வாளாயுதத்தை ஏந்திய வீரர்களுடன் வேடர்கள் நட்புக் கொண்டு கூடி இருக்கக் கூடியதும், பழிபாவத்தை நீக்கி அருள்புரியும் தலமான திருக்கோகரணம் எனும் திருத் தலமாகும்.
கருத்து – ஈசனின் குணங்களை சொல்லி அவரை வணங்குதலைப் பற்றி உரைக்கும் பாடல்.
பதவுரை
திருமுடியில் முல்லை மாலையை சூடியவனே, திருமேனி முழுவதும் திருநீறு பூசியவனே, எல்லை அற்றதான எண்குணங்களை உடையவனே, செங்கோட்டு யாழ் மற்றும் சீறி யாழ்போன்ற ஏழு நரம்புகள் உடைய யாழ் வகையில் ஏழுவகை ஓசையைப் படைத்தவனே, மயிர் நீக்கப்பட்ட உருண்டை வடிவினதாகிய கபாலம் எனும் மண்டை ஓட்டில் உணவு பெறுபவனே, உன்னை வந்து வழிபடுபவர்களின் தீவினைகளை முழுவதும் நீக்குபவனே, ஓதுதலை உடைய தில்லைச் சிற்றம்பலத்தை விரும்பி அடைந்து இருப்பவனே, அதிகை வீரட்டானத்தில் உகந்தருளியிருக்கும் எம் செல்வனே! உன்னை வணங்குகிறேன்.
விளக்கஉரை
படைத்தல் – உடையனாதல்
சில்லை – வட்டம்
சிரை – மழிப்பு
செல்வன் – இன்பத்திற்கு ஏதுவாய் உள்ள பொருளாய் உள்ளவன்
எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி – சிவனுக்கு உரித்தானதும், சைவ ஆகமத்தில் கூறப்பட்ட முறைப்படியும் எண்வகைப்பட்ட குணங்கள் தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேர்-அருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என்பதால் எல்லையற்ற நற்பண்புகளை உடையவனே எனும் பொருளில் சில இடங்களில் விளக்கப்பட்டுள்ள கருத்து விலக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள் – முல்லை
புகைப்படம் மற்றும் செய்தி – விக்கிப்பீடியா
முல்லை என்னும் சொல் காட்டில் மலரும் வனமுல்லையை குறிக்கும்
பாரி வள்ளல் தன் தேரை வழங்கியது இந்த முல்லைக்குத்தான்
மருத்துவ குணங்கள் – மனோ வியாதிகள் நீங்கி மனத்தெளிவு பெறுதல், தலைவலி நீக்குதல், கண் பார்வை கோளாறு நீக்குதல் போன்றவற்றை செய்யும்
கருத்து – சிவன் சூடியுள்ள மலர்களை குறிப்பிட்டு அவர் அனைத்து உயிர்களுக்கு துணையாக இருப்பதை குறிப்பிடும் பாடல்.
பதவுரை
விரும்பத்தக்கதான காட்டுப்பள்ளி எனும் தலத்தில் உறைபவரும், அடும்பு மலர்கள், கொன்றை மலர்கள், வன்னி மலர்கள், ஊமத்த மலர்கள் ஆகியவற்றால் புனையப்பட்ட மாலையை சடையில் சூடி இருப்பவரும், ஒளிவீசும் முத்து போன்ற சோதி வடிவாக இருப்பவனும், கடம்ப மலர் மாலையினை அணிந்த முருகனின் தந்தையும் ஆகிய பெருமானே இந்த உடலோடு கூடி வாழும் உயிர்களுக்கு உற்ற துணைவர் ஆவார்.
விளக்கஉரை
அடும்பு – அடம்பமலர்
துடும்பல் – நிறைந்திருத்தல்
தூமணிச்சோதி – தூயமணியினது ஒளியை உடையவன்
கடம்பன் – கடம்பமலர்மாலை சூடிய முருகன்
தாதை – தந்தை
திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள் – அடும்பு
புகைப்படம் மற்றும் செய்தி - விக்கிப்பீடியா
• வேறு பெயர் அடம்பு • படரும் கொடி வகை சார்ந்தது • கடற்கரையிலும் வறண்ட மணல் மேட்டிலும் படர்ந்து வளரும் தன்மை உடையது • குணங்கள் – மருத்துவ மூலிகை, வயிற்றுப்போக்கை நிறுத்தக்கூடியது. மலச்சிக்கலைப் போக்கும் தன்மை கொண்டது. சிறுநீரை பெருக்கும் தன்மை உடையது.
கருத்து – இராவணனுக்கு அருளியவனும், பஞ்ச பூதங்களைப் படைத்தவனும் ஆகிய ஈசன் உறையும் இடம் பனையூர் எனும் திருத்தலம் என்பதை கூறும் பாடல்.
பதவுரை
எளிதாக விளங்கக் கூடியதான முடியினை கொண்ட பத்து தலைகளை உடைய இராவணனுக்கு துன்பம் வருமாறு செய்து, பின் அவன்படும் அல்லல் கண்டு அவனுக்கு அருள் செய்த எம் அண்ணலும், உலகின் உள்ள உயிர்கட்கு நீர் நிலம் முதலான பலவற்றையும் படைத்து அளித்தவனும் ஆகிய சிவபெருமானனின் ஊர் திருப்பனையூர் எனும் திருத்தலமாகும்.
விளக்க உரை
ஐம்பூதங்களையும் ஆக்கிய இறைவனின் ஊர் பனையூர் என்கின்ற பொருள் கொண்டும் ‘மற்றும் பல’ என்றமையான் நுண்பூதங்களும், தன்மாத்திரைகளும் ஆகிய அனைத்தையும் படைத்துக் கண்டவன் எனும் பொருளாகவும் விரியும். உலகினையும், உலக பொருள்களையும் படைத்தவன் சிவன் எனும் சைவ சித்தாந்த பொருளுடன் ஒப்பு நோக்கி உணர்க.
கருத்து – இராவணனுக்கு வேண்டி நின்றப் பின் அருளிய திறத்தையும், வேண்டாத பொழுதும் தன்னிடத்தில் இரக்கம் கொண்டு அருளிய திறத்தையும் திருநாவுக்கரசர் உரைத்தப் பாடல்.
பதவுரை
அரக்கன் ஆன இராவணன் வாய் விட்டு அலறுமாறு அழகிய திருவிரலை ஊன்றியவனும், எஞ்ஞான்றும் மாறுபாடு இல்லாமல் இருப்பவனும், திருவண்ணாமலை வடிவமாக இருப்பவனும், இரக்கம் கொண்டு என் உடல் பெற்ற நோய்களைத் துரத்திய அருளாளனுமாகிய பெருமானைத் தொண்டுபுரியும் அடியேன் மறந்து உய்தலும் கூடுமே?(இல்லை என்பது மறை பொருள்)
இரக்கமாய் – இரங்கி அருளி( செருக்கு நீங்கிப் பண் இசைத்து அருள் பெற்றது)
துரக்கன் – துரத்தியவன்
உரக்கன் – வலிமையுள்ளோன்
உடலுறு நோய் ஒன்னு ஆன போதிலும் அதனால் பெற்ற வருத்தம் பல வகைப் பட்டமையின் காரணமாக நோய்களை என்றார் என்று சில இடங்களில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சஞ்சீதம் பிராப்தம் ஆகாமியம் ஆகிய மூவினைகளையும் அழித்து அதன் மூலம் உடல் நோயினை நீங்குபவன் என்பதான பொருளும் அறியப்படும். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
முன்னவன் எங்கள்பிரான் முதல் காண்பரி தாயபிரான் சென்னியில் எங்கள்பிரான் திரு நீல மிடற்றெம்பிரான் மன்னிய எங்கள்பிரான் மறை நான்குங்கல் லால்நிழற்கீழ்ப் பன்னிய எங்கள்பிரான் பழ மண்ணிப் படிக்கரையே
ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்
கருத்து – ஈசனின் எண் குணங்களில் சிலவற்றை சொல்லியும், அவன் சில தன்மைகளையும் கூறி அவன் உறையும் திருத் தலத்தைப் பற்றி உரைக்கும் பாடல்.
பதவுரை
சங்காரம் முடிந்து சிருஷ்டி தொடங்குவதற்கு முன் உள்ளவனும், தனக்கு முன்னால் உலகம் மற்றும் உலகப் பொருளும் படைக்கப்படவில்லை எனும் தன்மை கொண்டு எங்கள் இறைவன் ஆனவனும், சென்னி எனப்படுவதும் தலை எனப்படுவதும் ஆன உச்சியில் இருக்கும் எங்கள் தலைவன் ஆனவனும், அழகிய நீல கண்டத்தை உடைய எங்கள் இறைவன் ஆனவனும், என்றும் நிலை பெற்ற எங்கள் தலைவனும், நான்கு மறைகளையும் கல்லால மர நிழலில் இருந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்தவனும் ஆன எங்கள் இறைவன் இறைவன் எழுந்தருளியிருப்பது ‘திருப்பழமண்ணிப்படிக்கரை’ என்னும் திருத்தலமே.
கருத்து – உலகமாகவும், உலகப் பொருள்கள்கள் அனைத்திலும் உறையும் ஈசன் ப்ரமன் தலை கொய்து மண்டையோட்டில் யாசித்து உண்ணுவதை பழிப்பது போல் சிறப்பித்துக் கூறியது.
பதவுரை
கயல் மீன் போன்ற நீண்ட கண்களையுடைய மகளிர் வாழ்கின்ற திருத்தலம் ஆனதும், பொலிவு உடையதும் ஆன திருக்கண்டியூரில் வீற்றிருந்தருளும் வீரட்டநாதனாகிய இறைவன் உலகினுக்கும், உயிருக்கும் விரும்பியவற்றை அளிக்கும் தலைவனாய் இருப்பதோடு, உலகப்பொருள்களிலும், அனைத்து உயிர்களிடத்தும் அவைகளோடு கலந்து வியாபித்து நிற்கும் தன்மையை கொண்ட போதிலும் வானில் இருந்து உலகத்தில் மழை பொழியச் செய்து நலம்புரியும் தேவர்களுக்காகப் பிரமனுடைய பொய்யானதான ஐந்தாவது சிரத்தை அயலார்கள் பரிகசிக்கும்படி நகத்தால் அரிந்து, அந்த மண்டை ஓட்டில் பிச்சையேற்று உண்ணும் விருப்பம் கொண்டது என்ன காரணத்தால் என்று மெய்யடியார்களே எனக்கு இயன்ற அளவு இயம்புவீர்களாக.
விளக்கஉரை
இறைவனுமாய் நிறைசெய்கையை – உலகினுக்கும் உயிருக்கும் தலைவனுமாய் நின்று, அவற்றுள் வியாபித்து நிறைந்து நின்ற செய்கையை பற்றியது.
தரைமட்டத்திற்கு மேல் சில அங்குல உயரமே உள்ள அஞ்சைக்களத்தபர்
அம்மன் தனி சன்னதி இல்லாமல் கருவரைக்குள் ஈசனுன் இணைந்து சதாசிவ வடிவம்
கேரள அமைப்பில் அமைந்த திருக்கோயில். (வெடி வெடித்துப் பிரார்த்தனை செய்யும் வழக்கம் உட்பட)
பரசுராமர் தாயைக் கொன்ற பாவம் நீங்க வழிபட்ட தலம்
கயிலாயத்திலிருந்து வந்த வெள்ளை யானை இங்கிருந்து சுந்தரரைக் கயிலாயத்திற்கு ஏற்றிச் சென்றத் தலம். (இறங்கிய இடம் வீதியில் நடுவில் உள்ள பெரிய மேடையை ஆகிய ‘யானைவந்த மேடை’)
கழறிற்றறிவார் என்றழைக்கப்படும் சேரமான் பெருமாள் நாயனார் நாயனாரின் அவதார மற்றும் முத்தித் தலம் ( குருபூசை நாள் : ஆடி – சுவாதி)
சுந்தரர் கயிலை சென்ற ஆடி சுவாதி நன்னாளன்று ஆண்டுதோறும் சுந்தரர், சேரமான் ஆகியோருக்கு அபிஷேகம் / விழா ( அன்று மட்டும் தமிழ்நாட்டு முறைப்படி ஆகம பூஜை)
சேரமான் பெருமான் சிறு குறிப்பு – 1 : தாம் நாள் தோறும் செய்யும் பூசையின் முடிவில் நடராஜப் பெருமானின் சிலம்பு ஓசையைக் கேட்கும் பேறு பெற்றவர். ஒரு நாள் சிலம்போசை பூசை முடிவில் கேட்கப் பெறவில்லை. நாயனார் மிக வருந்தி உயிர்விடத் துணிந்த போது சிலம்போசை கேட்டார். “ஐயனே! முன்பு நான் கேளாமற் போனதற்கு காரணம் என்னவோ” என நாயனார் இறைவனிடம் முறையிட்ட போது “அன்பனே வருந்த வேண்டாம்! கனகசபையில் நம் முன்னே சுந்தரன் வழிபட்டு செந்தமிழால் எம்மைப் பாடினான். அது கேட்டு அதன் சுவையில் ஈடுபட்டதால் உன் பூசையில் சிலம்பிசைக்க தாமதித்தோம்” என பதில் உரைத்தார். சிதம்பரத்தில் போற்றி பாடியது பொன் வண்ண திருவந்தாதி ; திருவாரூரில் பாடியது மும்மணிக் கோவை
சேரமான் பெருமான் சிறு குறிப்பு – 2 : திருக்கயிலையில் இறைவனை அடைந்த சுந்தரர் இறைவனிடம் தன் தோழர் சேரமான் பெருமாளையும் திருக்கயிலாயத்தில் அனுமதிக்க வேண்டும் என்று விண்ணப்பிக்க எம்பிரான் தோழர் ஆகிய இறைவனும் அனுமதி அளித்தார்; சேரமான் பெருமான் இறைவன் முன் வந்து வணங்கி ஆசு கவியாக ஓர் உலா (திருக்கயிலாய உலா) ஒன்று இறைவன் மீதுப் பாடினார். தமிழ்க் காப்பியங்களில் முதன் முதலாக பாடப்பட்ட உலா
அஷ்ட வித்யேஸ்வரர்களின் உருவங்கள் உள்ள துவஜஸ்தம்பம்
வெளியிலிருந்து கோயிலுக்குள் செல்வதுபோலவும், எதிர்சுவரில் கோயிலிலிருந்து வெளியே வருவதுபோலவும் அமைக்கப்பட்டுள்ள் யானை சிற்பங்கள் (இடம் : கிழக்கு ராஜகோபுர நுழைவாயில் பக்க சுவர்)
‘திருவஞ்சைக் களத்து சபாபதி’ என்று எழுதப்பட்டுள்ள பஞ்சலோக நடராசர்
செப்புத் திருமேனிகளாக சுந்தரர், சேரமான் உருவங்கள்
தலம்
திருஅஞ்சைக்களம்
பிற பெயர்கள்
திருவஞ்சிக்குளம்
இறைவன்
அஞ்சைக்களத்தீஸ்வரர், மகாதேவர்
இறைவி
உமையம்மை
தல விருட்சம்
சரக் கொன்றை
தீர்த்தம்
சிவகங்கை
விழாக்கள்
மாசி மகா சிவராத்திரி
மாவட்டம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை ௦5:௦௦ AM முதல் 11:0௦ AM வரை மாலை ௦5:௦௦ PM முதல் ௦8:0௦ PM வரை
ஸ்ரீ மஹாதேவ சுவாமி திருக்கோயில்
ஸ்ரீ வாஞ்சிகுளம் – அஞ்சல், (வழி) கொடுங்களூர் – 680 664. கேரளா – திருச்சூர் மாவட்டம்
0487-2331124
வழிபட்டவர்கள்
சேரமான், சுந்தரர், பரசுராமர்
பாடியவர்கள்
சுந்தரர் 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம்
கேரளா சென்னை – கொச்சி இருப்புப்பாதையில் ‘இரிஞாலக்குடா’ நிலையத்தில் இருந்து 8 கி. மீ. தொலைவு; திரிச்சூரிலிருந்து 32 கி. மீ. தொலைவு
இதர குறிப்புகள்
மலை (சேர) நாட்டுத் தலம்
பாடியவர் சுந்தரர் திருமுறை 7 பதிக எண் 04 திருமுறை எண் 1
பாடல்
தலைக்குத் தலை மாலை அணிந்தது என்னே சடைமேல் கங்கை வெள்ளம் தரித்தது என்னே அலைக்கும் புலித்தோல் கொண்டு அசைத்தது என்னே அதன் மேல் கதநாகம் கச்சு ஆர்த்தது என்னே மலைக்கு(ந்) நிகர் ஒப்பன வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு அலைக்கும் கடலங்கரை மேல்மகோதை அணியா பொழில் அஞ்சைக்களத்து அப்பனே
பொருள்
கடின தன்மையால் மலைக்கு நிகராகிய வலிய அலைகள் வலம்புரிச் சங்குகளைப் பற்றியும் ஈர்த்து வந்தும் எறிந்தும் முழங்கி மோதுகின்றதும் ஆன கடலின் அழகிய கரையில் “மகோதை” என்னும் நகரத்தின்கண் உள்ள, அழகு நிறைந்த சோலைகளையுடைய, “திருவஞ்சைக்களம்” என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே! நீ உன்னுடைய தலைக்கு அணிகலமாகத் தலை மாலையை அணிந்தது என்? திருச்சடையின்மேல் ‘கங்கை’ என்னும் ஆற்றைத் தாங்கியது என்? கொல்லும் தன்மையுடைய புலியினது தோலை உரித்தெடுத்து அரையில் உடுத்தது என்? அந்த உடையின்மேல் சினத்தையுடைய பாம்பைக் கச்சாகக் கட்டியது என்?
விளக்க உரை
சிவன், தலைமாலையை மார்பில் மட்டுமின்றி உருத்திராக்கம் போல் தலையிலும் அணிந்துள்ளான் என்பது பற்றியது; தலைகள் – இறந்த பிரமன் முதலியோருடையவை
கதம் – சினம்
‘மகோதை’ என்பது நகரம்; ‘அஞ்சைக்களம்’ என்பது திருக்கோயில்
பாடியவர் சுந்தரர் திருமுறை 7 பதிக எண் 04 திருமுறை எண் 8
ஒளி உடைய குழையை அணிந்த காதினை உடையவனும், வேதத்திலால் மட்டுமே அறியக்கூடியவனும், கடலின் அழகிய கரையில் இருக்கும் ‘மகோதை’ என்னும் நகரின்கண் உள்ளதும், அழகு நிறைந்த சோலைகளையுடையதும் ஆன ‘திருவஞ்சைக்களம்’ என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே! நீ, இலங்கைக்கு அரசனாகிய இராவணனை அவனது பத்துத் தலைகளோடு பல தோள்களும் அற்று விழும்படி நெரித்தாய்; பாற்கடலில் தோன்றிய நஞ்சினை அமுதமாக உண்டு கண்டம் கறுப்பு கொண்ட நிறத்தவன் ஆயினாய்; பிரமன் தலைகள் ஐந்தனுள் ஒன்றை அறுத்தாய்; அடியேன் மணவாழ்க்கையை மனத்தாலும் வெறுத்து உடம்பாலும் துறந்து விட்டேன்.
கோ – பசு, கர்ணம் – காது. பசுவின் காதுபோலக் குழைந்து காணப்படுவதால் இத்தலத்திற்கு இப்பெயர்
லிங்கம் மிகச் சிறியதான அளவில் ஆவுடையாரில் அடங்கியிருக்கும்
சிறிய அளவுடைய மூலத்தானம்; நடுவிலுள்ள சதுரமேடையில் வட்டமான பீடம்; இப்பீடத்தின் தென்கிழக்குப் பகுதியில் வெடிப்பினால் அறியப்படும் சுவர்ணரேகையுள்ள சாளக்கிராம பீடம்; இதன் நடுவிலுள்ள பள்ளத்தின் நடுவில் தொட்டுப்பார்த்து உணரத்தக்க மகாபலேஸ்வரர் சிவலிங்கபாணம்; பசுவின் காதுபோலக் குழைந்து தோற்றமளிக்கும் அருட்காட்சி
விநாயகர் – யானைமுகத்துடனும் இரண்டு திருக்கரங்களோடு நின்ற கோலத்துடன் கூடிய “துவிபுஜ” விநாயகர் – இவர் திருமுடியில் யானைத் தலையில் இருப்பதுபோல் இருபுறமும் மேடும், நடுவில் இராவணன் குட்டியதால் ஏற்பட்ட பள்ளமும் கூடிய விக்ரக அமைப்பு
கோயில் மதிலுக்கு வெளியே வடபகுதியில் தரைமட்டத்தின் கீழ் தண்ணீரில் பெரிய சிவலிங்கவடிவில் ஆதிககோகர்ணேஸ்வரர் திருக்காட்சி
இராவணன் இலங்கை அழியாதிருப்பதன் பொருட்டு கயிலைமலை சென்று சிவபிரானை நோக்கிக் கடுந்தவம் புரிந்து அருள்புரிய வேண்டி நின்றதால் பெருமான் இராவணனுக்கு பிராண லிங்கத்தைக் கொடுத்து இலங்கைக்கு எடுத்துச் சென்று பிரதிட்டை செய்து வழிபட்டு வந்தால் இலங்கை அழியாது எனவும் இச்சிவலிங்கத்தை தலையில் சுமந்து செல்ல வேண்டும், வழியில் இதனைக் கீழே வைத்தால் எடுக்கவாராது என அருளி மறைந்தார். நாரதர் மூலம் இதனை அறிந்த இந்திரன் தேவர்கள் புடைசூழக் கயிலைமலை சென்று விநாயகரை வேண்டியதால் இந்திரனின் வேண்டுகோளை ஏற்று இராவணன் கோகரணத்தை அடையும் வேளையில் அவன் வயிற்றில் நீர்சுரக்குமாறு செய்ய வருணனை ஏவி தாம் உரைத்தபடி மூன்றுமுறை, அழைத்தும் வராததால் சிவலிங்கத்தைப் பூமியில் வைத்து விட்டார். இராவணன் அந்தணச்சிறுவன் செய்த தவறுக்காக மூன்று முறை அவனது தலையில் குட்டியதால், சிறுவனாக வந்த விநாயகர் தம் உண்மை வடிவை அவனுக்குக் காட்டிப் பந்து போல அவனைத் தூக்கி எறிந்து விளையாயதால் இராவணன் பிழைபொறுக்க வேண்டினான்; இராவணன் தான் செய்த பிழைக்கு வருந்திக் குருதிசோரத் தலையில் குட்டிக்கொண்டு அவரை வழிபட்டு தலையில் குட்டிக்கொண்டு வழிபடுவோர்க்கு வேண்டும் வரங்கள் தரவேண்டும் என விளம்ப இராவணனின் பிழைகளைப் பொறுத்து அவனுக்கு நல்வரங்கள் தந்தருளினார்.
51 சக்தி பீடங்களில் இது கர்ண சக்தி பீடம்
திருநாவுக்கரசர், தாம் அருளிய திருஅங்கமாலையில் வைத்துப் பாடியுள்ள திருத்தலம்
திருமேனியை மக்கள் தொட்டு நீராட்டி மலர்சூட்டி வழிபடக் கூடிய தலம்
வழிபாட்டு முறை – கோடி தீர்த்தத்தில் நீராடல், கடலாடுதல், பிண்டதர்ப்பணம், மீண்டும் நீராடுதல் பின் மகாபலேஸ்வரர் தரிசனம்
முரட்டுத்தனமும், கரியதான இருண்ட நிறமுமுடைய இராவணனின் பத்து வாய்களும் அலறும்படி, தன் கால் பெருவிரலை ஊன்றி கயிலைமலையின் கீழ் நெருக்கிய சிவபெருமான் வீற்றிருந்து அருளும் இடம் எது எனில் முனிவர்களும், வேத வல்லுநர்களும் தங்களது வினைதீர, ஒலிக்கின்ற கழலினை அணிந்த சிவபெருமானின் திருவடிகளைப் பணிந்து, அரநாமத்தினை ஓதி வேள்விப்புகை பரவுகின்ற திருக்கோகரணம் ஆகும்.
விளக்க உரை
வரைத்தலம் – கயிலை மலை
முருடு – கடின இயல்பையுடைய
இருள் நிறத்தவன் – இருண்ட நிறத்தையுடைய இராவணன்
உகிர் – நகம்
முனிவாணர் பொலிவாகி – முனிவர்கள் விளங்கி
குரைத்து அலை – ஒலித்து அசையும் கழல்
பாடியவர் திருநாவுக்கரசர் திருமுறை 6 பதிக எண் 49 திருமுறை எண் 2
உலகினைப் படைத்த பிரமனது மண்டையோட்டை கைகளில் ஏந்தியவனாய், எங்கும் சஞ்சரிப்பவனாய், தன்னை சார்ந்த அடியவர்களுக்கு அமுதமாய், மலரில் மணம்போல எங்கும் பரவியவனாய், அதிகை வீரட்டனாய், என்றும் அழிவில்லாதவனாய் தன்னை அழிப்பாரும் இல்லாதவனாய், திருநீறு பூசியவனாய், தவமாகிய பெருமிதம் உடையவனாய் , பரந்த கயிலாயத்தை விரும்பி உறைபவனாய், தன்னிடத்துத் தோன்றித் தன் கருத்துக்கு ஏற்பக் காத்தல் தொழிலைச் செய்கின்ற திருமாலாலும் உள்ளபடி அறிய ஒண்ணாதவனாய் மேற்குக் கடலை அடுத்த கோகரணப் பெருமான் விளங்குகின்றான்.
விளக்க உரை
தந்த அத்தன் – ( உலகத்தைப் ) பெற்ற தந்தை; பிரமன்
சாரணன் – எங்கும் சரிப்பவன்
கெந்தத்தன் – ( மலரில் ) மணம் போல்பவன்
வந்து ஒத்த நெடுமால் – தன்னிடத்துத் தோன்றி , தன்னோடு ஒத்து நின்ற ( முத்தொழில்களுள் ஒன்றைச் செய்கின்ற ) திருமால்
(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)
கருத்து – ஈசனை புற உலகங்களில் அனைத்திலும் நிறைந்து அதன் வடிவமாகவும் இருப்பவன் என்பதையும் அவன் வீரச் செயல்களையும் கூறிய பாடல்.
பதவுரை
இடைமருது எனும் திருத்தலத்தில் மேவிய ஈசனார், செய்யப்படுகின்றன தீவினைகளும் நல்வினைகளுக்கும் கர்ம சாட்சி ஆகி எண் திசைகளுடன் கூடியதான மேல், கீழ் சேர்த்து பத்துத் திசைகளாகவும் அதில் உள்ள பொருள்கள் யாவுமாய் நிறைந்த செல்வராவார்; ஆறுடன் ஒன்று சேர்ந்ததான ஏழு இசையாகவும் இருப்பவர்; ரிக், யஜுர், சாமம் மற்றும் அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களாகவும் அதன் அங்கம் ஆகிய சிக்ஷை சந்தசு சோதிடம் வியாகரணம் நிருத்தம் கற்பம் எனும் ஆறாகவும், மீமாஞ்சை நியாயம் புராணம் ஸ்மிருதி எனும் உபாங்கமாகவும், புராணம், நியாயம், மீமாஞ்சை, மிருதி என்னும் நான்காகவும், ஆயுள் வேதம், வில்வேதம், காந்தருவவேதம்,அருத்தநூல் எனும் உபாங்கமாகவும், பூருவமோமாஞ்சை உத்தரமீமாஞ்சை எனும் இரு மீமாஞ்சையாகவும், கெளதம சூத்திரம் காணத சூத்திரம் எனும் இரு நியாயமாகவும் (ஆக பதினெட்டு வித்தைகள்) இருப்பவர்; ஒவ்வொரு மாதத்திற்கும் வேறு வேறு பெயர்களால் அழைக்கப்படும் சூரியனான தாதா, அர்யமா, மித்ரா, வருணா, இந்திரா, விவஸ்வான், த்வஷ்டா, விஷ்ணு, அம்சுமான், பகா, பூஷா, பர்ஜனா என பன்னிரெண்டாகவும் இருப்பவர்; புதியதான கொன்றை மலரினை சூடிய சடையினை உடையவர்; கூத்து நிகழ்த்துதலில் வல்லவரான அவர் என்றும் இளமைத் தோற்றம் கொண்டவர்; தம் மீது மலரம்புகளைச் செலுத்தவந்த மன்மதனைக் கோபித்து அவனை எரித்தவர்.
விளக்கஉரை
ஐயிரண்டு – பத்துத் திசைகள்.
ஆறொன்று – ஏழு இசைகள்.
ஐயிரண்டும் ஆறொன்றும் என்பதை முன்வைத்து 10 + 6 எனக் கொண்டு 16 வகைப் பேறுகளை அருளுபவன் எனக் கொள்வாரும் உளர். புறவடிவங்களில் இருக்கும் பிரமாண்டத்தின் அனைத்து வடிவங்களாகவும் அவன் இருக்கிறான் என்பதால் இப்பொருள் விலக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
அறுமூன்று – பதினெட்டு வித்தைகள். அறுமூன்று என்பதை முன்வைத்து பதினெட்டு புராணங்கள் என்று கூறுவோர்களும் உளர்.
கருத்து – ஈசனின் திருமேனி அமைப்பினையும் அவன் அருளும் திறத்தினையும் கூறும் பாடல்.
பதவுரை
பார்வதியினை தன்னில் ஒரு பாகமாக் கொண்டவனே, சோதி வடிவமாக இருப்பவனே, கூத்து நிகழும் காலத்தே அதில் வெளிப்படுத்த அசைகின்ற எட்டு வடிவமாக இருப்பவனே, ஆதியே, தேவர்களுக்குத் தலைவனே, அழகிய அண்ணாமலையில் இருப்பவனே! சிவார்ச்சனைக்கு விதித்த சிறந்த பூக்களான* கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ ஆகியவற்றை முறையாக உன் திருநாமங்களை ஓதி அர்ச்சித்து நின்னை அல்லால் நினையுமாறு செய்து வேறு ஒரு நினைவு இல்லாமல் உன்னைத் தியானிப்பதனைத் தவிர மற்ற பொருள்களை ஊன்றி நினையேன்.
விளக்கஉரை
ஓதிய நாமங்களுள் – உமையவள் பங்கா, மிக்க சோதியே, துளங்கும் எண் தோள் சுடர் மழுப்படையினானே , ஆதியே, அமரர்கோவே, அணி யணாமலையுளானே
பங்கன் – பாகமுடையவன், இவறலன், ஒன்றும் கொடாதவன்
கூத்து நிகழும் காலத்தே அதில் வெளிப்படுத்த அசைகின்ற எட்டுத் தோள்களை உடையவனே எனும் பொருளில் சில இடங்களிலும் எல்லாவுயிரும் உய்யும் பொருட்டு அங்கம் பிரத்தியங்கம் சாங்கம் உபாங்கம் உடைய திருவுருக் கொண்டு அருளினான் என்றும் சில இடங்களில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது. கூத்து வகைகள் முன் நிறுத்தில் 1) சிவன் – கொடுகொட்டி, பாண்டரங்கம், கபாலம் 2) திருமகள் – பாவை 3) திருமால் – குடம், மல், அல்லியம் 4) குமரன்(முருகன்) – குடை, துடி. 5) எழுவகை மாதர்(சபத கன்னியர்) – துடி 6) அயிராணி (இந்திரன் மனைவி) – கடையம் 7) துர்க்கை – மரக்கால் 8) காமன் – பேடு என இருப்பதால் இப்பொருள் விலக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
நீதி – சிவாகம முறையில் வகுக்கப்பட்ட முறைப்படி அல்லாமல் வேறு வகையில் ஓதித் தூவி நினையுமாறு மற்றொவரையும் நினைவு கொள்ளுதல்
நின்னையல்லால் நினையுமா நினைவிலேன் – நினைதல் ( மனம் ) ஓதல் ( வாக்கு ) தூவுதல் ( காயம் ) என்னும் முப்பொறிக்குமுரிய வழிபாடு முன்நிறுத்தி உணர்த்தியது.
*புட்ப விதி – கமலை ஞானப்பிரகாசர். காலம் 6-ஆம் நூற்றாண்டு
கருத்து – பூவுலகில் பெறும் சொந்தங்கள் நிலையானவை அல்ல எனவும் திருஐந்தெழுத்தே நிலையான விடு பேற்றினை அருளும் என்பதை விளக்கும் பாடல்
பதவுரை
ஒருவருடைய தந்தை யார்? தாய் யார்? உடன் பிறந்தார்கள் யார்? மனைவி யார்? புத்திரர் யார்? இவர்கள் எல்லோரும் தமக்கு எவ்வாறு தொடர்புடையவர்கள்? பூலவுலகில் பிறந்த பின் அவர்களோடு தொடர்பு கூடியதா அல்லது அவர்கள் இறந்த பின் அவர்களோடு தொடர்பு பிரியாது கூடிநிற்க கூடுவோ? என்றெல்லாம் சிந்தை உடையவர்களே! பொய்யானதும் மாயையானதும் ஆன இத்தொடர்பு கொண்டு ஏதும் மகிழ வேண்டா; உங்களுக்கு ஒன்று உறுதியாக சொல்வதை கேட்பீராக; சந்திர ஒளிவீசித் திகழ்வதும், கொடிய பாம்பும் நட்புக்கொண்டு விளையாடி மகிழும் திருமுடியை உடைய எம்தந்தையும் தலைவனும் ஆன அவன் திருநாமமாகிய நமச்சிவாய என்ற திருஐந்தெழுத்தை ஓதியவாறே துயில் எழுபவர்களுக்கு பெரியதானதும், நிலை பேறும் உடையதுமான வீடுபேறு கைகூடும். ஆகவே அதனைச் செய்யுங்கள்.
கருத்து – பாதம், உந்தி, தோள்முகம்மற்றும்தலையைகுறிக்கும்திருஐந்தெழுத்தைஓதுவார்துன்பத்தில்இருந்துநீங்குவார்என்பதைக்குறிக்கும்பாடல்
பதவுரை
திசைக்கு ஒன்றாக நான்கு திக்குகளையும் நோக்குகின்ற முகங்களையுடைய பிரமனும், திருமாலும் முறையே மேலுள்ள அண்டங்கள், கீழுள்ள அண்டங்கள் என முடி, அடி தேடி காணமுடியா வண்ணம், ஒன்றின் மேற்பட்டதாய் எழுந்து நிற்கும் தீப்பிழம்பாய் நின்றவர் திருவீழிமிழலையில் வீற்றிருக்கும் சிவபெருமான்; அவர் சொக்கு எனப்படுவதான ஒருவகைத் திருக்கூத்து ஆடியும், பாடியும் பூதகணங்கள் சூழ விளங்கும் திகம்பரர் ஆவார். அப்படிப்பட்டவராகிய சிவபெருமானின் திருநாமமாகிய நமச்சிவாய என்பதை ஓதவல்லவர்கள் சிவபுண்ணியம் செய்தவர்கள் ஆவார்.
விளக்கஉரை
திக்கு அமர் நான்முகன் – திக்கைப் போல் பொருந்திய நான்கு முகங்களையுடைய பிரமன்
நாவணங்கு இயல்பாம் அஞ்செழுத்தோதி நல்லராய் நல் இயல்பு ஆகும் கோவணம் பூதி சாதனம் கண்டால் தொழுது எழு குலச்சிறை போற்ற ஏவணங்கு இயல்பாம் இராவணன் திண்தோள் இருபதும் நெரிதர ஊன்றி ஆவணம் கொண்ட சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே
மூன்றாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்
கருத்து – பாதம், உந்தி, தோள்முகம்மற்றும்தலையைகுறிக்கும்திருஐந்தெழுத்தைஓதுவார்துன்பத்தில்இருந்துநீங்குவார்என்பதைக்குறிக்கும்பாடல்
பதவுரை
நாவினால் தொழக்கூடியதான இயல்பினை உடைய திருவைந்தெழுத்தை ஓதி, நல்லவராகவும், நல் இயல்புகளை அளிக்கும் பசுவிடம் இருந்து பெறப்படுவதான விபூதி, உருத்திராக்கம் முதலிய சிவ சின்னங்கள் அணிந்தவர்களைக் கண்டால் வணங்கி மகிழ்பவருமான குலச்சிறை நாயனார் வழிபாடு செய்யும் தலமும், இயல்பாகவே பகைவரது அம்புகள் பணிந்து அப்பால் செல்லும் பெருவலிமை படைத்த இராவணனின் இருபது தோள்களும் நெரியுமாறு தம் திருப்பாதவிரலை ஊன்றிப் பின் அவனைச் சிவ பக்தனாகும்படி செய்தருளிய திருச்சடைமுடியுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமும் ஆனது திருஆலவாய் என்னும் திருத்தலம்.
விளக்கஉரை
கோவணம் பூதி என்பதை கோவணம், விபூதி ஆகிய சிவச்சின்னங்களை அணிந்து என்று பல இடங்களில் பொருள் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விபூதி தயாரிப்பில் பசுவிடம் இருந்து பெறப்படுவதான விபூதி முதன்மையானது என்பதால்(கோ+வணம்) கோவணம் எனும் பொருள் விலக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.