
பாடல்
தந்தையார் தாயா ருடன்பி றந்தார்
தாரமார் புத்திரரார் தாந்தா மாரே
வந்தவா றெங்ஙனே போமா றேதோ
மாயமா மிதற்கேதும் மகிழ வேண்டா
சிந்தையீ ருமக்கொன்று சொல்லக் கேண்மின்
திகழ்மதியும் வாளரவும் திளைக்குஞ் சென்னி
எந்தையார் திருநாமம் நமச்சி வாய
என்றெழுவார்க் கிருவிசும்பி லிருக்க லாமே
ஆறாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்
கருத்து – பூவுலகில் பெறும் சொந்தங்கள் நிலையானவை அல்ல எனவும் திருஐந்தெழுத்தே நிலையான விடு பேற்றினை அருளும் என்பதை விளக்கும் பாடல்
பதவுரை
ஒருவருடைய தந்தை யார்? தாய் யார்? உடன் பிறந்தார்கள் யார்? மனைவி யார்? புத்திரர் யார்? இவர்கள் எல்லோரும் தமக்கு எவ்வாறு தொடர்புடையவர்கள்? பூலவுலகில் பிறந்த பின் அவர்களோடு தொடர்பு கூடியதா அல்லது அவர்கள் இறந்த பின் அவர்களோடு தொடர்பு பிரியாது கூடிநிற்க கூடுவோ? என்றெல்லாம் சிந்தை உடையவர்களே! பொய்யானதும் மாயையானதும் ஆன இத்தொடர்பு கொண்டு ஏதும் மகிழ வேண்டா; உங்களுக்கு ஒன்று உறுதியாக சொல்வதை கேட்பீராக; சந்திர ஒளிவீசித் திகழ்வதும், கொடிய பாம்பும் நட்புக்கொண்டு விளையாடி மகிழும் திருமுடியை உடைய எம்தந்தையும் தலைவனும் ஆன அவன் திருநாமமாகிய நமச்சிவாய என்ற திருஐந்தெழுத்தை ஓதியவாறே துயில் எழுபவர்களுக்கு பெரியதானதும், நிலை பேறும் உடையதுமான வீடுபேறு கைகூடும். ஆகவே அதனைச் செய்யுங்கள்.