அமுதமொழி – பிலவ – ஐப்பசி – 17 (2021)


பாடல்

ஆரிடம் பாடில ரடிகள் காடலால்
ஓரிடங் குறைவில ருடையர் கோவணம்
நீரிடஞ் சடைவிடை யூர்தி நித்தலும்
பாரிடம் பணிசெயும் பயில்பைஞ் ஞீலியே

மூன்றாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்து – சிவபெருமானின் தோற்றத்தையும் குணங்களையும் உரைத்து, அவர் உறையும் இடம் திருப்பைஞ்ஞீலி என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

சிவபெருமான் இருடிகள் எனப்படும் முனிவர்களுக்காக வேதத்தை அருளிச் செய்தவர். அவரது இருப்பிடம்சுடுகாடு என்றாலும் அதனால் ஒரு குறையும் இல்லாதவர். அவர் அணிவது கோவண ஆடை.  சடைமுடியில் கங்கையைத் தாங்கியவர். இடபத்தை வாகனமாக கொண்டவர். தினந்தோறும் பூதகணங்கள் சூழ்ந்து நின்று பணிசெய்ய திருப்பைஞ்ஞீலியில் வீற்றிருந்து அருளுகின்றார்.

விளக்க உரை

  • பாடிலர் – பாடலாகவுடையவர்.
  • காடு அலால் – புறங்காடு அல்லாமல்
  • பாரிடம் – பூதம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஐப்பசி – 15 (2021)


பாடல்

வைத்தனன் தனக்கே தலையும்என் நாவும்
     நெஞ்சமும் வஞ்சமொன் றின்றி
உய்த்தனன் தனக்கே திருவடிக் கடிமை
     உரைத்தக்கால் உவமனே யொக்கும்
பைத்தபாம் பார்த்தோர் கோவணத் தோடு
     பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பித்தரே யொத்தோர் நச்சில ராகில்
     இவரலா தில்லையோ பிரானார்

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – திருவடித் தொண்டினை வஞ்சனை எதுவும் இல்லாமல் செய்ததன் பொருட்டு அருள வேண்டும்  என விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

படம் எடுத்து ஆடும் பாம்பினைக் கட்டிக்கொண்டும்,   கோவணத்தை ஆடையாகக் கொண்டும், பித்த நிலையில் இருப்பவரை  ஒத்தும் , பரமர் எனப்படும் முழு முதற் தெய்வமாகியும் இருக்கும் இவர் அருளுதல் பொருட்டு சிறிதும் திருவுளம் இரங்குவார் எனில்  எம்மைக் காக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை; எனது தலையையும், நாவையும், நெஞ்சத்தையும் எந்த விதமான மாறுபாடும் இன்றி திருப்பாச்சிலாச்சிராமத்தில் உள்ள எம்பெருமானுக்கே உரியனவாக ஆக்கினேன்; அவருடைய திருவடித் தொண்டினை வஞ்சனை எதுவும் இல்லாமல் செய்தேன்; இவ்வாறு யானே உரைத்தல் என்பது பொய்யினை உரைப்பது போல் ஆகும்; இருப்பினும் என் செய்வேன்?

விளக்க உரை

  • தலையும்என் நாவும் நெஞ்சமும் – மனம், மொழி, வாக்கு
  • நச்சு – விருப்பம்
  • இல்லையோ – இரக்கப் பொருளதாய் முறையீடு உணர்த்தியது

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 25 (2021)


பாடல்

ஆறு கொண்ட சடையினர் தாமுமோர்
வேறு கொண்டதொர் வேடத்த ராகிலும்
கூறு கொண்டுகந் தாளொடு மீயச்சூர்
ஏறு கொண்டுகந் தாரிளங் கோயிலே

ஐந்தாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – அன்னையினை பாகம் கொண்டு எழுந்து அருளும் திருமீயச்சூர் திருத்தலம் பற்றி உரைக்கும்  பாடல்

பதவுரை

ஒப்பற்ற கங்கையைச் சூடிய சடையினை உடையவராகியும்,  பல்வேறு மூர்த்தங்களைக் கொண்டு வேறு வேறு  வேடத்தராகியும் அன்னையை தன்னுடை உடலின் பாகத்தில் கொண்டவனும் ஆனவன் அம்மையொடும் திருமீயச்சூர் இளங்கோயிலில் பார்வதி தேவியாரொடு விடையேறி அருள்செய்யும் மூர்த்தமாக எழுந்தருளியுள்ளார்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 23 (2021)



பாடல்

பசைந்தபல பூதத்தர் பாட லாடல்
     படநாகக் கச்சையர் பிச்சைக் கென்றங்
கிசைந்ததோ ரியல்பினர் எரியின் மேனி
     இமையாமுக் கண்ணினர் நால்வே தத்தர்
பிசைந்ததிரு நீற்றினர் பெண்ணோர் பாகம்
     பிரிவறியாப் பிஞ்ஞகனார் தெண்ணீர்க் கங்கை
அசைந்த திருமுடியர் அங்கைத் தீயர்
     அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே

ஆறாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – அன்னையினை பாகம் கொண்டு எழுந்து அருளும் திருஆமாத்தூர் திருத்தலம் பற்றி உரைக்கும்  பாடல்.

பதவுரை

பாடுதலையும் கூத்தாடுதலையும் விரும்பிய பல பூதங்களை உடைய ஆமாத்தூரில்  உறையும் ஈசனானவர், படம் எடுக்கும் பாம்பைக் கச்சையாக உடுத்தியும், தீப்போன்ற சிவந்த மேனி கொண்டும், இமைக்காத முக்கண்களை உடையவராகவும், நான்கு வேதங்களையும் ஓதுபவராகவும், திருநீற்றை நீரில் குழைத்து அணிந்தவராகவும், தம் உடம்பின் ஒரு பாகத்தில் உமாதேவியை நீங்காத கோலம் கொண்டவராகவும், தெளிவான கங்கையை திருமுடியில் தாங்குபவராகவும், தீ ஏந்திய கையினை உடையவராகவும்  அழகி கோலம் கொண்டவராகவும்  காட்சி வழங்குகின்றார்.

விளக்க உரை

  • பசைந்த – விரும்பிய
  • பிசைந்த – வடித்த
  • அசைந்த – தங்கிய

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 22 (2021)


பாடல்

அயிலாரு மம்பத னாற்புர மூன்றெய்து
குயிலாரு மென்மொழி யாளொரு கூறாகி
மயிலாரு மல்கிய சோலை மணஞ்சேரிப்
பயில்வானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே

இரண்டாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்து – அன்னையினை பாகம் கொண்டு எழுந்து அருளும் திருமணஞ்சேரி திருத்தலம் பற்றி உரைக்கும்  பாடல்.

பதவுரை

கூர்மையாக முப்புரங்களையும் அழித்தும், குயில் போலும் இனிய மென்மையான மொழிபேசும் உமை அம்மையை தன்னுடைய ஒரு பாகத்தில் உடையவனாகியும், மயில்கள் வாழும் நிறைந்த சோலைகள் சூழ்ந்ததும் ஆன திருமணஞ்சேரியில் எழுந்து அருளும் இறைவனைப் பற்றி நின்றவர்களுக்கு பாவம் இல்லை.

விளக்க உரை

  • அயில் – கூர்மை
  • குயில் வாய்மொழியம்மை – அம்பிகை திருநாமம்
  • பயில்வான் – கோயில்கொண்டு இருப்பவன்
  • பற்றி நிற்றல் – பற்று விடுமாறு பற்றி வழிபடல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 10 (2021)


பாடல்

மூலம்

தானெனை முன்படைத்தான் அதறிந்துதன் பொன்னடிக்கே
நானென பாடலந்தோ நாயினேனைப் பொருட்படுத்து
வானெனைவந் தெதிர்கொள்ள மத்தயானை அருள்புரிந்து
ஊனுயிர் வேறுசெய்தான் நொடித்தான்மலை உத்தமனே

பதப்பிரிப்பு

தானெனை முன்படைத்தான் அதுஅறிந்து தன் பொன்அடிக்கே
நான் எனப் பாடல் அந்தோ நாயினேனைப் பொருட்படுத்து
வான்எனை வந்து எதிர்கொள்ள மத்தயானை அருள்புரிந்து
ஊன்உயிர் வேறு செய்தான் நொடித்தான்மலை உத்தமனே

ஏழாம் திருமுறை -தேவாரம் – சுந்தரர்

கருத்து – குற்றம் உடைய தன்னையும் பொருட்டாக மதித்து உடலையும், உயிரையும் மதித்த தன்மையை வியந்து கூறும் பாடல்.

பதவுரை

திருக்கயிலையில் வீற்றிருந்து அளும் முதல்வன் ஆகியவனும் உத்தமன் ஆகியவனும் ஆன ஈசன், தானே முன்பு என்னை இந்த பூமியில் தோன்றச் செய்து  அருளினான்;  தோற்றுவித்ததன் காரணத்தை உணர்ந்து  அவனது பொன்போன்ற  திருவடிகளுக்கு என்னளவில் (தோத்திரம்) பாடல்கள் செய்தேன்;  படைப்பின் நோக்கம் உணர்ந்தும் அதிகம் பாடல்கள் பாடாமல் நாய் போன்ற குற்றம்  உடைய என்னைப் பொருட்படுத்தாமல் என்னை அடியவர்களுள் ஒருவனாக வைத்து, வானவர்களும் வந்து எதிர்கொள்ளுமாறு , பெரியதான யானை ஊர்தியை எனக்கு அளித்து, எனது உடலோடு உயிரை உயர்வு பெறச் செய்தான்; என்னே அவனது திருவருள்!

விளக்க உரை

  • அறிந்து – தோற்றுவித்தது என்பது  பாடுதல் பொருட்டு என்று பெறப்படும்
  • நொடித்தல் – அழித்தல். நொடித்தான் மலை – (உயிர்களின் வினைகளை) அழிக்கும் கடவுளது மலை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஆனி – 22 (2021)


பாடல்

உரமன் உயர்கோட்டு உலறுகூகை அலறும் மயானத்தில்
இரவில் பூதம் பாடஆடி, எழிலார் அலர்மேலைப்
பிரமன் தலையில் நறவம் ஏற்ற பெம்மான், எமை ஆளும்
பரமன் பகவன் பரமேச்சுவரன் பழன நகராரே

முதலாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்து – திருப்பழனம் திருத்தலத்தில் உறையும் இறைவனின் பெருமைகளையும் தோற்றத்தையும் உரைக்கும்  பாடல்.

பதவுரை

எம்மை ஆளும் பரமர் ஆனவரும், பகவன் ஆனவரும், பரமேச்சுவரன் எனும் பெயரினை உடையவரும், திருப்பழன நகரின் உறைபவரான இறைவன் நள்ளிருளில் பூதங்கள் பாடியும் ஆடியும் இருப்பதும், வலிமை பொருந்திய உயரமான வற்றிய மரக்கிளைகளில் அமர்ந்து ஒலி செய்யும் கூகை எனப்படும் ஆந்தைகள் அலறும் மயானத்தில் அழகிய தாமரை மலர்மேல் உறையும் பிரமனது தலையோட்டில் பலியேற்றும் திருவிளையாடல் புரியும் பெருமான் ஆவார்.

விளக்க உரை

  • உரம் – வலிமை.
  • உலறு கோட்டு – வற்றிய கிளை
  • கூகை – கோட்டான்
  • அலர் மேலைப் பிரமன் – தாமரை மலர்மேல் உள்ள பிரமன். நறவம் – கள். தேன்; 
  • பரமன் – உயர்ந்தவற்றிற்கு எல்லாம் உயர்ந்தவன்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஆனி – 21 (2021)


பாடல்

கலையிலங் கும்மழு கட்டங்கங் கண்டிகை குண்டலம்
விலையிலங் கும்மணி மாடத்தர் வீழி மிழலையார்
தலையிலங் கும்பிறை தாழ்வடஞ் சூலந் தமருகம்
அலையிலங் கும்புன லேற்றவர்க் கும்மடி யார்க்குமே

மூன்றாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்து – திருவீழிமிழலை இறைவனின் தோற்ற சிறப்புகளை உரைத்து, அவரின் குணங்களையும் உரைக்கும்  பாடல்.

பதவுரை

மான், ஒளிரும் தன்மை உடைய மழுப்படை, யோகதண்டம், உருத்திராக்கம், குண்டலம் முதலியவற்றைக் கொண்டு  விலைமதிப்பு கூற இயலாத மணிகளால் அலங்கரிக்கப்பட்ட மாடங்களையுடைய திருவீழிமிழலையில்  வீற்றிருந்து அருளும் இறைவனானவர் தலையிலே பிறைச் சந்திரனைச் சூடி, கழுத்திலே எலும்புமாலை விளங்குமாறு, கையில் சூலம், உடுக்கை ஆகியவற்றைக் கொண்டு அலையினை உடைய கங்கையை ஏற்று, இடபக்கொடி கொண்டு இருப்பவர்; யோகநெறி நின்று தம்மைத் தொழும் அடியவர்களும் தம்மைப் போன்றே  சாரூப பதவி பெறச் செய்பவர்.

விளக்க உரை

  • கலை – மான்
  • இலங்கும் மழு – ஒளிரும் மழு ஆயுதம்
  • கட்டங்கம் – யோகதண்டம்
  • கண்டிகை – உருத்திராட்சக் கண்டிகை
  • தலை தாழ்வடம்
  • தமருகம் – உடுக்கை
  • அலை இலங்குபுனல் – அலையினால் விளங்குகின்ற கங்கை
  • ஏற்றவர் – இடபக்கொடி யுடையவர் .
  • நகுவெண்டலை – கையிலேந்திய கபாலம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஆனி – 9 (2021)


பாடல்

அக்கா ரணிவட மாகத்தர் நாகத்தர்
நக்கா ரிளமதிக் கண்ணியர் நாடொறும்
உக்கார் தலைபிடித் துண்பலிக் கூர்தொறும்
புக்கார் புகலூர்ப் புரிசடை யாரே

நான்காம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – திருப்புகலூர் திருத்தலத்தில் உறையும் ஈசனின் பெருமைகளை உரைக்கும் பாடல்.

பதவுரை

திருப்புகலூர் திருத்தலத்தில் உறையும் ஈசனானவர் உருத்திராக்கம் நிறைந்த மாலையைப் பூண்ட மார்பினை உரையவர்; கழுத்தில் பாம்பினை உடையவர்; ஒளி வீசும் பிறையை முடிமாலையாகச் சூடியவர்; நாள்தோறும் இறந்தவர் மண்டையோட்டினை ஏந்திப் பிச்சை உணவு வாங்க ஊர் தோறும் செல்பவர் ஆவர்.

விளக்க உரை

  • அக்கு – உருத்தி ராக்கம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – வைகாசி – 22 (2021)


பாடல்

படைக்கட் சூலம் பயிலவல் லானைப்
   பாவிப் பார்மனம் பாவிக்கொண் டானைக்
கடைக்கட்பிச் சைக்கிச்சை காதலித் தானைக்
   காமன்ஆ கந்தனைக் கட்டழித் தானைச்
சடைக்கட் கங்கையைத் தாழவைத் தானைத்
   தண்ணீர்மண் ணிக்கரை யானைத்தக் கானை
மடைக்கண்நீ லம்மலர் வாழ்கொளி புத்தூர்
   மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே

ஏழாம் திருமுறை -தேவாரம் – சுந்தரர்

கருத்து – திருவாழ்கொளி புத்தூரில் உறையும் ஈசனின் பெருமைகளை உறைத்து அவனை விடுத்து வேறு எதையும் நினைக்கமாட்டேன் எனக் கூறும் பாடல்.

பதவுரை

படைகளில் முதன்மையான சூலத்தை தனது படையாகக் கொண்டவனும், தன்னை நினைப்பவர்களது உள்ளத்தில் பரவி அந்த சிந்தனைகளை அதிகப்படுத்துவனும், ஊர்தோறும் சென்று பிச்சையை விரும்பிச் செய்பவனும், அழகிய வடிவம் கொண்ட காமனது உடலை அழியச் செய்தவனும், பெருக்கெடுத்து செல்லும் கங்கையைச் சடையில் தங்கும்படி செய்தவனும், நீர்வளம் உடைய மண்ணி ஆற்றின் கரையில் இருப்பவனும், எண்குணங்கள் அமையப் பெற்றவனும், நீர் மடைகளில் நீலோற்பல மலர் மலர்ந்து இருக்கின்ற திருவாழ்கொளி புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போன்றவனுமாகிய பெருமானை மறந்து யான் வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினைக்கமாட்டேன்.

விளக்க உரை

  • படைக்கண் – உள் என்னும் பொருளதாய் வந்தது. ஏனைய படைகளிலும் சிறந்தது சூலம் எனும் பொருள் பற்றியது.
  • பாவிக்கொள்ளுதல் – மூடிக்கொள்ளுதல், சுற்றிக் கொள்ளுதல்
  • தாழ்தல் – தங்குதல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – சித்திரை – 26 (2021)


பாடல்

குறைவி லாநிறை வேகுணக் குன்றே
   கூத்த னேகுழைக் காதுடை யானே
உறவி லேன்உனை யன்றிமற் றடியேன்
   ஒருபி ழைபொறுத் தால்இழி வுண்டே
சிறைவண் டார்பொழில் சூழ்திரு வாரூர்ச்
   செம்பொ னேதிரு வாவடு துறையுள்
அறவ னேஎனை அஞ்சல்என் றருளாய்
   ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – குறைகள் அற்றவனாகிய சிவனிடத்தில் குறையுடைய தன்னை பொறுத்து அருள வேண்டும் என விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

‘குறை` எனப்படுவது ஒன்றும் இல்லாது எக்காலத்திலும் நிறைவுடையவனே, எண்குணங்கள் அனைத்தும் பெற்று மலை போன்று உயர்ந்து நிற்பவனே, கூத்துகளை நிகழ்த்துபவனே, குழையணிந்த காதினை உடையவனே, ஒலி எழுப்பும் வண்டுகள் வெளியே செல்லாமல் சிறைபோன்று சோலைகள் சூழ்ந்த திருவாரூரில் செம்பொன் போன்ற திருமேனியினை உடையவனே! திருவாவடுதுறை திருத்தலத்தில் எழுந்து அருளுகின்ற அறவடிவினனே, அடியேனுக்கு உன்னையன்றி எனக்கு எவரும் உறவினராக இல்லை ஆதலினால் யான் செய்த ஒரு குற்றத்தை நீ பொறுத்துக்கொண்டால் , நீ தாழ்வினை அடைவாயா, என்னை ,`அஞ்சேல்` என்று சொல்லித் தேற்றி, எனக்கு அருள் செய்வாயாக.

விளக்க உரை

  • குறைவிலா நிறைவே – எல்லாவற்றினும் மேலான பொருளாகிய இறைவன் ஒருவனையன்றி, குறை சிறிதும் இல்லாத நிறைவுடைய பொருள் வேறொன்றும் இல்லாமையை எதிர்மறையால் உணர்த்தியது
  • உறவிலேன், உறவு யார் –  தமக்குத் துணைசெய்ய வல்லவர்கள் ஈசனற்றி  பிறர் இல்லை என்பதை வலியுறுத்தியது
  • ஒரு பிழை – பிறப்பெடுத்தது
  • ஒரு பிழை பொறுத்தால் இழிவுண்டே – இறைவரோடு உண்டான உரிமையில் உரைத்தது

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – சித்திரை – 13 (2021)


பாடல்

செய்யநின் கமல பாதஞ் சேருமா தேவர் தேவே
மையணி கண்டத் தானே மான்மறி மழுவொன் றேந்தும்
சைவனே சால ஞானங் கற்றறி விலாத நாயேன்
ஐயனே யால வாயில் அப்பனே யருள்செ யாயே

நான்காம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – ஈசனின் திருமேனிப் பெருமைகளை உரைத்து அவனின் தாமரை போன்ற பாதங்களை அருளவேண்டும் என விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

தேவர்கள் அனைவருக்கும் மேலான தேவனே! நஞ்சு உண்டதால் கண்டத்தில் நீல நிறம் பெற்று நீலகண்டவன் ஆனவனே! மான் கன்றினையும், மழுப்படையையும் ஏந்தி உள்ளவனாகிய சைவ சமயக்கடவுளே! ஞானத்தை முறையாகக் கற்றறியும் வாய்ப்பு இல்லாத அடியேனுடைய தலைவனே! ஆலவாயில் தலத்தில்உறையும் அப்பனே! உன்னுடைய சிவந்த தாமரை போன்ற  பாதங்களை அடியேன் சேரும்படி மிகவும் அருள் செய்வாயாக.

விளக்கஉரை

  • செய்ய – சிவந்த; செம்மையான
  • கமல பாதம் – தாமரைப்பூப்போன்ற திருவடி
  • சேரும் ஆ – இடை விடாது நினையுமாறு
  • மை – நீலவிடம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – சித்திரை – 11 (2021)


பாடல்

கள்ளிக் கவட்டிடைக் காலை நீட்டிக்
   கடைக்கொள்ளி வாங்கி மசித்து மையை
விள்ள எழுதி வெடுவெ டென்ன
   நக்கு வெருண்டு விலங்கு பார்த்துத்
துள்ளிச் சுடலைச் சுடுபி ணத்தீச்
   சுட்டிய முற்றும் சுளிந்து பூழ்தி
அள்ளி அவிக்கநின் றாடும் எங்கள்
   அப்ப னிடம்திரு ஆலங்காடே

பதினொன்றாம் திருமுறை – காரைக்காலம்மையார் – மூத்த திருப்பதிகம்

கருத்து – பேய்களின் செயல்களைக் கூறி அவ்வாறான இடத்தில் ஈசன் உறைகிறான் என்று கூறும் பாடல்.

பதவுரை

கள்ளி மரத்தின் கிளைகளுக்கு இடையில் காலை நீட்டி, எரிந்து முடிந்த கொள்ளிக் கட்டையை வாங்கி மசிய அரைத்து குழையாக்கி, அதை மசியாக கண்களில் எழுதி,  மசியானது கண்களில் இருந்து வேறுபடுமாறு தோற்றம் கொண்டு பிறர் நடுநடுங்குமாறு சிரித்து, மருட்சி அடைந்து, நேரே பாராமல் வலமாகவும், இடமாகவும் திரும்பித் திரும்பிப் பார்த்து  குறுக்கே நோக்கி, கோபம் கொண்டு குதித்து,சுடலை எனப்படும் சுடலையில் எரிந்து கொண்டிருக்கும் பிணத்தின் தீயானது சுடவும், சினக் குறிப்புக் கொண்டு மணலை அள்ளி அவிக்க, பேய்கள் நின்று ஆடுகின்ற எங்கள் அப்பன் தங்கியிருக்கும் இடம் திரு ஆலங்காடாகும்.

விளக்கஉரை

  • இறையின் மீது நாட்டம் அன்றி புவியின் மீது மனிதர்கள் ஆணவம் கொண்டு ஆடுதலை குறிக்கும் என்றும் கொள்ளலாம்.
  • கள்ளிக் கவடு – கள்ளி மரத்தின் கிளைகள்.
  • கடைக்கொள்ளி – எரிந்து முடிந்த கொள்ளிக் கட்டை.
  • மசித்தல் – மசிய அரைத்தல்.
  • விள்ள – கண்ணினின்றும் வேறு தோன்ற.
  • `வெடு, வெடு` –  சினக் குறிப்பு. நகுதல் கோபச் சிரிப்பாயிற்று.
  • சுளித்தல் – கோபித்தல்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – சித்திரை – 9 (2021)


பாடல்

உற்றாரை யான்வேண்டேன்
   ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரை யான்வேண்டேன்
   கற்பனவும் இனியமையும்
குற்றாலத் தமர்ந்துறையுங்
   கூத்தாஉன் குரைகழற்கே
கற்றாவின் மனம்போலக்
   கசிந்துருக வேண்டுவனே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்து – புறத்தில் ஏற்படும் பற்றுக்களை விரும்பாமல் ஈசனுடைய திருவடி மீது மட்டும் பற்றுதலை கொள்ள வேண்டும் என விண்ணப்பிக்கும்  பாடல்.

பதவுரை

திருக்குற்றாலத்தில் விரும்பி வீற்றிருக்கின்ற, கூத்தப் பெருமானே! சுற்றத்தாரை யான் வேண்ட மாட்டேன்; வாழ்வதற்காக  ஊரை யான் வேண்ட மாட்டேன்; புகழ்ச்சியினை யான் வேண்ட மாட்டேன்; நூல்களைக் கற்று அந்த நெறிபடி நில்லாத கற்றவரை யான் வேண்ட மாட்டேன்; உனது ஒலிக்கின்ற கழலையுடைய திருவடி மீது கன்றையுடைய பசுவினது மனத்தைப் போல  பற்றுக் கொண்டு கனிந்து உருகுவதை யான் உன்பால் விரும்புகின்றேன்

விளக்கஉரை

  • வேண்டேன் – விரும்பமாட்டேன்
  • கற்றார் – கல்வியைமட்டும் கற்று, அதன் பயனை அறியாதவர். கற்பன – கற்கத் தகும் நூல்கள்
  • குரை கழல் – ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடி
  • கற்றா – கன்று ஆ; கன்றையுடைய பசு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – சித்திரை – 7 (2021)


பாடல்

பதிதா னிடுகா டுபைங்கொன் றைதொங்கல்
மதிதா னதுசூ டியமைந் தனுந்தான்
விதிதான் வினைதான் விழுப்பம் பயக்கும்
நெதிதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே

இரண்டாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்து – நெல்லிக்கா எனும் திருத்தலத்தில் எழுந்தருளிய இறைவனின் சிறப்புகளையும், திருமேனியில் இடம் பெறும் பொருள்களின் சிறப்புகளையும் கூறும் பாடல்.

பதவுரை

நெல்லிக்கா எனும் திருத்தலத்தில் எழுந்தருளிய இறைவன் இடுகாட்டை வாழும் இடமாகவும், கொன்றைமலரைத் தான் விரும்பும் மாலையாகவும் கொண்டவனாகவும், சந்திரனை சூடிய வீரனாக இருப்பவனாகவும், விதியாகவும் வினையாகவும் மேன்மையளிக்கும் நிதியாகவும் விளங்குபவன் ஆவான்.

விளக்கஉரை

  • தொங்கல் – (மாலை) கொன்றை
  • மதி – பிறை
  • மைந்தன் – வலியன். வீரன். விதியும் வினையும் நிதியும் எல்லாம் அவனன்றி வேறில்லை எனும் பொருள் பற்றியது
  • விழுப்பம் – மேன்மை.
  • விழுப்பம் பயக்கும் நெதி – திருவருளே தனக்கு மேலே ஒன்றில்லாச் செல்வம் என்பது பற்றியது

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – சித்திரை – 5 (2021)


பாடல்

குருந்தவன் குருகவன் கூர்மையவன்
பெருந்தகை பெண்ணவ னாணுமவன்
கருந்தட மலர்க்கண்ணி காதல்செய்யும்
மருந்தவன் வளநகர் மாற்பேறே

முதல் திருமுறை  – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்து – சிவனின் பெருமைகளை உரைத்து அவன் மாற்பேறு திருத்தலத்தில் உறைகின்றான் எனக் கூறும் பாடல்.

பதவுரை

குருந்த மரத்தடியில் இருந்து குருவாக அருளுபவனும், குருகவன் எனும் வைர வகைகளில் ஒன்றாக இருப்பதைப் போன்றவனும், கூர்மை உடையவனாக இருப்பவனும், பண்புகளில் மேன்மை உடையதான பெண், ஆண் எனும் வடிவங்களாக விளங்குபவனும், தடாகத்தில் பூக்கும் கருநீல மலர் போன்ற கண்களை உடைய உமை அம்மையால் விரும்பப்படுபவனும், துன்பம் கொள்ளூம் உயிர்களுக்கு மருந்தாக இருப்பவனும் ஆன சிவபெருமானது தலம் வளமை பொருந்திய மாற்பேறு ஆகும்.

விளக்கஉரை

  • குருந்தவன் – குருத்தாக, தளிராக, மொட்டு, காய் ஆதியனவாக விளங்குபவன் எனும் பொருளில் ஏறக்குறைய அனைத்து இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. அனைத்து நிலைகளிலும் உடன் இருப்பவன் எனும் பொருள்பற்றி விளக்கினாலும் குருவாக இருந்து அருளுபவன் என்பது பொருந்துவதால் இக்கருத்து விலக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • மருந்து – அமுதம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – சித்திரை – 4 (2021)


பாடல்

ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
அனலாடி ஆரமுதே யென்றேன் நானே
கூரார் மழுவாட் படையொன் றேந்திக்
குறட்பூதப் பல்படையா யென்றேன் நானே
பேரா யிரமுடையா யென்றேன் நானே
பிறைசூடும் பிஞ்ஞகனே யென்றேன் நானே
ஆரா அமுதேயென் ஐயா றன்னே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே

ஆறாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – ஐயாற்றில் உறையும் சிவனின் பெருமைகளை உரைத்து மனம் உருகி நிற்கின்றேன் என்பதை கூறும் பாடல்.

பதவுரை

பகைவருடைய முப்புரங்களை கண்களால் நோக்கி அதனை அழித்தவனே!  ஊழித்தீயிலும், சுடுகாட்டிலும் எழும் தீயில் கூத்து நிகழ்த்துபவனே! எளிதில் பெற இயலா அரிய அமுதமே!  கூர்மையான  மழுப்படையை ஏந்துபவனே! உயரம் குறைவான பல பூதங்களைப் படையாக உடையவனே! அழைக்க உகந்த ஆயிரம் திரு நாமங்களை உடையவனே! சந்திரனை பிறையாக சூடும் தலைக்கோலம் உடையவனே! ஆரா அமுதமா இருக்கும் ஐயாற்று பெருமானே  என்று பலகாலமாக வாய்விட்டு அழைத்து மனம் உருகி  நிற்கின்றேன்.

விளக்கஉரை

  • ஆரார் – பொருந்தார்; பகைவர்
  • குறள் – குறுகிய வடிவம்
  • ஆயிரம் –  அளவின்மை
  • அரற்றி – வாய்விட்டு அழைத்து
  • நைகின்றேன் – மனம் உருகி நிற்கின்றேன்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – சித்திரை – 1 (2021)


பாடல்

கங்கை வார்சடை யாய்கண நாதா
கால காலனே காமனுக் கனலே
பொங்கு மாகடல் விடமிடற் றானே
பூத நாதனே புண்ணியா புனிதா
செங்கண் மால்விடை யாய்தெளி தேனே
தீர்த்த னேதிரு வாவடு துறையுள்
அங்க ணாஎனை அஞ்சல்என் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

கருத்து – ஈசனின் செயற்கரிய செயல்களை உரைத்து தன்னையும் காக்க வேண்டும் என விண்ணப்பிக்கும்  பாடல்.

பதவுரை

கங்கை நதியினை தாங்கிய நீண்ட சடையை உடையவனே, பூத கணங்களுக்குத் தலைவனே,  காலன் ஆகிய எமனுக்கு காலனே, காமன் உடலினை நெருப்பாகி அதனை எரித்தவனே,  அலை மிகுந்து தோன்றும் பெரிய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு அதை கண்டத்தில் உடையவனே,  உயிர்களுக்கு முதல்வனாக இருப்பவனே, அற வடிவமாக இருப்பவனே, மாசு படாமல் எக்காலத்திலும் தூயோனாக  இருப்பவனே, செம்மையான கண்களை உடைய திருமாலாகிய இடபத்தை ஊர்தியாக உடையவனே, தெளிந்த தேன் போன்றவனே, இறைவனே, தேவர்களிடத்தில் ஆண் சிங்கமாய் உள்ளவனே, திருவாவடுதுறையில் எழுந்து அருளியிருக்கின்ற கருணையாளனே, அடியேனுக்கு உன்னை அன்றி உறவாக யாவர் உளர்! என்னை ‘அஞ்சேல்’ என்று சொல்லித் தேற்றி எனக்கு அருள் செய்வாயாக.

விளக்கஉரை

  • ‘அமரர்கட்குத் தலைவனே’ என அருளாது ‘அமரர்கள் ஏறே’  என , உருவகித்து அருளியது முதன்மையின் சிறப்பு பற்றியது

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – மாசி – 18 (2021)


பாடல்

கழுதை குங்குமந் தான்சுமந் தெய்த்தாற்
   கைப்பர் பாழ்புக மற்றது போலப்
பழுது நானுழன் றுள்தடு மாறிப்
   படுசு ழித்தலைப் பட்டனன் எந்தாய்
அழுது நீயிருந் தென்செய்தி மனனே
   அங்க ணாஅர னேயென மாட்டா
இழுதை யேனுக்கொர் உய்வகை யருளாய்
   இடைம ருதுறை எந்தைபி ரானே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – மெய்யறிவு இல்லாமல் உலகில் உழலும் தனக்கு மனம் இரங்கி உய்யும் வகையினை அருள வேண்டும் என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

திருவிடைமருதூரில் எழுந்து அருளுகின்ற எம் குலதேவனே,  கழுதையானது குங்குமத்தினை பொதி போல் சுமந்து வருந்தினால் சிறப்பு எதுவும் இல்லை எனக் கருதி, அனைவரும் நகைப்பர்; அதுபோல  அடியேன் உனக்கான தொண்டினை மேற்கொண்டு, அதன் உண்மையானப் பயனைப் பெறாமல் மனம் தடுமாறி, வெள்ளத்தில் உண்டாகும் சுழியிடை அகப்பட்டவன் போல  இந்த உலக வாழ்க்கையில் வருத்தம் கொண்டவன் ஆயினேன்; (அவ்வாறே மற்றவர்கள் எள்ளி நகைப்பர் என்பது மறை பொருள்) ‘மனமே, நீ நம் இறைவனுக்கு உண்மையானத் தொண்டினை செய்யாது (புறப்பொருள்கள் குறித்து) கவலை கொண்டிருந்து என்ன பெறப் போகின்றாய்‘ என்று நெஞ்சிற்கு அறிவுறுக்கவும்,  ‘அழகிய கண்களை உடைய சிவனே,  எங்களைக் காப்பவனே‘ என்று உன்னை அன்பினால் துதிக்கவும் மாட்டாத அறிவில்லாதவனாகிய எனக்கு, நீ  மனம் இரங்கி, உய்யும் நெறி ஒன்றை வழங்கி அருளாய்.

விளக்கஉரை

  • நகைப்பர் -> கைப்பர்
  • அங்கணன் – கண்ணழகு உடையவன், கருணையான நோக்குடையவன், கடவுள்; சிவன்; திருமால்; அருகன்
  • இழுதை – பேய், அறிவின்மை, அறிவிலி, பொய்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – தை – 14 (2021)


பாடல்

குறைவிலோம் கொடு மானுட வாழ்க்கையால்
கறைநிலாவிய கண்டன் எண்தோளினன்
மறைவலான் மயிலாடுதுறை யுறை
இறைவன் நீள்கழல் ஏத்தியிருக்கிலே

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து – மயிலாடுதுறை தலத்தில் உறையும் சிவனின் பெருமைகளை உரைத்து அவர்தம் திருவடிகளைக் கொண்டவர்களுக்கு மானிட வாழ்வில் துயரம் இல்லை என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

உயிர்கள் பிறவி நீக்கம் பெறுவதன் பொருட்டு, கரை படிந்தது ஒத்த கண்டத்தை கொண்டதால் திருநீலகண்டன் என்னும் பெயர் பெற்றவனும், எட்டுத் தோள்களினை உடையவனும், வேதத்தின் வடிவமாகவும், அதன் பொருளாக இருக்க வல்லவனுமகிய மயிலாடுதுறை தலத்தில் உறையும் இறைவனின் நீண்ட கழல்களை ஏந்தி இருத்தலால் கொடுமை உடையதான மானுட வாழ்வினில் வருவதான குறைவு இல்லாதவர்களாக ஆவோம்.

விளக்கஉரை

  • கொடு – தீயது. மீண்டும் பிறவிக்து ஏதுவான வினை .
  • நீள் கழல் – அழிவில்லாத திருவடிகள்
  • எண்தோளினன் – எட்டுத் திக்குகளையும் ஆடையாக அணிந்தவன் என்றும், எண் குணங்களை முன்வைத்து எண் தோளினன் என்றும் கூறலாம்.
  • திருவடிகளை ஏத்தியிருக்கும் பிறவி வாய்க்குமானால் அந்த மானுட வாழ்க்கையில் வினைகள் என்பது இல்லை.

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!