
பாடல்
பூரணி மனோன்மணி தயாபரி பராபரி
புராதனி தராதரமெலாம்
பொற்புடன் அளித்த சிவசக்தி இமவானுதவு
புத்ரி மகமாயி என்றே
சீரணி தமிழ்க்கவிதை பாடி முறையிடுவதுன்
செவிதனிற் கேறவிலையோ?
தேஹி என்றாலுனக் கீயவழி இல்லையோ
தீனரக்ஷகி அல்லையோ?
ஆருலகினிற் பெற்ற தாயன்றி மக்கள்தமை
ஆதரிப்பவர் சொல்லுவாய் ?
அன்னையே இன்னமும் பராமுகம் பண்ணாமல்
அடியனை ரக்ஷி கண்டாய்
மேருவை வளைத்தவனிடத்தில் வளரமுதமே
விரிபொழிற் திருமயிலை வாழ்
விரைமலர்க்குழல் வல்லி மறைமலர்ப்பத வல்லி
விமலி கற்பகவல்லியே
திருமயிலை கற்பகாம்பிகை பதிகம் – தாச்சி அருணாச்சல முதலியார்
கருத்து – அன்னையை பல பெயர்களில் அழைத்தும் தன்குறைகளை உரைத்தும் தன்னைக் காக்கவேண்டும் என உரைக்கும் பாடல்.
பதவுரை
பூரணியாகவும், மனோன்மணியாகவும், அருள் செய்தவற்கு காரணமாகவும் இருப்பவளே, பரம்பொருளாக இருப்பவளே, காலத்திற்கு முற்பட்டு இருப்பவளே, விரும்பம் கொள்பவர்களின் நிலையினைப் பாராமல் அவர்கள் விரும்பும் அனைத்தையும் அளக்க வல்ல சிவசக்தியாக இருப்பவளே, இமவான் புத்ரியாக இருப்பவளே, மகமாயி என்று சிறப்புடையதான தமிழில் பாக்களாக எழுதி பாடி முறையிடுவது உந்தன் செவிதனில் விழவில்லையோ? வறுமை, கொடுமை, நோய் ஆகியவை கொண்டவர்களாகிய தீனர்களை காப்பவள் என்றாலும் தேஹி என்று யாசகம் செய்வதன் பொருளுட்டு யான் அழைத்தபோதும் உனக்கு அருள வழி இல்லையோ? மேருமலையை வளைத்தவன் ஆகிய சிவபெருமான் இடத்தில் வளரும் அமுதமே, மணம் பொருந்திய மலர்களை தனது கூந்தலில் அணிந்து வேதங்களால் தாங்கப் பெறும் திருவடிகளை உடையவளே, சிவபெருமானுக்கு துணையாக இருக்கும் கற்பகவல்லியே! இந்த பரந்து விரிந்த உலகில் தன் தாயைத் தவிர மக்களை ஆதரித்து காப்பவர் சொல்லுவாயாக. ஆகவே அன்னையே அலட்சியமும் புறக்கணிப்பும் செய்யாமல் அடியேனை காப்பாயாக
விளக்க உரை
- தீனம் – வறுமை, கொடுமை, குரூரம், நோய்