எங்கும் விரிந்து எதையும் தாங்கும் வலிமை பெற்றவனே, இமைத்தல் எனும் தொழில் இல்லா தேவர்கள் சதா தியானம் செய்யும் பிரவண சொரூபமானவனே, விண்ணுலகத்தைக் காப்பவனே, தன் முயற்சியில் கிடைப்பதற்கு அரிதாகிய மெய்யுணர்வாகிய சிவஞானத்தை, அடியவன் ஆகிய எனக்கு, நீ வந்து உரியதாகும்படி எனக்கு உபதேசம் செய்த பெருமையை என்னவென்று சொல்வது?
சாம வேதத்தின் மகாவாக்கிய தத்துவம் ‘நீ அதுவாக இருக்கின்றாய்’ . இதுவே தொந்தத்தசி என்பது மேலே சொல்லப்பட்டது. இது மாயைக்கு உட்பட்ட குற்றங்கள் நீங்கப்பெற்று சீவன் சிவமாதலையே குறிப்பதாகும். நீ, அது ஆகிய பேதம் உடைய இரண்டுமே நீக்கப்படாது நிலை பெற்று நின்று, ஒன்றாய் சேருகின்ற இயைபினால் ஒன்றேயாகின்றன. இது மகாவாக்கியம் வேதாந்தம் . எனவே, இதனை, சித்தாந்த மகா வாக்கியம்` என்றும் வேதாந்த மகாவாக்கியந்தான்` என்றும் சொல்லலாம்.
விளக்க உரை
சித்தாந்த மகாவாக்கியமாகிய `சிவத்துவமசி` என்பது திருவைந்தெழுத்தே ஆகும். இதும் இப்பொருளை தரும்
வெப்பொடு விரவி ஓர் வினை வரினும், அப்பா! உன் அடி அலால் அரற்றாது, என் நா; ஒப்பு உடை ஒருவனை உரு அழிய அப்படி அழல் எழ விழித்தவனே! இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!
தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்
கருத்து உரை
திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! அழகில் தனக்கு நிகராக தன்னைத் தவிர ஒருவரையும் சொல்ல முடியாத மன்மதனை, நெற்றிக் கண்ணைத் திறந்து, நெருப்புத் தோன்றச் செய்து விழியால் அவனுடைய வடிவம் அழியுமாறு செய்தவனே! கொடிய வினைகளால் துன்பம் நெருப்பை போல வந்து தாக்கினாலும், அனைத்து உயிர்களுக்கும் தந்தையான உன் திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் எனது நா வேறொன்றையும் கூறாது. இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும்முறை இதுவோ? உலக நன்மைக்காகத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனது இன்னருளுக்கு அழகாகுமா?
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
சற்காரியவாதம் என்பது என்ன? இல்லாதது தோன்றாது. உள்ளது அழியாதது எனும் கொள்கை
சூரியனைப் போல் உருவமின்றி, அரூபம் இன்றி, சாத்விகம், இராட்சதம், மற்றும் தாமச குணம் இன்றி, மனிதப் பிறவியில் ஆடவர்களுக்கு தோன்றும் கடைநிலை கேட்டைக் குறிக்கும் குணங்களாகிய அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி ஆகியவை மட்டும் இல்லாமல், ஆணவ மலம், மாயை மலம், கண்ம மலம் ஆகிய மலங்களும் இல்லாமல், உயிரானது உடலில் எவரும் அறியாமல் அடங்கி இருப்பது போல், மௌனமாகிய மோன வடிவத்தில் எல்லா உயிரிலும் உயிராகி நின்று முதுமை இல்லாமல், இளமை இல்லாமல், அதன் காரணங்களாகிய பிறப்பு இறப்பு இல்லாமல், ஞான உருவாக எங்கும் நிறைந்து நிற்கும் நாதனின் உருவம் இவ்வாறானது என்று கூறுவதற்கு இயலாதவாறு இருக்கிறது.
விளக்க உரை
அகத்தியர், சிவ லட்சணம் பற்றி கூறும் பாடல்
இனிமையும், மெய்ம்மையும் முதலாய சொற்குணங்கள் எனும் திருக்குறள் விளக்கம் இவ்விடம் பொருந்தாது, ஏனெனில் முதலில் சூரியனின் இரண்டு ரூபங்கள் விளக்கம் தரப்பட்டுள்ளன. ஆனிய மலம் நான்கு என்று எண்ணிக்கை நான்காக விளக்கப்பட்டுள்ளதால் சொற்குணங்கள் மூன்று என்று எண்ணிக்கை அடிப்படையில் பொருள் விளக்கப்பட்டுள்ளது.
எண்குணங்கள் ஆகிய தன் வயம் உடைமை, தூய உடம்பு உடைமை, இயற்கை உணர்வு உடைமை, முற்றுணர்வு உடைமை, இயல்பாகவே பாசமின்மை, பேரருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை ஆகியவை இவற்றில் பொருந்தி நிற்பது அறிக.
அருணகிரிநாதர் அருளிய ‘தேன் என்று பாகு என்று உவமிக்க ஒணா’ தொடங்கும் கந்தர் அலங்கார பாடலில் மெய்ப்பொருள் பற்றிய விளக்கத்தில் ஆகாயம் அன்று, காற்று அன்று, நெருப்பு அன்று, தண்ணீர் அன்று, மண்ணும் அன்று, தான் அன்று, நான் அன்று, உருவமில்லாதது அன்று, உருவத்தை உடையதும் அன்று. ஒன்றும் அற்ற ஒன்று எனும் பொருள் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
சைவ சித்தாந்தக் கொள்கைகள் எதன் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளன? சற்காரியவாதம்
(இச்சொல் சித்தர்கள் பாடலில் இடம் பெற்று இருப்பதால் பாடலை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)
என்னை உடையவனாக கொண்டவனே, நமக்கு இறைவன் அருள் புரியாது இருக்க மாட்டான் என்று எண்ணி உனது திருநாமமாகிய அஞ்செழுத்தைப் பல காலம் கூறி, அதன் காரணமாக கண்களில் நீர் பெருகி, வாயால் குழறிய வார்த்தையால் வாழ்த்தி, உடலால் வணங்கி, மனத்தினாலே எண்ணிக் கனிந்து, பலகாலும் உனது உருவத்தைத் தியானித்து பொற்சபை என்றே துதித்து தளர்வுற்றிருக்கும் உயிராகிய எனக்கு இரங்கி அருள்புரிவாயாக.
விளக்க உரை
இறைவனை வழிபடும் முறையும், இறை அனுபவமும் குறித்தது இப்பாடல்
நாமம் பிதற்றுதல், கண்கள் நீர் பெருதல், வாயால் குழறிறிய வார்த்தையால் வாழ்த்துதல் – இறை அனுபவங்கள்
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
உமாபதி சிவம் குறித்த ஆறு அநாதிப் பொருள்கள் எவை? இறை, உயிர், ஆணவம், மூலகன்மம்,சுத்த மாயை, அசுத்த மாயை
நீள நினைந்தடியேன் உனை நித்தலுங் கைதொழுவேன் வாளன கண்மடவா ளவள் வாடி வருந்தாமே கோளிலி எம்பெருமான் குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன் ஆளிலை எம்பெருமான் அவை அட்டித் தரப்பணியே.
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
கருத்து உரை
திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கும் எம் பெருமானே, வாள் போன்ற கண்களை உடைய மடவாளாகிய என் இல்லாளுடன் வாழ்க்கையை நடத்த இயலாமை கருதி மெலிந்து வருந்தாதபடி குண்டையூரிலே குண்டையூர் கிழார் மூலமாகத் யான் நெல்லை பெற்றேன் . அவைகளை அவளிடத்தில் சேர்ப்பிக்க எனக்கு ஆளில்லை; அடியேன், எப்பொழுதும் உன்னையே நினைத்து நாள்தோறும் வணங்கும் தொழிலை உடையவனானதால் வேறு யாரை வேண்டுவேன்! அவைகளை அங்குச் சேர்ப்பித்து உதவ, நீ எவருக்கேனும் கட்டளையிட்டு அருளவேண்டும்!
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
அநாதிப் பொருள்களை ஆறு என கணக்கிட்டவர் உமாபதி சிவம்
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – மலங்குதல்
பொருள்
சாய்ந்துவிழுதல்
மருளுதல்
பரவசமாதல்
மாறுபடுதல்
நிலையழிதல்
வருந்துதல்
தாக்கப்படுதல்
சந்தேகமடைதல்
தயங்குதல்
கலத்தல்
நெருங்குதல்
கைகலத்தல்
அறிவு கெடுதல்
கலக்கமுறுதல்
உணர்ச்சியிழத்தல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
மலங்கி னேன்கண்ணின் நீரை மாற்றி மலங்கெ டுத்தபெ ருந்துறை விலங்கி னேன்வினைக் கேட னேன்இனி மேல்வி ளைவ தறிந்திலேன் இலங்கு கின்றநின் சேவ டிகள் இரண்டும் வைப்பிட மின்றியே கலங்கி னேன்கலங் காமலே வந்து காட்டி னாய்கழுக் குன்றிலே.
தேவாரம் – 8ம் திருமுறை – மாணிக்கவாசகர்
கருத்து உரை
எனது கண்ணீரை துடைத்து என் மலத்தை அழித்து ஆட்கொண்ட திருப்பெருந்துறைப் பெருமானே! வினைகளின் காரணமாக நான் உன்னை விட்டு நீங்கினேன்; அதனால் விளையும் காரியத்தை அறிந்திருக்கவில்லை; உன் திருவடிகளை வைக்கத் தூய்மையான இடம் இல்லாமல் கலங்கினேன்; நான் கலங்காதபடி நீ திருக்கழுக்குன்றிலே எழுந்தருளி, உன் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய்; என்னே உன் பெருங்கருணை!
அயன் முதற்கொண்டு ஐவருடல் உயிருஞ் சத்தி ஆதியந்த சிவனாரும் உயிருக்குயிராய் நின்று தயவுபெற வெடுத்துவுயிர் ஆண்பெண் கோடிச் சங்கையில்லா மூப்பிளமை சாக்காடன்றி ஐயம்பெறவே வொருகோடி காலம் வாழ்ந்து தீர்க்கமுடன் இருக்கையிலே மைந்தாகேளு நயம்பெறவே சிவனுமையை நோக்கி மைந்தா நமை வணங்க அனுக்கிரகஞ் செய் என்றாரே
அகத்தியர் சௌமிய சாகரம்
கருத்து உரை
உடல் என்பது பஞ்ச கர்த்தாக்கள் எனப்படும் சதாசிவன், மகேஸ்வரன், ருத்திரன், விஷ்ணு, பிரம்மா என்ற ஐந்து தெய்வங்களின் கலவை; அதனுள் உறையும் உயிர் சக்தி; அந்த உயிருக்கு உயிராக இருப்பது சிவன்; இவ்வாறு உடலும் உயிருமான வஸ்து கணக்கற்ற கோடி ஆண்டுகள் மாறுபாடு இல்லாதவாறும், மூப்பு, இளமை மற்றும் சாக்காடு இன்றியும் இருந்தது; அப்போது மேன்மை பெறுவதற்காக சிவ சக்தியிடம் நமை வணங்க அனுகிரகம் செய் என்று கூறினார் என்றும் இப்பாடலில் சொல்கிறார் அகத்தியர்.
விளக்க உரை
நமது உடலில் இந்த அட்சரங்களின் இருப்பிடம் – ந எனும் எழுத்து இரு கால்களையும், ம எனும் எழுத்து வயிற்றினையும் குறிக்கும்.
பஞ்சாட்சர மந்திரத்தில் ந எனும் எழுத்து பிரம்மனையும், ம எனும் எழுத்து விஷ்ணுவையும் குறிப்பதாகும். அதோடு பிரம்மன் விழிப்புநிலையையும், விஷ்ணு கனவுநிலையையும் குறிக்கின்றனர். இதை கடக்க வேணும் என்பதாகவும் பொருள் கொள்ளலாம். (தூங்காமல் தூங்கி கிடப்பது எக்காலம் எனும் வரிகள் இங்கு சிந்திக்கத் தக்கவை.
இச் சொல் நம்மை சிவ சக்தியை வணங்க அருள் செய் என்று கூறுவதாகவும் நம எனப்படும் மாயையை போற்றச் செய் என்று கூறுவதாகவும் பொருள் கொள்வார் உளர்.
அஃதாவது மாயையை வழிபடுவது என்பது அதனை செயலாற்ற அனுமதித்து அசுத்த மாயையை செயல்படச் செய்து உலகை இயங்கச் செய்யவேண்டும் என்றும் பொருள் கொள்வார் உளர்.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
அநாதி என்பது என்ன? தோற்றம் என்பதை கண்டறியா முடியாதது
(இச்சொல் சித்தர்கள் பாடலில் இடம் பெற்று இருப்பதால் பாடலை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)
சிவனது திருவடிகளையே சேர்ந்தேன்; எனது உள்ளம் உயர்நிலையை அடைந்தது. அதனால் யான் இனி வர கூடியதாக இருக்கும் பிறவி யாதொன்றும் இல்லாமல் ஒழித்துவிட்டேன். காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம் எனும் அகப்பகை ஆறினையும் விலக்கி அடுத்த நிலைக்கு செல்லத் துணிந்தேன். உடம்பின் இழிவை உணராது பற்றியிருந்த நிலையைவிட்டும் அதன் இழிவை அறிந்தும் இனிப் பிறரிடம் சென்று இரத்தலைச் செய்யேன். எனக்கு உரியதானது என்றாலும், பிறராலும் மதிக்கப்பட்ட இந்த உடலாகிய இல்லத்தையும் இகழ்ந்து நீங்கினேன். குற்றங்களையே விளைவிக்கின்ற பஞ்சேந்திரியங்களாகிய யானைகளை அதட்டி அடக்கினேன். ஆகவே, யான் இப்பொழுது மயக்கங்கள் யாவும் நீங்கித் தெளிவடைந்தவனாகி விட்டேன்.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
பதி, பசு, பாசம் என்பதை எவ்வாறு தமிழில் குறிக்கலாம்? இறை, உயிர், தளை
திரிபுரங்கள் எரியுமாறு செய்தவனும், வளைந்த வில்லை உடையவனும், மரவுரியையும் புலித்தோலையும் இடையில் அணிந்தவனும், வேண்டுகோளுக்கு இணங்க பாம்பினை அணிந்தவனும், யாசித்து உண்ண விரும்புபவனும், இரவில் தீயில் நின்று ஆடுபவனும் ஆகிய இறைவனது இடம் `திருவலம்புரம்` என்னும் தலமே.
விளக்க உரை
‘அரவுரி நிரந்தயல் இரந்துண விரும்பிநின்’ என்று பாடலிலும் ‘பாம்பின் தோல் பொருந்தப்பட்டவனும்’ பல இணையபதிப்புகளில் காணப்படுகிறது. ‘அரவுரி யிரந்தவன்’ என்றே மூலத்தில் காணப்படுவதால் விளக்கம் மூலத்தின் பொருட்டே தரப்பட்டுள்ளது.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
சைவ சித்தாந்தத்தின் மூன்று உட்பொருள்கள் பதி, பசு, பாசம்
தண்ணளிக்கு என்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார் மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் மதி வானவர் தம் விண்ணளிக்கும் செல்வமும் அழியா முக்தி வீடும் அன்றோ பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே
அபிராமி அந்தாதி
கருத்து உரை
இசையின் அடைப்படையாகிய சொற்களைக் கூறும் நறுமணம் வீசும் ஈசனின் தோழியான பைங்கிளியே அபிராமி அன்னையே, உன்னுடைய குளிர்ச்சி பொருந்திய திருவருளை பெறுவதற்காக மிகுந்த முயற்சியுடன் பல கோடி தவங்கள் செயவார்கள்; அவர்கள் இந்த மண்ணுலகம் கொடுக்கும் செல்வங்களை மட்டுமா பெறுவார்? வானவர்கள் விண்ணுலகம் தன்னில் வாழ்ந்து அனுபவிக்கும் செல்வமும், என்றும் அழியாத இன்பம் தரும் முக்தி எனும் வீடு பேறும் பெறுவார் அன்றோ!
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
சித்தர் சிவப்பிரகாசரின் மாணவர் யார்? நமச்சியாய மூர்த்திகள் எனும் திருவாடுதுறை ஆதீன ஸ்தாபகர்.
முக்திக்கு உரித்தான சிவயோகங்களை முயல்பவர்களுக்கு அந்த பயனைக் கூட்டுவிக்கும் தேவியும், உலகுகளை உடைமையாக உடையவளுமாகிய சிவகாம வல்லி என்னும் உமாதேவியுடன் செம்பொன்னால் வேயப்பட்ட மணியொளிரும் அம்பலத்தின்கண் அறிய இயலா புதியதொரு யோக வகையில் எய்தும் காட்சி முடிவில் விளங்குவதாகிய நின்னுடைய திருஉருவை நாயினும் கடைப்பட்ட யான் நினைக்கிறபோது எனக்கே மனமும், கண் முதலிய இந்திரியங்களும் இன்பமாகின்றன என்றால், உண்மை ஞானமும் பெரிய நற்குணமும் கொண்ட தவயோகியர் காட்சிக்குத் தோன்றிய ஞானத் திருவுரு நலத்தை வாயால் எவ்வாறு உரைக்க இயலும்?
விளக்க உரை
‘நவயோகம் நந்தி நமக்களித் தானே’ எனும் திருமந்திரப்பாடல் இங்கு சிந்திக்கத் தக்கது
பவயோக இந்தியம் (இந்திரியம்) – பிறவிப் பிணிக்கு கண் முதலியவை வாயில்கள்
“மெய்யறிவில் பழுத்த பெருங்குணத்துத் தவயோகர்’ – சிவஞான யோகிகளுக்கு உண்மை உணர்வும் உயர்குணங்களும் இன்றியமையாதவை என்பதை முன்னிட்டு
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
அருள்நமச்சிவாயரின் மாணவர் யார்? சித்தர் சிவப்பிரகாசர்
தன்னை அறிவித்து, எண்குணத்தானாகிய தன்னை அவன் போலவே செய்தானைப் பின்னை மறத்தல் குற்றம் எனும் உண்மையை அறியமாட்டாது குருடாய்க் கிடந்த உயிர்களுக்கு பலவகையிலும் அதனைத் தெரியப்படுத்தி அவ்வுண்மையை உணர்த்தி வினைகளை முன்னிறுத்தி எளியதாக இருக்கும் அந்த உயிரினை அத்தனை அரியதாக செய்து அளித்த பேருதவியை மறந்து போதல் பரிகாரம் செய்யமுடியா பெரும் குற்றம் ஆகும். முதல்வன், அவ்வுயிரினை அதன் தன்மை அறிந்து சுதந்திரமாக செயல்பட அனுமதி செய்தாலும் அது சுதந்திரமாகி விடாது; அவனுக்கு என்றும் அடிமையாகவே நிற்கும். எனவே குருவாகி வந்து நிற்கும் அருளிய பெரியோனை வழிபடுதலே சிற்றுயிர்க்கு சிறப்பு தருவதாகும்.
இதழ்களின் அளவினாலே தாழம்பூ பெரிதாக இருக்கிறது, மகிழம்பூ இதழ்களின் அளவினாலே சிறிதாயினும் மணத்திலே தாழம்பூவினை விடவும் இனிதாக இருக்கிறது, சமுத்திரம் பெரிதாக இருக்கிறது, ஆயினும் அதிலுள்ள நீர் (உடல்) கழுவுவதற்குத் தக்க நீராக ஆகாது; அதன் பக்கத்தே சிறிய மணல் குழியில் சுரக்கும் ஊற்றுநீர், குடிக்கத்தக்க நீராக ஆகும்; எனவே ஒருவரை உருவத்தினாலே சிறியவரென்று மதியாமல் இருக்கவேண்டா.
விளக்க உரை
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் எனும் பொருள் பற்றிய பாடல்
பொண்ணு பந்தனை இன்னும் வுடல ஓய்! விட்டு இருந்தா உசிரு என்னைக்கோ போயியிருக்குமே, அதாலதான் நீ இப்டி பேசற.
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
சிந்தனை செய்ய மனம் அமைத்தேன் செப்ப நா அமைத்தேன் வந்தனை செய்யத் தலை அமைத்தேன் கை தொழ அமைத்தேன் பந்தனை செய்வதற்கு அன்பமைத்தேன் மெய் அரும்ப வைத்தேன் வெந்த வெண்ணீறணி ஈசற்கு இவை யான் விதித்தனவே
பதினொன்றாம் திருமுறை – பொன் வண்ணத்து அந்தாதி – சேரமான் பெருமாள் நாயனார்
கருத்து உரை
சுட்ட வெண்ணீற்றை அணியும் எம்பெருமானாகிய ஈசன் எனக்கு நிர்ணயித்தவாறும் சிந்தனை செய்வதற்கு தக்கவாறும் மனத்தை அமைத்தேன். அவரை துதி செய்ய நாவை அமைத்தேன். எம்பெருமானாகிய ஈசனை வழிபாடு செய்யத் தலையை அமைத்தேன். அவரை வணங்குவதற்காக கையை அமைத்தேன். ஊள்ளத்தில் ஈசனை கட்டுவதற்கு அன்பை அமைத்தேன் மலர்ச்சி பெறுவதற்காக உடம்பை வைத்தேன்.
11 ம் திருமுறை – சேத்திர வெண்பா – ஐயாறுஅடிகள் காடவர் கோன் நாயனார்
கருத்து உரை
நடக்க இயலாமல் அமர்ந்து அமர்ந்து நடந்து, உடல் வளம் குறைந்து முதுகு வளைந்து ஒரு கையில் கோல் ஊன்றி, வலியால் நொந்து இருமி, மூச்சு விட ஏங்கி, வாந்தி அல்லது எச்சில் வாயில் இருந்து ஆறாகப் பெருகி வெளியே தள்ளும் முன்னும் ஐயாறு எனும் திருவையாறு ஊரில் உள்ள சிவனை அல்லது அந்த ஊரின் பெயரையே வாயால் அழை.
ஒரே மண்ணில் இருந்து திரித்து பல குடங்கள் செய்தலைப் போல, நீரினில் இருந்து வெளிப்படும் நீர்குமிழி போல, பூதங்களின் சொரூபங்களும், குணங்களும் ஒன்றாக கூடுகின்ற பொழுது அவைகளின் தன்மைக்கு ஏற்றவாறு அதன் புத்தி, குணங்கள் ஒத்து ஞானேந்திரியமாகிய பொறிபுலன்கள் இவ்வுருவில் வடிவு பெறும்.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
திருவியலூர் உய்ய வந்த தேவநாயனார் செய்த நூல் திருவுந்தியார்
‘ஒருவன் இறந்ததும் பிறந்ததாக நினைக்கப்படுகிறான். அப்படிப் பிறக்கையில் ஆத்மா எப்படி இருக்கும்? கர்ப்பம் ஆரம்பிக்கும் போதே ஆத்மா சேருகிறதா?
சிவன்
வேறு ஒர் ஆத்மா கர்ப்பத்தில் சேர மனிதன் இறக்கிறான். மற்றொரு ஆத்மா கர்பத்தில் சேர பூமியில் பிறக்கிறான். இவ்வுணமை எவருக்கும் தெரியாது. தெய்வத்தினால் அது உண்டாகும். பிராணிகளுக்கு தெரியாமல் இருப்பதற்காகவும், பெற்றவளுக்காகவும் அவ்விரண்டு ஆத்மாக்களும் சமமான கர்மம் செய்திருப்பதாலும் அவ்வாறு நடக்கிறது என்று நீ அறிந்துகொள். சிலர் நரகம் அனுபவித்தப்பின் ஜன்மத்தை விரும்பி அடைகின்றனர். பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் ஸாம்யாமிகை எனும் மாயை இருக்கிறது. (இறந்த சரீரத்தில் இருந்த ஆத்மாவை மற்றொரு சரீரத்தில் பிறக்கச் செய்வது).
உமை
கர்மங்களை அனுபவிக்கும் ஆத்மா என்பது இல்லை. இறப்பவை பிறப்பது இல்லை; செடியில் காய் உண்டாவது போல், கடலில் அலைகள் தோன்றுவது போல் உலகில் உருவங்கள் தோன்றுகின்றன. ஆகவே தவ, தானம் முதலிய கருமங்கள் பயனற்றவைகள், எனவே மறுபிறப்பு என்பது இல்லை என்று சிலர் கருதுகின்றனர். மற்றும் சிலர் தாம் பார்க்காதவற்றை சொல்லக் கேட்டும், தம் கண்களால் பார்க்க இயலா காரணத்தால் இவை எல்லாம் இல்லை என்றும் தீர்மானிக்கின்றனர். இது பற்றி சொல்லக் கடவீர்
சிவன்
நாஸ்திகர்கள் எதைச் சொல்கிறார்களோ அது உலகில் இல்லை. இதுதான் சாபத்தினால் கெட்டு சாஸ்திரங்களை பழிப்பவரின் மதம். சாஸ்திரத்தில் சொல்லப்படவை அனைத்தும் கண்ணால் காணப்பட்டவையே. மனிதர்கள் சாஸ்திரங்களை உறுதி என்று கொண்டு வைராக்கியம் எனும் கத்தியினால் விருப்பங்களை விலக்கி ஸ்வர்கத்திற்கு சென்று கொண்டு இருக்கிறார்கள். எனவே உலகில் சிரத்தையின் பலன் பரலோகத்தில் மிகவும் பெரியது. தம்முடைய நன்மையக் கருதுபவர்களுக்கு புத்தி, சிரத்தை, அடக்கம் ஆகியவை காரணங்கள். இம்மூன்று காரணங்களாலும் ஒருங்கே அமையப் பெற்றவர்களே சொர்க்கம்செல்கின்றனர். மற்றவர்கள் இக் காரணங்கள் ஒன்று சேராமையினால் நாத்திக எண்ணம் கொண்டவராக ஆகின்றனர். அனுட்டானம் இல்லாமல் இருத்தல், பிடிவாத குணம், சாத்திரத்தில் நம்பிக்கை இல்லாமல் பகைத்தல் போன்றவற்றால் அவர்களது அன்னம் யாராலும் உண்ணப்படாமல் தாழ்ந்த நிலைக்கு செல்கின்றனர். இந்த விஷயத்தில் மிக்க அறிவுள்ளவர்களும் மயங்குகின்றனர். எத்தனை வாதம் செய்தாலும் அதனை அறிய இயலாது. இது பிரம்மாவால் உண்டாக்கப்பட்ட மாயை. இது தேவர், அசுரர் போன்றவர்களால் கூட அறிய இயலாது எனில் மனிதர்கள் எம்மாத்திரம். மனதில் சிரத்தை கொண்ட மனிதர்களால் மட்டும் சாஸ்திரங்களில் சொல்லி இருப்பது உள்ளது என்று அறியப்படும். அதனால் நன்மை பெறலாம். தனக்கு நன்மையை விரும்புகிறவன் நாத்திகர்களின் வாக்கினைக் கேட்கும் பொழுது தனக்கு காது கேளாதவன் போல் நடந்து கொள்ளவேண்டும்.
உமை
‘எம தண்டனைகள் எப்படிப்பட்டவை? எம தூதர்கள் எப்படிப்பட்டவர்? இறந்த பிராணிகள் எம லோகத்திற்கு போது எவ்வாறு? யமனுடைய இருப்பிடம் எப்படிப்பட்டது? அவன் எவ்வாறு தண்டிக்கிறான்’ இவைகளை நான் கேட்க விரும்புகிறேன்.
சிவன்
எமனது இருப்பிடம் தென் திசையில் இருக்கிறது. அது அழகானதும், நிறைய பொருட்கள் நிரம்பியதுமாகவும், பித்ரு தேவதைகள், பிரேத கூட்டங்கள், யம தூதர்கள், கர்மங்களினால் அகப்பட்ட பல பிராணிக் கூடங்களால் நிரம்பியதுமாக இருக்கிறது.
உலக நன்மையில் ஊக்கமுள்ள எமன் பிராணிகளின் நல்வினை, தீயவினைகளை அறிந்து எப்பொழுதும் மற்றவர்களை தண்டித்துக் கொண்டு இருக்கிறான். அவன் அந்த இடத்தில் இருந்தே பிராணிக் கூட்டங்களை கொன்று கொண்டு இருக்கிறான். அவன் மாயா ரூபங்களை தேவர், அசுரர் போன்றவர்களால் கூட அறிய இயலாது எனில மனிதன் எவ்வாறு அறிவான்? கர்மம் முடிந்த உயிர்களை தூதர்கள் பிடித்துச் செல்கின்றனர். உலகினில் தாம் செய்யும் கர்மங்களால் உயிர்கள் உத்தமானவர்களாகவும், அதர்மமானவர்களாகவும், மத்தியமானவர்களாகவும் இருக்கின்றன.
தர்மத்தில் செல்பவர்கள் உத்தமர்கள். கர்மங்களால் மூன்று உலகங்களிலும் பிறப்பவர்கள் மத்தியமர். நரகம் போகிற பாதையில் சென்று பிறப்பவர்கள் அதர்மர்கள்.
ரமணீயம் – செடி கொடிகளால் நிரம்பி, அழகிய பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, தூபங்கள் காட்டப்பட்டு அப்பாதையில் செல்பவர்களின் மனதை கவர்வதாகவும், இனிமையான காற்று உள்ளதாகவும் இருக்கும்.
நிராபாதம் – ஒளி பொருந்தியதாக இருக்கும்.
துர்த்தர்சம் – இருள் நிரம்பியதாக, துர்வாசனைகளுடன், புழு பூச்சி நிறைந்ததாக கடக்க கடினமான பாதையாக இருக்கும்.
ரமணீயம் எனும் மார்கத்தில் செல்பவர்களை மட்டும் யமதூதர்கள் சிறந்த துணிகளை எடுத்து வந்து சுகமாக அழைத்துச் செல்வர்.
உமை
தேகம் விட்டதும், ஒன்றிலும் பற்றில்லாதும், காட்சிக்கு அகப்படாததுமான ஆத்மாவை எடுத்து எமன் அருகில் கொண்டு செல்வது எப்படி?
மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை நாலு நாழி உம்முளே நாடியே இருந்த பின் பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம் ஆலமுண்ட கண்டர் ஆணை அம்மை ஆணை உண்மையே.
சிவவாக்கியர்
கருத்து உரை
மூலநாடியான சுழுமுனையை பற்றி வாசியோகம் செய்து அங்கே தோன்றி எழும் சோதியில் உள்முகமாக மனம் பொருத்தி நான்கு நாழிகை நேரம் (தோராயமாக- 1.30 மணி நேரம்) தியானம் செய்து தவம் புரியும் யோக சாதகர்கள், அதன் பலனாய் என்றும் மாறாத இளமைத் தோற்றம் உடையவர்களாகி, அவர்களே பரப்பிரமமாய் ஆவார்கள் என ஆலகால விஷம் உண்ட நீலகண்டர் மீதும், அம்மையான உமையவள் மீது ஆணையிட்டு சத்தியம் செய்து சொல்கிறேன்.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
திருக்கடவூர் உய்ய வந்த தேவநாயனார் செய்த நூல் திருக்களிற்றுப்படியார்
(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதாலும், யோக மார்கத்துடன் சம்மந்தப்பட்டது என்பதாலும் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)