ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – ஆற்றுதல்
பொருள்
- வலியடைதல்
- கூடியதாதல்
- போதியதாதல்
- உய்தல்
- உவமையாதல்
- செய்தல்
- தேடுதல்
- உதவுதல்
- நடத்துதல்
- கூட்டுதல்
- சுமத்தல்
- பசிமுதலியன தணித்தல்
- துன்பம்முதலியன தணித்தல்
- சூடுதணித்தல்
- ஈரமுலர்த்துதல்
- நூல்முறுக்காற்றுதல்
- நீக்குதல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
பத்தில னேனும் பணிந்தில னேனும்உன்
உயர்ந்தபைங் கழல்காணப்
பித்தில னேனும் பிதற்றில னேனும்
பிறப்பறுப் பாய்எம் பெருமானே
முத்தனை யானே மணியனை யானே
முதல்வனே முறையோஎன்
றெத்தனை யானும் யான்தொடர்ந் துன்னை
இனிப்பிரிந் தாற்றேனே.
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
கருத்து உரை
எம்முடைய பெருமானே! முத்துப் போன்றவனே! மாணிக்கத்தைப் போன்றவனே! எம் தலைவனே! ‘இது முறையோ’ என்று எவ்வாறாயினும் நான் உன்னைப் பற்றித் தொடர்ந்து இனிமேல் பிரிந்திருக்கப் பொறுக்க இயலாதவன் ஆனேன். ஆதலின் உன் மேல் பற்று இல்லாதவனாயினும், உன்னை வணங்குதல் எனும் தொழிலை இல்லாதவனாயினும், உனது மேலான பசுமையான கழலை அணிந்த திருவடிகளைக் காண்பதற்கு விருப்பம் இல்லாதவனாயினும், உன்னைத் துதித்தலை செய்யாதவன் ஆயினும் என் பிறவியைப் போக்கி அருள்வாயாக.
விளக்க உரை
- ‘நின் திருவடிக்கு அன்பு இல்லாதவன் மண்ணில் ஏன் பிறந்தேன் கச்சியேகம்பனே!’ எனும் பட்டினத்தாரின் பாடல் வரிகள் இங்கு ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.