ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – பவயோகம்
பொருள்
- பிறப்புக்கு காரணமாகிய பேதைமை முதலிய குற்றங்களின் சேர்க்கை
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
சிவயோக சந்திதரும் தேவிஉல குடையாள்
சிவகாம வல்லியொடுஞ் செம்பொன்மணிப் பொதுவில்
நவயோக உருமுடிக்கண் விளங்கியநின் வடிவை
நாய்க்கடையேன் நான்நினைத்த நாள்எனக்கே மனமும்
பவயோக இந்தியமும் இன்பமய மான
படிஎன்றால் மெய்யறிவிற் பழுத்தபெருங் குணத்துத்
தவயோகர் கண்டவிடத் தவர்க்கிருந்த வண்ணம்
தன்னைஇந்த வண்ணம்என என்னை உரைப்பதுவே
திருவருட்பா – ஐந்தாம் திருமுறை – வள்ளலார்
கருத்து உரை
முக்திக்கு உரித்தான சிவயோகங்களை முயல்பவர்களுக்கு அந்த பயனைக் கூட்டுவிக்கும் தேவியும், உலகுகளை உடைமையாக உடையவளுமாகிய சிவகாம வல்லி என்னும் உமாதேவியுடன் செம்பொன்னால் வேயப்பட்ட மணியொளிரும் அம்பலத்தின்கண் அறிய இயலா புதியதொரு யோக வகையில் எய்தும் காட்சி முடிவில் விளங்குவதாகிய நின்னுடைய திருஉருவை நாயினும் கடைப்பட்ட யான் நினைக்கிறபோது எனக்கே மனமும், கண் முதலிய இந்திரியங்களும் இன்பமாகின்றன என்றால், உண்மை ஞானமும் பெரிய நற்குணமும் கொண்ட தவயோகியர் காட்சிக்குத் தோன்றிய ஞானத் திருவுரு நலத்தை வாயால் எவ்வாறு உரைக்க இயலும்?
விளக்க உரை
- ‘நவயோகம் நந்தி நமக்களித் தானே’ எனும் திருமந்திரப்பாடல் இங்கு சிந்திக்கத் தக்கது
- பவயோக இந்தியம் (இந்திரியம்) – பிறவிப் பிணிக்கு கண் முதலியவை வாயில்கள்
- “மெய்யறிவில் பழுத்த பெருங்குணத்துத் தவயோகர்’ – சிவஞான யோகிகளுக்கு உண்மை உணர்வும் உயர்குணங்களும் இன்றியமையாதவை என்பதை முன்னிட்டு
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
அருள்நமச்சிவாயரின் மாணவர் யார்?
சித்தர் சிவப்பிரகாசர்