ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – விரவுதல்
பொருள்
- பரப்பி வைத்தல்
- கலத்தல்
- அடைதல்
- ஒத்தல்
- பொருந்துதல்
- நட்புக்கொள்ளுதல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
வெப்பொடு விரவி ஓர் வினை வரினும்,
அப்பா! உன் அடி அலால் அரற்றாது, என் நா;
ஒப்பு உடை ஒருவனை உரு அழிய
அப்படி அழல் எழ விழித்தவனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!
தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்
கருத்து உரை
திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! அழகில் தனக்கு நிகராக தன்னைத் தவிர ஒருவரையும் சொல்ல முடியாத மன்மதனை, நெற்றிக் கண்ணைத் திறந்து, நெருப்புத் தோன்றச் செய்து விழியால் அவனுடைய வடிவம் அழியுமாறு செய்தவனே! கொடிய வினைகளால் துன்பம் நெருப்பை போல வந்து தாக்கினாலும், அனைத்து உயிர்களுக்கும் தந்தையான உன் திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் எனது நா வேறொன்றையும் கூறாது. இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும்முறை இதுவோ? உலக நன்மைக்காகத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனது இன்னருளுக்கு அழகாகுமா?
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
சற்காரியவாதம் என்பது என்ன?
இல்லாதது தோன்றாது. உள்ளது அழியாதது எனும் கொள்கை