ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – அறுபகை
பொருள்
- காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் எனும் ஆறு வகையான குற்றங்கள்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
ஒழித்தேன் பிறவியை ஊர்ந்தேன்
அறுபகை ஒங்கிற்றுள்ளம்
இழித்தேன் உடம்பினை ஏலேன்
பிறரிடை இம்மனையும்
பழித்தேன் பழியே விளைக்கும்பஞ்
சேந்தியக் குஞ்சரமும்
தெழித்தேன் சிவனடி சேர்ந்தேன்
இனிமிகத் தெள்ளியனே
11ம் திருமுறை – சேரமான்பெருமாள் நாயனார்
கருத்து உரை
சிவனது திருவடிகளையே சேர்ந்தேன்; எனது உள்ளம் உயர்நிலையை அடைந்தது. அதனால் யான் இனி வர கூடியதாக இருக்கும் பிறவி யாதொன்றும் இல்லாமல் ஒழித்துவிட்டேன். காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம் எனும் அகப்பகை ஆறினையும் விலக்கி அடுத்த நிலைக்கு செல்லத் துணிந்தேன். உடம்பின் இழிவை உணராது பற்றியிருந்த நிலையைவிட்டும் அதன் இழிவை அறிந்தும் இனிப் பிறரிடம் சென்று இரத்தலைச் செய்யேன். எனக்கு உரியதானது என்றாலும், பிறராலும் மதிக்கப்பட்ட இந்த உடலாகிய இல்லத்தையும் இகழ்ந்து நீங்கினேன். குற்றங்களையே விளைவிக்கின்ற பஞ்சேந்திரியங்களாகிய யானைகளை அதட்டி அடக்கினேன். ஆகவே, யான் இப்பொழுது மயக்கங்கள் யாவும் நீங்கித் தெளிவடைந்தவனாகி விட்டேன்.
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
பதி, பசு, பாசம் என்பதை எவ்வாறு தமிழில் குறிக்கலாம்?
இறை, உயிர், தளை