ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – சங்கை
பொருள்
- அச்சம்
- அளவு
- ஐயம்
- களம்
- சுக்கு
- சுண்டி
- மதிப்பு
- வழக்கம்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
அயன் முதற்கொண்டு ஐவருடல் உயிருஞ் சத்தி
ஆதியந்த சிவனாரும் உயிருக்குயிராய் நின்று
தயவுபெற வெடுத்துவுயிர் ஆண்பெண் கோடிச்
சங்கையில்லா மூப்பிளமை சாக்காடன்றி
ஐயம்பெறவே வொருகோடி காலம் வாழ்ந்து
தீர்க்கமுடன் இருக்கையிலே மைந்தாகேளு
நயம்பெறவே சிவனுமையை நோக்கி மைந்தா
நமை வணங்க அனுக்கிரகஞ் செய் என்றாரே
அகத்தியர் சௌமிய சாகரம்
கருத்து உரை
உடல் என்பது பஞ்ச கர்த்தாக்கள் எனப்படும் சதாசிவன், மகேஸ்வரன், ருத்திரன், விஷ்ணு, பிரம்மா என்ற ஐந்து தெய்வங்களின் கலவை; அதனுள் உறையும் உயிர் சக்தி; அந்த உயிருக்கு உயிராக இருப்பது சிவன்; இவ்வாறு உடலும் உயிருமான வஸ்து கணக்கற்ற கோடி ஆண்டுகள் மாறுபாடு இல்லாதவாறும், மூப்பு, இளமை மற்றும் சாக்காடு இன்றியும் இருந்தது; அப்போது மேன்மை பெறுவதற்காக சிவ சக்தியிடம் நமை வணங்க அனுகிரகம் செய் என்று கூறினார் என்றும் இப்பாடலில் சொல்கிறார் அகத்தியர்.
விளக்க உரை
- நமது உடலில் இந்த அட்சரங்களின் இருப்பிடம் – ந எனும் எழுத்து இரு கால்களையும், ம எனும் எழுத்து வயிற்றினையும் குறிக்கும்.
- பஞ்சாட்சர மந்திரத்தில் ந எனும் எழுத்து பிரம்மனையும், ம எனும் எழுத்து விஷ்ணுவையும் குறிப்பதாகும். அதோடு பிரம்மன் விழிப்புநிலையையும், விஷ்ணு கனவுநிலையையும் குறிக்கின்றனர். இதை கடக்க வேணும் என்பதாகவும் பொருள் கொள்ளலாம். (தூங்காமல் தூங்கி கிடப்பது எக்காலம் எனும் வரிகள் இங்கு சிந்திக்கத் தக்கவை.
- இச் சொல் நம்மை சிவ சக்தியை வணங்க அருள் செய் என்று கூறுவதாகவும் நம எனப்படும் மாயையை போற்றச் செய் என்று கூறுவதாகவும் பொருள் கொள்வார் உளர்.
- அஃதாவது மாயையை வழிபடுவது என்பது அதனை செயலாற்ற அனுமதித்து அசுத்த மாயையை செயல்படச் செய்து உலகை இயங்கச் செய்யவேண்டும் என்றும் பொருள் கொள்வார் உளர்.
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
அநாதி என்பது என்ன?
தோற்றம் என்பதை கண்டறியா முடியாதது
(இச்சொல் சித்தர்கள் பாடலில் இடம் பெற்று இருப்பதால் பாடலை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)