ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – ஆனியம்
பொருள்
- கேட்டைக் குறிக்கும் ஒரு கடைநிலை
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
சூனியனா யுருவமின்றி யரூபமின்றி
சொற்குணங்கள் மூன்றுமின்றி
நடுவிற் தோன்றி ஆனிய மலனான்கு
மென்று மலமின்றி
ஆவியது காயத்துடன் அடங்கிருப்பதுபோல்
மோனமேயெவ்வுயிர்க்கு முயிராய்நிற்பன்
முதுமையின்றி யிளமையின்றுப் போக்குவரவின்றி
ஞானஉரு வாயெங்கு
நிறைந்துநின்ற நாதனுரு யின்னதென்று
விளம்புதற்கு மரிதே!
அகத்தியர் தத்துவம் 300
கருத்து உரை
சூரியனைப் போல் உருவமின்றி, அரூபம் இன்றி, சாத்விகம், இராட்சதம், மற்றும் தாமச குணம் இன்றி, மனிதப் பிறவியில் ஆடவர்களுக்கு தோன்றும் கடைநிலை கேட்டைக் குறிக்கும் குணங்களாகிய அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி ஆகியவை மட்டும் இல்லாமல், ஆணவ மலம், மாயை மலம், கண்ம மலம் ஆகிய மலங்களும் இல்லாமல், உயிரானது உடலில் எவரும் அறியாமல் அடங்கி இருப்பது போல், மௌனமாகிய மோன வடிவத்தில் எல்லா உயிரிலும் உயிராகி நின்று முதுமை இல்லாமல், இளமை இல்லாமல், அதன் காரணங்களாகிய பிறப்பு இறப்பு இல்லாமல், ஞான உருவாக எங்கும் நிறைந்து நிற்கும் நாதனின் உருவம் இவ்வாறானது என்று கூறுவதற்கு இயலாதவாறு இருக்கிறது.
விளக்க உரை
- அகத்தியர், சிவ லட்சணம் பற்றி கூறும் பாடல்
- இனிமையும், மெய்ம்மையும் முதலாய சொற்குணங்கள் எனும் திருக்குறள் விளக்கம் இவ்விடம் பொருந்தாது, ஏனெனில் முதலில் சூரியனின் இரண்டு ரூபங்கள் விளக்கம் தரப்பட்டுள்ளன. ஆனிய மலம் நான்கு என்று எண்ணிக்கை நான்காக விளக்கப்பட்டுள்ளதால் சொற்குணங்கள் மூன்று என்று எண்ணிக்கை அடிப்படையில் பொருள் விளக்கப்பட்டுள்ளது.
- எண்குணங்கள் ஆகிய தன் வயம் உடைமை, தூய உடம்பு உடைமை, இயற்கை உணர்வு உடைமை, முற்றுணர்வு உடைமை, இயல்பாகவே பாசமின்மை, பேரருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை ஆகியவை இவற்றில் பொருந்தி நிற்பது அறிக.
- அருணகிரிநாதர் அருளிய ‘தேன் என்று பாகு என்று உவமிக்க ஒணா’ தொடங்கும் கந்தர் அலங்கார பாடலில் மெய்ப்பொருள் பற்றிய விளக்கத்தில் ஆகாயம் அன்று, காற்று அன்று, நெருப்பு அன்று, தண்ணீர் அன்று, மண்ணும் அன்று, தான் அன்று, நான் அன்று, உருவமில்லாதது அன்று, உருவத்தை உடையதும் அன்று. ஒன்றும் அற்ற ஒன்று எனும் பொருள் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
சைவ சித்தாந்தக் கொள்கைகள் எதன் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளன?
சற்காரியவாதம்
(இச்சொல் சித்தர்கள் பாடலில் இடம் பெற்று இருப்பதால் பாடலை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)