இன்று னக்கன் பிழைத்திலன் நானென்றே அன்று தொட்டெனை ஆளர சேஎன்று நின்ற ரற்றிய நீலனைக் கைவிட்டால் மன்றம் எப்படி நின்னருள் வாழ்த்துமே
தாயுமானவர் சுவாமி பாடல்கள்
கருத்து – ‘காத்து அருள்’ என்று முன்பு ஒருமுறை கதறிய காரணத்தால் இப்பொழுது காக்க வேண்டும் என வேண்டும் பாடல்.
பதவுரை
இப்போது யான் உன்னிடத்தில் அன்பு இல்லா காரணத்தால் பிழைப்பதற்கு வழி இல்லாமல் இருப்பினும், முன்னொரு காலத்தில், ஏ இறைவா! உனது திருவடிகளை சார்ந்து எனை ஆண்டருள் என்று வாய்விட்டு கதறியுள்ள இந்த வஞ்சனை கொண்டவனும் கொடியவனும் ஆகிய உனக்கு உரித்தானவனை கைநெகிழ விட்டு விட்டால் ஞானம் கொண்ட கூட்டத்தார்கள் உன்னுடைய திருவருளினை நல்லுரை கூறி உன்னை எவ்வாறு புகழ்ந்து துதிப்பார்கள் என்று கூறுவாயாக!
ஊனுடுத்தி யொன்பது வாசல் வைத்து வொள்ளெலும்பு தூணா வுரோமம் மேய்ந்து தாமெடுத்த கூரை தவிரப் போவார் தயக்கம் பலபடைத்தார் தாமரையினார் கானெடுத்து மாமயில்க ளாலுஞ் சோலைக் கழிப்பாலை மேய கபாலப்பனார் வானிடத்தை ஊடறுத்து வல்லைச் செல்லும் வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே
தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து – அவர் திருவடி சேர்தலை ஈசனாருக்கு நாம் பிறவி எடுத்ததற்கு செய்யும் கைமாறு எனும் பாடல்.
பதவுரை
ஊண் எனப்படுவதாகிய உடலாகிய சதைப்பகுதியை சுவராகச் வைத்து, ஒன்பது துவாரங்களையும் வாயிலாக அமைத்து, வெள்ளி போன்றதும், ஒளி உடையதும் ஆன எலும்புகளைத் தூணாக அமைத்து ரோமங்களை மேலே பரப்பி தாமே படைப்பித்த உடலாகிய குடில் நீங்கும்படி செய்து, தாவுகின்ற மானைக் கையில் ஏந்திய பெருமான் பல வடிவங்களை உடையவராய், கபாலம் ஆகிய மண்டை ஓட்டினை ஏந்திய தலைவராகி, எல்லாத் தத்துவங்ளையும் கடந்து, வானில் நிலை பெற்ற உலகங்களை எல்லாம் கடந்து விரைவாக வீடுபேறு ஆகிய அவரது திருவடியை அடைதலுக்கு செல்லும் வழியை அமைத்துக் கொடுத்து, தோகைகளைப் விரித்து ஆடும் மயில்கள் உடையதும், சோலைகளை உடையதும் ஆன திருக்கழிப்பாலைத் தலத்தில் இருந்து தாமே வலியச் சென்று அருள் செய்கின்றார்; இந்த உடம்பு பெற்றதனால் ஆன பயன் என்னவெனில் அவர் வகுத்து வைத்த வழியிலே செல்வது மட்டுமே அவர்க்கு நாம் செய்யும் கைம்மாறு ஆகும்.
கருத்து – நீ அருள் செய்யா விடினும் யான் உன்னை நினைத்து பாடுதலை விடேன் என்பதைக் கூறும் பாடல்.
பதவுரை
திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கின்றவனும் ஆணில் சிறந்தோனாகவும், பூரணனாகவும் இருக்கும் இறைவனே! உனக்கு அணிகலனாகவும், அரைநாணும் சிறுமையை உடைய பாம்பு இருப்பது கண்டு அஞ்சேன்; நீ புறங்காடு ஆகிய சுடுகாட்டில் ஆடுதலைக் கண்டு இகழேன்; நீ என்னுடைய சிறுமைக் கண்டும் உணர்ந்தும் என்னை விரும்பாவிடிலும் யான் உன்னுடைய பெருமையை உணர்ந்து உன்னை மறவாதவனாக இருப்பேன்; வினைகளின் காரணமாக பிறவி கொண்டாலும் உனை மறவேன்; நீ என்னைக் காணாவிட்டாலும், உன்னை (மனக்கண்ணாலாவது) கண்ணாரக் காண்பேன்; நீ என்னை உன் திருவுள்ளத்தில் நினைந்து ஏதும் அருள் செய்யாவிடினும், நான் என் மனத்தால் உன்னை நினைந்து பாடுதலை ஒழியமாட்டேன். (இவ்வாறானது எனது அன்பு என்றவாறு)
விளக்கஉரை
நம்பி – ஆணில் சிறந்தோன், குலமகன், பூரணன், கடவுள்; இறைவன், ஒரு செல்லப் பெயர், நம்பியாண்டார்நம்பி, நாற்கவிராசநம்பி, நம்பியான்
கருத்து – சிவ வழிபாட்டினை அன்புடன் புரிபவர்க்கு இறப்பு பிறப்பு என்ற இடர் வந்து எய்தாது என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
இறப்பை உண்டு பண்ணுபவன் ஆகிய மறலி எனும் எமனை காலால் உதைத்தான்; பிறவிக்குக் காரணமான அவாவை உண்டு பண்ணுபவன் ஆன மன்மதனை எரித்தான்; குழந்தை ஆகிய ஞானசம்பந்தர் பசித்து அழுதபோது அவர் பசிக்காக இரங்கி அவருக்கு பாற்கடலை தந்து, அவர் இந்த ஞாலத்தில் புகழ்பெறுமாறு செய்து, ஞான சம்பந்தரின் பின்னே உலகத்தவரை நடக்கச் செய்தான். பெரியதான அருளைத் தரத் தக்கவனான அவனை நாடாதவர்க்கு இனி செல்லும் வகை எது?
விளக்கஉரை
மறலியையும், எமனையும் இறைவர் உதைத்தும் எரித்தும் தண்டித்தனால் சிவ வழிபாட்டினை அன்புடன் புரிபவர்க்கு இறப்பு பிறப்பு என்ற இடர் வந்து எய்தாது
நடக்கை – ஒழுக்கம், செல்கை, வழக்கு
பாற்கடல் ஈந்தது காழிப் பதி திருத்தலத்தில்
ஞாலமெச்சப் பின்னே நடக்கவிட்டான் – வெய்யிலின் தாக்கம் ஞானசம்பந்தரைத் தாக்காமல் இருக்க சிவகணங்கள் மூலம் முத்துப் பந்தல் அமைத்து நந்தியை விலகச் செய்து அவர் சார்ந்தவர்களையும் அழைத்து வரச் செய்தச் செய்த தலம் பட்டீஸ்வரம். (இத்தலத்து இறைவனை வழிபடுபவர்களுக்கு வினைகள் பற்றாது என்பது ஞானசம்பந்தர் தேவாரம்)
கருத்து – தன் வினைகளை தானே அனுபவித்து தீர்க்க உன் அருள் வேண்டும் என விளம்பும் பாடல்.
பதவுரை
மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே! வானளாவிய பெருமையுடைய திரிபுரையே! மௌனமான மோன நிலை கடந்த இடத்தில் முளைத்த மலர்க் கொடியே! அறியாமையினால் வேறுபாடுகளைத் தந்து அதன்பொருட்டு வருகின்ற வினையும், அதனைத் தொடர்ந்து வரும் வறுமையும் துன்பமும் போதாதா? உன் அருள் கிட்டாமையினால் ஏழையாக இருக்கும் என்னை பகைப்பவர்களாக கருதும் தேவர்களும், அசுரர்களும் கொண்ட மாறுபாடு விலக்கி எனக்கு ஆதரவு அளித்தாய்; தன் கருணையினால் சுடர் விளக்குப் போல் பிரகாசிப்பவளே! நான் தான் பெரியவன் என்று உரைத்த நாவும் வாயும் அடைக்கச் செய்து எமனின் உலகமான எமலோகத்திற்கு பயணமாகி வரும்படி நடத்தி வைத்தாய்; தன்னால் செய்யப்பட்ட வினை முழுதும் தான் அனுபவித்தல் அல்லாமலும் அதனால் தொடர்ச்சியாக உண்டாகின்ற மனக்கவலையும் தானாக செல்லாது என்பது பற்றி என் மனம் மிகவும் வாடுகிறது.
மாடும் தண்தாமம் அணிந்திடும் மைந்தரும் மாதர்களும் வீடும் தண் தாமம் என மகிழாமல் உன் மென்மலர்த்தாள் பாடும் தண்டாத்தமிழ் ஈந்தருள் பூத பிசாசுகளைச் சாடும் தண்டாயுதனே காழியாபதுத் தாரணனே
ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்
கருத்து – திருவடிகளைப் பற்றி பாடும் படியான இனிய தமிழினை ஈந்து அருள வேண்டுதல் பற்றிய பாடல்.
பதவுரை
இறந்தவர்களின் பேயுருவம் கொண்டு திரியும் பூதம், தீமை தரத் தக்கதான பிசாசங்கள் ஆகியவைகளை தண்டாயுதத்தால் அடித்தும், துன்புறுத்தியும் செய்பவனாய் காழிப் பதியில் உறைந்து இருப்பவனான ஆபதுத்தாரணனே! செல்வமும், புகழ்ச்சியைத் தரும் மைந்தரும், பெண்டுகளும், தனது இருப்பிடமும், நிலையாக தனக்கு உரித்தானவை என மகிழ்ந்து இருக்காமல் உன்னுடைய மெல்லியதான மலர் போன்ற திருவடிகளைப் பற்றி பாடும் படியான சிக்கல் இல்லாத இனிய தமிழினை ஈந்து அருள வேண்டும்.
விளக்கஉரை
முதலடியில் வரும் தண்தாமம் என்பது புகழ்ச்சி எனும் பொருளிலும், இரண்டாம் அடியில் வரும் தண் தாமம் என்பது நிலையானது பொருளிலும் அமைக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
சாடுதல் – அடித்தல், மோதுதல், துகைத்தல், குத்திக் கிழித்தல், வடுச்செய்தல், ஒடித்தல், கொல்லுதல், அசைதல், ஒரு கட்சிக்குச் சார்பாய் இருத்தல்
கருத்து – பல வகைத் தானங்களும், அவற்றின் பலன்களும் பற்றியப் பாடல்.
பதவுரை
பிறர் கேட்கமால் அவர் நிலை அறிந்து தானம் கொடுப்பது பெருமை உடையது; அவர்களின் நிலையைக் கேட்டு அறிந்து அவர்களுக்கு தானம் கொடுப்பது குறைந்த பெருமை உடையது; பலமுறைக் கேட்டு பின் தானம் கொடுப்பது தர்மத்தின் கால்பகுதி, கேட்டும் கொடுக்காதவர், கழிவு இல்லாத பழைய வினை போன்றவர் என்று அவர் உறவை அறுத்து விடுக.
விளக்கஉரை
ஈதல் – தானம் கொடுத்தல்.
எச்சம் – மீதம், எஞ்சி இருப்பது, வாரிசு, பறவைகளின் கழிவு
அருவமும் உருவம் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப் பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகிக் கருணைசேர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே ஒரு திரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய
கந்தபுராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்
கருத்து – அருவம், உருவம், அருவுருவம் ஆகிய வடிவம் கொண்ட சிவபெருமானே முருகனாக அவதாரம் செய்ததை கூறும் பாடல்.
பதவுரை
நிட்களம், நிட்களத் திருமேனி என்று அறியப்படுவதும் விந்து, நாதம், சக்தி, சிவம் எனும் நான்கினைக் குறிப்பதானதும், உறுப்புகள் எதுவும் இல்லாத அருவ வடிவம் கொண்டும், சகளத் திருமேனி, சகளம் என பலவாறு அறியப்படுவதும், பிரம்மன், திருமால், உருத்திரன், மகேசன் எனும் நான்கு தெய்வ வடிவங்களைக் குறிப்பதானதும், தலை, உடல், கை, கால் என உறுப்புகள் அமைந்த சிவ வடிவங்கள் ஆனதுமான உருவ வடிவம் கொண்டும், சதாசிவ வடிவமாக இருப்பதும், காலங்களால் அறிய முடியாததான அநாதியாய் அருவுருவ வடிவம் கொண்டும், பல பொருளாகவும், ஏகத்தினை உரைக்கும் ஒரு பொருளாகவும், பிரம்ம வடிவம் கொண்டும் நிற்கும் சோதியினை ஒத்த வடிவம் கொண்டு, கருணையை பொழிவதான அறுமுகங்களுடனும், திருக்கரங்கள் பன்னிரண்டுடனும் போற்றத் தக்கதாகிய முருகன் இந்த உலகம் உய்ய வந்து உதித்தான்.
‘இல்லாதவை தோன்றாது; இருப்பவை உருமாறி தோன்றும்’ எனும் சைவ சித்தாந்தக் கருத்துப்படியும், பெம்மான் முருகன் பிறவான் இறவான் எனும் அருணகிரி நாதரின் கருத்துப்படியும் ஒப்புமை கொண்டு சிவனே முருகனாக தோன்றினான் எனும் பொருள் அறிக.
பதினொன்றாம் திருமுறை – மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை – காரைக்கால் அம்மையார்
கருத்து – வாயினால் வாழ்த்தினால் வாழ்வு உண்டாகாது ஆகையால், நெஞ்சத்தினால் அவனுடைய அடிகளை விரும்பி உன்னுள் இருத்திக் கொள்வாய் என்பது பற்றி உரைக்கும் பாடல்.
பதவுரை
நெஞ்சமே! அப்பம், மா, அவல், எள் உருண்டை இவற்றுடன் கரும்பில் இருந்து மிகுந்து ஒழுகுகின்ற மிகுகின்ற சுவை கூடியதான கருப்பஞ்சாறு இவைகளை உள்ளத்தில் விரும்பி, அதில் அழுந்தி நுகர்வானுடைய அடிகளை விரும்பி உன்னுள் இருத்திக் கொண்டு அவன் திருவடிகளில் அமர்ந்து கொள்வாய்.
எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையும் செழுந்தண் நியமங்கள் செய்மின் என் றண்ணல் கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – நந்திகள் நால்வரும் நிலவுலகத் தொடர்பு உடையவராக ஆகியது பற்றிய பாடல்.
பதவுரை
தன்னைவிட்டு இமையளவும் பிரிய விரும்பாத நந்திகள் நால்வர்க்கும் (சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர்) தலைமைப்பாடுடையவனும் திருவருள் செய்பவனும் பவழம் போன்ற குன்றனைய குளிர்சடையோன் ஆகிய சிவனாவன்,பெரியதான எண் திசையிலும் மேகங்கள் கடல்நீரை முகந்து பெய்யினும் அதற்குக் காரணம் முன்பு நீங்கள் செய்திட்ட நியமங்களை நன்றாக ஆற்றியதே ஆகும். ஆதலால் மேலும் தொடர்ந்து அதனை நன்றாகப் புரியுங்கள் என்று அருளினான்.
விளக்கஉரை
அஃதாவது உலகம் அழிகின்ற ஊழிக் காலத்திலும் நீங்கள் நம்மை வழிபட்டிருப்பீராக என்று அருளினான்.
நல்ல முறையில் உழைத்து ஈட்டப்பெற்ற நல் ஊதியம் மற்றும் பொருளானது அறத்தையும் இன்பத்தையும் தரும். அவ்வாறு பெறப்பட்ட அறமும் இன்பமும் தொடர்ந்து நிகழ்வதற்கு நடைமுறையில் அப்பொருளை மேன்மேலும் ஈட்டுதல் பற்றியே ஈசனின் அருளியது.
நாலவர் மரபில் சனற்குமாரர் மரபாகிய மெய்கண்ட மரபு ஒன்றுமே நிலை பெற்றுள்ளது.
ஆசிரியர் மரபுவகை பலவற்றையும் கூறிய திருமூலர் அவற்றுள் ஒன்றின் முதல்வராகிய தாம் தமது நெறிப்பொருளை உலகிற்கு உணர்த்துதல் பொருட்டுச் தம் வரலாற்றையே கூறுகின்றார்.
சனத்குமாரரே மாணிக்கவாசகராக அவதாரம் செய்தார் என்பது பற்றியும், அவரே மெய்கண்டாராக அவதாரம் செய்தார் என்பது பற்றியும் இருக்கும் விஷயங்களில் இருக்கும் மெய் அறிந்து உணர்க.
எழுந்து – முகில்கள் கடல்நீரையுண்டு விண்ணில் எழுந்து.
தண் – அமைதி.
அழுந்திய – திருவடி அன்பில் உறுதியாய உள்ள நால்வர் ( நன்னெறியாகிய சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்னும் நிலை நான்கினையும் கைக்கொண்டோர் எனவும் கொள்ளலாம்)
கருத்து – வினை முழுவதும் நீங்காமல் ஈசனை அடைதல் இல்லை என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
வஞ்சனை உடைய யான், வஞ்சனையின் காரணமாக போலித் தொண்டனாய் இருந்து, பல ஆண்டுகளாய் காலத்தைப் வீணாக்கி, பின் மனத்தினில் தெளிவு பெற்று உன்னைத் தேடி ஆராய்ந்து கண்டுகொண்டேன்; உள்ளத்தில் உன்னை நினைப்பவர் நினைப்பனவற்றை எல்லாம் அவர்களுடைய உள்ளத்தில் இருந்து கொண்டு, நீ அறிகின்றாய் என்பதை அறிந்த நான் மனம் குலைந்து, வெட்கப்பட்டு உன்னைத் தேடிய என் அறியாமைக்கு என் விலாஎலும்பு ஒடியுமாறு சிரித்தேன்.
கருத்து – அம்மையின் வடிவங்களையும், அவள் சிறப்புகளையும் கூறும் பாடல்.
பதவுரை
மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே! அண்டத்தின் தொடக்கத்தில் தோன்றும் சூரியனுமாகவும், தாமரை இதழ்களில் தோன்றிய நான்கு முகம் கொண்ட பிரம்மாவாகவும், அதனை தாங்கி நிற்கும் கொப்பூழ் கொண்ட திருமாலாகவும், காலம் அறிந்தும், சினம் கொண்டும் உயிர்களை கவரும் கால காலனுமாகவும், ஐந்து கர்த்தாக்களுள் முதலாய் இருந்து உயிர்களுக்கு அருள் செய்யும்பொருட்டுச் சிவன் மேற்கொள்ளும் மூர்த்தமாகவும், உருவாய் விளங்குதற்குமுன் உயிர்களின்பொருட்டுச் சிவன் மேற்கொள்ளும் அருவுருவாகிய மூர்த்தமும் ஆன சதாசிவமாகவும், சிவத்திடம் கூடியதான பராபரையாகவும், பரந்து விரிந்து உலகம் அனைத்திலும் விரிந்து விரிவாக நின்ற விரிந்த சுடராகவும், ஞால வடிவமாகியதும், அதைத் தருவதும் ஆன இரு பாதங்களும், நடனத்தில் ஒலிக்கும் சிலம்பும், கிங்கிணி ஓசைகளும் கொண்டு, கங்கையுடன் ஒன்றிக் கலக்கும் சிந்துநதி, ஞான நதியான பிரம்ம புத்ரா ஆகியவையும் ஆகி, முக்குணங்கள் நீங்கி மாசற்றவர்களாக இருப்பவர்களுக்கு உதவி செய்து நிற்பவளும், இனிய மொழிகளை பேசுபவளும், ஒன்பது வகையான தேவதைகளாலும் வணங்கப்படுபவளும் ஆகி நிற்கிறாய்.
கருத்து – முருகன் என பெயர் பெற்றதை தன்நிலை விளக்கமாக அருளும் பாடல்.
பதவுரை
அப்பொழுது யானும் சிலம்பொலியினைக் கேட்டேன்; அதன் காரணத்தால் காது இரண்டும் அடைத்துப் போனது; ரோசம், வெட்கம் ஆகியவை விட்டகன்றது; இரக்கம் தருவதான மயில் மீது ஏறி பறந்து சென்றேன்; வாசி வழி பற்றி நின்றதால் மனம் மயங்கி நின்றது. வைரம் போன்ற தன்மை உடைய மெய்ப்பொருளின் வகையினைக் கண்டேன்; மெய்ப் பொருளை உணர்ந்தவர்கள் தன்னிலையை உணர்ந்திடுவார் என்பதாலும். தன்னை முழுமையாக அறிந்து மெய்ஞான வடிவாக நிறைந்து, மூம்மூலம் உரைத்து அதை உணர்வதால் பொய்மை விலகி உண்மை நிலை விளங்கிக் கொண்டவர் என்பதாலும், கொள்ளத்தக்க தேவை என்பது ஏதும் இல்லை என்பதாலும் எனக்கு முருகன் என்று பெயர் ஆனது.
விளக்கஉரை
பல விளக்கங்கள் குரு மூலமாக அறியக்கூடியவை. உ.ம் சிலம்பொலி. ‘சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை‘ எனும் பாடல் வரிகொண்டும், வள்ளலார் பாடல்கள் மூலமும், தச தீட்சை மூலமாகவும் பல விளக்கங்கள் அளிக்க இயலும். குருவருள் பெற்று குரு மூலமாக பொருள் அறிக.
சொக்குதல்-மயங்குதல், மனம் பிறர்வசமாதல், பிறரை மயங்குமாறு ஒழுகுதல்
கருத்து – சத்தியைப் பெறுதற்குரிய வழியினைக் கூறும் பாடல்.
பதவுரை
நீண்டதொரு காலப்பகுதி ஆகிய ஊழிகளையும், அதனைப் போல பல ஊழிகளையும் ஆக்குபவளாகிய சத்தியை உணர்தலே `பேரறிவு` எனப்படுவதும், முற்றுணர்வு எனப்படுவதும் ஆன பூரணம் ஆகும். இவ்வாறான சக்தியை சிவனுடன் இணைத்து உணராமல் சிவனைத் தனித்து நிற்பவனாகக் கருதுவோர் சிவனையும் உணராதவரே; தன்னை அடைகின்ற புண்ணியம் உடையவர்களைத் தனது அருள்வடிவாகச் செய்கின்ற சத்தி, பலரைப் புண்ணியராகச் செய்தற்கு ஆக்கியுள்ளவழி பிராணனை யோகமுறையில் மூச்சடக்குதலே ஆகும்.
கருத்து – சூரபன்மன் பரமேஸ்வரனும் முருகப்பெருமானும் ஒன்றே என உணர்ந்ததை கூறும் பாடல்.
பதவுரை
அழகிய மயிலின் மீது அமர்ந்த குமரன் ஆகிய முருகப் பெருமானை சாதாரண சிறுவன் என்று எண்ணி இருந்தேன். முந்தைய காலத்து பரமேஸ்வரன் என்று உணரவில்லை. விஷ்ணு, பிரம்மாவிற்கும் ஏனைய வானத்தில் உறையும் தேவர்களுக்கும் மூல காரணமாக இருக்கும் பரமேஸ்வரனும் இவனும் ஒன்றன்றோ?
ஒடுங்கிடா கரணம் தாமே ஒடுங்குமா றுணர்ந் தொடுக்க ஒடுங்கிடும் என்னில் நின்ற தொடுங்கிடா கரண மெல்லாம் ஒடுங்கிட ஒடுங்க உள்ள உணர்வுதா னொழியும் வேறாய் ஒடுங்கிடின் அன்றி மற்ற உண்மையை உணரொ ணாதே
திருநெறி 7 – உமாபதி சிவம்
கருத்து – மனம், சித்தம், புத்தி மற்றும் அகங்காரம் கொண்ட அந்தக்கரணங்கள் மற்றும் அது சார்ந்த துணைக்கருவிகள் விலக்கி அவைகளை அந்நியமாக்குதலே சிவம் அறியும் வழி என அறிவுறுத்தும் பாடல்.
பதவுரை
அந்தக்கரணத்தின் பகுதி ஆகிய மனம் என்றுமே தானே ஒடுங்காது; கரணங்கள் ஒடுங்கும் வழியை அறிந்து ஒடுக்க அவை ஒடுங்கும் எனில் அதற்கு துணைபுரிவதும், ஆன்ம தத்துவத்தின் குழுக்களில் இடம்பெற்றதும் ஸ்தூல உடல், அதுசார்ந்த பொறிகள், பஞ்சபூதங்கள், ஐம்பொறிகள், ஒன்பது கருவிகள் ஆகிய துணைக்கருவிகளும் ஒடுக்குதல் இல்லை; தத்துவங்கள் எல்லாம் ஒடுங்கத் தக்கதாக ஒடுங்கினபொழுதே ஆன்மபோதம் ஒடுங்குமென்னில் அப்பொழுது உள்ள பழைய சிற்றறிவு நீங்கி முழுமையான முக்கால அறிவே முத்தியென்கிற நிலையை கொடுத்து விடும். அவ்வாறு இல்லாமல் அந்தச் சிவத்தை அறிந்து அநுபவிக்கும் வழி எவ்வாறு என்னில் கரணங்கள் அந்நியமாய் விடும்படி, தரிசனமான ஞானத்தோடும் கூடி நின்று ஒழிவது அல்லாமல் அந்தச் சிவத்தை அறிந்து அதன் உண்மையை அநுபவிக்க இயலாது.
கருத்து – சிவனுடைய காருண்யமான கருணையை விளக்கும் பாடல்.
பதவுரை
தோழியே, உங்கள் இறைவனான ஈசன் பூசிக்கொள்வது வெண்மையான திருநீறு; அணிகலனாக அணிவது சீறுகின்ற பாம்பு; அவனது திருவாயினால் சொல்லுவது விளங்காத சொற்கள் போலும் என ஒருத்தி இகழ்ச்சியாகக் கூறினாள்; பூசுகின்ற பொருளும், பேசுகின்ற சொற்களும், அணிகின்ற ஆபரணங்களும் கொண்ட என் ஈசனானவன் எல்லா உயிர்க்கும் இயல்பாகவே இறைவனாய் இருந்து அந்த உயிர்களுக்கு தக்க பலன் அளிப்பவனாய் இருக்கிறான் என்று மற்றொருத்தி விடை கூறினாள்.
விளக்கஉரை
மறை – பொருள் விளங்காத சொல். `வேதம்` என்பது, உண்மைப் பொருள்.
ஈசன் தலைமை கொண்டது அவனுக்குப் பிறர்தந்து வராமல் இயல்பாக அமைந்தது.
‘சிவன் சாந்தாகப் பூசுவதும் சாம்பல்; அணியாக அணிவதும் பாம்பு; சொல்வதும் பொருள் விளங்காத சொல் என்றால், அவன் உயர்ந்தோனாதல் எவ்வாறு’ என்பது இதனுள் எழுப்பப்பட்ட தடை; ‘எல்லா உயிர்க்கும் அவனே தலைவன் என்பது யாவராலும் நன்கு அறியப்பட்டதால், அவன் பூசுவது முதலியன பற்றி ஐயுற வேண்டுவது ஏன்` என்பது தடைக்கு விடை.
கேள்வியில் பூசுவதும், பூண்பதுவும், பேசுவது என்று வருகிறது. பதிலில் பூசுவதும், பேசுவதுவும், பூண்பதுவும் என்று வருகிறது. முன்னர் உரைத்த மறை போலும் என்பதைக் கொண்டு அவன் பேசுவது மறை என்றும் அவன் பூண்பது என்பது அந்த மறை சொற்களே என்பதையும், அவனே அந்த மறை வடிவமாக இருக்கிறான் என்றும் கொள்ளலாம். ஆன்றோர் பொருள் உணர்ந்து உய்க.
கருத்து – திருவைந்தெழுத்தினை இடையறாது பற்றிக் கொண்டு, அதை உணர்ந்தோர் அப் பொருள்களின் உண்மைத் தன்மையைக் காண்பது குறித்தப் பாடல்.
பதவுரை
அண்டங்களில் முதன்மையான சிவலோகத்தினை இருப்பிடமாக் கொண்டவனை, ஆதிரை நாளான் என்று அழைக்கப்படுபவனை, பாற்கடல் கடைந்த போது வெளிப்பட்ட ஆலால விஷம் உருண்டு வந்த போது அதை உண்டதால் கரிய நிற கொண்ட கண்டம் உடையவனை, செம்பொன் போன்ற திருவடிகளை உடையவனை, மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய பஞ்சேந்திரியங்கள் தரையில் படுமாறும் தலை தாழ்ந்திருக்குமாறு, தரையில் எட்டு அங்கம் பதியுமாறு வீழ்ந்து வணங்கி, மேலான நூல்கள் எல்லவற்றாலும் குறிப்பிடப்படுவதும், திருவைந்தெழுத்தினை ஐந்து வடிவங்களாக கொண்டதும், பஞ்ச பூதங்களின் தன்மை கொண்டதுமான தூல பஞ்சாட்சரம், சூட்சும பஞ்சாட்சரம், ஆதி பஞ்சாட்சரம், காரண பஞ்சாட்சரம், மகாகாரண பஞ்சாட்சரம் ஆகியவற்றினை இடையறாது பற்றிக் கொண்டு, அதை உணர்ந்தோர் அப் பொருள்களின் உண்மைத் தன்மையைக் காண்பர்.
நமஸ்காரம் – பெரியோர்களையும், இறைவனையும், மத குருக்களையும் வணங்கும் போது தரையில் குப்புறப்படுத்து கைகளை தலையின் மீது குவித்து உடலின் எட்டு அங்கங்களும் அதாவது நெற்றி, இரு தோள்கள் இரு கைகள், மார்பு இரு கால் முட்டிகள் உட்பட ஆகிய எட்டு உறுப்புகள் தரையில் பதிய வணங்கும் முறை. இது ஆண்களுக்கானது. பெண்களுக்கு ஐந்து அங்கங்கள்.
ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்
கருத்து – ஆபதுத்தாரணனின் வடிவமும் அவன் அருள வேண்டிய முறையும் குறித்து போற்றி புகழ்ந்த பாடல்.
பதவுரை
செம்மலை போன்ற மேனியில் கருமையும், பசுமையும் கலந்த நிறமொத்த சட்டைய ஆடையாக அணிந்தவனே, மலை போன்ற மேனியில் கூரியதும், நல்லவை அருளும் தண்டாயுதம் எனும் ஆயுதத்தையும் கைகளில் ஏந்தி, விண்ணில் இருப்பவர் ஆன பிரம்மனை பயமும் திகைப்பும் கொள்ளுமாறு அவனை அழித்து அவன் தலையை திருவோடாக ஏந்தி, தமிழ் மொழி கொண்டு விளங்கும் காழிப் பதியில் உறையும் ஆபதுத்தாரணனே! மலை போன்றதும், எழுதா மறை ஆகிய வேதத்தினை போன்றதுமான வார்த்தைகள் பிறர் எனக்கு உபதேசம் செய்யாமல் தவிர்த்து அருள்வாய்.
கடு – கடுக்காய்மரம், கசப்பு, நஞ்சு, முள், கார்ப்பு, துவர்ப்பு, முதலை, பாம்பு
மலை – அணி, அணிந்து கொள், திகைப்பு-பயம்
விளக்க உரைக்கு உதவி செய்த திரு. அனந்த சுப்ரமணியம் அவர்களுக்கு நன்றி.
இறை அன்பரின் குறிப்பு
இதில் கஞ்சுகம்வாயத்த என்பது கஞ்சி இஞ்சி – அதாவது கருணை பொங்கும் மனம் கொண்டவன். ஆனால்இஞ்சியைபோல் காரம் கொண்டவன் இறைஞ்சினால் கருணை வடிவானவன் என பொருள்படும்.
குஞ்சரம் என்பது யானை – அதாவது இவ்வளவு பெரிய கருணை மனம் கொண்டவன் எனப் பொருள்படும்.
சிலந்திக்கோரை என்பது சிலந்தி பூச்சியானது தன்வலை பின்னி மற்ற பூச்சிகளை அதில் சிக்கவைக்து உணவாக்கும்; இப்படி மனிதன் உன்னைக் கட்டநினைந்தாலும் அதில் சிக்காது அவனையே சிக்க வைப்பாய் என பொருளாகும்
சட்டைக்கஞ்சுகமுதல்வர் எண்பது ஜீவன்கள் தன் உடலாகிய சட்டையை கழற்றவைத்து தன்னுடன் சேர்த்து கொள்பவர் என அர்த்தமாகும்
கருத்து – அட்டாங்க யோகம் எனும் எட்டு வகையான யோகங்களில் முதலாதவதான இயமம் அடையும் முறை பற்றிய பாடல்.
பதவுரை
கொல்லாமை, பொய்யாமை, களவின்மை, வெகுளாமை, காமம் இன்மை, கரவாமை, மாசின்மை, கள்ளுண்ணாமை, கூடா ஒழுக்கம் இன்மை ஆகியவற்றைக் கொண்டு நல்லவனாகவும், அடக்க முடையவனாகவும் இருப்பவனே தடை இல்லாத இயம யோகம் கைவரப் பெற்றவனாவான்.
விளக்கஉரை
சரி எதையெல்லாம் கொல்லான் உடலையா, உயிரையா, மனதையா, அறிவையா அல்லது ஆத்மாவையா எனக் கேட்டபின்னரே அதில் நாம் கடைந்தேரியவராக இருப்பின் இயமத்தின் கொல்லானைக் கடக்குமெனவுரைக்கிறார். (குருநாதர் உரை செய்த வண்ணம்)